Thursday, February 22, 2024

தமிழ்நாடு கொல்லிமலை அருள்மிகு அறப்பளீஸ்வரர் ஆலயம்.

தமிழ்நாடு கொல்லிமலை அருள்மிகு அறப்பளீஸ்வரர் ஆலயம்.*
*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*

*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*

*மூலவர் : அறப்பளீஸ்வரர்*

*அம்மன்/தாயார் : தாயம்மை, அறம்வளர்த்தநாயகி*

*தீர்த்தம் : பஞ்சநதி*

*பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்*

*ஊர் : கொல்லிமலை*

*மாவட்டம் : சேலம்*

*மாநிலம் : தமிழ்நாடு*

*திருவிழா:*

*ஆடி 18ம் பெருக்கு, மகா சிவராத்திரி, நவராத்திரி உற்சவம், திருக்கார்த்திகை தீபம், அன்னாபிஷேகம், திருவாதிரை.*

*தல சிறப்பு:*

*இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது. ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.அறம்வளர்த்தநாயகி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.*

*திறக்கும் நேரம்:*

*காலை 7 மணி முதல் 1 மணி வரை, பகல் 2.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். திருவிழா நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.*

*முகவரி:*

*அருள்மிகு அறப்பளீஸ்வரர் திருக்கோயில் ,கொல்லிமலை - சேலம் மாவட்டம்.*

*போன்:*

*+91- 94422 76002, 97866 45101*

*பொது தகவல்:*

*சுற்றுப்பிரகாரத்தில், வள்ளி, தேவசேனாவுடன் முருகனும், விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, லட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, கால பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.*

*பிரார்த்தனை:*

*திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.*

*குடும்பப்பிரச்னையால் பெற்றோரைப் பிரிந்தவர்கள், தாய், மகன் இடையே மனக்கசப்பு உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள மீண்டும் சேர்வர் என்பது நம்பிக்கை. நீதி கிடைக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.*

*நேர்த்திக்கடன்:*

*சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.*

*தலபெருமை:*

*இயற்கை அன்னையின் அழகை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட மலை அழகுகளில் கொல்லிமலை சிறப்பு பெற்றது. தன் அழகை 17 மைல் தூரத்திற்கு விரித்திருக்கும் இந்த மலை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையும், வரலாற்று சிறப்பும் உடையது.*

*கொல்லிமலையின் புகழுக்கு வசந்த முலாம் பூசியது "கொல்லிப்பாவை' தான். அசுரர்கள் வருகையை தடுத்து நிறுத்த மாயன் என்ற தெய்வ சிற்பி, பார்ப்போரை தன் அழகால் காமம் உண்டாக செய்து, மயக்கி கொல்லும் தன்மை உடைய பெண் படிமத்தை உருவாக்கியதால் இதற்கு "கொல்லிப்பாவை' என்ற பெயர் அமைந்தது.*

*இந்த கொல்லிமலை சேர வேந்தர்களால் ஆளப்பெற்ற பெருமையும், பழமையும் கொண்டதாகும். சேர மன்னர்களில் வள்ளலாக விளங்கியவன் வல்வில் ஓரி. ஒரே அம்பில் காட்டு யானை, புலி, புள்ளிமான், காட்டுப்பன்றி, உடும்பு போன்றவற்றை வீழ்த்திய வலிமை பெற்ற இவன், ஆட்சி புரிந்த கொல்லிமலையின் ஒரு பகுதிக்கு அறப்பள்ளி என்று பெயர்.*

*இந்த அறப்பள்ளியில் ஈஸ்வரர் எழுந்தருளியதால் அங்கு அறப்பளீஸ்வரர் கோயில் தோன்றியது. இதனால் இங்கு வல்வில் ஓரிக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.*

*"கொல்லி குளிர் அறைப்பள்ளி' என்றும், "கள்ளால் கமழ் கொல்லி அறைப்பள்ளி' என்றும் திருநாவுக்கரசர் இந்த கோயிலை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். திருஞான சம்பந்தர் தனது திருத்தல கோவையில் அறைப்பள்ளியை போற்றியுள்ளார்.*

*கோயிலின் அருகில் பஞ்சநதியில் மீன்களுக்கு பக்தர்கள் உணவு பொருட்களை வழங்கியும், மீனை பிடித்து மூக்கு குத்தியும் மகிழ்வது வழக்கம். ஒரு சமயம், பக்தர் ஒருவர் அறியாமையால் மீனைப்பிடித்து அறுத்து சமைக்க ஆரம்பித்தார். மீன் குழம்பு கொதிக்க ஆரம்பித்தது. அப்போது கொதிக்கும் குழம்பில் இருந்து மீன்கள் தாவிக்குதித்து ஓட ஆரம்பித்தன. எனவே, இந்த கோயில் ஈஸ்வரனுக்கு, ""அறுத்த மீனை பொருத்தி உயிர்ப்பித்த அறப்பளீஸ்வர்'' என்ற பெயர் வழங்கலானது.*

