Saturday, February 17, 2024

சேத்தியாத்தோப்பு பூதங்குடி தீப்பாஞ்சியம்மன் என்ற தீப்பாய்ந்த_நாச்சியார் திருக்கோயில்

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான
#சேத்தியாத்தோப்பு
#பூதங்குடி
#தீப்பாஞ்சியம்மன் என்ற 
#தீப்பாய்ந்த_நாச்சியார் திருக்கோயில் வரலாறு:
இறைவனுக்கு அடுத்ததாக நாம் மிகவும் போற்றுவது நமது குடும்பத்தில் உயிர்நீத்த முன்னோர்களைத் தான். அதிலும் வீரமரணமுற்ற அல்லது தியாக மரணமுற்ற நம் முன்னோர்களை தெய்வமாக வழிபடுவது தொன்றுதொட்டு நாம் கடைப்பிடித்துவரும் மரபுகளில் ஒன்று. இவர்களின் நினைவேந்தலில் இருந்தே பெரும்பாலான சிறுதெய்வங்களின் வழிபாடு தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக மரணம் இரு வகையானது. ஒன்று இயற்கையாக வருவது, அது வரும் வரை காத்திருக்க விரும்பாத நம் முன்னோர்களில் சிலர் வடக்கிருந்து உயிர் நீத்தல், வாளைச் செங்குத்தாகத் தரையில் நிறுத்தி அதன்மேல் பாய்ந்து உயிர்விடல், கழுவில் தானே அமர்ந்து உயிர் நீத்தல், உயர்ந்த இடங்களில் அல்லது கோபுர உச்சிகளில் ஏறிக் கீழே விழுந்து உயிர்நீத்தல் மற்றும் நஞ்சு அருந்தி உயிர்நீத்தல் போன்ற பலவழிகளில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாகக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது.

மற்றொரு வகையான மரணம் போரிட்டு மடிவது அல்லது துணிந்து உயிர்தியாகம் செய்வது, அதாவது தன்னைத்தானே பலியிட்டுக் கொள்வது. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது இன்னுயிரை நீத்து மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றனர். மன்னர்கள் மரணமுற்றவுடன் அவரது பட்டத்தரசிகள் உடன்கட்டை ஏறியதும், சில பெண்கள் தீக்கு தன்னுயிரை தாரை வார்த்து மாய்ந்ததும் இவ்வகை தியாக மரணங்களாகும். முற்காலத்தில் ஊர் நலத்தின் பொருட்டும், போரின்போதும், காவல் பணியின் போதும், நீர்நிலைகளை பாதுகாக்கும் போதும் தன்னுயிரை தியாகம் செய்தவர்களின் வீரத்தை மெச்சி, அவர்கள் மரணமடைந்த இடத்தில் நடுகல் எடுக்கப்பட்டது. அவர் களது மனைவியும் சந்ததியினரும் மன்னர்களாலும், மக்களாலும் ஆதரிக்கப்பட்டனர்.

அதேபோல் ஆணுக்கு நிகராக மரணத்தை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்ட பெண்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக ‘சதிக்கல்’ எனப்படும் நினைவுக்கல் நட்டு அல்லது சிலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. அத்துடன் அப்பெண்ணின் வம்சத்தார் வழிபாடும் செய்தனர். உயிர்நீத்தவர்களுக்கு மாலையிட்ட அம்மன், பாவாடைக்காரி, பூவாடைக்காரி, வேப்பில்லைக்காரி என்றும், தீப்புகுந்து உயிர் நீத்த பெண்ணுக்கு ‘தீப்பாஞ்சாயி’ என்ற பெயரும் இட்டு வழிபட்டனர். இந்த தீப்பாஞ்சாயி அம்மனே, சில ஊர்களில் ‘தீப்பாய்ந்த நாச்சியார்’ என்று அழைக்கப்படுகிறார். சிலர் இவரை ‘திரவுபதி’ என்றும் குறிப்பிடுவதுண்டு. சங்ககாலத்திலிருந்து இன்றுவரை இவ்வகையான வழிபாடு நாடு முழுவதும் உள்ள மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இவ்வழிபாடு ஏறக்குறைய பெரும்பாலான சமூகத்தவர்களிடம் காணப்படுகிறது.

