Sunday, February 18, 2024

சோமவாரத்தில் சிவபெருமானை வழிபடுங்கள்..!!

சோமவாரத்தில் சிவபெருமானை வழிபடுங்கள்..!!
சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம் ஆகும். திங்கட்கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், சந்திரனின் நோயை நீக்கியதுடன், நவகிரகங்களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அப்போது சந்திரன், தனது வாரத்தில், மக்கள் விரதம் இருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும் என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டான். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும்.

சோமவார விரத புராணக்கதை :

சித்ரவர்மன் என்ற மன்னன் தன் மகள் சீமந்தினி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தான். தனது மகளுக்கு சிறந்த ஜோதிடர்களை வரவழைத்து ஜாதகம் எழுதும்படி உத்தரவிட்டான். அந்த ஜோதிடர்களில் ஒருவர், உலகமே போற்றிப்புகழும் கணவன் அவளுக்கு கிடைப்பார் என்றார். ஆனால் இன்னொரு ஜோதிடர், உங்கள் மகள் திருமணம் ஆன சில நாட்களில் மாங்கல்ய பாக்கியத்தை இழப்பாள் என்றார். இதைக்கேட்ட மன்னன் அளவில்லாத வேதனை அடைந்தார். காலங்கள் கடந்தன. சீமந்தினி திருமண பருவத்தை எட்டியிருந்தாள். ஒருநாள் தோழிகள் மூலம் தனக்கு ஜாதகத்தில் இருக்கும் ஆபத்தை பற்றி தெரிந்து கொண்டாள் சீமந்தினி.

என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த சீமந்தினி, யாக்ஞவல்கிய முனிவரின் மனைவி மைத்ரேயியை சந்தித்து, தன்னுடைய கவலையை கூறினாள். பதிவிரதையான மைத்ரேயி, சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதத்தை கடைபிடித்தால் உன்னுடைய துன்பங்கள் விலகும் என்று கூறினார். அதன்பின் சீமந்தினியும் முறையாக சோமவார விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தாள். 

ஒரு சுபமுகூர்த்த நாளில் சீமந்தினிக்கும், நளனின் பேரனும், இந்திரசேனன் மகனுமான சந்திராங்கதனுக்கும் திருமணம் நடந்தது. ஒருநாள் நண்பர்களுடன் நதியில் நீராடச்சென்ற சந்திராங்கதன் தண்ணீரில் மூழ்கினான். எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையிலும் மனநிலை சற்றும் குலையாத சீமந்தினி, பரமேஸ்வரனையும், பார்வதியையும் மனதார பிரார்த்தனை செய்து சோமவார விரதத்தை கடைபிடித்தாள். 

அவள் விரதத்திற்கான பலனாக திடீரென்று ஒருநாள் சந்திராங்கதன் திரும்பி வந்தான். தண்ணீரில் மூழ்கிய அவனை நாகர்கள் அழைத்துப்போய் சிலநாட்கள் அங்கு தங்க வைத்து உபசரணை செய்ததாகவும், சீமந்தினியின் சோமவார விரதம் பற்றி கேள்விப்பட்டு, தன்னை இங்கு கொண்டு வந்து விட்டதாகவும் கூறினான்.

எனவே சோம வார நன்னாளில், சிவ பார்வதியை விரதமிருந்து தரிசித்தால்..

மாங்கல்ய வரம் கிடைக்கும். 

மாங்கல்ய பலம் பெருகும். 

கணவனின் ஆயுள் நீடிக்கும். 

நல்ல கணவனை அமையப் பெறலாம். 

பிரிந்தவர்கள் கூட ஒன்று சேருவார்கள். 

சோம வார நாளில், வில்வ அர்ச்சனை செய்து சிவ வழிபாடு செய்தால் சீரும் சிறப்புமாக வாழலாம். களத்திரதோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள், இந்த விரதத்தை கடைபிடித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

சோமவார விரதத்தை முதலில் தொடங்க உகந்த நாள் :

சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைபிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி தொடர்ந்து கடைபிடிக்கலாம்.

இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைபிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடை பிடிக்கலாம். 

No comments:

Post a Comment

Followers

மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..

_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறை...