சிவபெருமான் சித்தர் வேடம் பூண்டு
#சதுரங்கம்_விளையாடி வென்று இராஜராஜேஸ்வரியை திருமணம் செய்த தலமான, தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான , சுகப்பிரம்ம மகரிஷி புஷ்பவனம் வைத்து வழிபட்ட தலமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள
#சதுரங்க_வல்லபேஸ்வரர் (சதுரங்க வல்லபநாதர்)
(புஷ்பவன நாதர்)
#கற்பகவல்லி_அம்மன்
#இராஜராஜேஸ்வரிஅம்மன் திருக்கோயில் வரலாறு:
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 103ஆவது சிவத்தலமாகும். இத்தலம் அப்பர் பாடல் பெற்றதாகும். அப்பர், தேவாரப் பதிகத்தில் ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே என்று இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருப்பதிகக் கோவை மற்றும் இராமலிங்க அடிகளார் இயற்றிய திருவருட்பா ஆகியவற்றில் இத்தலம் போற்றிக் கூறப்பட்டுள்ளது.
இத்தலத்தில் சுகப்பிரம்மரிசி மலர்வனம் வைத்து வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.
திருவாரூர், நீடாமங்கலம்-மன்னார்குடி சாலையில் பூவனூர் ஊரில் இறங்கி, பாமினி ஆற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.
மூலவர்: சதுரங்க வல்லபநாதர், சதுரங்க வல்லபேசுவரர், புஷ்பவன நாதர்.
அம்மன்: கற்பகவல்லி,
ராஜ ராஜேஸ்வரி
(தனித்தனி சந்நிதிகள்)
தல விருட்சம்: பலா மரம்
தீர்த்தம்: க்ஷீரபுஷ்கரிணி
புராண பெயர்: புஷ்பவனம்,திருப்பூவனூர்
ஊர்: பூவனூர்
மாவட்டம்: திருவாரூர்
மாநிலம்: தமிழ்நாடு
பாடியவர்கள்:
அப்பர் சுவாமிகள், இராமலிங்க அடிகள்
அப்பர் சுவாமிகள் அருளிய
#திருப்பூவனூர் தேவாரப் பதிகங்கள்:
பூவ னூர்ப்புனி
தன்றிரு நாமந்தான்
நாவின் நூறுநூ
றாயிரம் நண்ணினார்
பாவ மாயின
பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ்
செல்வர்க ளாவரே. என்ன னென்மனை
எந்தையெ னாருயிர்
தன்னன் றன்னடி
யேன்றனமாகிய
பொன்னன் பூவனூர்
மேவிய புண்ணியன்
இன்ன னென்றறி
வொண்ணான் இயற்கையே.
குற்றங் கூடிக்
குணம்பல கூடாதீர்
மற்றுந் தீவினை
செய்தன மாய்க்கலாம்
புற்ற ராவினன்
பூவனூர் ஈசன்பேர்
கற்று வாழ்த்துங்
கழிவதன் முன்னமே. ஆவின் மேவிய
ஐந்தமர்ந் தாடுவான்
தூவெண் ணீறு
துதைந்தசெம் மேனியான்
மேவ நூல்விரி
வெண்ணியின் தென்கரைப்
பூவ னூர்புகு
வார்வினை போகுமே
__அப்பர் சுவாமிகள்
#புராண வரலாறு:
முன்பு ஒரு காலத்தில் நெல்லையில் வசுசேனன் என்ற மன்னன் காந்திமதி எனும் மனைவியுடன் வாழ்ந்தான். இருவரும் சிவபக்தர்கள். நீண்ட காலம் குழந்தை பேறு இன்றி வருந்திய இவர்கள், நெல்லையில் அருள்பாலிக்கும் நெல்லையப்பர், காந்திமதியை குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்தனர். இறைவன் அவர்களின் வேண்டுதலை ஏற்று உமையம்மையே குழந்தையாகவும், பராசக்தியின் அம்சமாகிய சாமுண்டியம்மையை செவிலி தாயாகவும் தோன்றுமாறு அருள்பாலித்தார்.
#குழந்தையாக தோன்றிய உமையம்மை:
மன்னன் தன் மனைவியுடன் தாமிரபரணி நதியில் நீராடியபோது இறைவனின் அருளால் அங்கு உமையம்மை ஒரு தாமரை மலரில் சங்குருவாய் தோன்றினார். அதைக்கண்டு மன்னன் கையில் எடுத்தார். உடனே அந்த சங்கு குழந்தையாக காட்சி அளித்தது. அந்த குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தார்.