*இத்தனை சிறப்பு மிக்க அறப்பளீஸ்வரர் கோயில் கொல்லிமலையின் வளப்பூர் நாடு என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் அறப்பளீஸ்வரர், தாயம்மை எனும் அறம் வளர்த்த நாயகியுடன் எழுந்தருளியுள்ளார். இவர்களுடன் வினை தீர்க்கும் விநாயகரும், முருகனும் சன்னதி கொண்டுள்ளனர். ஒரே இடத்தில் நின்று ஒரே நேரத்தில் அறப்பளீஸ்வரர், தாயம்மை, விநாயகர், முருகன் ஆகிய நான்கு தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்து மகிழும் அரிய அமைப்பு இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.*

*தஞ்சை பெரிய கோயிலை தந்த, ராஜராஜசோழனின் பெரிய பாட்டியும், சிவஞான கண்டராதித்த சோழ தேவரின் மனைவியுமாகிய மாதேவி, இந்த கோயிலுக்கு வந்து தரிசித்தும், விலையுயர்ந்த அணிகலன்களை அணிவித்தும் சென்றுள்ளது போன்ற ஏராளமான கல்வெட்டுக்கள் கோயிலில் உள்ளன.*

*இந்த கோயிலுக்கு சென்று வணங்கி, அருவியில் குளித்து உடலும் உள்ளமும் சிலிர்க்க இறைவனின் அருளையும், இயற்கையின் வனப்பையும் ஒருங்கே அனுபவிக்கலாம்.*

*கோயிலின் வடபுறத்தில் வற்றாத ஐந்து ஜீவநதிகள் ஒன்றாக கலந்து வந்து 150 அடி உயரத்தில் இருந்து பூத்தூவலாய் விழுகின்றன. கொல்லிமலையின் ஆயிரமாயிரம் அபூர்வ மருத்துவ குணங்களை எல்லாம் அள்ளி வந்து கொட்டும் நீர் அருவியாகி பின் ஆறாக ஓடுகிறது. இந்த ஆற்றில் ஏராளமான மீன்கள் உள்ளன.*

*அறப்பளீஸ்வரர் மீன் வடிவில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கோயிலுக்கு செல்வதற்கு முன்னரே பக்தர்கள் ஆற்றில் உள்ள மீன்களுக்கு சாதம், பலவகை தின்பண்டங்களை அளித்து வழிபாடு செய்கின்றனர். அதன்பின்பே அவர்கள் கோயிலுக்கு சென்று வணங்குகின்றனர்.*

*மழையில்லாத காலங்களிலும் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும். ஆடிமாதம் 18ம் பெருக்கு இந்த கோயிலின் விசேஷமாகும். ஆண்டு தோறும் ஆடி 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு இந்த விழா சிறப்பாக நடந்து வருகிறது.*

*பக்தர்களோடு பழங்குடியின மக்களும், தங்களின் பாரம்பரிய சிறப்புடன் விழாவை கொண்டாடுகின்றனர். அவர்கள் ஆற்றில் உள்ள பெரிய மீன்களை பிடித்து அதற்கு மூக்குத்தி அணிவித்து வழிபட்டு பின்னர் அந்த மீனை மீண்டும் ஆற்றில் விடுகின்றனர். இந்த புனித தன்மை பெற்ற ஆறு, கொல்லி மலையில் இருந்து இறங்கி, துறையூர், முசிறி வழியாக சென்று காவிரியில் ஐக்கியமாகிறது.*

*ஆடிப்பெருக்கு:*

*அறப்பளீஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா ஐந்து நாட்கள் விசேஷமாக நடக்கும். இந்நாட்களில் சுவாமி மாலையில் புறப்பாடாவார். ஆடிப்பெருக்கன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு உண்டு. பொதுவாக சிவனின் அம்சமான அஸ்திரதேவர் தான், தீர்த்தவாரி காண்பார். ஆனால், இங்குள்ள பஞ்சநதி தீர்த்தத்தில் நடராஜர் தீர்த்தவாரி காண்கிறார்.*

*மீனுக்கு நைவேத்யம்:*

*ஒருசமயம் அறப்பளீஸ்வரரைத் தரிசிக்க வந்த பக்தர்கள், கோயில் அருகே ஓடும் பஞ்சநதி தீர்த்தத்திலுள்ள மீன்களைப் பிடித்து சமைத்தனர். சிவதரிசனத்திற்கு பிறகு அதை சாப்பிடலாம் என்றெண்ணி, மீன்குழம்பை தீர்த்தக்கரையில் வைத்தனர். அப்போது சமைக்கப்பட்ட மீன்கள் உயிர்பெற்று நதிக்குள் குதித்தன. அவ்வேளையில் ஒலித்த அசரீரி, மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவனே வசிப்பதாக கூறியது. இந்நிகழ்வின் அடிப்படையில் சுவாமிக்கு "அறுத்த மீன் பொருந்தியிருக்கச் செய்த அறப்பளீஸ்வரர்' என்று பெயர் ஏற்பட்டது. தினமும் காலையில் சுவாமிக்கு படைத்த நைவேத்யத்தை, இத்தீர்த்தத்திலுள்ள மீன்களுக்கு போடுகிறார்கள்.*

*அ.குமரன் சன் ஆஃப் அறம்வளர்த்தநாயகி:*

*அம்பிகை அறம்வளர்த்தநாயகிக்கு எதிரேயுள்ள சன்னதியில், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகன் இருக்கிறார். அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற இவர் முன்புறம் மூன்று, பின்புறம் மூன்று என ஆறுமுகங்களுடன் காட்சியளிக்கிறார். எதிரில் தாயை பார்த்துக்கொண்டும், அருகில் தேவியருடனும் இருப்பதால் இவர் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தருபவராக அருளுகிறார். குடும்பப்பிரச்னையால் பெற்றோரைப் பிரிந்தவர்கள், தாய், மகன் இடையே மனக்கசப்பு உள்ளவர்கள் இங்கு வேண்டிக் கொள்ள மீண்டும் சேர்வர் என்பது நம்பிக்கை.*

*ஆகாய கங்கை:*

*கோயிலில் இருந்து சற்று தூரத்தில் மலைப்பகுதியின் மத்தியில் ஆகாய கங்கை தீர்த்தம் அருவியாகக் கொட்டுகிறது. ஆகாயத்திலிருந்து விழுவது போல இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. உடல் ஆரோக்கியத்திற்கு இத்தீர்த்த நீராடி சுவாமியை வழிபடுகிறார்கள். அருவிக்குச் செல்ல படிக்கட்டு உள்ளது. ஆகாயகங்கை அருவியிலிருந்து சற்று தூரத்தில் கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் தங்கிய குகைகள் உள்ளன. வனத்திற்குள் இருப்பதால் தகுந்த பாதுகாப்புடன் சென்றால் இக்குகைகளை தரிசித்து திரும்பலாம். இவ்விடங்களுக்கு அழைத்துச் செல்ல வழிகாட்டிகள் உள்ளனர்.*

*நீதிக்கு பிரார்த்தனை:*

*சித்தர்கள் பிரதிஷ்டை செய்ததால் இங்குள்ள லிங்கம், "ஆருஷ லிங்கம்' என்றழைக்கப்படுகிறது. சுவாமி சன்னதி விமானத்தில் சித்தர்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. சுவாமிக்கு திருவரப்பள்ளியுடையார் என்றும் பெயருண்டு. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை உண்டு. திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தேவார வைப்புத் தலம் இது. கவிச்சக்கரவர்த்தி கம்பரும் பாடியுள்ளார். சுவாமி அறத்தின் வடிவமாக உள்ளதால், பிறரால் அநீதி இழைக்கப்பட்டவர்கள், நீதி கிடைக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.*

*அஷ்டலட்சுமி ஸ்ரீசக்ரம்:*

*அறம்வளர்த்தநாயகி சன்னதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமிகளுடன் கூடிய ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். செல்வவளம் தரும் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. சித்தர்கள் மேற்கொண்ட யோக முறைகளை அம்பாள் சன்னதி சுற்றுச்சுவரில் சிற்பங்களாக வடித்துள்ளனர்.*

*காசி தரிசனம்:*

*கோயில் பிரகாரத்தில் காசிவிஸ்வநாதருக்கும், விசாலாட்சிக்கும் சன்னதி உள்ளது. இந்த சன்னதியை காசியில் உள்ள அமைப்பிலேயே அமைத்துள்ளனர். இங்குள்ள ஆகாயகங்கை, பஞ்சநதி தீர்த்தங்கள் புண்ணியம் தருபவை என்பதால், அதில் நீராடி விஸ்வநாதரையும், தனிச்சன்னதியிலுள்ள பைரவரையும் வழிபட பிறவாநிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் ஜேஷ்டாதேவி சிலை உள்ளது.*

*மகாலட்சுமி சன்னதியில் ஆஞ்சநேயர்:*

*பெருமாள் கோயில்களில் சுவாமி சன்னதியில் அவரது பக்தரான ஆஞ்சநேயர் இருப்பார். ஆனால், இங்குள்ள மகாலட்சுமி சன்னதியில் ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம். சரஸ்வதிக்கும் சன்னதி உண்டு. இவள் அட்சரமாலை, ஏடு, வீணையுடன் நின்றிருக்கிறாள்.*

*மன்னனுக்கு விழா:*

*வல்வில் ஓரி மன்னன் ஆண்ட மலைப்பிரதேசம் இது. இம்மன்னனுக்கு இங்கிருந்து 11 கி.மீ., தூரத்திலுள்ள செம்மேடு என்ற இடத்தில் சிலை உள்ளது. ஆடிப்பெருக்கன்று மன்னனுக்கு ஓரி விழா விமரிசையாக நடக்கும். மன்னனுக்கு மரியாதை செய்யும் விதமாக நடக்கும் இவ்விழாவில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை சிறப்பை வெளிப்படுத்தும்படியான கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.*

*கொல்லிப்பாவை கோயில்:*

*தேவர்களும், மகரிஷிகளும் இங்கு தவமிருந்தபோது அசுரர்கள் அவர்களை தொந்தரவு செய்தனர். எனவே, அசுரர்களின் கவனத்தை திசை திருப்ப, ரிஷிகள் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு பெண் சிலை செய்து, அதற்கு சக்தியூட்டினர். அதற்கு "கொல்லிப்பாவை' என்ற பெயர் ஏற்பட்டது. அதன் மீது மோகம் கொண்டு அசுரர்கள் அருகில் நெருங்கினர். அவர்களை அந்த அம்பிகை வதம் செய்தாள். எட்டு கைகளுடன் இருப்பதால் இவளை, "எட்டுக்கை அம்மன்' என்று அழைக்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் கொல்லிப்பாவை கோயில் உள்ளது.*

*தல வரலாறு:*

*உயிர்களின் வாழ்க்கை மகத்துவம் பெற, இறை வழிபாடு மேற்கொண்ட சித்தர்கள், தவம் செய்ய தேர்ந்தெடுத்த இடங்களில் ஒன்று கொல்லிமலை. அவர்கள் இங்கு ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்தனர். தர்மத்தை (அறம்) பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இவருக்கு, "அறப்பளீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த இடம் விளைநிலமாக மாறி சிவலிங்கம் மறைந்து விட்டது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கிக்கொண்டது. அங்கு தோண்டிய போது லிங்கம் இருந்ததைக் கண்ட விவசாயி ஊர் மக்களிடம் தெரிவித்தார். மக்கள் மலையில் கிடைத்த இலை, தழைகளால் பச்சைப்பந்தல் அமைத்து சிவனை பூஜித்தனர். பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.*

*சித்தர் பூமி:*

*பசுமையான மலையின் உச்சியில், அற்புதமாக அமைந்த கோயில் இது. கொல்லி மரங்கள் நிறைந்திருந்ததால், இம்மலைக்கு இப்பெயர் ஏற்பட்டது. கொல்லிமலைக்குச் செல்லும் பயணம் திகிலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். குழந்தைகள் பெரிதும் ரசிப்பார்கள். அடிவாரத்திலிருந்து பஸ்சில் கோயிலுக்குச் செல்ல 3 மணி நேரம் ஆகும். தென்றலை அனுபவித்து, இயற்கையின் வனப்பை ரசித்தபடி செல்லும் இப்பயணம் புதிய அனுபவமாக இருக்கும். கோயில் வாசல் வரை வாகனங்கள் செல்ல வசதியுண்டு. இத்தலத்தில் தற்போதும் பல சித்தர்கள் சிவனை பூஜிப்பதாகச் சொல்கிறார்கள். சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.*

*சிறப்பம்சம்:*

*அதிசயத்தின் அடிப்படையில்:*

*இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கத்தின் உச்சியில் கலப்பை மோதியதால் ஏற்பட்ட தழும்பு காணப்படுகிறது.*

*அமைவிடம்:*

*கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில் சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக 90 கி.மீ., நாமக்கல்லில் இருந்து 47 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. இதற்காக சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.*
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...