தீப்பாய்ந்த பெண்ணின் தியாகத்தை போற்றி தீமிதிப்பது, அவள் தன் கணவன் அல்லது தனக்கு பாதுகாப்புக் கொடுத்தவர்களை பிரிய மனமின்றி வானுலகம் சென்று மங்களம் அடைந்தாள் என்பதை உணர்த்தும் விதமாக அவளை வழிபட வரும் பக்தர்களுக்கு மஞ்சளை பிரசாதமாக வழங்குவது போன்ற சடங்குகள் சதியை நினைவூட்டும் ஒரு வழக்கமாக இன்றளவும் மக்களால் பின்பற்றப்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயங்களில், இருவேறுபட்ட வழிபாட்டு முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. முதலாவது தியாகப் பெண்ணை, முழுக்க முழுக்க அம்மனின் அவதாரமாக கருதி அம்மன் கோவில் முறைப்படி பூஜைகள் செய்வார்கள். இரண்டாவதாக அக்னிபிரவேசம் செய்த சீதையுடன் ஒப்பிட்டு வைணவ சம்பிரதாயப்படியும் பூஜை புனஸ்காரங்கள் நடத்தப்படுகின்றன.

“வன்னியர்கள் பண்டைக்காலத்திலே தென்னிந்தியாவில் வாழ்ந்து வந்த அக்கினி குலத்தைச் சேர்ந்த ஆரியரல்லாத வகுப்பினராவர். அவர்கள் மறத்தொழில் புரியும் மாவீரர்கள் பரம்பரையிலே தோற்றியவர்கள். அரச பரம்பரையைச் சார்ந்தவர்கள் அவர்களைத் தென்னிந்திய ராசபுத்திரர்கள் என்று கூறலாம்” ..................... “வன்னியும் வன்னியர்களும்” என்ற பெயரில் திரு சி. எஸ். நவரத்தினம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து.

இக்கோவிலின் முதல் மரியாதைகளும் உரிமைகளும் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள "பூதங்குடி " பகுதி "சேத்தியார் " பட்டம் கொண்ட வன்னியர் குடும்பத்திடம் உள்ளது ....

சேத்தியார் குடும்ப குல தெய்வமான தீ பாய்ந்த நாச்சியார்.

சுமார் 200 ஆண்டு களுக்கு முன்பு, வனம் போன்ற பகுதியாக பூதங்குடி இருந்தது. 

குடியிருப்பு மிகக் குறைவாக இருந்த காலம். தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் தலைமைப் பொறியாளராக இருந்த அமரர் ஜெயராமன் இவ்வூரைச் சேர்ந்தவர். இவரது பரம்பரைக்கு “சேத்தியார் குடும்பம்” என்ற பட்டப்பெயர் உண்டு. 

அத்தகைய சேத்தியார் குடும்பத்து வாலிபர் ஒருவர் ஒருசமயம் காட்டுக்கு வேட்டைக்குச் சென்றார். அப்படிப் போகும் வழியில் சுமார் ஐந்து வயதுள்ள சிறு பெண்பிள்ளை காட்டில் தன்னந்தனியாக சென்றுகொண்டிருப்பதைப் பார்த்தார். மிருகங்கள் வாழும் இப்படிப்பட்ட கொடூரமான காட்டுப் பகுதியில் எப்படி இந்தச் சிறுமி தன்னந்தனியாக சிறிதும் பயமின்றி நடமாடுகிறாள் என்று வியப்பும் ஆச்சரியமும் மேலிட, அந்தச் சிறுமியை அணுகி, ""எப்படியம்மா இந்தக் காட்டிற்குள்  தனியாக வந்தாய்'' என்று விசாரித்தார். அந்தச் சிறுமியோ மிகத் தெளிவாகப் பேசினாள். ""இந்தக் காட்டுவழியே உறவினர்கள் ஊருக்குப் போக என் பெற்றோருடன் வந்தேன். வரும் வழியில் பாதை தவறிவிட்டேன். பெற்றோர் சென்ற பாதை தெரியாமல் சுற்றிச் சுற்றி வருகிறேன்'' என்று சொன்னாள். அந்தச் சிறுமிக்கு ஆறுதல் கூறிய அவர், 