சப்தமாதாக்களில் ஒருவராகிய சாமுண்டியம்மை வளர்ப்பு தாயாக இருந்து குழந்தையை வளர்க்க, குழந்தை ராஜராஜேஸ்வரி சகல கலைகளையும் கற்றுணர்ந்து சதுரங்க ஆட்டத்திலும் தலைசிறந்து விளங்கினார். இதனால் மன்னர் வசுசேனன், சதுரங்கத்தில் தன் மகளை வெல்பவர்க்கே மணம் முடித்து வைப்பேன் என்று அறிவித்தார். ஆனால் சதுரங்கம் ஆடி வெற்றிகொள்ள யாரும் முன்வரவில்லை.
சதுரங்கம் விளையாடிய சிவபெருமான்:
இந்த நிலையில் முனிவர் ஒருவர் அறிவுரைப்படி மன்னர் தன் மகள், வளர்ப்பு தாய் சாமுண்டியம்மை, மனைவி மற்றும் பரிவாரங்களுடன் தலயாத்திரை மேற்கொண்டு பல தலங்களையும் வணங்கி வழிபட்ட பின் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் வந்து இறைவனை பூஜிப்பதற்காக தங்கியிருந்தார்.
அப்போது சிவபெருமான், சித்தர் வேடத்தில் அங்கு வந்து மன்னனை சந்தித்து, தான் சதுரங்க ஆட்டத்தில் வல்லவன் என்று தெரிவித்தார். இதையடுத்து மன்னர் தன் மகளுடன் சதுரங்கம் விளையாடுமாறு வேண்ட சித்தர் வேடத்தில் இருந்த சிவபெருமானும் அதற்கு சம்மதித்து, ராஜராஜேஸ்வரியுடன் சதுரங்கம் விளையாடி வெற்றி பெற்றார்.
போட்டியில் வென்றவுடன் சிவபெருமான் தனது சுய உருவத்தை காட்டினார். அதை கண்டு மன்னர் மனம் மகிழ்ந்து ராஜராஜேஸ்வரியை இறைவனுக்கு மணமுடித்து மகிழ்ச்சி அடைந்தான். சதுரங்க ஆட்டத்தில் வென்று அம்பிகை ராஜராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்டதால் சதுரங்கவல்லபநாதர் என்ற பெயருடன் பூவனூரில் சிவபெருமான் அருள்பாலித்து வருகிறார்.
#தல வரலாறு:
வசுசேனன் என்ற மன்னருக்கு மகளாகத் தோன்றிய அம்பிகையை சதுரங்கப்போட்டியில் இறைவன் வெற்றி கொண்டு மணந்ததால் இத்தல இறைவனாருக்கு சதுரங்க வல்லபேசுவரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.இறைவன் சித்தர் வேடத்தில் வந்து மன்னனிடம் தான் சதுரங்க ஆட்டத்தில் சிறந்தவன் என்று கூற, மன்னன் தன் மகளுடன் விளையாடுமாறு இறைவனுடன் வேண்டினார். இறைவனும் ராஜேஸ்வரியுடன் சதுரங்கம் ஆடினார். ஆட்டத்தில் இறைவன் வென்றார். பின்னர் தன் உண்மையான வடிவுடன் அனைவருக்கும் காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னன் தன் மகளை இறைவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அதனால் இறைவன் சதுரங்க வல்லபநாதர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள சாமுண்டீசுவரி சன்னதி சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு தொடக்க விழாவில்:
சென்னை அருகே மாமல்லபுரத்தில் 28 சூலை 2022 அன்று 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளை துவக்கி வைத்து பேசிய போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சதுரங்கம் விளையாடிய சிவபெருமான்-பார்வதி தேவி குடிகொண்டுள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலைக் குறிப்பிட்டார்.
#பிரதமரின் பேச்சால் மகிழ்ச்சி:
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு
28-ந் தேதி சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட்டை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், இறைவனே சதுரங்கமாடிய வரலாற்றை திருப்பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவில் மூலம் அறியமுடிகிறது என்றும், இதன் மூலம் பண்டைக்காலம் தொட்டே சதுரங்க விளையாட்டு தமிழகத்தில் விளையாடப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
பிரதமரின் இந்த பேச்சு சமூகவலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. பூவனூர் கிராமம் குறித்து பிரதமர் பேசியது அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாது, நீடாமங்கலம் பகுதி மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
பிரதமரின் பேச்சு செஸ் விளையாட்டு வீரர்களிடைய பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் வழிபடும் ஆர்வத்தை அதிகரித்து உள்ளது. அதனால் இக்கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் செஸ் வீரர்கள் வருகை தந்து தரிசித்து செல்கின்றனர்.
#அமைப்பு:
இக்கோயில் ராஜ கோபுரம், திருச்சுற்று, மூலவர் கருவறை உள்ளிட்டவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவராக இலிங்கத் திருமேனி வடிவில் சதுரங்க வல்லபநாதர் உள்ளார். மூலவரின் வலது புறத்தில் தியாகராஜர் சன்னதி உள்ளது. மூலவரின் இடது புறத்தில் நடராஜர் சன்னதி உள்ளது.
#ராஜ கோபுரம்:
கோயிலுக்கு முன்பாக எதிர் புறத்தில் குளம் உள்ளது. கோயிலின் வாயிலில் ராஜ கோபுரம் அமைந்துள்ளது. அந்த ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது அதற்கு அடுத்தபடியாக கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன.
#சாமுண்டீஸ்வரி சன்னதி
கர்நாடக மாநிலத்தில் மைசூரில் அமைந்துள்ள சாமுண்டி மலையை அடுத்து இங்கு சாமுண்டீஸ்வரி கோயில் கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். சாமுண்டீஸ்வரி இங்கு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். கோயிலின் வலப்புறத்தில் சாமுண்டீஸ்வரிக்காக ஒரு தனி சன்னதி உள்ளது. அந்த சன்னதி வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இச்சன்னதி முன் மண்டபம், கருவறை, விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. எலிக்கடி மற்றும் பிற கடிகளால் பாதிக்கப்பட்டு துன்புறுவோர் ஞாயிற்றுக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி மன்னன் சன்னதியின் முன்பாக கையில் வேர் கட்டிக்கொண்டு கோயிலின் முன்பாக அமைந்துள்ள பாற்குளம் என்ற பெயர் பெற்ற கோயில் குளத்தில் நீராடி நலம் பெறுகின்றனர்.
#இரு_அம்மன் சன்னதிகள்
கோயிலின் இடது புறத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. அந்த சன்னதியை ஒட்டி அடுத்ததாக கற்பகவல்லி அம்மன் சன்னதி உள்ளது அதுவும் தெற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இரு சன்னதிகளும் தனித்தனியாக கருவறை, விமானம் ஆகியவற்றோடு அமைந்துள்ளன.
#திருச்சுற்று:
மூலவரை வணங்கிவிட்டு திருச்சுற்றில் வரும்போது அங்கு பிரதான விநாயகர், லெட்சுமி நாராயணர், காசி விசுவநாதர் விசாலாட்சி (அவர்களுக்கு முன்பாக நந்தி, பலிபீடம்), கால பைரவர், பசுபதீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், நவக்கிரகம் ஆகியோரின் சன்னதிகளைக் காண முடியும். அதே திருச்சுற்றில் சாஸ்தா, சம்பந்தர், மாணிக்கவாசகர், நாகர், திருநாவுக்கரசர், கோதண்டராமர், வசுசேன மன்னர், விசேஷ லிங்கம், அகத்தியர், அய்யனார், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேசுவரர் தனியாக ஒரு சன்னதியில் உள்ளார். மூலவரான சதுரங்க வல்லபநாதர் சன்னதியின் கருவறை கோஷ்டத்தில் தெற்கு நோக்கிய நிலையில் தட்சிணாமூர்த்தி உள்ளார். மேற்கு நோக்கிய நிலையில் அண்ணாமலையார் உள்ளார். அண்ணாமைலையாரின் வலது புறத்தில் விஷ்ணு உள்ளார். இடது புறத்தில் பிரம்மா உள்ளார். கோஷ்டத்தில் வடக்கு நோக்கிய நிலையில் அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
#விஷக்கடி நீக்கும் சாமுண்டி:
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான இந்த ஆலயம், ஆஸ்துமா தொந்தரவையும் பூச்சிக்கடி, விஷக்கடி, எலிக்கடி போன்ற பிரச்னைகளையும் தீர்க்கும் தலமாக விளங்கி வருகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோயிலின் அகன்ற திறந்தவெளிப் பிராகாரத்தில், அருள்மிகு கற்பகவல்லி அம்பாளும் அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்பாளும் தெற்கு நோக்கி அருள்கிறார்கள். அதே பிராகாரத்தில், தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது.
இங்கு கோயில் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி, மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லாக் கோயில்களிலும் சப்தமாதாக்களுள் ஒருவராக இருக்கும் சாமுண்டி, இங்கே தனிச் சந்நிதியில் வீற்றிருப்பது சிறப்பு. மைசூருக்கு அடுத்தபடியாக, சாமுண்டீஸ்வரிக்கென தனிச் சந்நிதி அமைந்திருப்பது பூவனூரில் மட்டும்தான். எலிக்கடி மற்றும் விஷ ஜந்துக்களின் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் வேர் கட்டிக்கொள்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் இருக்கும் ஒரு வைத்தியர், எலிக்கடி மற்றும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு, மந்திரிக்கப்பட்ட ஒரு மூலிகை வேரைக் கையில் கட்டிவிடுகிறார்.
அதற்கு முன்பாக பக்தர்கள் க்ஷீர புஷ்கரணியில் நீராடவேண்டும். பிறகு சாமுண்டீஸ்வரி சந்நிதிக்கு வந்து, வைத்தியர் கொடுக்கும் வேரைக் கையில் கட்டிக்கொண்டு, சாமுண்டிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பிறகு வைத்தியர் கொடுக்கும் மந்திரித்த மிளகை வாங்கிச் சாப்பிடவேண்டும். அதன் மூலம் அவர்களுடைய உடலில் இருக்கும் விஷம் முழுவதுமாக குணமாகும் என்பது நம்பிக்கை.
#திருவிழாக்கள்:
10 நாள் சித்திரைத் தாயார் சாமுண்டீஸ்வரி உற்சவம் ஏப்ரல்-மே மாதங்களில் அமாவாசைக்குப் பிறகு முதல் நாளிலிருந்து தொடங்குகிறது; மே-ஜூனில் வைகாசி விசாகம்; ஆவணி மூலம் ஆகஸ்ட்-செப்டம்பரில்; ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ஆடி பூரம்; அக்டோபர்-நவம்பரில் ஐப்பசி அன்னாபிஷேகம்; நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கார்த்திகை தீபம்; டிசம்பர்-ஜனவரியில் மார்கழி திருவாதிரை; ஜனவரி-பிப்ரவரியில் தை பூசம்; பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மகா சிவராத்திரி மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பங்குனி உத்திரம் ஆகியவை கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்.
#பிரார்த்தனைகள்
ஆஸ்துமா நோயாளிகள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்தால் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நிதி வியாபார பிரச்சனைகள் தீரவும், திருமண தடைகள் நீங்கவும், குழந்தை வரம் கிடைக்கவும் அன்னை சாமுண்டீஸ்வரியை பக்தர்கள் வேண்டிக்கொள்கிறார்கள். எலி, விஷக்கடியால் அவதிப்படுபவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து வேரைக் கையில் கட்டிக்கொண்டு தீர்த்தத்தால் குளித்தால் நிவாரணம் கிடைக்கும்.
செல்லும் வழி:
நீடாமங்கலத்திலிருந்து 5 கிமீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 36 கிமீ தொலைவிலும், மன்னார்குடியிலிருந்து 11 கிமீ தொலைவிலும், ஆலங்குடியிலிருந்து 12 கிமீ தொலைவிலும், அவளிவநல்லூரிலிருந்து 20 கிமீ தொலைவிலும், ஹரித்வாரமங்கலத்திலிருந்து 20 கிமீ தொலைவிலும், திருவாரூரிலிருந்து 34 கிமீ தொலைவிலும், திருச்சியிலிருந்து 32 கிமீ தொலைவிலும் உள்ளது. . பக்தர் திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் செல்ல (தஞ்சாவூர்) பேருந்தில் செல்ல வேண்டும். அங்கிருந்து மன்னார்குடி பேருந்தில் ஏறி பூவனூர் நிறுத்தம்/ பாலத்தில் இறங்கி பேருந்து ஆற்றைக் கடந்ததும் சுமார் 1 கிமீ தொலைவில் கோயில் உள்ளது. பிரதான சாலையில் இருந்து கோயில் ராஜகோபுரம் தெரியும். இந்த கிராமத்தின் வழியாக மன்னார்குடியில் இருந்து களச்சேரிக்கு ஏ - 67 டவுன் பஸ் இயக்கப்படுகிறது. மன்னார்குடியிலிருந்து அம்மாபேட்டை அல்லது மன்னார்குடி வலங்கைமான் செல்லும் வழியில் பூவனூர் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நீடாமங்கலத்திலும், அருகிலுள்ள விமான நிலையம் திருச்சியிலும் அமைந்துள்ளது.
சகலத்திலும் சிவனே முதல்வன் என்கிறபோது சதுரங்கத்திற்கும் அவனே முதல்வன் என்பதை விளங்கும் இந்தத் தலம் நம் தமிழ்ச்சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று என்றால் அது மிகையில்லை.
திருச்சிற்றம்பலம் 🙏🙇
No comments:
Post a Comment