Wednesday, January 31, 2024

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் முத்தாம்பிகை அம்மன் திருக்கோயில் வரலாறு

#மாமன்னர் 
#சுந்தர_பாண்டியனால் கட்டப்பட்ட, 
சிவபெருமானும் உமையம்மையும் அம்மையப்பனாய் இந்திரனுக்கு காட்சி கொடுத்த தலமான, அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சி அருளிய இடமான,
இராமருக்கு ஞானம் வழங்கிய இடமான, 
பல ரிஷிகள் வந்து தங்கி ஈசனை வழிபட்ட தலமான
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற #ரிஷிவந்தியம் 
#அர்த்தநாரீஸ்வரர்
#முத்தாம்பிகை_அம்மன் திருக்கோயில் வரலாறு:

ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் தலமரமாக புன்னை உள்ளது.

*மூலவர் – அர்த்தநாரீஸ்வரர்
*அம்மன் – முத்தாம்பிகை
*தல விருட்சம் – புன்னை
*தீர்த்தம் – அகஸ்த்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம்
*பழமை – 1000 வருடங்களுக்கு முன்
*ஊர் – ரிஷிவந்தியம்
*மாவட்டம் – கள்ளக்குறிச்சி 
*மாநிலம் – தமிழ்நாடு

கி.பி 1282 இல் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டதாக நம்பப்படும் இக்கோயில் விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்களால் விரிவாகப் புதுப்பிக்கப்பட்டது.

#தல சிறப்புகள்:

இத்தலத்தில் இறைவன் அர்த்தநாரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான். தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த பார்வதி ஒருமுறை அபிஷேககுடங்களை மறைத்து வைத்து விட்டாள்.

பால் குடங்களை காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித்தான். அப்போது ஈசன் தோன்றி, இனிமேல் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படியாக பணித்தார். அத்துடன் தினமும் நடக்கும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேனபிஷேக பூஜையில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக ஒளி வடிவில் காட்சி தருகிறார். 

மற்ற அபிஷேகம் நடக்கும் போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும். இத்தலத்திற்கு வந்து வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும், பூஜைசெய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார். இதுவே இத்தலத்தின் சிறப்பாகும். பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் இத்தலம் ரிஷிவந்தியம் என வழங்கப்பட்டது.

விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக வீரவன்னியர் பரம்பரையினர் காடு வெட்டும்போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட சுயம்பு ‘இலிங்கம்‘ தான் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட வெட்டுப்பட்ட கீறலை சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம்.

இந்த கோயில் துவாபராயுகத்தில் தோன்றியதென்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தலத்திற்கு வந்து வழிபட்ட இராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும், பூஜைசெய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்து ஈசனை வழிபட்டுள்ளனர்.

குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, “தாயிருக்க பிள்ளை சோறு” என்ற செய்யுளை பாடினார். உடனே அம்மன் அவர் முன் தோன்றி “நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக” என்று கூற குக நமசிவாயரும் அதன்படியே “மின்னும்படிவந்த சோறு கொண்டு வா” என்ற பாடலைப்பாடினார்.

இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என்பர்.

நிறம் மாறும் இலிங்கம், நாகத்தை உடலில் தாங்கிய இலிங்கம், சாய்ந்த நிலையிலுள்ள இலிங்கம், உடலில் காயம் பட்ட இலிங்கம் என்றெல்லாம் பல இலிங்கங்களை தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால், ஒரு இலிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்யும் போது, இலிங்கத்தில் இடை நெளிந்த, கையில் கிளியுடன் இருக்கும் அம்மன் காட்சி தரும் அதிசயத்தைக் ரிஷிவந்தியம் முத்தாம்பிகா உடனுறை அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் காண முடியும்.

தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான். தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த பார்வதி ஒருமுறை அபிஷேகக் குடங்களை மறைத்து வைத்து விட்டாள். பால் குடங்களைக் காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித்தான். அப்போது ஈசன் தோன்றி, இனிமேல் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படியாக பணித்தார். அத்துடன் தினமும் நடக்கும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். தேன் கெடாது; தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேனபிசேக பூசையில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக (ஆண்பாதி பெண்பாதியான) ஒளி வடிவில் காட்சி தருகிறார். மற்ற அபிசேகம் நடக்கும் போது இலிங்க வடிவம் மட்டுமே தெரியும்.

#தல வரலாறு:

இந்தக் கோயில் தோற்றம் குறித்து வழங்கப்படும் தகவல்; விஜயநகரப் பேரரசு காலத்தில் வேளாண்மை செய்வதற்காக வன்னிய மரபினர் காட்டை அழிக்கும்போது, மண்வெட்டியால் வெட்டுபட்டு ஒரு சுயம்புலிங்கம் கிடைத்தது. இந்த லிங்கமே அர்த்தநாரீசுவரர் கோயில் மூலவராவார். தற்போதும்கூட இந்த லிங்கத்தில் வெட்டுத் தழும்பைக் காண இயலும்.

இந்தல இறைவனுக்கு நாள்தோறும் இந்திரன் 108 குடம் பாலை அபிசேகம் செய்துவந்தான். என்றாலும் பார்வதி அம்மையை வழிபடாமல் வந்தான். இதனால் கோபமுற்ற பார்வதி இந்திரனுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்தாள். அதன்படி ஒருநாள் இந்திரன் பாலபிசேகம் செய்யும் குடங்களை மறைத்துவைத்தாள். அபிசேகம் செய்யவந்த இந்திரன் குடங்களைக் காணாது தவித்தான். சிவனுக்கு அபிசேகம் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று மனம் கலங்கினான். இதனால் கோயில் பலிபீடத்தில் தன் தலையை முட்டிக்கொண்டு இறந்நுவிட முடிவு செய்து அவ்வாறே முட்டிக் கொண்டான். இதைக்கண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனைத் தடுத்தார். மேலும் அம்மனுக்கு அபிசேகம் செய்யுமாறு கூறினார். மேலும் இத்தல சுயம்பு லிங்கத்துக்கு தேன் அபிசேகம் செய்யும்போது தான் உமையொருபாகராக எழுந்தருள்வதாக அறிவிதார். பிற வழிபாடுகளின்போது சிவனாகவே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
 இதன்படி இக்கோயில் கருவறையிலுள்ள சிவலிங்கத்தின் மீது தேனை ஊற்றினால், இறைவன் அதில் உமையொருபாகராய் வீற்றிருப்பது தெரியும்.

இக்கோயில் திருமலை நாயக்கரால் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதற்கு வரலாற்று சான்றாக இந்தக் கோயிலில் திருமலை நாயக்கரின் உருவச்சிலை உள்ளது. கோயிலின் முதல் பெருவாயிலின் வலப்புறத்தில் சிற்ப வேலைப்பாடு மிக்க மண்டபம் உள்ளது. தட்டினால் பண் இசைக்கும் தூண்கள் இங்கே உள்ளன. இந்தக் கோயிலின் சிற்ப வேலைப்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உண்டு; அஃதாவது, இங்கே உள்ள ஒரு யாளிச் சிலையின் திறந்த வாய்க்குள் ஒரு கல் உருண்டை உள்ளது; பந்து போன்ற அவ் வுருண்டையை நம் கைவிரலால் எப் பக்கம் வேண்டுமானாலும் உருட்டலாம்; ஆனால், வெளியில் எடுக்க முடியாது; இது சிறந்த சிற்ப வேலைப்பாடாகும்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் 10 நாள் விழாவின் முடிவில் தேர்த்திருவிழா நடக்கிறது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூன்றாவது திங்களில் 108 சங்கு அபிடேகம் செய்யப்படுகிறது.

பேச்சில் குறைபாடு உள்ளவர்கள், தேன் வாங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை சாப்பிட்டால் பேச்சு குறைபாடு நீங்கும் என்பது நம்பிக்கை.

இக்கோயில் திருமண பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது. 3 முதல் 5 அமாவாசைகளுக்கு இந்தக் கோயிலுக்குச் சென்று, அர்ச்சனை செய்து, ஒருமுறை அபிஷேகம் செய்து, திருமணம் வெற்றிகரமாக நடக்க வேண்டும். பேச்சு குறைபாடு உள்ளவர்கள் சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்யலாம். நிவாரணத்திற்காக அவர்கள் தேனை உட்கொள்ள வேண்டும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

#செல்லும் வழி:

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தை எளிதில் அடையலாம். கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுர்கம் வழியாக சுமார் 22 கிலோ மீட்டர் பயணித்தாலும், திருக்கோவிலூரில் இருந்து சுமார் 23.6 கிலோ மீட்டர் பயணித்தாலும் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவிலை அடையலாம். விழுப்புரத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதிகள் இத்தலத்திற்குச் செல்லும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயிலூரிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் திருக்கோயிலூரிலிருந்து 23 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. திருக்கோயிலூரிலிருந்து பேருந்துகள் உள்ளன. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

திருமீயச்சூர் லலிதாம்பிகைஅம்மன் மேகநாதசுவாமி திருக்கோயில் வரலாறு

#பக்தையிடம் 
#கால்_கொலுசு_கேட்ட உலகப் புகழ்பெற்ற லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய தலமான, தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான ,
சூரிய பகவான் வழிபட்ட தலமான 
#திருமீயச்சூர்
#லலிதாம்பிகை_அம்மன் 
#மேகநாதசுவாமி திருக்கோயில் வரலாறு:

திருவாரூர் மாவட்டத்தில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் இக்கோயிலின் உள்ளே இளங்oகோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு. இத்தலம்  அமைந்துள்ளது.
மிகுந்த கலை நயம் மிக்க சிற்பங்களைக் கொண்ட சிவ ஸ்தலமாக விளங்குகிறது.

இந்த இரண்டு கோயில்களும் சோழர் காலத்திய கற்கோயிலாக விளங்குகின்றன. இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரது காலத்தில் இக்கோயில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சோழ நாட்டின் காவிரி தென்கரையில் பாடல் பெற்றத் திருத்தலங்களில் 56, 57-வது திருத்தலங்களாக விளங்குகின்றன.

தல மூர்த்தி : அருள்மிகு மேகநாத சுவாமி
தல இறைவி : அருள்மிகு லலிதாம்பிகை (சாந்த நாயகி அம்மன்)
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி

திருமீயச்சூர்  திருத்தலத்தில் சூரியனாருக்கு அருளிய ஈசன், ஸ்ரீமேகநாதர் எனும் திருநாமத்துடன், கஜபிருஷ்ட விமானத்தின்  கருவறையில், சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார்.

பொதுவா, எல்லா கோவில்களிலும், ஆண்பால் தெய்வத்தை வணங்கிய பிறகே பெண்பால் தெய்வத்தை வணங்குதல் முறை., மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் மாதிரி வெகுசில கோவில்களில் மட்டுமே இந்த நியதி மாறுபடும். அந்த வெகுசில கோவில்களில் திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலும் ஒன்று. 

ராஜகோபுரத்தை கடந்தால், நமக்கு வலப்பக்கத்தில்  வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும் தனிச்சன்னிதியினுள் வலது காலை மடித்து வைத்த நிலையில் அமர்ந்திருக்கும் லலிதாம்பிகையை தரிசிக்கலாம். இவளுக்கு சௌந்தரநாயகி, சாந்தநாயகின்ற வேறு பேர்கள் உண்டு. அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு   இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜசிம்மாசனத்தில் அமர்ந்து  அருளாட்சி செய்கிறாள்.  இதுப்போல மடித்து வைத்தை காலோடு அமர்ந்த கோலத்தில் இறைவியை காண்பது அரிதினும் அரிது.  அவள் அமர்ந்திருக்கும் கருவறை ஒரு ராஜ தர்பாரை நமக்கு நினைவூட்டும். 

லலிதாம்பிகையிடம்  உபதேசம் பெற்றவர் ஹயக்கீரிவர். ஸ்ரீஹயக்ரீவர் அகத்தியருக்கு லலிதா சஹஸ்ரநாமம் உபதேசம் செய்யும் வேளையில், ஸ்ரீலலிதாம்பிகையை தரிசிக்க சிறந்த இடம் எது என அகத்தியர் வினவினார். 'அருணனும், சூரியனும் வழிபட்ட திருமீயச்சூர் சென்று, அங்கு லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொன்னால் மிகுந்த பலன் கிடைக்குமென  ஸ்ரீஹயக்ரீவர் கூறிளினார். அவ்வாறே அகத்தியரும், தன் மனைவி லோபமுத்ராவுடன்   இத்தலம் வந்து லலிதா சஹஸ்ரநாமம் ஜபித்து, அர்ச்சனை செய்து அன்னையின் தரிசனம் பெற்றார். அகத்தியர் பெருமானும் இத்தலத்தில் அன்னையை ஆராதித்து அழகிய செந்தமிழில் ஸ்ரீலலிதா நவரத்தின மாலையைப் பாடியுள்ளார். பௌர்ணமி தினத்தன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என இவற்றை மனமுருக பாட அன்னையின் அருள் கிடைக்கப் பெறலாம்.

முத்து, வைரம், வைடூரியம், கோமேதகம், மரகதம், பவளம், புஷ்பராகம், மாணிக்கம், நீலமென்ற நவரத்தினங்களை அம்பிகையாய் நினைத்து அவளை வர்ணித்து அழகு தமிழில்  பாடப்பட்டதே  லலிதா நவரத்ண மாலையாகும். 

இக்கோவிலில் இக்கோவிலில் விஜயதசமியன்று, லலிதாம்பிகைக்கு எதிரில் பெரிய வாழை இலையில் சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளிசாதம் படையலாய் படைக்கப்படும்,  15 அடி நீளம், 4அடி அகலம், 1 1/2அடி ஆழத்தில் இருக்குமாறு தயார் செய்யப்படும் இந்த படையலின் நடுவே, பள்ளம் பறித்து இரண்டு டின் நெய் குளம்போல்  கொட்டப்படும்.  அம்மனுக்கு அபிஷேகம் முடிந்து திரை விலக்கப்படும்போது அம்மனின் உருவம் நெய் குளத்தில் தெரியும், இதைக்காண மக்கள் திரண்டு வருவர்.  லலிதாம்பிகை கோவிலின் தலவிருட்சம் வில்வம், தீர்த்தம் சூர்யபுஷ்கரணியாகும். 

#லலிதா சகஸ்ரநாமம்:

பொதுவா வீடுகளில் காலையிலும், மாலையிலும் விளக்கேத்தி வழிபடும் நேரத்தில் சொல்லப்படும் துதிகளில் லலிதா சகஸ்ரநாமமும் ஒன்னு. ‘ஸ்ரீ மாத்ரே நமஹ’ என ஆரம்பிக்கும் இந்த அம்பிகை துதி, மற்றெல்லா துதிகளையும்விட  அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன. வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை. பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள். இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தின் சிறப்பே, ஒருமுறை சொல்லப்பட்ட அம்பிகையின் நாமம் இன்னொரு முறை சொல்லப்பட்டிருக்காது. இதில் மட்டும்தான் அம்பிகையின் அழகு, தோற்றம், வரலாறு, அவளை வழிபடவேண்டிய முறை, யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபடால் கிடைக்கும் பலன்கள் என அனைத்தும் வாக்தேவதைகளால் சொல்லப்பட்டிருப்பதால் இது நால்வகை வேதத்துக்கு ஒப்பானதாகும். 

பண்டாசுரனின் தொல்லை அதிகரிக்கவே அதை தாங்கமுடியாத தேவாதி தேவர்கள் யாகம் வளர்த்தி அம்பாளை வேண்டினர். அம்பிகை எதும் பதிலளிக்காமல் போகவே தங்கள் உயிரை யாகக்குண்டத்தில் அர்ப்பணிக்க தயாராகினர். அப்பொழுது ஞானமாகி குண்டத்திலிருந்து ஆதிசக்தியானவள் ஸ்ரீலலிதாவாக தோன்றினாள். லலிதாம்பிகை லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என மும்பெருந்தேவிகளும் இணைந்த அம்சம்.   பண்டாசுரனுடன் போரிட்டு அவனை அழித்து தேவர்களை காத்தாள். அசுர வதம் முடிந்தும் உக்கிரமாய் இருந்த அன்னையை சாந்திப்படுத்தும் பொறுப்பு சிவனிடம் வந்து சேர்ந்தது. உலக நலன் வேண்டி உக்கிரம் குறைய, அன்னையை, மனோன்மணின்ற  பெயருடன்  ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்ய பணித்தார். அன்னையும் இத்தலம் வந்து தவமிருந்து தன் உக்கிரம் குறைந்தாள். 

உக்கிரம் குறைந்த அன்னை, தன் அழகிய முகத்திலிருந்து  வஸினி, காமேஸ்வரி, அருணா, விமலா,ஜெயினீ, மோதினீ, சர்வேஸ்வரீ, கௌலினி என்ற எட்டு ‘வசின்யாதி வாக் தேவதைகளை உண்டாக்கி, 1008 தனது திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளை இட்டாள்.   ஸ்ரீ மாத்ரே எனத் தொடங்கும் லலிதா சகஸ்ரநாமம் உண்டானது. இதை அன்னை, ஞானக்கடவுளாம்  ஹயக்கீரிவருக்கு அன்னை கொடுத்தருளினார்.  சக்திகளுக்குள் ஸ்ரீலலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லைன்னு  சொல்வாங்க. மந்திரங்களில், வித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீபுரம் போல், வித்யை உபாசகர்களில்  சிவனைப்போல், சகஸ்ரநாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் என மேன்மையானவைகளை பட்டியலிட்டிருக்காங்க.  இந்த ஸ்லோகம் பாராயணம், ஹோமம், அர்ச்சனை போன்ற முறைகளில் வழிபடப்படுகிறது.

நமது முதுகுத்தண்டின் அடியில், கிண்ணம் போன்ற அமைப்பு உள்ளது. இதுதான் 'மூலாதாரம்'. நாம் மனதை ஒருநிலைப்படுத்தி, சகஸ்ரநாமம் சொல்லும்பொழுது, நாபிக்கடியில் இருக்கும் சக்தியை, மந்திரத்தின் அழுத்தம் தூண்டிவிடுகிறது. தூண்டப்பட்ட சக்தியானது, மேலெழும்பி, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்யை, பிறகு சகஸ்ராரம் என்கிற கடைசி நிலையை வந்தடைகிறது. சகஸ்ராரம் என்னும் சிகரத்தில்தான் சிவன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சகஸ்ராரத்தில், அதாவது சிகரத்தில், கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்தில் அமிர்தம் இருக்கு. கீழிருந்து எழும்பிய சக்தி, சிகரத்தில் உள்ள சிவனோடு சேரும்போது, கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்திலிருந்து, அமிர்தம் கொட்டுவதாக அறியப்படுகிறது. அப்பொழுது, அவள் சிவசக்தி ஸ்வரூபிணியாகவே நமக்குக் காட்சி கொடுப்பாள் என்று கூறப்படுகிறது.

கங்கை முதலிய புண்ணிய நதிகளில்  மூழ்கிய பலன் கிடைக்கும். காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்டை செய்த பலன், சூரிய, சந்திர கிரகண  காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்த பலன்,  பஞ்சக்காலங்களில்  கிணறு வெட்டுதல், தவறாது அன்னதானம் செய்ததன் பலன், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது அர்த்தம் உணர்ந்து, சரியான உச்சரிப்போடு லலிதா சகஸ்ரநாமப் பாராயணம் செய்வது. அவத்தை நீக்கும். 

பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படித்துவர  நோய்கள் நீங்கும். தீய சக்திகளின் உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்து விடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும். பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின் அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும். எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

#லலிதாம்பிகை:
லலிதா என்றால் மென்மையானவள் என்றும் சுலபமானவள் என்றும் அர்த்தம். திருமீயச்சூர் தலத்தில், லலிதாம்பிகை, மிகுந்த கலை அழகுடன், தன் வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்டவாறு, ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் காட்சியளிக்கிறார். இப்படி வலது காலை மடித்த அம்பிகையை  வேறெங்கும் காண்பது அரிது.

#பக்தையிடம் கால் கொலுசு கேட்ட லலிதாம்பிகை அம்மன்:

லலிதாம்பிகையின் அலங்காரத்திற்கு கால் கொலுசு தவிர அனைத்து வகை ஆபரணங்களும் இருந்தன. அம்பிகை தனக்கு வேண்டிய கால் கொலுசை பெற்றுக் கொண்டது ஒரு அதிசயமான நிகழ்ச்சியாகும்..

பெங்களூரில்  வசித்து  வந்த ஒரு பெண்மணி மிகுந்த இறை பக்தி உடையவர். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்த பின்தான், தன் அன்றாட பணிகளை மேற்கொள்வார. 1999-ம் வருடம் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் இரவில் அவருடைய கனவில் அம்பிகை வடிவில் ஓர் உருவம் தோன்றி, எனக்கு காலில் அணிந்து கொள்ள கொலுசு இல்லை. அதனை நீதான் எனக்கு செய்து  தர வேண்டும் எனக் கட்டளையிட்டு மறைந்தது. அப்பெண்மணி கனவில் வந்த அம்பிகை யார் என்று அறிந்து கொள்ள முயன்றார். ஆனால், ஒன்றும் பிடிபடவில்லை. வைணவக்  குலத்தைச் சேர்ந்த அப்பெண்மணி, திருப்பதி, ஸ்ரீரங்கம் முதலிய தலங்களுக்குச் சென்று, அங்கிருக்கும் தாயார்தான் தன் கனவில் வந்தவராக இருக்குமோ என்று அறிந்து கொள்ள முயற்சித்தார் ஆனால் அவர்கள் எவரும் கனவில் வந்த உருவத்தோடு ஒத்து போகவில்லை. ஒருநாள் தற்செயலாக ஆன்மீக மாத இதழ் ஒன்றில் லலிதாம்பிகையின் உருவப்படத்தை பார்த்தார. தன் கனவில் வந்தது இந்த அம்பிகைதான் என்றுணர்ந்தார். தினமும் லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததால்தான் தனக்கு இந்த பாக்கியம் என்று மகிழ்ந்தார். உடனே அம்பிகைக்கு கொலுசை காணிக்கையாகத் தர விரும்பினார. திருமீயச்சூர் கோவிலுக்கு  வந்து விவரங்களை தெரிவித்தார். ஆனால் கோவில் அர்ச்சகர்கள் அம்மனின் கால் பீடத்தில் ஒட்டி இருப்பதால், கொலுசு அணிவிக்க முடியாது என்று மறுத்து விட்டனர். ஆனால் அப்பெண்மணியோ, கொலுசை கேட்டது அம்மன்தான் என்றும், எனவே அதை அவள் கண்டிப்பாக அணிந்து கொள்வாள் என்றும் வற்புறுத்தினார்.

அர்ச்சகர்கள் மீண்டும் கொலுசை அம்மனுக்கு அணிவிக்க முயற்சி செய்தார்கள். அப்போது அம்மனின் கணுக்காலலுக்கும் பீடத்துக்குமிடையே முக்கால் அங்குலத்தில் துவாரம் இருப்பதையும், அதனை இத்தனை காலம் அபிஷேகப் பொருட்கள் அடைத்து இருந்ததையும் கண்டுபிடித்து ஆச்சரியப்பட்டனர். அந்தப் பகுதியை சுத்தம் செய்து கொலுசையும் அம்மனுக்கு அணிவித்தனர். அப்பெண்மணி அம்மனின் உத்தரவை நிறைவேற்றியதை எண்ணி ஆனந்தமடைந்தார். அன்றிலிருந்து பிரார்த்தித்துக் கொண்டு வேண்டுதல் நிறைவேறியவுடன் லலிதாம்பிகைக்கு கொலுசு அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

 
#அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம் - லலிதாம்பிகை அம்மனின் நெய் குள தரிசனம்:

லலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், நவராத்திரி விஜயதசமியிலும், மாசி மாத அஷ்டமி நாளிலும், வைகாசி - பௌர்ணமியன்றும் நடைபெறுகிறது. இந்த வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். 

அன்னப்பாவாடை என்னும் இந்த நைவேத்தியத்தில் மூன்று மூட்டை அரிசியில் சமைத்த சர்க்கரைப்பொங்கல், புளிசாதம், தயிர்சாதம் மற்றும் அதிரசம், முறுக்கு, லட்டு, வடை, பாயாசம் போன்றவையுடன் இளநீர், பழங்கள் படைக்கப்படும். அம்பிகையின் சந்நிதிக்கு முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில் இந்த நைவேத்திய பொருட்கள் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப்பொங்கலை ஒரு பெரிய பாத்தியாக அமைத்து, அதில் இரண்டரை டின் நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள். தேவிக்கு நன்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு திரை விலக்கப்படும்போது, தேவியின் பிம்பம் சர்க்கரைப் பொங்கலில் உள்ள நெய்க்குளத்தில் பிரதிபலிப்பதைக் காண கண் கோடி வேண்டும்.இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.

#புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே தரிசிக்கக் கூடிய தலம்:

காஞ்சி மகாபெரியவர் இதலத்தின் சிறப்பு பற்றி குறிப்பிடுகையில், ‘இத்தலம் மிகவும் புண்ணியமான க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்களே இத்தலத்திற்கு வர முடியும். அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஸ்ரீலலிதாம்பிகை, ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள்’ என அருளினாராம்.

#திருத்தல வரலாறு:

காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை என்ற இருவரும் சிவபெருமானை மனதில் நினைத்து கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தின் பலனாக இறைவன் இவர்கள் முன்தோன்றி, இருவருக்கும் ஒரு முட்டையை பரிசாகக் கொடுத்து, இந்த முட்டையை ஒரு வருட காலம் பாதுகாத்து பூஜை செய்து வந்தால், ஒரு ஆண்டு கழித்து உலகமே போற்றும் வண்ணம் ஒரு மகன் பிறப்பான் எனக் கூறி விட்டு மறைகிறார்.

ஆனால் ஒரு வருடம் கழித்து விநநையின் அண்டத்தில் இருந்து ஒரு பறவை பிறந்து அது பறந்து சென்று விடுகிறது. தனக்கு மகன் பிறக்காமல், இப்படி ஆகிவிட்டதே என்று அவள் ஈஸ்வரனிடம் வருந்தி கேட்க, அதற்கு முக்கண்ணன் ”நான் கூறியது போலவே அவன் மகா விஷ்ணுவுக்கு வாகனமாக கருடன் என்ற பெயருடன் உலகமெங்கிலும் போற்றிப் புகழப் படுவான்” என்று  கூறுகிறார்.

இதனிடையே, விநநைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்று அவசரப்பட்டு தனக்குக் கொடுக்கப் பட்ட முட்டையை பிரித்துப் பார்க்கிறாள் கர்த்துரு. அவளது அவசரத்தினால் அந்த முட்டையில் இருந்து சரியானபடி வளர்ச்சி அடையாத தலை, முதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்தக் குழந்தை பிறக்கிறது. தான் செய்த தவறை உணர்ந்த கர்த்துரு இறைவனை நாடி, இப்படி ஆகி விட்டதே என மனம் வருந்தி மன்னிப்பு கேட்க, சிவபிரானும் அவளை மன்னித்து, ”நான் சொல்லியதுபோல் இக்குழந்தை சூரியனுக்கு சாரதியாக விளங்கி உலகப் புகழ் பெறுவான்” என்று கூறுகிறார்.

கர்த்துரு தனது மகனுக்கு அருணன் எனப் பெயர் சூட்டுகிறாள். இறைவனின் ஆணைப் படி அருணன் சூரியனுக்கு சாரதியாக விளங்கினான். ஒருமுறை அருணன் தான் கைலாசம் சென்று ஈஸ்வரனைத் தரிசனம் செய்து வர எண்ணி சூரியனிடம் அனுமதி கேட்க, சூரியனோ, “நீ அங்கஹீனன் (நொண்டி). உன்னால் ஈஸ்வரனைத் தரிசனம் செய்ய முடியாது” என்றெல்லாம் பரிகசித்தான். மனம் தளராத அருணன் இறைவனை நினைத்து தவமிருந்தான். மமதை கொண்ட சூரியன் அருணனின் தவத்தை எள்ளி நகையாடியதோடு பல தொல்லைகளும் செய்தான். சூரியன் கொடுத்த துன்பம் தாங்காது அருணன், முன்னிலும் முனைப்பாக இறைவனை நினைத்து வேண்டினான்.

இதனைக் கண்ணுற்ற கைலாசநாதன், அருணனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார். சூரியனிடம், ”என்னைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் தவமிருந்த அருணனுக்கு நீ கொடுத்த கஷ்டங்கள் என்னை வருத்தமடையச் செய்தது. இதன் காரணமாக உன் மேனி கார் மேக வண்ணமாய் மாறட்டும்” என்று சாபமிட்டார். இதனால் இப்பூவுலகமே இருளில் மூழ்கியது.

இதனைக் கண்ட பரமேஸ்வரி தாய் சிவனிடம், சூரியன் கரு நிறமாய் ஆனதினால் உலகமே இருண்டுவிட்டதே, சூரியன் இன்றி உலகம் இயங்காதே என கேட்க, கவலை கொள்ள வேண்டாம் தேவி. அருணனின் தவ பலத்தினால் உலகம் வெளிச்சம் பெரும் என பெருமான் கூறினார். தனது தவறினை உணர்ந்த கதிரவன் இறைவனிடம் மன்னித்தருள வேண்டினார்.

ஏழு மாதங்கள்  எங்களை யானை மீது வைத்து பூஜித்து வா. உனது பாவம் தீரும்’ என அருளினார்.  இதை அடுத்து சூரியனார், மேகமண்டலத்தில் யானை மீது, சிவ-பார்வதியை வைத்து பூஜை செய்யத் துவங்கினார்.

ஆனால், ஏழு மாதங்கள் நிறைவுறுவதற்கு முன்பே, சிவனாரிடம் சென்று, ‘என்ன இது… இன்னும் சாப விமோசனம் தரவில்லையே?’ என்று  அலற…

சாபத்தின் கடுமையால் சீக்கிரம் விமோசனம் வேண்டி சூரியன் அலறிய குரல், ஏகாந்தமாய் இருந்த அம்பாளுக்கு பாதிப்பை உண்டாக்கியது. அதனால் கோபமடைந்து,  ‘உரிய ‍‌‌‍‌நேரம் வரும் வரை பொறுக்க மாட்டாயா?’ என்று கடும் உக்கிரத்துடன்  சூரியனை சபிக்கத் திருப்புகிறாள். பதறிப்போன சிவனார் அம்பாளின் முகவாயைப் பிடித்து ‘ஏற்கெனவே  கொடுத்த சாபத்தால் இருளில் மூழ்கினான் சூரியன்.  இன்னொரு சாபம் கொடுத்தல், இந்த உலகம்  இருளில் தவிக்கும்.  வேண்டாம் தேவி, சாந்தமாக இரு!’ என்று உமையவளை அமைதிப்படுத்தினார்.  

தடுத்தாட்கொண்ட இறைவன், இவ்வுலகம் பிரகாசம் பெறவும், நீ சாந்தமடையவும் தவமிருப்பாயாக என்று அம்பாளிடம் கூறிவிட்டு, உரிய காலம் வந்ததும், சூரிய பகவானுக்கு சாப விமோசனம் அளித்தார். சூரியனும் தனக்கிட்ட சாபத்திலிருந்து மீண்டு வந்ததினால் இத்திருத்தலம் மீயச்சூர் என அழைக்கப்படுகிறது.

அம்பாளும் சாந்த நாயகி ஆகிறார்.

ஸ்ரீ லலிதாம்பிகை வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டவாறு அமைந்துள்ளார்.

வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்தக் கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் இருப்பிடம் ஒரு ராஜ தர்பார் போன்ற உணர்வைத் தருகிறது.

திருஞானசம்பந்தர் பெருமான் அருளிச் செய்த தேவாரப் பாடல்:

வேட முடைய பெருமான் உரையு மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞானசம் பந்தன்
பாட லாய தமிழீ ரைந்து மொழிந்துள்கி
ஆடும் அடியார் அகல்வான் உலகம் அடைவாரே !!

#சேத்திர புராணேஸ்வரர் சிற்பம்:

கருவறை தேவகோட்டத்தில் உள்ள சிற்பங்களில் தெற்கு தேவகோட்டத்தில் உள்ள சிற்பம், சிற்பக் கலையின் மிகச்சிறந்த கலைப்படைப்பாகும். உமையின் கோபத்தைப் போக்கும் நிலையில் கங்காதர மூர்த்தியாக உள்ள மூர்த்தியின் வடிவம் சிறப்பானது. இதனை சேத்ரபுராணேசுவரர் என்று அழைக்கின்றனர்.

இந்த சிற்பத்தை வலது புறமாய் இருந்து பார்த்தால் அம்பாள் மிக கோபமாகவும், இடது புறமாய் இருந்து பார்த்தால் புன்னகைத் தவழும் சாந்தமாகவம் தெரியும்.

உலகில் கணவன் – மனைவிக்கான இணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் இச்சிற்பம் அமைந்துள்ளது.

