Thursday, January 11, 2024

கூடாரவல்லி. மானுடப் பெண், மாதவனை மணாளனாகப் பெற்ற மகத்தான நாள்!

கூடாரவல்லி. மானுடப் பெண், மாதவனை மணாளனாகப் பெற்ற மகத்தான நாள்! கூடாரவல்லி.உற்சவத்தின் சிறப்பு என்ன கூடாரவல்லி என்றும் 27-ஆம் நாள் பாசுரத்தில், `பால் சோறு மூட நெய் பெய்து' என்று இருப்பதால், இந்த நாளிலே பிரத்தியேகமாக அக்கார அடிசில் என்னும் பிரசாதத்தையும் வெண்ணெயும் பெருமாளுக்குச் சமர்ப்பிப்பார்கள். இன்றைக்கும் இந்த உற்சவம் அழகர்மலையில் நடைபெற்று வருகிறது.
கண்ணனைப் பிடிக்கும் எல்லோருக்கும் ஆண்டாளையும் பிடிக்கும். கண்ணனையே கணவராக வரித்துக்கொண்ட ஆண்டாளின் பாடல்கள் வெறும் அலங்காரக் காவியம் இல்லை. அது ஜீவனை உருக்கும் பக்திப்பிரவாகம். கண்ணனையே கணவராக அடையவேண்டும் என்பதற்காக மார்கழி மாதம் பாவை நோன்பு கடைப்பிடிக்கும் ஆண்டாள், தினமும் அதிகாலையில் துயிலெழுந்து, தனது சக தோழியரையும் அழைத்துக்கொண்டு நீராடி, கண்ணனின் புகழ் பாடிப் பரவசம் கொள்கிறாள். விரதக் காலங்களில் கடுமையான நியமங்களையும் அனுஷ்டிக்கிறாள் ஆண்டாள். 'நெய்யும், பாலும் உண்ணமாட்டோம்; கண்களுக்கு மையிட்டு அழகு செய்யமாட்டோம்; செய்யத் தகாத செயல்களைச் செய்யமாட்டோம்; தீங்கு விளைவிக்கும் சொற்களைப் பேசமாட்டோம்' என்றெல்லாம் நியமங்களை அனுஷ்டிக்கும் ஆண்டாள், அத்தகைய நியமங்களை நாமும் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறாள்.
பலவாறாக தன்னை வருத்திக்கொண்டு அந்த கோவிந்தனை அடைய பூஜிக்கிறாள். பக்தர்களை ரட்சிக்கும் அந்த பரந்தாமன், தீந்தமிழால் தன்னை பூஜிக்கும் கோதைப்பிராட்டியை கைவிடுவானா? மேலும் மேலும் பாக்களை வடிக்க அவளுக்கு அருள் செய்கிறான். 26 நாட்கள் கடுமையான விரதம் இருந்த ஆண்டாள், கண்ணனின் திருவுளப்படி மார்கழி மாதத்தின் இருபத்து ஏழாவது நாளில்
"கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்"
என்று பாடி பரவசம் கொள்கிறாள். அதுமட்டுமா? கோவிந்தனால் அளிக்கப்பட்ட சூடகம், தோள்வளை, தோடு, செவியில் அணியும் கொப்பு, கால் தண்டை உள்ளிட்ட பலவகை அணிகலன்களை அணிந்து, புத்தாடை புனைந்து, அலங்கரித்துக்கொண்டு அரங்கனை எண்ணி அகமகிழ்கிறாள். மேலும் அக்காரவடிசல் எனும் நெய் ஒழுகும் சர்க்கரைப் பொங்கலை கண்ணனுக்கு அமுதாக படைத்து தானும் உண்டு 26 நாள் கடுமையான நோன்பை ஆண்டாள் முடித்தாள். அந்த நாளில் தான் அரங்கன், ஆண்டாளை ஏற்றுக்கொள்வதாக வரமளித்த திருநாள். இந்த பாடலைக்கேட்ட கோவிந்தன் உடனே மயங்கி ஆண்டாளை திருவரங்கத்தில் மணந்துகொள்வதாக வாக்களித்தான். எத்தனை மகத்தான பொன்னாள் இந்த கூடாரவல்லி நாள். மானுடப்பெண்ணாக தோன்றி மாதவனையே மணாளனாக பெற்றநாள் அல்லவோ . கூடாரை என்றால் வெறுப்பவர், விலகிச் சென்றவர், கருத்து வேறுபாடு கொண்டவர், வெறுப்பவர் என்றெல்லாம் பொருள் சொல்லலாம். உங்களுக்கு எதிராக இருக்கும் எல்லோரையும் விரும்பச் செய்யும் ஆற்றல் கொண்டது இந்த கூடாரவல்லி தினம்.
மார்கழி, ஆண்டாள், திருப்பாவை என்றாலே ஸ்ரீவில்லிபுத்தூர்தான் நம்முடைய நினைவுக்கு வரும். அங்கு மார்கழி மாதம் முழுவதுமே சிறப்பான முறையில் விழாக்கோலம் பூண்டிருந்தாலும், மார்கழி மாதம் வரும் கூடாரவல்லித் திருநாள் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் கருவறை மண்டபத்துக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில், சிறப்பான அலங்காரங்களுடன் ஆண்டாள் நாச்சியார் திருக்காட்சி அளிப்பார். அழகுத் தமிழில் பாசுரங்களைக் கொண்டு அரங்கனை ஆண்ட ஆண்டாளை அன்றைய தினம் சேவிப்பது திருமகளை நேரிலேயே தரிசிப்பதற்கு நிகரானது. இந்த விசேஷ நாளில் ஆண்டாள் பாடியதைப்போலவே மொத்தம் 108 பாத்திரங்களில் அக்காரவடிசலும், வெண்ணெயும் வைக்கப்பட்டிருக்கும். கூடாரவல்லி திருநாளின் சிறப்பு அம்சமே இந்த அக்காரவடிசல் மற்றும் வெண்ணெய் நைவேத்தியம்தான்.
திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு முடிந்ததும், ஆண்டாளுக்கு தீபாராதனை நடைபெறும். ஆண்டாளின் உற்சவ சிலை சந்நிதியில் இல்லாமல், சந்நிதிக்கு முன்பு உள்ள அர்த்தமண்டபத்தில் எழுந்தருளி இருப்பது அவர் அன்றைய நாளில் ஸ்ரீராமாநுஜரை வரவேற்பதற்காகத்தான் என்கிறார்கள்.  ஆண்டாள் தான் விரும்பியபடி செய்யமுடியாத  நைவேத்தியங்களை, பிற்காலத்தில் அவதரித்த ஸ்ரீராமாநுஜரே செய்து பெருமாளுக்கு படைத்தார். அதன் காரணமாகவே ஆண்டாள் நாச்சியார் ராமாநுஜரை 'அண்ணா' என்று அழைத்து சந்நிதியை விட்டு வெளியே வந்து அழைத்துச் சென்றாராம். அதை நினைவுறுத்தும் பொருட்டே சந்நிதி விட்டு ஆண்டாள் அர்த்தமண்டபத்துக்கு எழுந்தருளுகிறார். கூடாரவல்லி நாளின்போது,  250 கிலோ அரிசி, 120 லிட்டர் பால், 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும் வெண்ணெயும் வடபத்ரசாயி பெருமாளுக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது. 
கூடாரை கூட வைக்கும் இந்த திருநாளில் இந்த பாடலைப்பாடி ஆண்டாளையும் அரங்கனையும் துதித்தால் வரன் கூடாத மகளிருக்கு நல்ல இடம் அமையும் என்பது சத்தியமான வாக்கு. அதுமட்டுமா? நாம் விரும்பியவர்கள் மட்டுமில்லாமல் நம்மை விட்டு விலகிய உறவுகளையும் கூடச்செய்யும் அற்புதமான பாசுரம் "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" பாடல். எனவே, உங்களின் எல்லா உறவுகளும் மேம்பட, உங்களைப் புரிந்துகொள்ளாமல் விலகி நிற்கும் உறவுகள், நண்பர்கள் யாவரும் உங்களோடு இணைந்து வாழ இந்த கூடாரவல்லி விரத நாளில் அரங்கனையும் ஆண்டாளையும் வணங்கி, பாசுரங்கள் பாடி, ஆண்டாளுக்கு புதுப்புடவை சாத்தி, அக்காரவடிசல் நைவேத்தியம் சமர்ப்பித்து வணங்குங்கள்..

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
 ஓம்நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...