""பயப்படாதே, என்னோடு வா'' என்று தமது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

சிறுமியோடு ஊருக்கு வந்தபிறகு, "இப்படிப்பட்ட சிறுமியை காட்டில் கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளோம். அவளது பெற்றோர், உறவினர்கள் யாராவது இருந்தால் வந்து அழைத்துப் போகலாம்' என்று அக்கம்பக்க ஊர்களுக்கெல்லாம் தகவல் அனுப்பினார். ஆனாலும் யாருமே அக்குழந்தையைத் தேடி வரவில்லை. "சரி, இவள் யார் வீட்டுக் குழந்தையாக இருந்தாலும் இருக்கட்டும்; இனிமேல் இது நம் வீட்டுக் குழந்தை. நாமே வளர்ப்போம்' என்று முடிவு செய்து, அந்தச் சிறுமிக்கு நாச்சியார் என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார். 

அப்பகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற அந்தக் குடும்பத்தில், வனத்தில் கண்டெடுத்த நாச்சியார் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தேவதையாக வளர்ந்து பருவ வயதை அடைந்தாள்.

இந்நிலையில் நாச்சியாரை மகள்போல் வளர்த்து வந்தவர், திடீரென்று உடல்நலம் கெட்டு இறந்து 
போனார். சேத்தியார் மறைவு அப்பகுதி மக்களை கடுந்துயரத்தில் ஆழ்த்தியது. அவரது உடலைத் தகனம் செய்யக் கொண்டு போனார்கள். அப்போது நாச்சியார், ""நானும் இடுகாட்டிற்கு வருவேன்'' என்றாள். ஊர்ப்பெரியவர்கள், ""பெண் பிள்ளைகள் வரக்கூடாது'' என்றார்கள். ""காட்டிலே தனியாக நின்ற என்னை இங்கு கொண்டு வந்து வளர்த்த தந்தை அவர். 

அப்படிப்பட்டவரின் இறுதிச் சடங்கின்போது நானும் உடனிருந்து பார்க்கவேண்டும்'' என்று பிடிவாதம் செய்தாள். வேறு வழியின்றி நாச்சியாரையும் மயானத்துக்கு அழைத்துச் சென்றனர். சேத்தியாரின் உடல் முழுவதும் விறகுகளால் மூடப்பட்டு எரியூட்டும்போது, யாரும் எதிர்பாராதவிதமாக அத்தீயில் பாய்ந்து தன்னையும் எரித்துக்கொள்ள முயன்றாள் நாச்சியார். அவளைத் தடுத்து, ""நீ வாழவேண்டிய பெண். உனக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை'' என்று ஊர்ப்பெரியவர்கள் அறிவுரை கூறினர்.

ஆனால் நாச்சியார் மிகப் பொறுமையாக- நிதானமாக- உறுதியோடு சொன்னாள். ""நீங்கள் நினைப்பதுபோல் நான் சாதாரண பெண்ணல்ல. தெய்வ அருளால் இங்கு வந்தவள். மற்ற பெண்கள்போல் கணவன்- மனைவி, பிள்ளைகள், குடும்பம் என்று சாதாரண வாழ்க்கை வாழ வந்தவள் அல்ல நான். உங்களையும் உங்களைப் போன்ற மக்களையும் தெய்வமாக இருந்து வாழவைக்க வந்தவள் நான். உங்களுக்கு நான் சொல்வதில் சந்தேகமிருந்தால் நான் சொல்வதுபோல செய்யுங்கள். ஒரு தாம்பூலத் தட்டில் பூ, பழம், தேங்காய், புடவை உட்பட பூஜைப் பொருட்களை வைத்துக் கொடுங்கள். அதை என் கையில் ஏந்தியபடி தீயில் பாய்கிறேன். அப்போது நான் மட்டுமே எரிந்து பஸ்பமாக மறைந்துவிடுவேன். என் கையில் உள்ள தட்டும் பூஜைப் பொருட்களும் தீயில் எரியாமல் நீங்கள் எப்படி என் கையில் கொடுத்தீர்களோ அதேபோன்று இருக்கும். அப்போது நான் சொன்னது உண்மை என்பது உங்களுக்குப் புரியும். 