புராண காலத்தில் இங்கு பிறந்தோர் :

கருடன்
அருணன்(சூரியனின் தேரோட்டி)
வாலி
சுக்ரீவன்
எமதருமர்
சனீஸ்வரன்

#திருமீயச்சூர் இளங்கோயில்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையிலும் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது.ஸ்ரீ மின்னும் மேகலை சமேத ஸ்ரீ சகல புவனேஸ்வரர் இளங்கோயில், திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயிலின் உள்ளே அமைந்து உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 57ஆவது சிவத்தலமாகும். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 120 வது தேவாரத்தலமாகும்.

திருமீயச்சூர் கோயிலின் உள்ளேயே இளங்கோவில்  அமைந்துள்ளது.சோழர் கால கோயில்களான இந்த இரு கோயில்களும் இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி முதலானவர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டவை.மூலவர் மேகநாதசாமி சுயம்பு லிங்கம். இக் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த காஞ்சி மகாப்பெரியவர், லலிதாம்பிகையை விட்டு செல்ல மனமில்லாமல் பிடிவாதம் பிடித்தது அம்பிகையின் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. மாற்றுத்திறனாளியான சூரியனினின் தேரோட்டி அருணன் அந்த பதவியைப் பெற முயன்ற போது, சூரியன் அவன் உடல் குறைபாட்டை சுட்டி
கேலி செய்ததால், சிவபெருமான் சூரியனை ஒளியிழக்கும் படி சபிக்க, தன் தவறை உணர்ந்து, சாபம் தீர தவம் செய்து, சிவபெருமான் அருளால் கருமை நிறம் மறைந்து ஒளி பெற்றார். சூரிய பகவான் தன் கருமை நிறத்திலிருந்து மீண்ட சூரியன் ஊர் ’மீயச்சூர்’. கருவறை தேவ கோக்ஷ்டத்தில் உள்ள சிற்பம் மிகச்சிறந்த கலைப்படைப்பாகும். உமையின் கோபத்தைப் போக்கும் நிலையில் கங்காதர மூர்த்தியாக உள்ள வடிவம் சிறப்பானது. இதனை சேத்ரபுராணேசுவரர் என்று அழைக்கின்றனர். இச்சிற்பத்தில் அம்பாளில் முகத்தில் கணவன் மனைவி இணக்கத்தை விளக்கும் விதமாக வலது புறம் கோபமாகவும், இடது புறம் புன்னகைத் தவழும் நிலையிலும் இருப்பதைக் காணலாம்.கருத்து வேற்றுமையால்,பிரிந்திருக்கும் தம்பதியினருக்கும், கொடிய நோய்கள், கிரக தோஷங்களால், ஆயுள் குறைவு ஆகியவற்றிற்கும் இந்த தலம் பரிகாரத் தலமாகக் கூறப்படுகின்றது. இங்கு பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து, சிவபெருமானுக்கு படைத்த பின்னர் நோய்க்கு மருந்தாக அருந்துகின்றனர்.

மேகநாதர் சன்னதியின் இடது புறமாக, சகலபுவனேஸ்வரர் சன்னதி உள்ளது. அச்சன்னதியின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சதுர்முக சண்டிகேஸ்வரர், மின்னும் மேகலை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. அடுத்து அருணாசலேஸ்வரர் சன்னதி உள்ளது. சகலபுவனேஸ்வரருக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. நடராஜர், பைரவர், சூரியன், ஆகாசலிங்கம், வாயுலிங்கம் ஆகியோர் உள்ளனர்.

#செல்லும் வழி:

தமிழ் நாடு, மயிலாடுதுறை – திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை – திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோவில் 1 கி.மி. தொலைவில் உள்ளது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திண்டிவனம் (திந்திரிணிவனம்)என்ற திண்டீச்சரம்

குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட, 
நடுநாட்டு தேவார வைப்புத் தலமான, சிவபெருமானை திண்டி வழிபட்ட தலமான விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற
#திண்டிவனம் (திந்திரிணிவனம்)
என்ற 
#திண்டீச்சரம் 
#திந்திரிணீஸ்வரர் (திண்டீச்சரமுடையார்)
(திண்டிவனேஸ்வரர்)
#மரகதாம்பிகை_அம்மன் திருக்கோயில் வரலாறு:

எங்கும் நீக்கமற நிறைந்தவரும், தென்னாடுடையவரும், எந்நாட்டவருக்கும் இறைவனாகிய சிவபெருமான், தனது பரிவாரங்களோடு எழுந்தருளி உள்ள நடுநாட்டு திருத்தலங்களுள் ஒன்று, திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் ஆகும். 'காடு' என்பது வட மொழியில் 'வனம்', 'ஆரண்யம்' என்ற பெயர்களால் குறிக்கப்படும். புளிய மரத்தை வடமொழியில் 'திந்திரிணி' என்பர். இவ்வூர் புளியமரக் காடுகளால் சூழப்பட்டு இருந்ததால் 'திந்திரிணி வனம்' எனப் பெயர் பெற்றது. இந்தப் பெயர் காலப்போக்கில் மருவி 'திண்டிவனம்' என்று மாறியது.

எங்கும் நிறைந்த ஈசன் இந்த மண்ணில் புரிந்த லீலைகள் எண்ணிலடங்காதவை. தானாய்த் தோன்றி தரணியைக் காக்கும் சிவபெருமான் அருள்புரியும் அருள் மிகுந்த தலங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது, திண்டிவனம். சங்ககாலத் தமிழரின் வீரத்தை பறைசாற்றும் திருமுனைப்பாடி என்னும் நடுநாட்டின் ஒருபகுதி ‘‘ஒய்மாநாடு” என்று அழைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் தென் பகுதியும், விழுப்புரம் மாவட்டத்தின் வடபகுதியும் சேர்ந்த அன்றைய ஒய்மாநாடே இன்று திண்டிவனம் என்றழைக்கப்படுகின்றது. ஆதியில் இவ்விடம் புளிய மரக்காடாக இருந்ததால் திந்திரிணிவனம் [புளியங்காடு] என வழங்கப்பட்டது. மேலும், முப்புர அசுரர்களை வதம் செய்தார் பரமேஸ்வரர். அவர்களில் இருவர் இறைவனை சரணடைந்து நிற்க... சிவபெருமான் அவர்களை தனது சிவ கைலாய வாயில் காவலர்கள் ஆக்கினார். அவர்களே இப்பூவுலகில் அனைத்து சிவாலயங்களையும் பாதுகாக்கும் திண்டி மற்றும் முண்டி என்னும் இரண்டு துவார (வாயில் காப்பாளர்கள்) பாலகர்கள் ஆவர். இவர்களில்திண்டி இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் இவ்விடம் ‘‘திண்டீஸ்வரம்” ஆனது. முண்டி வழிபட்ட தலம் இந்த திண்டிவனத்திற்கு தெற்கே திருவெண்ணெய் நல்லூருக்கு அருகே அமைந்துள்ள முண்டீஸ்வரம் ஆகும்.

ஒய்மா நாட்டின் தலைநகராகக் கிடங்கில் கோட்டை திகழ்ந்துள்ளது. இதில் ஓவியர் குடியில் பிறந்த மன்னர்களான ஒய்மான் நல்லியநாதன், ஒய்மான் வில்லியாதன் இந்த ஒய்மா நாட்டை சிறப்புடன் ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். இவர்களின் வழித் தோன்றலான கொடையில் கடையேழு வள்ளல்களையும் மிஞ்சியவனான, புலவர் பலரால் பாராட்டப்பெற்றவன் நல்லியக்கோடன். இவனது ஆட்சிக்காலம் ஒரு பொற்காலமாகவே திகழ்ந்துள்ளது. சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூல் இந்த மன்னனைப் போற்றிப் புகழ்கின்றது. சங்ககாலப் புலவர்களான காவிதி சீரங்கண்ணனாரும், பெரும்புலவர் குலபதி நக்கண்ணனாரும் நல்லியக்கோடன் காலத்தில் இங்கு வாழ்ந்தவர்களாவர்.ஒய்மான்கள் ஆண்ட நிலப்பகுதியே ஒய்மாநாடாகும். இதை........

‘‘கிளை மலர் படப்பைக் கிடங்கில் கோமான் தளையவிழ் தெரியல் தகையோன்” என சிறுபாணாற்றுப்படை அறிவிக்கின்றது. இந்த ஊர் திண்டிவனம், கிடங்கல், மும்முடிச் சோழநல்லூர், ராஜேந்திரச் சோழநல்லூர் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து ராஜராஜ வளநாட்டின் ஓய்மாநாடு என்றும், இடக்கை நாட்டுக் கிடங்கில் என்றும் வழங்கப்பட்டுள்ளது. விஜயநகர ஆட்சிக் காலத்தில் திருவதிகை ராஜ்ஜியத்திற்கு உட்பட்ட பகுதியாக திண்டிவனம் இருந்துள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனுக்கு பின் ஆட்சிக்கு வந்த விக்கிரமசோழன் காலத்தில்தான் (கி.பி.1118 - கி.பி. 1135) திண்டீஸ்வரம், திண்டிவனம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவ்விடத்தினை பல்லவர்கள், சோழர்கள், காடவராயர்கள், சம்புவராயர்கள், விஜயநகரப் பேரரசு, நாயக்க மன்னர்கள் என பலர் ஆண்டுள்ளனர்.

வால்மீகி, வியாசர், கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்கள் இத்தலப் பெருமானை பூஜித்துள்ளனர். திருநாவுக்கரசரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் பிறந்தது இந்த நடுநாடு என்பது குறிப்பிடத்தக்கது. திருநாவுக்கரசர் தனது க்ஷேத்திரக் கோவையில் ‘‘திண்டீசுரம்” என்று குறிப்பிட்டு வைப்புத்தலமாக இத்தலத்தை இரண்டு பாடல்களில் நினைவுகூர்ந்து பாடியுள்ளார். புகழ்பெற்ற வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் இத்தல இறைவனை புகழ்ந்து பாடியுள்ளார். அப்பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் திருவாமாத்தூர் கௌமார மடத்தில் உள்ளன.நகரின் மையத்தில் ஆலயம், கிழக்கு பார்த்த வண்ணம் பிரம்மாண்டமாக திகழ்கின்றது.

திந்திருணி, புளிதிந்திருண்வனம் - புளியமரக்காடு, இச்சொல் மருவி வழக்கில் திண்டிவனம் என்றாயிற்று. புளியமரக் காடுகளால் சூழப்பட்ட பகுதி என்று பெயர்.

இக்காட்டில் இருந்து அருள்புரிந்து வரும் ஈசனை 'திந்திரிணீஸ்வரர்' எனவும், 'திண்டீச்சரமுடையார்' எனவும் பக்தர்கள் அழைத்து பக்தியோடு வழிபட்டு வந்தனர். கிழக்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், விமானம் ஆகியவை, வியாச முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். உயர்ந்து அமைந்த நெடிய திருச்சுற்று இக்கோவிலுக்கு தனி அழகினைத் தருகிறது.

கோயில் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி செங்கல்லாலும் கட்டப்பட்ட கட்டுமானமுடையது. இத்தல இறைவனை வால்மீகி, வியாசர், திண்டி, முண்டி, கில்லி, கில்லாலி ஆகிய முனிவர்கள் பூஜித்துள்ளனர்.

இக்கோயிலின் விமானம் வியாச முனிவரால் தாபிக்கப்பட்டது.
  
இத் திருத்தலம் திந்திரிணீசுவரர், பக்த பிரகலாதீசுவரர் ஞானபுரீசுவரர் கரகண்டேசுவரர் சுயம்புமூலநாதர் ஆகிய ஐந்து லிங்கங்கள் (பஞ்சலிங்கங்கள்) உள்ள சிறப்புடைய திருக்கோயிலாகத் திகழ்கிறது.
 
 இச்சிவாலயக் கல்வெட்டில் இவ்வூர் "ஓய்மாநாட்டு..... திருத்தீண்டீஸ்வரம்" என்று குறிக்கப்பட்டுள்ளது.

*மூலவர்: திந்திரிணீஸ்வரர்
*அம்மன்: மரகதாம்பிகை
*தல விருட்சம்: புளிய மரம்
*புராண
பெயர்: திண்டீச்சரம் (திந்திரிணிவனம்)
*ஊர்: திண்டிவனம்
*மாவட்டம்: விழுப்புரம்

*பாடியவர்கள்: 

அப்பர் சுவாமிகள் பாடிய தேவாரம் (வைப்புத் தலம்)

#திண்டீச்சரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம் :

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 8-வது பாடலிலும், 6-ம் திருமுறை 70-வது பதிகம் 9-வது பாடலிலும் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

1.தேவாரப் பாடல்:

தெள்ளும் புனல் கெடில வீரட்டமும் (6-7-8)
திண்டீச்சரமும் திருப்புகலூர்  
எள்ளும் படையான் இடைத்தானமும்
ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல்
கொள்ளும் இலயத்தார் கோடிகாவும்
குரங்கணின் முட்டமும் குறும்பலாவும்
கள் அருந்தத் தெள்ளியார் உள்கி ஏத்தும்
காரோணம் தம்முடைய காப்புக்களே.

பொழிப்புரை : 

பூதப்படையை உடையவரும், கூத்தினை நிகழ்த்துபவரும், ஆகிய பெருமானார் 
உகந்தருளியிருக்கும் திருத்தலங்கள் அதிகை வீரட்டம், திண்டீச்சரம், புகலூர், 
இடைத்தானம், ஏயீச்சுரம், ஏமம், கூடல், கோடிகா, குரங்கணில் முட்டம், குறும்பலா, 
திருவடி ஞானம் பெறச் சத்திநி பாதம் பெற்றவர் தியானித்துத் துதிக்கும் 
நாகை குடந்தைக் காரோணங்கள் என்பனவாகும்.

2.திண்டீச்சரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி (6-70-9)
தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை 
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல்
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம்
ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும்
கயிலாயநாதனையே காணலாமே.

பொழிப்புரை:

திண்டீச்சரம், சேய்ஞலூர், செம்பொன்பள்ளி, தேவூர், சிரபுரம், சிற்றேமம், சேறை, 
கொண்டீச்சரம், கூந்தலூர், கூழையூர், கூடல், குருகாவூர் வெள்ளடை, குமரி, கொங்கு, 
தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம், ஐயாறு, அசோகந்தி, ஆமாத்தூர், கண்டியூர் வீரட்டம், 
கருகாவூர் ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.

#புராண வரலாறு:

*திந்திரிவனேஸ்வரர்:

திண்டிவனம் ஆரம்பத்தில் திந்திரிவனம் (புளியின் காடு) என்று அழைக்கப்பட்டது, இங்கு திந்திரி என்றால் புளி மற்றும் வனம் என்றால் தமிழில் காடு. புளியமரத்தடியில் லிங்கம் கிடைத்தது. எனவே இக்கோயிலின் இறைவன் திந்திரிவனேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

*திண்டீஸ்வரம்:

திண்டி சிவனை வழிபட்ட தலம் திண்டீஸ்வரம் (திண்டிவனம்) என்றும், முண்டி இறைவனை வழிபட்ட இடம் முண்டீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

*வேத வியாசர் இக்கோயிலின் ராஜகோபுரத்தைக் கட்டினார்:

இக்கோயிலின் ராஜகோபுரத்தை வேதவியாசர் கட்டியதாக நம்பப்படுகிறது.

#தல வரலாறு:

இக்கோவில் கி.பி.1015-ம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ வம்சத்தை சார்ந்த குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. திந்திரிணீஸ்வரரை திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி, வால்மீகி போன்ற முனிவர்கள் வணங்கி, முக்தி பெற்றதாக கூறப்படுகிறது. வால்மீகி முனிவர் வழிபட்ட இந்தக் கோவிலில் இறைவன் பஞ்சலிங்க வடிவங்களைக் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

திந்திரிணீஸ்வரர், திருமூலநாதர், கரகண்டேஸ்வரர், ஞானகுரீஸ்வரர், பக்த பிரகலாதீஸ்வரர் ஆகிய 5 திருமேனிகளோடு ஈசன் எழுந்தருளி இருப்பதால் இந்த தலத்துக்கு `பஞ்சலிங்க ஷேத்திரம்' என்ற பெயர் உண்டு. இறைவியின் பெயர் மரகதாம்பிகை. இங்கு வழிபட்டால் சகல பாவங்களும் விலகும் என்கிறது தலபுராணம். இந்த ஆலயத்தில் அன்னை மரகதாம்பிகை வேண்டும் வரம் அருளும் தாயாக குடிகொண்டிருக்கிறாள். அம்மனுக்கு பச்சை சேலை சாத்தி வழிபட்டால் வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். கோவிலின் தல வரலாறு அங்குள்ள சுவற்றில் தமிழ் எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

#கோவில் அமைப்பு:

7 கலசங்களும், 6 நிலைகளும் கொண்ட அற்புதமான இராஜகோபுரம் பிரமிப்பூட்டுகின்றது. உள்ளே பலிபீடம், ஓங்கி நிற்கும் கொடிமரம் மற்றும் அளவில் பெரிதாகத் திகழும் சற்றே தென்புறமாக ஒதுங்கியுள்ள நந்தியின் திருவுருவம். எல்லாமே கலைப்படைப்புகள். நேராக மகாமண்டபம் அடைந்திட வலப்புறம் கணபதியும், இடப்புறம் கந்தனும் நம்மை வரவேற்கின்றனர். அவர்களை வணங்கி,  துவாரபாலகரான திண்டியின் அனுமதியும் பெற்று, [இரு துவாரபாலகர்களில் திண்டி மட்டுமே இங்கு உண்டு. முண்டியின் சிற்பம் இங்கு கிடையாது. அதை திருமுண்டீஸ்வரத்தில் காணலாம்.] அந்தராளம் எனப்படும் இடை மண்டபத்தில் நின்று ஐயனை வணங்கிப் பரவசமடைகின்றோம். கருவறையுள் கருணை வடிவாய், சுயம்பு மூர்த்தமாக, சுமார் ஐந்தரை அடி உயரத்தில் அற்புதமாக அருட்காட்சியளிக்கின்றார் ஸ்ரீதிந்திரிணீஸ்வரர். அருள் சுரக்கும் திருமேனி ஆனந்த தரிசனம்.

அப்பனை வணங்கி, உட்பிராகாரத்தில் சுற்றுகையில் சிவகோஷ்ட தெய்வங்களோடு, கரைகண்டேஸ்வரர், ஞானபுரீஸ்வரர், பிரகலாதீஸ்வரர் ஆகிய லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. துர்க்கை இங்கு சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கின்றாள். வெளிப்பிராகார வளம் தொடங்குகையில் இராஜகோபுரத்தையொட்டி உட்புறமாக சந்திர பகவான் காட்சி அளிக்கின்றார். அருகே மடப்பள்ளி அமைந்துள்ளது. தென் பிராகாரத்தில் வன்னிமரமும், அதனடியில் சனிபகவானும் அருட்காட்சியளிக்கின்றனர். நிருதி மூலையில் கணபதி சந்நதியும், மேற்கில் வள்ளி-தெய்வானையுடனான கந்தன் சந்நதியும், பக்கத்தில் திருக்கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன. இங்கே வில்வமரமும், அதனடியில் விநாயகப் பெருமான் சிலையும் உள்ளன. சுவாமி சந்நதிக்கும் அம்பாள் சந்நதிக்கும் இடையில் வடபுறத்தில் தனிச்சந்நதியுள் தான்தோன்றிய லிங்கமாக ஸ்ரீமூலநாதர் வீற்றருளுகின்றார். உடன் கணபதியும், திரிபுரசுந்தரியும் உள்ளனர். இறைவன் சந்நதிக்கு இடப்புறத்தில் வாமபாகம் என்று சொல்லப்படும் வாயு திசையில் அம்பாள் சந்நதி தனியாக அமைந்துள்ளது. கருவறையில் அழகே உருவாய் எழுந்து அருள்பாலிக்கின்றாள், அன்னை ஸ்ரீமரகதாம்பிகை. ஈசனுக்கு நிகராக யோகபீடத்தின் மீது நின்ற வண்ணம் சுமார் 5 அடி உயரத்தில் அற்புதமாக அபயமளிக்கின்றாள். அன்னையின் சந்நதிக்கு நேரே அனுமனும் சந்நதி கொண்டுள்ளார். இங்கே நவகிரகங்களும் காணப்படுகின்றன. ஸ்ரீகாலபைரவரும் உடனிங்கு அருள்புரிகின்றார்.

வடகிழக்கு என்று சொல்லப்படும் ஈசான்ய திசையில் யாகசாலை அமைந்துள்ளது. பக்கத்தில் வினை தீர்க்கும் விநாயகரும் குடிகொண்டுள்ளார். அருகே சிவசூரியனும் இடம் பெற்றுள்ளார். இரண்டு பிராகாரங்களைக் கொண்ட இவ்வாலயத்தின் வடக்குப்புறத்தில் நந்தவனமும், தீர்த்தக் கிணறும் காணப்பெறுகின்றன. ஐந்து லிங்கங்களை தரிசிக்கும் பாக்கியம் இங்கே நமக்கு கிடைக்கப்பெறுகின்றன. பக்தர்கள் இத்தலத்தை பஞ்சலிங்க க்ஷேத்திரம் என்றே குறிப்பிடுகின்றனர். மிகப் பழமையானதொரு ஆலயம், புதுப்பொலிவுடன் திகழ்கின்றது. தல தீர்த்தமாக விளங்குகிறது திருமூலர் தீர்த்தம்.தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய முதலாம் இராஜராஜ சோழனின் 21 கல்வெட்டுகள் இங்கு ஆலய பிரகாரச் சுவர்களில் காணப்பெறுகின்றன. காடவராயர் காலக் கல்வெட்டு ஒன்றும், விஜய நகர அரசர் காலகல்வெட்டு ஒன்றும் கூட இங்கு காணப்படுகின்றது. 
இத்தல ஈசர் திண்டீச்சுரமுடையார்,
திருத்திண்டீஸ்வர மகாதேவர், திண்டிவனமுடையார் என பல பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார்.சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக இங்கு நடத்தப் படுகின்றன. அதில் எட்டாம் நாள் திருக்கல்யாண உற்சவமும், ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பத்தாம் நாள் தீர்த்தவாரியும் நடக்கின்றது. மகா சிவராத்திரியின் நான்காம் கால பூஜையில் சூரியனின் ஒளிக்கதிர்களும், சித்ரா பௌர்ணமியில் சந்திரனின் குளிர்ந்த ஒளிக்கற்றையும் அம்பாள் மீது படர்வது சிறப்பாகும். நவராத்திரியில் அம்பாளுக்கு பச்சை நிற புடவை சாற்றி வழிபட்டால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும். கேதார கௌரி நோன்பன்று இங்கு இறைவன் இறைவியை வழிபட...தீர்க்க சுமங்கலியாக வாழ்வர்.இத்தலம் செவ்வாய்க்கு உரிய தலமாகும். மிருகசீரிஷம், சித்திரை மற்றும் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு இது பரிகார தலமாகும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று இராகு காலத்தில் துர்க்கைக்கு அபிஷேகம் செய்து, சிவப்பு வஸ்திரம் அணிவித்து, செண்பகமலர் மாலை மற்றும் எலுமிச்சம்பழ மாலையும் அணிவித்து, சித்ரான்னம் நிவேதித்து, குங்கும அர்ச்சனை செய்து வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிட்டும்.ஏழரைச் சனி நடப்பவர்களுக்கும் இது சிறந்த பரிகார தலமாகும்.இந்த திண்டிவனத்தில் திந்திரிணீஸ்வரர் ஆலயத்தோடு இங்கு கிடங்கில் கோட்டையில் திகழும் வரலாற்றுப்பெருமை கொண்ட அறம் வளர்நாயகி உடனுறை அன்பநாயகேஸ்வரர் ஆலயத்தையும் தரிசிப்பது சிறப்பாகும்.

நீண்ட கொடிமரம், பலிபீடம், ரிஷபம் ஆகியவற்றை கடந்து சென்றால் கருவறையில் திந்திரிணீஸ்வரர் மிகப்பெரிய மூர்த்தியாக லிங்கமாக காட்சி அளிக்கிறார். இவரது இடது புறத்தில் மரகதாம்பிகை அம்பாள் தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் செல்வகணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி சன்னிதிகளில் காட்சி அளிக்கின்றனர். காசி, ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக ஆத்ம ஆஞ்சநேயர் இக்கோவில் பிரகாரத்தில் உள்ளார். கோபுரத்தின் உள் நுழைவு வாசலில் பைரவரும், சூரியனும் உள்ளனர். இந்தக் கோவிலில் அமைந்துள்ள 7 நிலை ராஜகோபுரம் பிரமிடு அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

#கோவிலின் சிறப்பு

திண்டிவனம் நகரின் மையத்தில் உள்ள இக்கோவிலின் சிறப்பை, திருநாவுக்கரசர் ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் `கயிலைநாதனை கண்டு பேறு பெறக்கூடிய தலங்களுள் திண்டிவனமும் ஒன்று' என்று சிறப்பித்து பாடியுள்ளார். மரகதாம்பிகை அம்பாளின் திருவுருவமும், கருணை பார்வையும் பக்தர்களுக்கு அருளை வாரி, வாரி வழங்கும் தன்மையாய் உள்ளது. உத்தியோக சிக்கல் நீங்குதல், திருமணம் கைகூடல், வியாபாரம் பெருகுதல், உடல் நலிவு, குழந்தை பாக்கியம் வேண்டி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கும் எலுமிச்சை பழ தீபமிட்டு பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை ஆகும்.

#அம்மனை வழிபடும் சூாியன்:

மாசி மாத மகா சிவராத்திரி அன்று 4-வது கால பூஜையில் எந்தவித செயற்கை ஏற்பாடும் இன்றி, இயற்கையாக சூரிய ஒளி மரகதாம்பிகை அம்பாள் மீது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை படும் அதிசய நிகழ்வும் நடைபெறும். முன்காலத்தில் சிவராத்திரி அன்று 4-ம் கால பூஜையில் சூரிய பகவான் மரகதாம்பிகையை வழிபட்டதாக ஐதீகம்.

ஏழு ராஜநிலைக் கோபுரங்கள் கம்பீரமாகக் காட்சியளிக்கும் இக்கோயிலுக்குள் சென்றால் லிங்கமாகக் காட்சி தருகிறார் திந்திரிணீஸ்வரர். 

கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், நவகிரகங்கள், சனிபகவான், துர்கை அருள் பாலிக்கின்றனர். சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக வைணவம் சார்ந்த சிற்பங்கள் இத்திருத்தலத்தில் உள்ளது.

இக்கோயிலில் உள்ள தட்சணாமூர்த்தியை வணங்கினால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மரகதாம்பிகை அம்மனுக்குப் பச்சை புடவை சாத்தி மனம் உருகி வேண்டினால் குடும்ப வாழ்வு செழிக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டால் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். 

இக்கோயிலில் மகாசிவராத்திரி அன்று நான்காவது கால பூஜைகள் கருவறையில் சிவபெருமானின் தலையிலிருந்து பாதம் வரை சூரிய கதிர்கள் விழும் அதிசயத்தைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

கோயிலில் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இதே போல் ஆனித்திருமஞ்சனம், மாசி மகம், ஆகிய நாட்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

#முக்கிய திருவிழாக்கள்

சித்திரை பெருவிழா 10 நாட்கள், சித்ரா பவுர்ணமி, ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி 10 நாட்கள், அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், ஆருத்ரா உற்சவம், ரதசப்தமி, சிவராத்திரி, மாசி மகம், மரகதாம்பிகை அம்பாளுக்கு ஆடி மாதத்தில் சந்தன அலங்காரம், 63 நாயன்மார்களுக்கு குருபூஜை நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் தனித் தாலுகாவாகத் திகழும் திண்டிவனம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Tuesday, January 30, 2024

திண்டிவனம் முன்னூர் ஸ்ரீஆடவல்லீஸ்வரப் பெருமானையும் அன்னை ஸ்ரீபிரகன்நாயகியையும் தரிசியுங்கள்.

திருத்தலம் அறிமுகம்: தென்திசை நோக்கும் ஆடவல்லீஸ்வரர். நவக்கிரகங்களில் சுபகிரகமாகத் திகழ்பவர் ‘பிருகஸ்பதி’ என்று வணங்கப்படும் குரு பகவான். இந்திரன் உள்ளிட்ட தேவர்களுக்கெல்லாம் ஆச்சார்யனாக விளங்கும் குருபகவான் நான்கு வேதங்களிலும் கரை கண்டவர். சீலத்தினாலும் கடும் தவ வேள்விகளாலும் இவரிடம் உள்ள ஆன்ம ஒளியைக் கண்டு ஈரேழு பதினான்கு உலகத்தவரும் இவரைப் பணிந்து போற்றி வணங்கினர். முக்காலத்தையும் முன்கூட்டியே அறியக்கூடிய சக்தியும் ஞானமும் பெற்றதனால் தனக்கு நிகர் எவருமே இல்லை என்ற கர்வம் குருபகவானுக்கு சில விநாடிகள் ஏற்பட்டது.

தேவர்களேயானாலும் கர்வம் கூடாது என்பது தர்மத்தின் நியதி. இதற்கு மாறாக மனம் மாசுபட்டு குரு பகவான் நடந்து கொண்டதால் தன் தவ வலிமையையும் தெய்வீக ஒளியையும் இழக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. சிறிது நேர கர்வத்தினால் தனக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதே என்று எண்ணி மனம் வருந்திய தேவ குரு, படைப்புக் கடவுளான பிரம்ம தேவரை வணங்கி, தான் இழந்த பலத்தை மீண்டும் பெற வழி கூறியருளுமாறு வேண்டினார்.

குரு பகவானின் நிலை கண்டு வருந்திய பிரம்ம தேவரும் மனமிரங்கி, “பூவுலகில் முன்னூற்று மங்கலம் என்று பூஜிக்கப்படும் திருத்தலம் சென்று அங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி அன்னை பார்வதி தேவியுடன் ஆனந்தத் திருநடனம் புரியும் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து தவமியற்றினால் இழந்த தவ வலிமைகளை மீண்டும் பெறலாம்” என உபாயம் கூறியருளினார்.

தவபலம் மற்றும் ஆன்ம ஒளி

பிரம்மதேவனின் ஆலோசனையை ஏற்ற குருபகவான் ஆடவல்லீஸ்வரப் பெருமானைக் குறித்து நீண்ட நாட்கள் தவமியற்ற, அவரது தவவலிமையால் மனம் மகிழ்ந்த ஈசன் அன்னை பார்வதி தேவியுடன் தரிசனமளித்து குரு பகவானுக்குத் தவ பலத்தையும் ஆன்ம ஒளியையும் மீண்டும் வழங்கி அருள்புரிந்தார்.

நவக்கிரகங்களில் முழுமையான சுபபலம் பெற்ற குரு பகவான் சர்வேஸ்வரனால் ஆட்கொள்ளப்பட்ட இத்திருத்தலம் அன்றிலிருந்து “தென் திருக்கயிலாயம்” என்றும் “பூவுலகின் கயிலை” என்றும் ஈரேழு பதினான்கு உலகத்தவராலும் பக்தியோடு பூஜிக்கப்பட்டுவருவதாத் தலபுராணம் தெரிவிக்கின்றது.

வரலாற்றில் தடம்பதித்த முன்னூர்

சங்க கால இலக்கியங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படும் பத்துப்பாட்டில் நான்காவதாகக் குறிக்கப்படுவது சிறுபாணாற்றுப் படை என்னும் இலக்கியமாகும். இது ஒய்மா நாட்டை ‘கிடங்கல்’ என்னும் கோட்டையிலிருந்து செங்கோல் தவறாமல் அரசாண்ட மன்னன் நல்லியக் கோடனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நல்லூர் நத்தத்தனார் என்பவரால் பாடப்பட்ட இலக்கியமாகும்.

இந்நூலில் “அண்ணல் யானை அருவிதுகள் அவிப்ப நீறடங்கு தெருவின் அவன் சாறயர் மூதூர்” (சிறுபாணாற்றுப்படை பா.200-1) என்று பாடப்பெற்ற மூதூரில் (தற்போதைய முன்னூர்) உள்ள ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் தனிச்சந்நிதியாக ஆறு திருமுகங்கள் மற்றும் பன்னிரு திருக்கரங்களுடன் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசிவசுப்ரமணியராக மயில் மீது அமர்ந்த அற்புதத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றார் முருகப் பெருமான்.

நல்லியக்கோடன் மீது எதிரிகள் போர் தொடுத்தபோது இம்முருகப் பெருமானின் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த தாமரை மொட்டுக்கள் முருகனின் திருவருளால் வேலாக மாறி எதிரிகளின் சேனை வெள்ளத்தை வதைத்து மீண்டது. இதனால் மன்னன் நல்லியக்கோடன் முன்னூர் முருகப் பெருமானுக்கு தினசரி வழிபாடுகள் செய்யக் கொடைகள் அளித்து வெற்றிவேல் பரமனுக்கு நன்றி செலுத்தியுள்ளார்.

நல்லியக்கோடன் பெற்ற வெற்றியின் நினைவாக இன்றும் இத்தலத்தில் செவ்வேள்பரமனுக்கு வேல் பூஜைத் திருவிழா, சித்திரை மாதம், அக்னி நட்சத்திரத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.

சங்க காலத்துத் தொன்மையும், பல்லவர் காலத்துச் சமயச் சிறப்பும், சோழர் காலத்து கலைச் சிறப்பும், சம்புவராயர் காலத்து வரலாற்றுத் தொடர்பும், காடவராயர் காலத்து கல்வெட்டுத் தொடர்பும் கொண்ட மிகவும் புராதனமான திருத்தலம் முன்னூர் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருத்தலமாகும்.

சோழ மன்னன் குலோத்துங்கன் எம்பெருமானுக்கு அன்புப் பணிவிடைகள் செய்து வழிபட்டபோது ஈசன் தில்லையம்பலத்தில் ஆடிய ஆனந்த நடனத்தைக் காண வேண்டும் என்று பக்தியோடு வேள்வி செய்ததினால் அரசனை மகிழ்விக்க எம்பெருமானே அற்புதக் காட்சி தந்து தன் தேவியுடன் ஆனந்த நடனமாடியதால் இத்தலத்தின் ஈசனுக்கு ‘ஆடவல்லீஸ்வரர்’ எனும் திருநாமம் ஏற்பட்டுள்ளதாகத் தல வரலாறு தெரிவிக்கின்றது.

இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அன்னை பிரகன்நாயகியின் அருள் ததும்பும் திருமுக தரிசனம் இங்கு வழிபடும் பக்தர்களின் விழிகளில் நீங்காமல் நிலைத்துவிடுகிறது.

புராதன புடைப்புச் சிற்பத் தொடர்கள்

புராதன காலத்தில் முன்னூற்று மங்கலம் எனப் புகழ்பெற்ற இத்தலம் காலப்போக்கில் மருவி தற்போது ‘முன்னூர்’ என்று பூஜிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலில் உள்ள மிகப் பழமையான கல்வெட்டுகளில் இத்தலத்தின் ஈசன் ஆடவல்ல நாயனார், திருமூலத்தானமுடைய மகாதேவர், விஸ்வேஸ்வரர் என்னும் திருநாமங்களுடன் மன்னர்களின் காலத்தில் வணங்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

பிறந்தால் முக்தி என்று போற்றப்படும் திருவாரூர் தியாகேசர் திருச்சன்னிதி பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் இத்தலத்தின் கல்வெட்டுகளிலும் உள்ளன. இத்திருக்கோயிலில் உள்ள இரண்டு புடைப்புச் சிற்பத் தொடர்கள் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் துறையினரால் 1966-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

மிகப் புராதனமான இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன், தென்திசை நோக்கி எழுந்தருளியிருப்பது வேறு எங்கும் எளிதில் காண முடியாத அரிய தரிசனமாகும். ஜாதகத்தில் 8-ம் இடமாகிய ஆயுள் ஸ்தானத்தில் தோஷமிருப்பவர்களுக்கும் கடும் நோயினால் அவதியுறுபவர்களுக்கும் அளவற்ற இரக்கம் காட்டி அவர்களைக் காப்பாற்றவே இறைவன் தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளதாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கிறது.

சனகாதி முனிவர்களுக்கு மௌன யோக நிலையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி இத்தலத்தில் காட்சி தந்து அருளியுள்ளார் என்று பிரம்மாண்ட புராணம் தெரிவிக்கின்றது. தேவ குருவான பிருகஸ்பதிக்கு இழந்த தவவலிமையை மீண்டும் அளித்து அருள்பாலித்த தலம் என்பதாலும் இறைவன் தென்புலத்தை நோக்கியிருப்பதாலும் மிகச் சிறந்த குருதோஷப் பரிகாரத் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது.

இத்தலத்தில் அரிய திருக்காட்சியாக மேற்குத் திசை நோக்கி எழுந்தருளி யுள்ள தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கை உள்ளது.

காஞ்சி மகாபெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் திருவலம் சிவானந்த மௌனகுரு சுவாமிகளும் இத்திருத்தலத்திற்கு எழுந்தருளி ஸ்ரீஆடவல்லீஸ்வரப் பெருமானையும் அன்னை ஸ்ரீபிரகன்நாயகியையும் தரிசித்துள்ளனர்.

ஆன்மீகப் பொக்கிஷமான இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கும் ஈசன் ஸ்ரீஆடவல்லீஸ்வரப் பெருமானையும் அன்னை ஸ்ரீபிரகன் நாயகியையும் தரிசிக்க குருவருளோடு திருவருளும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெறலாம்.

திருத்தலம் செல்லும் வழி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் 19 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குப்பத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர் திருத்தலம். திண்டிவனத்திலிருந்து அரசுப் பேருந்துகள் உள்ளன. ஆலங்குப்பத்திலிருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

புதுக்கோட்டை பேரையூர் நாகநாத சுவாமி கோவில்

புதுக்கோட்டை பேரையூர் நாகநாத சுவாமி கோவில்

மூலவர்  : நாகநாதர்.
அன்னை : பிரகதாம்பாள்.
தலசிறப்பு: சர்ப்ப தோஷம் நீங்க பிரம்மனும், இழந்த ஒளியை மீண்டும் பெற சூரியனும் நாகர் தலைவன் நாகராஜனும் ஈசனை வழிபட்ட திருத்தலம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்து உள்ள முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது பேரையூர் நாகநாத சுவாமி கோவில். புதுக்கோட்டை-பொன்னமராவதி வழித்தடத்தில் புதுக்கோட்டையில் இருந்து 13-வது கிலோ மீட்டரில் அமைந்து உள்ளது இக்கோவில். மெயின் ரோட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் வடக்கே பயணித்து கோவிலுக்கு செல்ல வேண்டும்.

தற்போது உள்ள மூலக்கோவில் கி.பி. 12-13-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். கருவறையின் வெளிச்சுவற்றில் உள்ள மாடங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தியும், மேற்கே லிங்கோத்பவரும், வடக்கே பிரம்மாவும் அலங்கரிக்கின்றனர். கோவில் விமானம் பிற்காலத்தில் செங்கல்லினால் கட்டி புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

கோவில் அமைப்பு : 

கருவறையின் முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் சுரங்கப்பாதை ஒன்று உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சுரங்கப்பாதை எங்கே செல்கிறது என்பது தெரியவில்லை. இது, போர்க்காலங் களில் கோவில் சிலைகளையும், சொத்துக்களையும் மறைத்து வைக்க தரைமட்டத்திற்கு கீழ் கட்டப்பட்ட சிறிய அறையாக இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.

இந்த கோவில் வளாகத்தில் காலத்தால் முற்பட்டது மேலக்கோபுரமாகும். இதன் கட்டுமான அமைப்பைக்கொண்டு இது கி.பி.11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதலாம். மேலும் இங்கு ராஜேந்திர சோழன் காலத்து (கி.பி.1012-44) கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. ஆகவே இங்குள்ள (மூல) கோவிலும், இக்காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் 12-13-ம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். கிழக்கு கோபுரம் காலத்தால் பிற்பட்டதாகும். இது பிற்கால பாண்டியர்கால கட்டுமானமாகும். கோவிலில் உள்ள பிற மண்டபங்களும் காலத்தால் பிற்பட்டவையாகும்.

இங்குள்ள அம்மன் சன்னிதியின் அமைப்பைக்கொண்டு இது விஜயநகர மன்னர்களின் ஆட்சி காலத்தில் (15-16-ம் நூற்றாண்டு) கட்டப்பட்டதென தெரிய வருகிறது. அம்மனின் பெயர் ஸ்ரீபிரகதாம்பாள். கோவிலில் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், அறந்தாங்கி தொண்டமான் மன்னர்கள், பல்லவராயர் ஆகியோரது கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. காலத்தால் முற்பட்ட கல்வெட்டு ராஜேந்திர சோழன் காலத்தை சேர்ந்ததாகும்.

பல்லவராயர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தபோது இவ்வூர் ‘பேரையூர் நாடு’ என சிறப்புடன் விளங்கியது. பல்லவராயருள் புகழ்மிக்க சிவந்தெழுந்த பல்லவராயர் இக்கோவில் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார்.

நாகநாதர் சுவாமி :

பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் இக்கோவிலுக்கு வந்து தாங்கள் அணிந்துள்ள ஆடைகளுடன் நீராடி அந்த ஆடைகளை அங்குள்ள தீர்த்த குளத்தில் விட்டு விட்டு வேறு ஆடை அணிந்து கொண்டு நாகநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஐந்து தலைகளுடன் கூடிய நாகச்சிற்பங்களை(கல், வெள்ளி, தங்கத்தில்) காணிக்கையாக வைத்து செலுத்துகின்றனர். பக்தர்கள் இவ்வாறு வைத்துள்ள ஆயிரக் கணக்கான கல்லினால் ஆன நாக சிற்பங்கள் கோவில் வளாகம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது.

இந்த கோவிலில் ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் பங்குனி மாதத்தில் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் மட்டம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும். அப்போது கடவுள் வழிபாட்டின்போது இசைக்கப்படும் இசைக்கருவிகளின் ஒலி கேட்பதாக சொல்லப்படுகிறது. பூமிக்கு கீழ் ஆதிசேஷன் நடத்தும் வழிபாட்டு நிகழ்ச்சியின் ஒலியாகும் இது என கோவிலின் கர்ண பரம்பரை கதை தெரிவிக்கிறது.

கோவிலின் அமைப்பை பொதுவாக காணும்போது இது பல முறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிகிறது. 1995-ல் தொண்டைமான் மன்னர் ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி தெரிவிக்கிறது.

பேரையூர் நாடு:-        

புதுக்கோட்டைக்கு 15 கி.மீ தொலைவில் திருமயம் வட்டத்தில் அமைந்துள்ளது பேரையூர்.

பல்லவராயர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தபோது இவ்வூர் ‘பேரையூர் நாடு’ என சிறப்புடன் விளங்கியது. பல்லவராயருள் புகழ்மிக்க சிவந்தெழுந்த பல்லவராயர் இக்கோவில் இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார்.

இப்போது பேரையூர் எனப் பெயர்பெற்று விளங்கும் இந்த ஊர் நாகீசுவரம், திருப்பேரையூர், திருப்பேரை, பேரை என்ற பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

ராஜேந்திர சோழர் காலத்தில் கட்டப்பட்ட பேரையூர் நாகநாதசாமி கோயிலை கிபி 1878 ல் புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்து இன்றைய பொலிவை ஊட்டியவர் புதுக்கோட்டை மன்னர் ராமச்சந்திர தொண்டைமான்.

இக்கோயிலில் வரிசை வரிசையாக நாகக் கற்சிலைகள் புதையுண்டுள்ளன. இக்கோயில் அருகில் உள்ள குளம் குறிப்பிட்ட அளவு நிறைந்ததும், வீசும் காற்றால் ஒருவித இசை ஒலி எழும்புகிறது. இவ்வித இனிய இசை நாதம் ஒரிரு நாட்கள் தொடர்ந்து கேட்பதுண்டு. ஆதிசேஷன் சிவனை இத்தகைய நாதவெள்ளத்தால் வழிபடுவதாகக் கூறப்படுகிறது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க பேரையூர் சோழர், பாண்டியர், விசய நகர மன்னர்கள், பல்லவராயர், தொண்டைமான் போன்ற சிற்றரசர்கள் வரலாற்றுடனும் தொடர்புடையதை இங்குள்ள கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.

திருவிழாக்கள் :

வழக்கமான சிவன் கோவில்களில் நடைபெறும் பூஜைகள் இந்த கோவிலிலும் நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வந்து நாகருக்கு பால் அபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்து தங்களது தோஷம் நிவர்த்தியாக வேண்டி வழிபட்டு செல்கிறார்கள்.

புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் பஸ்சில் ஏறி பேரையூர் விலக்கு என்ற இடத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து ஆட்டோக்களின் வாயிலாக கோவிலுக்கு செல்லலாம். மெயின் ரோட்டில் இருந்து கோவில் அமைந்துள்ள 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தும் செல்லலாம். இதேபோல் காரைக்குடி, மதுரை பகுதிகளில் இருந்து இக்கோவிலுக்கு பஸ் மற்றும் ரெயில் மூலம் வரும் பக்தர்கள் நமணசமுத்திரத்தில் இறங்கி பின்னர் அங்கிருந்து பேரையூர் கோவிலுக்கு செல்லலாம். ஆட்டோ, டவுன் பஸ் வசதியும் உண்டு. 

கோவில் முகவரி :

அருள்மிகு நாகநாதர் கோவில் 

பேரையூர் - 622422

#புதுக்கோட்டை . 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

சேலம் மாவட்டம் தமிழ்நாடு ஏத்தாப்பூர் அருள்மிகு லட்சுமி கோபாலர் ஆலயம்.



*சேலம் மாவட்டம் தமிழ்நாடு ஏத்தாப்பூர் அருள்மிகு லட்சுமி கோபாலர் ஆலயம்.*
*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர்:*

லட்சுமி கோபாலர்

*அம்மன்/தாயார்:*

வேதவல்லி

*தீர்த்தம்:*

வசிஷ்ட தீர்த்தம்

*பழமை:*

500-1000 வருடங்களுக்கு முன்

*ஊர்:*

ஏத்தாப்பூர்

*மாவட்டம்:*

சேலம்

*மாநிலம்:*

தமிழ்நாடு

*திருவிழா:*

*தை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்ஸவம்.*

*தல சிறப்பு:*

*இத்தலத்தில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூபலட்சுமியாக (உருவம் இல்லாமல்) அருளுகிறாள் என்கின்றனர். இதனால் சுவாமி "லட்சுமி கோபாலர்' என்று அழைக்கப்படுகிறார்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு லட்சுமி கோபாலர் திருக்கோயில்,ஏத்தாப்பூர் - 636 102சேலம் மாவட்டம்.*

*போன்:*

*+91- 4282 - 270 210*

*பொது தகவல்:*

*பிரகாரத்தில் வேதவல்லி தாயார் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்குள்ள ஆஞ்சநேயரை "அருள்தரும் ஆஞ்சநேயர்' என்கின்றனர். இவர் தனது வாலை தலை மீது வைத்த கோலத்தில் காட்சி தருகிறார்.பிரகாரத்தில் ஆழ்வார்கள் சன்னதி மட்டும் இருக்கிறது. இத்தல பெருமாளை "சமாதானம் செய்த பெருமாள்' என அழைக்கின்றனர். இவருக்கு மேல் உள்ள மூலஸ்தான விமானம் "திராவிட விமானம் ' எனப்படுகிறது.*

*பிரார்த்தனை:*

*திருமணத்தடை நீங்க, துன்பங்கள் நிவர்த்தியடைய தாயாருக்கு திருமஞ்சனம் செய்து வணங்குகின்றனர்.*

*நேர்த்திக்கடன்:*

*சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி, சிறப்பு அபிஷேகங்கள் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.*

*தலபெருமை:*

*சமாதான தலம்:பிரிந்திருந்த சிவன், அம்பிகையை சேர்த்து வைப்பதற்காக மகாவிஷ்ணு இத்தலத்தில் அவர்களிடம் சமாதானமாக பேசி சேர்த்து வைத்தார்.இதன் அடிப்படையில் இன்றுவரையிலும் இக்கோயில் பிரச்னைகளால் பிரிந்திருக்கும் கணவன், மனைவியரை சேர்த்து வைக்க உறவினர்கள் சமாதானம் பேசுகிறார்கள். மேலும், இங்கு திருமண நிச்சயம் செய்து பின் திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் ஒற்றுமையாக வாழ்வர் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.*

*சிறப்பம்சம்:*

*மூலஸ்தானத்தில் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மகாவிஷ்ணு விரும்பி தங்கிய இடமென்பதால் இத்தலத்தில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூபலட்சுமியாக (உருவம் இல்லாமல்) அருளுகிறாள் என்கின்றனர். இதனால் சுவாமி "லட்சுமி கோபாலர்' என்று அழைக்கப்படுகிறார்.இங்கு வேண்டிக்கொண்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வசிஷ்ட முனிவர் இத்தல பெருமாளை வணங்கிச் சென்றுள்ளார்.*

*தல வரலாறு:*

*பார்வதியின் தந்தை தட்சன், சிவபெருமானை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினான். தான் செல்லாத யாகத்திற்கு, பார்வதியை செல்லவேண்டாம் என தடுத்தார் சிவன். ஆனால், தன் கணவனுக்கு மரியாதை கொடுக்காத தந்தையிடம் நியாயம் கேட்பதற்காக அம்பாள், யாகம் நடத்திய இடத்திற்கு சென்றுவிட்டாள்.கோபம் கொண்ட சிவன், அம்பாளை பிரிந்து பூலோகம் வந்தார். ஒரு வில்வமரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார்.கணவன் தனித்து இருந்ததை அறிந்த அம்பாள் தன் அண்ணன் மகாவிஷ்ணுவுடன் பூலோகம் வந்தாள். சிவனை வணங்கி மன்னிக்கும்படி வேண்டினாள்.மகாவிஷ்ணு தன் தங்கைக்காக சிவனிடம் பரிந்து பேசி சமரசம் செய்தார். கோபம் தணிந்த சிவன், அம்பாளை மன்னித்து ஏற்றுக் கொண்டதோடு லிங்கமாகவும் எழுந்தருளினார். விஷ்ணுவும் அவருக்கு அருகிலேயே தங்கிவிட்டார். இந்நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்ததாக தலவரலாறு கூறுகிறது. சிவபெருமான் சாம்ப மூர்த்தீஸ்வரர் என்ற பெயரில் பெருமாள் கோயில் அருகில் தனிக்கோயிலில் இருக்கிறார். சேலம் வட்டாரத்தில் உள்ள சிவனின் பஞ்சபூத தலங்களில் இது நீர் தலமாகும். மன்னன் ஒருவன் சிவனுக்கு கோயில் கட்டியபோது இவ்விடத்தில் தானும் குடியிருப்பதாக பெருமாள் கனவில் உணர்த்தினார். எனவே, மன்னர் இவ்விடத்தில் பெருமாளுக்கும் தனியே கோயில் கட்டினார்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இத்தலத்தில் சுவாமியுடன், மகாலட்சுமி அரூபலட்சுமியாக (உருவம் இல்லாமல்) அருளுகிறாள் என்கின்றனர். இதனால் சுவாமி லட்சுமி கோபாலர் என்று அழைக்கப்படுகிறார்.*

*அமைவிடம்:*

*சேலத்திலிருந்து 37 கி.மீ., தூரத்தில் ஏத்தாப்பூர் இருக்கிறது. புத்திரகவுண்டன் பாளையத்தில் இறங்கி அங்கிருந்து டவுன் பஸ்களில் செல்லலாம்.*
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

காட்டு மன்னார்கோவில் அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம்.

*கடலூர் மாவட்டம்*
*தமிழ்நாடு*
*காட்டு மன்னார்கோவில் அருள்மிகு காத்தாயி அம்மன் ஆலயம்.*
*மூலவர் : குருங்குடில் காத்தாயி அம்மன், பச்சை வாழியம்மை, பூங்குறத்தியம்மை*

*பழமை : 500 வருடங்களுக்குள்*

*ஊர் : காட்டுமன்னார் கோவில்*

*மாவட்டம் : கடலூர்*

*மாநிலம் : தமிழ்நாடு*

பாடியவர்கள்: 
-
திருவிழா

ஆடி கடைசி வெள்ளி, நவராத்திரி.

தல சிறப்பு

இத்தலத்தில் ஒரே கருவறையில் மூன்று அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில்,காட்டுமன்னார் கோவில்-608 301,கடலூர் மாவட்டம்.

போன்

+91- 99424 44928.

பொது தகவல்

பிராகாரத்தில் முத்து முனி, செம்முனி, ஜடாமுனி, லாடமுனி, கருமுனி, வீரமாமுனி, வாழுமுனி ஆகிய காவல் தெய்வங்களும் அருளுகின்றனர்.

பிரார்த்தனை

சகோதர உறவு மேம்பட, மூன்று அம்பிகையருக்கும் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

சுகப் பிரசவம் ஆவதற்கும், பிரசவத்திற்கு பின் தாயும் சேயும் நலமாக இருப்பதற்கும் காத்தாயி அம்பாளை வழிபடுகிறார்கள்.

நேர்த்திக்கடன்

அம்மனுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தலபெருமை

மூன்று அம்பிகை

மூலஸ்தானத்தில் காத்தாயி அம்பாள், இடுப்பில் முருகனைத் தூக்கி வைத்தபடி இருக்கிறாள். இவளை, "குழந்தையம்மன்' என்றும் அழைக்கிறார்கள். இவளுக்கு வலப்புறம் சங்கு, கரத்துடன் பச்சை வாழியம்மனையும், அடுத்து குறத்தி வடிவில் பூங்குறத்தியம்மனையும் தரிசிக்கலாம்.

சிவன் சன்னதி

கைலாய சிவன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. சிவன் இங்கு உருவ வடிவில் காட்சி தருகிறார். இவர், தெட்சிணாமூர்த்திக்குரிய தென்திசை நோக்கி இருப்பதால், கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுகிறார்கள்.

தல வரலாறு

சோழர்கள் தங்கள் குலதெய்வமாக அம்பிகையை பல்வேறு பெயர்களில் வழிபாடு செய்து வந்தனர். இவர்களில், முதலாம் விக்கிரமசோழன் காத்தாயி அம்மனை வழிபட்டு வந்தான். ஒருமுறை இவன், மதுரையை ஆண்ட வமிசசேகர பாண்டியன் மீது படையெடுத்தான். பாண்டியனுக்கோ போர் செய்வதிலும், உயிர்கள் அழிவதிலும் உடன்பாடில்லை. சிவ பக்தனான அவன், சோழனிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும்படி சொக்கநாதரிடம் வேண்டினான். மன்னனின் வேண்டுதலை ஏற்ற சிவன், குறவன் வேடத்தில் சென்று சோழனுடன் போரிட்டார். அவரை எதிர்க்க முடியாத மன்னன், குறவனாக வந்திருப்பது சிவன் என அறிந்து, அவரது பாதத்தில் சரணடைந்தான்.

சிவன் அவனுக்கு காட்சி தந்து, "மண்ணாசை கொண்டு செய்யப்படும் போரினால், உயிர் இழப்பு தான் ஏற்படும். அதை விடுத்து வேறொரு நன்மையும் உண்டாகாது,'' என உபதேசம் செய்து, "மறுபிறப்பிலும் மன்னனாகப் பிறந்து நல்லாட்சி புரிவாய்' என ஆசிர்வதித்து மறைந்தார். இம்மன்னனே மறுபிறப்பில் இரண்டாம் விக்கிரமசோழனாக பிறந்தான். முற்பிறப்பில் தான் வழிபட்ட காத்தாயி அம்பாளை தொடர்ந்து வழிபட்டான். மன்னனின் பங்காளிகள், இவனது ஆட்சிக்கு தொந்தரவு செய்தனர். அவர்களை ஏதும் செய்ய விரும்பாத மன்னன், அம்பிகையிடம், ""தாயே! நான் முற்பிறப்பில் பாண்டியனுடன் போர் செய்யச் சென்றபோது, சிவனே குறவனாக வந்து போரை தடுத்து என்னை ஆட்கொண்டார். இப்போது பங்காளிகளே எனக்கு தொந்தரவு தருகின்றனர். இதிலிருந்து நீயே என்னைக் காக்க வேண்டும்,'' என வேண்டினான். மன்னனின் வேண்டுதலை ஏற்ற அம்பாள், குறத்தி வேடத்தில் வந்து, பங்காளி களிடம் பேசி, பிரச்னையை தீர்த்து வைத்தாள். மகிழ்ந்த மன்னன், குறத்தி வடிவில் ஒரு அம்பிகையை வடித்து, காத்தாயி அம்பாள் அருகில் பிரதிஷ்டை செய்தான்.

சிறப்பம்சம்

அதிசயத்தின் அடிப்படையில்

இத்தலத்தில் ஒரே கருவறையில் மூன்று அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.

அமைவிடம்

சிதம்பரத்திலிருந்து 29 கி.மீ., தூரத்தில் உள்ள காட்டு மன்னார்கோவிலுக்கு சென்று, அங்கிருந்து 2 கி.மீ., ஆட்டோவில் சென்றால் வடவாற்றங்கரையில் உள்ள கோயிலை அடையலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம்

சிதம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி 

தங்கும் வசதி

சிதம்பரம்

காத்தாயி அம்மன்
மூலஸ்தானத்தில் பூங்குறத்தி
முருகன்
பச்சைவாழியம்மன்
பிள்ளையார்
பூங்குறத்தி
பூங்குறத்தி
சிவன்
உற்சவர் பூங்குறத்தி ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்

Monday, January 29, 2024

63 நாயன்மார்களில் ஒருவரான சண்டேச நாயனார் (சண்டிகேஸ்வரர்) குருபூஜை .

சிவ வழிபாட்டிற்கு வைக்கப்பட்ட பாலை காலால் எட்டி உதைத்து இடையூறு செய்த தனது தந்தையின் கால்களை வெட்டி, சிவபெருமானால் பட்டம் சூட்டப்பெற்ற ஒரேயொருவரான
63 நாயன்மார்களில் ஒருவரான
#சண்டேச_நாயனார் (சண்டிகேஸ்வரர்) குருபூஜை : 
(தை _உத்திரம்)
சண்டேசுவர நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். விசாரசருமா என்ற இயற்பெயருடைய இவர் சிவபெருமானுக்கு அலிங்க பூசை செய்து கொண்டிருந்த போது அவருடைய தந்தையே அதற்கு இடையூறு செய்தார். அதனால் கோபம் கொண்டவர் தந்தையை மழுவால் வெட்டினார். அதன் காரணமாக சிவபெருமான் தன்னுடைய பூசைக்கு உரிய பொருட்களுக்கு உரியவராக சண்டேசுவர் எனும் பதவியளித்தார்.
சண்டேசுவர நாயனார் சிவ வழிபாட்டிற்காக வைத்திருந்த பாலை எட்டி உதைத்த தன் தந்தையின் காலை துண்டித்த மறையவர்.

சண்டிகேசர், சண்டேசர் என்று அழைக்கப்படும் இவரை சிவாலயங்களில் காணலாம். சிலர் கைதட்டி சாமி என்றும் கூறுவர்.

சண்டேசுவர பதவியைப் பெற்றமையால் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவரை சண்டேசர், சண்டிகேசுவர் என்றும் அழைக்கின்றனர்.
சண்டேசுவர நாயனார் சோழநாட்டில் உள்ள திருச்சேய்ஞலூர் என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விசாரசருமா என்பதாகும்.

திருச்சேய்ஞலூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் திருப்பனந்தாள் அருகே மண்ணியாற்றின் கரையில் அமைந்துள்ளது.

சேய் என்பது முருகனைக் குறிக்கும். முருகன் இங்கே உள்ள சிவனாரை வழிபட்டு சர்வசங்காரப் படையைப் பெற்று போரில் சூரனை வென்றார் என்பது வரலாறு.

மேலும் சிவனுக்கு குருவாக அமர்ந்து போதித்தால் முருகனுக்கு சிவத் துரோக தோசம் பற்றியது. இங்குள்ள இறைவனாரை வழிபட முருகனைப் பற்றிய தோசம் விலகியதாகக் கூறப்படுகிறது.

முருகன் வழிபட்ட இடமாதலால் இவ்வூர் சேய்ஞலூர் என்றும், திருச்சேய்ஞலூர் என்றும் அழைக்கப்பட்டு தற்போது தற்போது சேங்கனூர் என்று அழைக்கப்படுகிறது.

#ஆவினம் மீது ஏன் சினம் :
திருச்சேய்ஞலூரில் வேதியர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்களில் எச்சதத்தனும் ஒருவர். இவருடைய மனைவி பெயர் பவித்திரை. இவ்விருவரின் புதல்வரே விசாரசருமா.

விசாரசருமா சிறுவயதிலேயே வேதஅறிவில் சிறந்து விளங்கினான். அத்தோடு இறைவனை எண்ணி வாழும் பேரன்பும் நிறைந்தும் விளங்கினான்.

விசாரசருமாவுக்கு ஏழு வயது நிரம்பிய போது, அவருடைய தந்தை வேதங்களைக் கற்றுக் கொள்ள வேதபாட சாலைக்கு அனுப்பினார்.

வேதபாட சாலையில் பயின்ற சமயம் ஒருமுறை விசாரசருமா நண்பர்களுடன் மண்ணியாற்றங் கரைக்குச் சென்றார்.

அப்போது மண்ணியாற்றங் கரையில் சிறுவன் ஒருவன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தான். பசு ஒன்று
அச்சிறுவனை முட்டியது. இதனால் கோபம் அடைந்த அச்சிறுவன் கையிலிருந்த கோலால் பசுவை அடிக்கத் தொடங்கினான். பசுவின் கண்களிலிருந்து கண்ணீர் சிந்தியது.

இதனைக் கண்ட விசாரசருமா பசுவின் மேல் கொண்ட அன்பால் கண்ணீர் வடித்தான்.

ஆநிரைகளை மேய்த்த அச்சிறுவனிடம் விசாரசருமா “உலகத்தின் தலைவனான சிவனாரின் அபிசேகத்திற்கு உதவும் பஞ்சகவ்யத்தை அளிப்பது ஆவினம். மேலும் சிவனாரும் அவர் தம் அடியார்களும் பூசிக் கொள்ளும் திருவெண்ணீற்றின் மூலத்தைக் கொடுப்பது ஆவினம். எல்லா தேவர்களையும், எல்லா தீர்த்தங்களையும் கொண்டு விளங்குவது ஆவினம். எல்லாவற்றிற்கும் மேலாக சிவனார் எழுந்தருளும் திருநந்தியின் இனம் இவ்வாவினிம். இப்படிப்பட்ட பெருமைகளை உடைய பசுவிடம் கடுமையாக நடந்து கொள்கிறாயே? இனி நானே இப்பசுக்களை மேய்கிறேன்.” என்று கூறி அப்பொறுப்பினை ஏற்றான். ஊராரும், வேதியர்களும் இதற்கு உடன்பட்டனர்.

#பரமனுக்கு பாலாபிசேகம் :

விசாரசருமா பசுக்களிடம் மிகவும் கனிவாக நடந்து கொள்வான்; மண்ணியாற்றின் கரையில் புற்கள் மிகுந்த இடத்துக்குப் பசுக்களை அழைத்துச் சென்று மேய விடுவான்; தானே புற்களைப் பறித்தும் கொடுப்பான்; தூய நீர் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று நீரருந்தச் செய்து கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாப்பான்.

இதனால் பசுக்கள் விசாராசருமாவிடம் பேரன்பு கொண்டன. அவை வழக்கத்தைவிட அதிகமான பாலைக் கறந்தன. அவை அவ்வப்போது மண்ணில் பாலைச் சொரிந்தன. இதனைக் கண்டதும் விசாரசருமா இறைவனின் அபிசேகத்திற்கு இந்த பால் உதவுமல்லவா? என்று எண்ணினான்.

மண்ணியாற்றங் கரையிலேயே மண்ணால் கோவில் கட்டி அதில் மண்ணால் ஆன சிவலிங்கத்தை உருவாக்கினான். புதிய பாண்டங்களைக் கொண்டு வந்து பசுக்களிடமிருந்து பாலைக் கறந்தான். ஆற்றங்கரையில் இருந்த பூக்களையும், இலைகளையும் பறித்து வந்தான்.

பின்னர் பசுக்களின் பாலினைக் கொண்டு மணல் லிங்கத்திற்கு வேதமந்திரங்களைக் கூறி அபிசேகம் செய்தான். பூக்களையும், இலைகளையும் கொண்டு வேதத்தால் அர்ச்சனை செய்தான்; தன்னை மறந்து சிவலிங்க வழிபாட்டில் ஈடுபட்டான்.

இவ்வாறு நாள்தோறும் ஆத்மார்த்தமான சிவலிங்க வழிபாட்டினை விசாரசருமா மேற்கொண்டு வந்தான்.
ஒருநாள் விசாரசருமாவின் செயலினை சேய்ஞலூரைச் சேர்ந்த அறிவிலி ஒருவன் கண்டான். பசுக்களின் பாலினை வீண் செய்கிறானே என்று எண்ணினான்.

ஊருக்குள் சென்று நடந்தவைகளைக் கூறி பசுக்களின் பாலினை எல்லாம் மணலில் ஊற்றி விசாரசருமா வீணாக்குவதாகக் கூறினான்.

அதனைக் கேட்ட ஊர்மக்கள் எச்சதத்தனிடம் சென்று நடந்தவைகளைக் கூறி விசாரசருமாவிடம் பாலை வீணாக்காமல் இருக்கும்படி செய் என எச்சரித்தார்கள்.

எச்சதத்தனும் நடந்தவைகள் ஏதம் தனக்கு தெரியாது எனவும், இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறினான்.

#தந்தையை தண்டித்த தனயன் :

மறுநாள் விசாரசருமாவின் நடவடிக்கைகளைக் கவனிக்கும் பொருட்டு எச்சதத்தன் பகல் வேளையில் மண்ணியாற்றங்கரைக்குச் சென்று மரத்தில் மறைந்து கொண்டான்.

அங்கே விசாரசருமா புதிய மணல் லிங்கத்தை அமைத்தான். பசுக்களிடமிருந்து பாலைக் கறந்து பாண்டங்களில் வைத்தான். பச்சிலைகளையும், பூக்களையும் பறித்து வந்தான்.

பின்னர் அவன் சிவவழிபாட்டைத் தொடங்கினான். கறந்த பசுவின் பாலைக் கொண்டு அபிசேகத்தைத் தொடங்கினான். அதனைக் கண்டதும் எச்சதத்தன் கோபம் கொண்டான். கம்பு ஒன்றை எடுத்து வந்து விசாரசருமாவை முதுகில் அடித்தான். கடுமையான சொற்களால் திட்டினான்.

விசாரசருமன் ஆத்மார்ந்தமாக சிவபூசையில் ஈடுபட்டிருந்ததால் எச்சதத்தன் அடித்ததோ, திட்டியதோ உணரவில்லை. எச்சதத்தனின் கோபம் தலைக்கு ஏறியது. உடனே தன்னுடைய கால்களால் பால் இருந்த பாண்டங்களை உதைத்தான்.

அபிசேகப் பால் முழுவதும் சிந்தியது. அதனைக் கண்டதும் விசாரசருமன் தன்னிலை உணர்வு வந்து தன்னருகில் இருந்த கழியை (கம்பு) எடுத்து, அபிசேகப் பாலை உதைத்த எச்சதத்தனின் கால்களை நோக்கி வீசினான்.

கழியானது கோடாரியாக மாறி எச்சதத்தனின் கால்களை துண்டாக, அவன் நிலைதடுமாறி கீழே விழுந்தான்.

அப்போது வானத்தில் விடைவாகனத்தில் இறைவனார் உமையம்மையுடன் அம்மையப்பராகத் தோன்றினார்.
அவரை பலவாறு போற்றி வழிபட்டான் விசாரசருமன்.

இறைவனார் “அபிசேகப் பாலை உதைத்தது பெற்ற தந்தை என்றும் பாராமல், தண்டித்த உனக்கு இனி யாமே தந்தை.” என்று அருளினார்.

மேலும் “உனக்கு இன்று முதல் சண்டீசப் பதவியை வழங்கினோம். எம்முடைய வழிபாட்டில் படைக்கப்படும் பொருட்கள் யாவையும் இனி உனக்கே உரித்தாகும். நீ இனி சிவனடியார்களாகிய மகேசுவர்களுக்கெல்லாம் தலைவனாக முதன்மை மகேசுவரான விளங்குவாய்” என்று அருளி தன்னுடைய திருமுடியில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமாவுக்கு அணிவித்தார்.

இறைவனின் திருவாக்கின்படி, விசாரசருமர் அன்று முதல் சண்டேசுவரர் ஆனார்.

கால்களை இழந்த எச்சதத்தன் இறையருளால் சிவலோகத்தை அடைந்தான்.

இறைவனின் அருள்வாக்கின்படி, இன்றும் இறைவனுக்கு படைக்கப்படும் பொருட்களை சண்டேசுவருக்கு படைத்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.

சண்டேசுவர நாயனார் குருபூஜை தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சிவவழிபாட்டிற்கான பாலை எட்டி உதைத்த தந்தையின் காலை துண்டித்த சண்டேசுவர நாயனாரை, சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘மெய்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதையாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டி பெருமானுக்கும் அடியேன்’ என்று போற்றுக.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

கடன் பிரச்சனைகளை தீர்க்கும் வாராஹி அம்மன் வழிபாடு.!

கடன் பிரச்சனைகளை தீர்க்கும் வாராஹி அம்மன் வழிபாடு.! எப்போது, எப்படி வழிபட வேண்டும்?
கடன் பிரச்சனைகளை தீர்க்கும் வாராஹி அம்மன் வழிபாடு.! எப்போது, எப்படி வழிபட வேண்டும்? மகா வாராஹி அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன. மேலும், சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபாட்டு வருபவர்களுக்கு கடன் தொல்லை தீரும்.


பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பெரும்பாலானவர்கள் அம்மன் வழிபாடு செய்வார்கள். ஆனால், ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு என்று வரும்போது, அமாவாசை, பஞ்சமி ஆகிய திதிகள் விசேஷம். எதிரிகள், செய்வினை, கண் திருஷ்டி, முடக்கம் ஆகியவற்றை நீக்கும், காக்கும் அம்மனாக வாராஹி அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ வாராஹி அம்மனை புதன் கிழமைகளில் வழிபாட்டு விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும்.

மகா வாராஹி அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன. மேலும், சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபாட்டு வருபவர்களுக்கு கடன் தொல்லை தீரும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் செலவாகிக் கொண்டே இருக்கிறது, வரவுக்கு மீறி செலவு, கடனை முழுமையாக தீர்க்க முடியாத சூழல், கடனால் ஏற்பட்ட நெருக்கடிகள், தீராத கடன் சுமை போன்ற எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தரிசித்து வரலாம்.


ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரகத்தின் காரகத்துவம் உள்ளது. வேத ஜோதிடத்தில் 12 ராசிகளில், 6 ஆவது ராசியான கன்னியின் ராசியின் அதிபதியாக புதன் இருக்கிறார். மேலும், கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில், ஆறாம் வீடு என்பது கடன், பகை, வம்பு, வழக்கு, நோய் ஆகியவற்றைக் குறிக்கும். புதன் கிழமையின் அதி தேவதை மகா விஷ்ணு, மகா விஷ்ணுவின் சொரூபம் தான் விஷ்ணுமாயா என்று அழைக்கப்படும் ஸ்ரீ வாராஹி அம்மன். எனவே, புதனின் 6 ஆம் வீட்டு காரகத்தால் ஏற்படும் பாதிப்பை போக்குவதற்கு வாராஹி அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டு வரலாம்.

தொடர்புடைய செய்திகள்
தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று உங்கள் ராசியின் பலன் இதோ..
திட்டமிடப்படாத உங்களின் நிதித்தேவைகளுக்கான உடனடித் தீர்வு.!
தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று உங்கள் ராசியின் பலன் இதோ..
புதுக்கோட்டையில் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது..

ஜாதக ரீதியாக ஆறாம் வீடு பலம் இல்லாதவர்களும், புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தரிசித்து கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

வாராஹி அம்மனை வழிபடுவது எப்படி?

பொதுவாக வாராஹி அம்மனை பிரம்மா முகூர்த்தம் அல்லது சூரிய அஸ்தமனம் ஆன பின்பு வழிபடுவது உகந்தது.

ஒவ்வொரு புதன் கிழமையும், வாராஹி அம்மன் ஆலயத்தில் அல்லது சன்னதியில் ஒற்றைப் படை எண்ணில், அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வரவும். ஒரு சில வாரங்களிலேயே மிகப்பெரிய மாற்றங்கள் தெரியும்.

சிவப்பு நிற மலர்கள் மற்றும் நறுமணம் மிக்க மலர்களை அம்மனுக்கு சாற்றி அர்ச்சனை செய்யலாம்.

மாதுளை, பசும்பால், பனை வெல்லம் மற்றும் வெல்லத்தால் செய்த இனிப்புகளை நைவேத்தியம் செய்யலாம்.

கடன் தொல்லை மட்டுமின்றி, கடனால் ஏற்பட்ட வழக்குகள் உள்ளவர்கள் வழிபாடு செய்யலாம். 
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலின் வெளிப்புற பிரகாரத்தில் பூம்பாவையின் சந்நிதி



பாம்பு கடித்து மரணமடைந்த பூம்பாவையை எரித்து அதன் சாம்பலையும், எலும்பையும் பாதுகாத்து வைத்திருந்தார் சிவநேசர். கபாலீஸ்வரரை நினைத்து பதிகம் பாடி பூம்பாவையை உயிர்தெழ வைத்தார் திருஞான சம்பந்தர். இந்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது.
ஆளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் அவரை சிவநேசர் அழைத்துவருகிறாராம். பாதையெல்லாம் பூக்கள். எப்போதும் ஓயாத அலைகளால் நனைந்திருக்கும் அந்த நெய்தல் நிலம் அன்று அந்த சாலையில் தூவியிருந்த மலர்களில் இருந்து சிந்திய தேன் துளிகளால் நனைந்திருந்தது. மெத்தை விரித்ததுபோல் அவ்வளவு பூக்கள்.

அதோ வந்துவிட்டது ஆளுடையபிள்ளையின் சிவிகை. பூக்களில் மிதந்த படகு போல் வந்து இறங்கியது பல்லாக்கு. அந்தச் சிவிகையிலிருந்து சிவத்தொண்டாலும் செந்தமிழ்த் தொண்டாலும் கனிந்திருந்த திருஞானசம்பந்தப் பெருமான் இறங்குகிறார். உடலிலும் நெற்றியிலும் சிவச்சின்னங்கள் தரித்து வணக்கத்துக்குரிய சிவனடியாராக சிவநேசரின் வேண்டுகோளை நிறைவேற்ற அங்கே எழுந்தருளியே விட்டார்.

சீர்காழிச் செம்மல் எதற்காக வந்திருக்கிறார் ? அவரை ஏன் சிவநேசச் செல்வர்  அழைத்து வருகிறார் என்றெல்லாம் மக்கள் கேள்வி கேட்டுக் கொண்டார்கள். ஒரு சாரார் சொன்னார்கள்,. எல்லாம் சிவநேசரின் மகள் அங்கம் பூம்பாவையை மணந்துகொள்ளத்தான். ஆனால் ஐயகோ அவள்தான் இப்போது சாம்பலாகிவிட்டாளே. ஒரு குடத்தில் பிடி சாம்பலும் எலும்புமாக மிஞ்சி இருப்பவளைக் காட்டவா அழைத்துவந்தார் என்றார்கள் சிலர்.  

சிவன் மேல் பற்று இருக்கலாம். ஆனால் பித்து அல்லவா இருந்தது அவருக்கு. அதனால் அல்லவா ஏழே வயதான தன் மகள் பூம்பாவையை சிவநெறிச் செல்வரான திருஞானசம்பந்தருக்கு மணமுடித்துத் தர விரும்பினார். அஸ்தியை வைத்து இப்போது என்ன செய்வாராம் என பேசிக்கொண்டிருந்தது மயிலை ஜனம்.

புன்னைமரங்கள் அடர்ந்து காடாக வளர்ந்திருந்தன. அங்கே மயில்கள் அகவிக் கொண்டிருந்தன. கருநீல நிறத் தோகைகளை அடர்ந்து விரித்து அங்கங்கே கருமேகம்போல் பறந்து இறங்கி்ன. கூடவே வானவில்லும் இறங்கியது போலிருந்தது.

நந்தவனத்தில் பூப்பறிக்கச் சென்றிருந்தாள் பூம்பாவாய். தோழியர் எல்லாம் நந்தியாவட்டை, செம்பருத்தி, இருவாட்சி, அந்திமந்தாரை, செவ்வரளிப்பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். மாசிப்பச்சை, மரிக்கொழுந்து, திருநூத்துப் பச்சை, துளசி, அருகம்புல், எருக்கம்பூ எல்லாமே அங்கே வளர்ந்திருந்தன. சிவனார் சிரசை அலங்கரிக்கும் சரக்கொன்றைப் பூக்களும்,ஷெண்பகப் பூக்களும் வில்வங்களும் கூட அங்கே அடர்ந்திருந்தன. புன்னை மரங்கள், கொன்றை மரங்கள், கடம்ப மரங்களும் அரணாக விளங்கின.

இவற்றின் நடுவே அந்த உந்தியாவனத்தில் பூக்களோடும் பூவையர்களோடும் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் பூம்பாவை. மயில்கள் அகவியபடி ஓடின. சின்னஞ்சிறுமியர் அவற்றின் பயம் கண்டு வெகுளியாய்ச் சிரித்தனர். அவை என்ன சொல்ல விரும்பினவோ தெரியவில்லை. ஆனால் பூம்பாவை இருந்த பக்கம் திருநூத்துப் பச்சை வாசம் அதிகமாக வீசியது.

இதென்ன இப்படி விபூதி வாசம் வீசுகிறதே. இப்படி அதிகமாக திருநூத்துப் பச்சை வீசினால் பூச்சி ( பாம்பு ) இருக்குமென அம்மா சொல்வாளே என நினைத்தபடி திரும்பினாள் பூம்பாவை. என்ன சொல்வது. சரசரவென ஒலி மட்டும்தான் கேட்டது. அந்தப் பெண்குழந்தை கண்மூடிக் கண் திறப்பதற்குள் அங்கே இருந்த புதரில் ஒளிர்ந்திருந்த கருநாகம் ஒன்று என்னவோ கருமவினைப் பயன் தீண்டுவது போல அவளைத் தீண்டி ஓடியது.

வாயில் நுரை தள்ளக் கீழே விழுந்தாள் பூக்களைப் போன்ற மென்மையான பூம்பாவை. சிவநேசச் செல்வரின் அன்பு மகள் சிவனடி சேர்ந்துவிட்டாள். செய்தி கேட்டு ஓடிவந்த சிவநேசருக்கு புத்தி பேதலித்துவிட்டது. அவர் மகள் இறந்ததை அவரால் ஒப்ப முடியவில்லை.

ஆளுடைய பிள்ளைக்கு அல்லவா மணமுடித்துத் தர எண்ணியிருந்தார். அது எப்படி நடக்காமல் போகும். அவர் வரும்வரை அவளைப் பாதுகாக்க வேண்டுமே. ஆனால் ஊரார் ஒப்பவில்லை. விஷம் பாய்ந்து நீலம் பாரித்த உடல் என்பதால் இறுதிக்கடன்களை செய்யக் கோரினர். ஊராருக்காக அவர் மகளின் உடலை எரித்தாலும் எலும்பும் சாம்பலுமான அவள் அஸ்தியை நீர் நிலைகளில் கரைக்காமல் ஒரு குடத்தில் போட்டுக் கன்னி மாடத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார். 

அவருக்கு நம்பிக்கை இருந்தது ஆளுடையபிள்ளையிடம் ஒப்படைக்கும் வரை தாம் உயிருடன் இருக்கவேண்டும் என்று சிவனிடம் சித்தம் வைத்துக் காத்திருந்தார். ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.

அஹா அதோ வந்துவிட்டார் ஆளுடையபிள்ளை. அது ஒரு தைப்பூசத் திருநாள். திருமயிலையே மாடவீதியில் இருந்த சிவநேசரின் வீட்டினருகில் குழுமி உள்ளது. உள்ளே அழைத்துச் சென்று சிரமபரிகாரங்கள் செய்துவித்து அதன் பின் தன் மகளின் அஸ்தி கொண்ட குடத்தை ஆளுடைய பிள்ளையிடம் ஒப்புவித்தார் சிவநேசர். கொடுப்பதற்குள் அவரது குரல் நைந்து குழம்பி அழுது நடுங்கிக் கொண்டிருந்தார்.

”இதோ எங்கள் மகள் பூம்பாவை. சிவநெறிச் செல்வரான உங்களுக்கு மணம் செய்வித்து மகிழ எண்ணினோம். ஆனால் அவளது அஸ்தியைக் கொடுக்க வேண்டியதாயிற்று. தேவரீர் அருள வேண்டும். “ என நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்கள் பூம்பாவையின் பெற்றோர்.

பெற்றவர்களின் முகத்தைப் பார்த்தார் சம்பந்தர். திருஞானம் பெற்றவரல்லவா. திருமயிலை ஈஸ்வரன் மேல் பதினோறு பதிகங்கள் பாடலானார். முதல் பதிகமாக மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை “ என்ற பாடலைப் பாடினார். சிவனடியார்களுக்கு அமுது செய்விப்பதையும் சிவனுக்குத் தொண்டு செய்வதையும் விடுத்து மறைந்து போய்விட்டாயே பூம்பாவாய் என அவர் பதினோராம் பதிகம் பாடப் பாட அந்தக்குடத்தை உடைத்து உயிர்பெற்றெழுந்தாள் பூம்பாவை. 

ஏழுவயதுப் பெண்ணாக மறைந்த பூம்பாவை பன்னிரெண்டு வயதுக் குமரியாக சாம்பலில் இருந்து உயிர்த்தார். ஊரே பார்த்து அதிசயித்து ஆஹாஹாரம் செய்தது. யாருக்கும் பேச்சும் வரவில்லை. மூச்சும் வரவில்லை. திறந்தவாயை மூடாமல் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள்.

அகமும் முகமும் ஒருங்கே மலரப் பெற்ற சிவநேசரும் அவர் மனைவியும் ஆளுடைய பிள்ளையிடம் மற்றுமொரு முறை விழுந்து வணங்கி அவளை மனைவியாக ஏற்க வேண்டுகிறார்கள்.

அப்போது சொல்கிறார் சம்பந்தர் அதைக் ஊரே உற்றுக் கேட்டது, “ சிவநேசரே நீர் பூம்பாவையைப் பெற்றவர். நானோ சிவனை வேண்டித் துதித்து அவளது அஸ்தியிலிருந்து அங்கம் கொடுத்தவன். உயிர் கொடுத்து இந்த உலகில் அவளை உலவவிட்ட பெற்றோர் நீங்கள். அவள் மரித்ததும் மீண்டும் நான் வேண்ட இறையருளால் அவள் உயிர்பெற்றாள். அக்கணமே நானும் அவளைப் பெற்றவனாகிறேன். தந்தை ஸ்தானத்தில் இருப்பதால் எனக்கும்  அவள் மகளேயாவாள் “ என்று கூறி விடுகிறார். தன் காலில் விழுந்து வணங்கும் அவளை ஆசீர்வதித்துச் செல்கிறார்.

அவர் சொல்லியது உண்மைதானே என்று ஊரே ஏற்றுக் கொள்கிறது. சிவநேசரின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டாலும் அவள் உயிர்பெற்று வந்ததே இறையருள்தானே. அதனால் சாம்பலில் உயிர்ந்த அந்த அங்கம்பூம்பாவை தன் அங்கம் தந்த சம்பந்தரையும் தந்தையாக ஏற்றுக் கொள்கிறாள். சிவத்தொண்டிற்குத் தன்னை அர்ப்பணித்து அதன் பின் இறைவன் திருவடி சேர்கிறாள்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலின் வெளிப்புற பிரகாரத்தில் பூம்பாவையின் சந்நிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதியின் கோபுரத்தில் பூம்பாவை உயிர்ப்பெற்று எழும் நிகழ்வு சுதை சிற்பமாக உள்ளது. இதில் திருஞானசம்பந்தர், உயிர்ப்பெற்று எழும் பூம்பாவை, பூம்பாவின் பெற்றோர்கள் உள்ளார்கள்.

திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சியை மயிலாப்பூர் தலத்தில் விழாவாக கொண்டாடுகிறார்கள். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 8ம் நாளின் காலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் உற்வச சிலைகளை தீர்த்தல் குளிப்பாட்டிய பிறகு, குடத்தில் நாட்டுச்சர்க்கையை இட்டு பூம்பாவையின் சாம்பலாக கொண்டுவருகிறார்கள்.

அதன்பிறகு திருஞானசம்பந்தரின் பதிகம் ஓதப்படுகிறது. இதன் பிறகு பூம்பாவை உயிருடன் எழுந்ததாக பாவனை செய்து நிகழ்வினை முடிக்கின்றார்கள். இந்நிகழ்வினை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். 

திருஞானசம்பந்தர் அருளிய 
#பூம்பாவைத் திருப்பதிகம்:

1.மட்டிட்ட புன்னை அம்கானல் மடமயிலைக் 
கட்டு இட்டம் கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு 
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

#பாடல் விளக்கம்‬:

பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ?.

2.மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் 
கைப் பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் 
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:

பூம்பாவாய்! மைபூசப்பெற்ற ஒளி நிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைமேல் பயன் தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவ முனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ?

இவ்வாறு பூம்பாவையை தைப்பூசநாளில் திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தாக கூறப்படுகிறது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Sunday, January 28, 2024

திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசர் ஆலயம் சிவபெருமானுக்குரிய குடைவரை கோவில்....

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வட தமிழ்நாட்டில் அப்பர் என்னும் திருநாவுக்கரசரும், தென் தமிழ்நாட்டில் திருஞானசம்பந்தரும், சமணர்களை வென்று சைவ சமயப் பேரெழுச்சியை உண்டாக்கினார்கள். அந்த எழுச்சியின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் சிவபெருமானுக்குக் குடைவரை கோவில்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசர் ஆலயம் ஆகும். இந்த ஆலயம் கட்டும் பணி 8-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் பல கல்வெட்டுகள் மாறவர்மன் திருப்புவனச் சக்கரவர்த்தி குலசேகரதேவன் என்னும் பாண்டிய மன்னன் ஆற்றிய பணிகளை பட்டியலிட்டுக் காண்பிப்பதாக இருக்கிறது. எனவே திருக்கோளக்குடி ஆலயத்தின் திருப்பணிகள், 13-ம் நூற்றாண்டில் முழுமை பெற்றிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


திருக்கோளபுரம் என்று வழங்கப்பெறும் இத்தலம் முல்லைக்குத் தேர் தந்த வள்ளலான பாரி வேந்தன் ஆட்சி செய்த பறம்பு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கிறது. மேலும் பூங்குன்ற நாட்டில் ‘யாதும் ஊரே.. யாவரும் கேளிர்’ என்று 2 ஆயிரம் ஆண்டு ளுக்கு முன்பே, உலக ஒருமைப்பாட்டையும், மனித நேயத்தையும் ஏற்றமிகு குரலில் எடுத்து முழங்கிய கணியன் பூங்குன்றனார் பிறந்த மகிபாலன்பட்டிக்கு வடக்கில் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல பூங்குன்றநாடு, கோனாடு, கானாடு, கல்வாயில்நாடு என்னும் நான்கு நாடுகளுக்கும் நடுவில் அமைந்துள்ளது. அந்த நான்கு நாட்டாரும் வந்து வழிபடும் சிறப்பு பெற்ற ஆலயம் என்பதால், இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை ‘நானாட்டீசர்’ என்று தல புராணம் போற்றிப் புகழ்கிறது.

திருக்கோளக்குடி கிராமத்தின் மேற்கு எல்லையில் பெரியனவும், சிறியனவுமான கோளப்பாறைகளை சுமந்தபடி எழுந்து நிற்கிறது ஒரு குன்று. அதன் நடுவில் பெரியதொரு கோளக்குன்று அமைந்துள்ளது. அதில் தான் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது திருக்கோளக்குடி மலைக்கோவில். இந்தக் குன்றின் வடக்கு பக்கத்தில் ‘உலக்கைக் குன்று’ என்ற பெயரிலும், தென்கிழக்கு பகுதியில் ‘பிச்சூழிப்பாறை’ என்ற குன்றும் காணப்படுகின்றன. இந்தக் குன்றின் பாறைக் கோளங்கள் எந்த தருணத்தில் கீழே உருண்டு விழுமோ? என்று காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்த மலை மீது 4 ஆலயங்கள் இருக்கின்றன. அடிவாரம் ‘பொய்யாமொழீசர் ஆலயம்’, அதற்கு சற்று மேலே ‘சிவ தருமபுரீசர் ஆலயம்’, மேல் பகுதியில் ‘திருக்கோளபுரீசர் கோவில்’, அதற்கும் கொஞ்சம் மேலே ‘முருகப்பெருமான் ஆலயம்’ ஆகியவை காணப்படுகின்றன. ஒரு மலை மீது 4 ஆலயங்கள் அமைந்திருக்கும் சிறப்பு வாய்ந்த தலமாகவும் திருக்கோளக்குடி உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதியை ‘சிவபுரம்’ என்றும், ‘திருக்கோளபுரம்’ என்றும், ‘கன்னிமாநகரம்’ என்றும் அழைத்திருக்கிறார்கள். புண்ணியம்மிகுந்த பாண்டிய நாட்டில் ஏராளமான சிவதலங்கள் இருக்கின்றன. பாண்டிய நாட்டிற்குள் இருந்து தொடங்கும் பொதிகை மலைக்கு, திருக்கோளக்குடியில் உள்ள கன்னி மலையே மூல இடமாக விளங்குகிறது. பொதிைக மலையை விடவும், கன்னி மலையில் உள்ள சிவதருமபுரம் மிகவும் பெருமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஏனெனில் பூமி, அந்தரம், சொர்க்கம் என மூன்று நிலைகளில், பரமனின் அந்தரங்க இடமாக இந்த திருக்கோளக்குடி விளங்குகிறது. கயிலை மலைக்கு ஒப்பான திருத்தலம் இது என்றும், மூவுலகத்திலும் இதற்கு ஈடான பெருமை கொண்ட தலம் இல்லை என்றும் சொல்கிறார்கள். இத்தலத்தில் பெயர் களைச் சொன்னாலே, அனைத்து வினைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.
ஓர் உருவும் இல்லாத இறைவனை, அகத்தியர், புலத்தியர் என்று இருபெரும் முனிவர்கள் பலா மர வடிவம் கொண்டு வழிபட்டது இத்தலத்தின் பெருமையாகும். இரண்டு முனிவர்களும் நான்கு யுகங் களாக மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆன்மா, சூரியன், சந்திரர் என எட்டு வடிவங்களில் இறைவனை நினைத்து வழிபாடு செய்திருக்கிறார்கள். இந்தத் தலத்தில் அமர்ந்து உணவு உண்பது, வேள்வி செய்வதற்கு ஒப்பானதாகும். இங்கு உறக்கம் கொள்வது, சிவ யோகம் செய்வது சமமானது. அதே கோவிலை வலம் வருவது திருவிழா நடத்தியதற்கு சமமானதாகும். கொலை செய்தவர், பிறர் பொருளைக் களவு செய்தவர், பசுவை கொன்றவர், வேதத்தை பழித்தவர், கற்புடைய பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள், இத்தல இறைவனை வழிபட்டால், அவர்கள் திருந்தி வாழும்படியாக அவர்களை இறைவன் ஆட்கொள்வார் என்று கூறுகிறார்கள். இத்தல இறைவனை வழிபடுபவர்களை எந்த தீங்கான செயலிலும் ஈடுபடாதவாறு இறைவன் தடுத்தாட் கொள்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆலயத்தின் அடிவாரத்தில் பொய்யாமொழீசர் ஆலயம் இருக்கிறது. இங்கு கருவறையில் லிங்கத் திருமேனியில் இறைவன் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அன்னை மரகதவல்லியம்மை நின்ற கோலத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தின் திருப்படிக்கு முன்பாக ‘திருப்பாறை’ என்ற பெயரில் ஒரு சிறு பாறை நிலத்திற்குள் இருந்து, சுமார் 10 சதுர அடி பரப்பளவில், ஓர் அங்குல உயரத்திற்கு வெளிப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்தப் பாறை இறைசக்தி கொண்டது என்றும், பக்தர்களுக்கு முறையீடுகளுக்கு நீதி வழங்கும் ஆற்றல் கொண்டது என்றும் சொல்கிறார்கள். பொய்யாமொழீசரின் திருவருள் இந்தப் பாறையில் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் பாதையில் 60 படிகளைக் கடந்த நிலையில் காணப்படுகிறது, சிவதருமபுரீசர் திருக்கோவில். இந்த ஆலயம் இறைவனின் பூமி, அந்தரம், சொர்க்கம் ஆகிய நிலைகளில் நடுநிலையான அந்தரம் என்று சொல்லப்படுகிறது. இத்தல மூர்த்தியான சிவதருமபுரீசர் லிங்க வடிவத்தில் உள்ளார். இவர் சுயம்புமூர்த்தியாவார். இந்த இறைவனுக்கு பின்புறத்தில் ‘தவளை படாதச்சுனை’ என்ற பெயரில் தீர்த்தம் ஒன்று உள்ளது. அதன் அருகே உட்சரிவான பாறையின் நெற்றிப்பரப்பில் மிகப்பெரிய தேன் கூடு வடிவில் சப்த கன்னியர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி மலைமூர்த்தி விநாயகர் உள்ளார். இவருக்கு பல பெயர்கள் உண்டு. அதில் முக்கியமானது ‘வீரகத்தி விநாயகர்’ என்பதாகும். இவரை வழிபடுபவர்களுக்கு வீரமும், பொறுமையும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிவதருமபுரீசர் கோவிலின் வடக்கே கிழக்கு நோக்கியபடி சிவகாமவல்லியம்மை தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.
மலையின் மேல் பகுதியில் திருக்கோளபுரீசர் வீற்றிருக்கும் குடவரைக் கோவில் உள்ளது. இத்தல இறைவன் ககோளபுரீசர் என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவன் சன்னிதியை பார்த்தபடி இருக்கும் பாறையிலேயே நந்தியின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. கரு வறையில் உள்ள சிவலிங்கத் திருமேனி பாறையிலே வடிவமைக்கப்பெற்றது. முகப்பு மண்டபமும், விமான அமைப்புடன் கூடிய கருவறையும் கொண்ட அழகிய ஆலயம் இது. தனிச் சன்னிதியில் அன்னை ஆத்ம நாயகி (ஆவுடைநாயகி) அருள்பொழியும் திருமுகத் தோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
இதற்கு மேல் பாறையில் படி அமைக்கப்பட்ட பாதைகள் உள்ளது. மேலே சென்றால் ஆறு திரு முகங்களும், பன்னிரு கரங்களுமாக, வள்ளி- தெய்வானையுடன் மயில் வாகனத்தில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியரை தரிசனம் செய்யலாம். இவர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அதற்கு பக்கத்தில் குன்று ஒன்று இருக்கிறது. அதில் ஒரு மண்டபம் உள்ளது. அதற்குள் ‘அன்ன லிங்கம்’ என்ற பெயரில் ஒரு சிவலிங்கம் கிழக்கு பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தெற்கேயுள்ள உயரமான நீண்ட கோளப்பாறையின் உச்சியில், திருக்கார்த் திகைத் தீப மண்டபம் உள்ளது. இந்த தீப மண்டபம் தான் திருக்கோளகிரியின் சிகரமாகும்.
தவளை இல்லாத தீர்த்தம் : சிவபெருமான் திருமுடியில் இருந்த நாகம், திருமாலின் வாகனமான கருடனைப் பார்த்து ‘கருடா சுகமா?’ என்று கேட்டது. அந்தக் கேள்விக்கு கருடன், ‘எவரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எந்தக் குறையும் வராது’ என்று பதிலளித்தது. நாகத்தின் கர்வத்தை உணர்ந்த சிவபெருமான், அதனை பூலோகத்தில் வாழும்படி சாபம் கொடுத்தார். உடனே நாகம் தன்னுடைய சாபத்தை நீக்கியருளும்படி வேண்டியது. ஈசன், ‘நீ! ககோளபுரம் சென்று தவமிருந்தால், உன்னுடைய சாபம் நீங்கும்’ என்றார். அதன்படி நாகம் இத்திருத்தலத்திற்கு வந்து தவம் செய்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த சுனையில் இருந்த தவளைகளை, பறவைகள் பிடித்துச் சென்று கொன்று தின்பதைப் பார்த்தது. அதைக் கண்டு வருந்திய நாகம், இறைவனை மனமுருக வேண்டியது.
உடனே ஈசன், ‘இன்று முதல் இந்தச் சுனையில் தவளைகள் இல்லாமல் விலக்கினோம்’ என்று அருள் புரிந்தார். தவளைகள் இல்லாத சுனைத் தீர்த்தம் என்பதால் இதற்கு ‘தவளைபடாதச் சுனை’ என்று பெயர் வந்தது. தவிர சிவகங்கை, நெல்லியடித் தீர்த்தம், ககோளத் தீத்தம், தேன் தீர்த்தம், சப்த கன்னிமார் தீர்த்தம், சிவதரும தீர்த்தம் என்ற பெயர்களும் இந்தச் சுனைக்கு உண்டு. இந்த தீர்த்தக் கரையில் இருந்து சிவபூஜை செய்தாலோ, பித்ரு கடன் செய்தாலோ சிறப்பான பலன் கிடைக்கும். மேலும் இந்தத் தீர்த்தத்தை பருகி இத்தல இறைவனை வழிபடுவோர் இன்பமான வாழ்வைப் பெறுவார்கள். இந்த ஆலயத்தில் ஆனித் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் தேரோட்டம், சுவாமி வீதிஉலா போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பு வாய்ந்தவை. மார்கழி திருவாதிரை, தைப்பூசம், பிரதோஷம், சங்கடகர சதுர்த்தி, பவுர்ணமி, சிவராத்திரி போன்ற நிகழ்வுகளும் சிறப்பு மிக்கவை. அமைவிடம் : புதுக்கோட்டையில் இருந்து ராங்கியம் வழியாக 40 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோளக்குடி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் செவ்வூர் வழியாகவும் ஆலயத்திற்கு செல்லலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...