அதன்பிறகு என்னை தெய்வமாக நினைத்து வணங்குங்கள். உங்களுக்கு எல்லா நலமும் கிடைக்கச் செய்வேன்'' என்று நாச்சியார் சொல்லிமுடித்தாள்.

ஊர் மக்களும் நாச்சியாரின் பேச்சிற்கு கட்டுப்பட்டனர். தாம்பூலத் தட்டோடு நாச்சியார் தீயில் பாய்ந்தாள். நாச்சியார் மறைந்து போனாள். அவள் சொன்னதுபோலவே, தாம்பூலத் தட்டும் அதிலிருந்த பூஜைப் பொருட்களும் கொஞ்சம்கூட தீயில் கருகாமல் அப்படியே இருந்தன. நாச்சியார் தெய்வமானாள் என்பது உறுதியானது.

அதன்பிறகு அப்பகுதியிலிருந்த அழிஞ்சி மரத்தினடியில் நாச்சியார் நினைவாக செங்கல்லால் சிறிய சந்நிதி அமைத்து சேத்தியார் குடும்பத்து வம்சாவழியினர் வழிபட்டு வந்தார்கள். அந்த வம்சாவழியில் வந்தவர்கள்தான் தாமோதர சேத்தியார், குழந்தையம்மாள் தம்பதியினர். இந்த தம்பதிக்கு ஜெயராமன், ராமச்சந்திரன், ராகவன் என மூன்று மகன்கள். இந்த மூவரில் மூத்தவரான ஜெயராமன், தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையின் தலைமைப் பொறியாளராக மிகமிக நேர்மையாகப் பணி செய்தார். அவருக்கு எட்டுப் பிள்ளைகள். இதில் சிலர் டாக்டர் படிப்பு படிக்க வேண்டும் என்றனர்.  அப்போது தந்தை ஜெயராமன், ""நான் லஞ்சம், ஊழல் செய்யாமல் நேர்மையாகப் பணிசெய்து வருகிறேன். இந்தப் படிப்புக்காக லஞ்சம் தரவோ, சிபாரிசுக்காகவோ யாரிடமும் போகமாட்டேன். உங்கள் திறமையால் படித்து மார்க் எடுத்து டாக்டர் படிப்புக்குச் செல்லுங்கள்'' என்றார் கறாராக. 

அன்றிரவு ஜெயராமன் கனவில் தோன்றிய நாச்சியார், ""பயப்பட வேண்டாம். உன் பிள்ளைகளுக்கு டாக்டர் படிப்பு படிக்க திறமையின் அடிப்படையில் கல்லூரியில் இடம் கிடைக்கும். நீ யாரிடமும் அதற்காக சிபாரிசு செய்யப் போகும் நிலை வராது. அதற்கு பிரதிபலனாக எனக்கு ஒன்று செய். நான் பல காலமாக இந்த அழிஞ்சிமர நிழலில் அமர்ந்துள்ளேன். அப்படிப்பட்ட எனக்கு ஒரு கோவில் எழுப்பு. உன் வம்சாவழியை நல்ல முறையில் ஒரு குறையும் இல்லாமல் வாழவைப்பேன்'' என்று சொல்லி அருளாசி வழங்கினாள். (ஜெயராமன் பிள்ளைகளுக்கு தகுதி அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்குஇடமும் கிடைத்து, அவரது குடும்பத்துப் பிள்ளைகள், அவரது சகோதரர் குடும்பத்தினர்என அனைவரும் சிறப்போடும் பெரும்புகழோடும் இன்றளவும் வாழ்கிறார்கள்.)அதன்பிறகு பொறியாளர் ஜெயராமன் தனது அடுத்த சகோதரர் அமரர் ராமச்சந்திரன் துணையோடு நாச்சியாருக்கு ஆலயத்தை அமைத்தார்.

இக்கோவில் முக்கியஸ்தர்களில் ஒருவரான 70 வயது முதியவர் ராஜாராம், ""நாங்கள் மிகவும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த அம்மனே கதியென்று கிடந்தோம். எனக்கு இரண்டு மகன்கள். அதில் ஒருவர் படித்து முன்னேறியதோடு தனது மனைவியோடு லண்டனுக்குச் சென்று வியாபாரம் செய்து நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார். எல்லாம் அம்மனின் அருள்தான். வேண்டுவது நடக்கும். குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் இக்கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் ஊஞ்சல் தொட்டில் கட்டிவிட்டால் விரைவில் குழந்தைப் பேறு உண்டாகிறது. திருமணத் தடையுள்ள ஆண்கள்- பெண்கள் அம்மனிடம் வந்து முறையிட்டுச் சென்றவுடனே தடை நீங்கித் திருமணங்கள் நடக்கின்றன. தரும நெறிப்படி நியாயமான முறையில் வேண்டும் மக்களுக்கு அம்மன் அருள் கிடைத்து வருகிறது. இந்த நாச்சியார் அம்மன் மூலம் பலன் பெற்றவர்கள் ஏராளம்'' என்கிறார்.

""எனக்குத் திருமணமாகி 35 வயது வரை குழந்தை இல்லை. இதற்காக பல மருத்துவர்கள், மருத்துவமனைகள் என்று அலைந்தேன். உனக்கு இனிமேல் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று கைவிட்டுவிட்டனர் டாக்டர்கள். மன சஞ்சலத்தோடு நாச்சியாரம்மனிடம் வந்து முறையிட்டேன். பூஜை செய்தேன். என்ன அதிசயம்! அதன்பிறகு  எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சீதாலட்சுமி என்று பெயர் வைத்தோம். இப்போது என் மகளுக்கு 16 வயது நடக்கிறது. 10-ஆம் வகுப்பு படிக்கிறாள். அதன்பிறகு இனி அம்மன் காலடியிலேயே காலத்தைக் கழிப்பதென்று முடிவு செய்தேன். சும்மா எப்படி இருக்க வைப்பார் அம்மன். ஆலயத்தின் முன்புறத்திலேயே பூ கட்டி விற்பனை செய்துகொண்டே அம்மனைத் தொழுது வருகிறேன். என் கையால் தொடுத்த மாலைகளை பக்தர்கள் அம்மனின் மேல் சாற்றி வணங்கி பூஜிப்பது கண்டு மெய்சிலிர்த்துப் போகிறேன்'' என்கிறார் பூக்காரப் பெண்ணான 50 வயது சகுந்தலா.

தை, ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மக்கள் திரள்திரளாக வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். 

""இந்த  நாச்சியாரம்மனின் அருளைப் பெற்றவர்கள் ஏராளம். நாச்சியாரம்மனை தரிசிக்க ஒருமுறை வந்தவர்கள் அடுத்தடுத்து தாங்களாகவே இங்கு வருவார்கள். அப்படிப்பட்ட சக்தியுடைய நாச்சியாரம்மன்'' என்கிறார்கள் பூதங்குடி முக்கியஸ்தர்களான சகோதரர்கள் பாஸ்கர், பால்ராஜ் ஆகியோர்.

மரங்களடர்ந்த பசுமையான இடத்தில் அமர்ந்து மக்களின் மனம் குளிர ஆசி வழங்கும்தீப்பாய்ந்த நாச்சியாரம்மனின் அமைவிடம் சென்னை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், சேத்தியாதோப்பு அருகே வெள்ளாற்றின் தென்கரையில் சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..

_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறை...