அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை -609702. நாகப்பட்டினம் மாவட்டம்
*மூலவர்:
அயவந்தீசுவரர், பிரமபுரீசுவரர்
*தாயார்:
இருமலர்க் கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி
*தல விருட்சம்:
கொன்றை
*தீர்த்தம்: கோயிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தம். இதன் மேற்பாதி சந்திர தீர்த்தம் என்றும், கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.
*தேவாரம்
பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர்.
*மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம் சீயாத்தமங்கை ஆலயம்.
*அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரும், அவரின் மனைவி மங்கையர்கரசியாரும் அவதரித்தது இந்த தலத்தில்தான். இந்த தம்பதிகள் அனுதினமும்
அயவந்தீஸ்வரரை கொன்றை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். ஒருநாள், சிவபூஜையின் போது, சிவலிங்கத் திருமேனியில் சிலந்தி ஒன்று ஊர்வதைக் கவனித்தார் மங்கையர்கரசியார்.
‘எம்பெருமான் உடலில் சிலந்தியா? அதை அகற்ற வேண்டும்’ என்ற எண்ணம் கொண்டார். எனவே வாயால் ஊதினார்.
சிலந்தி அங்கிருந்து செல்லவில்லை. மீண்டும் மீண்டும் பலங்கொண்டமட்டும் ஊதி முயற்சி செய்தார். அதைக் கண்ட திருநீலநக்கருக்கு கோபம் வந்தது.
“உன்னுடைய எச்சிலை இறைவன் மீது தெறிக்க விட்டுவிட்டாய். இந்த செயல் ஆகம விதிகளை மீறியது. நீ ஆண்டவனை மதிக்காமல் விதிகளை மீறிவிட்டாய்” என்று மனைவியைக் கண்டித்தார். மனைவியை கோபத்தோடு அங்கேயே விட்டு விட்டு, தான் மட்டும் இல்லம் திரும்பினார்.
மங்கையர்கரசியார், இறைவனைப்
பணிந்து கோயிலிலேயே அமர்ந்து “இறைவா நான் செய்தது தவறு என்றால், என்னை மன்னித்து விடு. என் அய்யன் என்னை விட்டு பிரியும்படி செய்து விடாதே” எனவேண்டி, சிவபெருமானே கதி என இருந்தார்.
அன்றிரவு இறைவன் திருநீலநக்கர் கனவில் தோன்றினார் .
“திருநீலநக்கரே உம் மனைவி என்னிடம் தாயுள்ளத்துடன், நடந்து கொண்டார். விடிந்ததும் ஆலயத்துக்கு வந்து என் திருமேனியை பாரும்” என்றார். திருநீலநக்கர். விடிந்ததும், விடியாததுமாக ஆலயத்துக்கு ஓடினார். கரு வறையில் இருந்த சிவபெருமானின் லிங்கத்திருமேனியைக் கண்டு அதிர்ந்து போனார். லிங்கத் திருமேனியில் மங்கையர்கரசியாரின் எச்சில்பட்ட இடத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் சிலந்தி கடித்து புண்ணாகியிருந்தது. இறைவனுக்கு நேர்ந்ததை எண்ணிக் கலங்கி “சிவபெருமானே என்னை மன்னித்து விடுங்கள்” என இறைவனை வணங்கி நின்றார். அதன் பின் சிவபெருமான் பழைய ரூபத்துக்கு வந்தார். இருவரும் அவர் முன்னே விழுந்து வணங்கினர்.
*இத்திருத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் வந்தபோது திருநீலநக்கரும், மங்கையர்கரசியாரும் அவரை அன்புடன் மலர்தூவி வரவேற்று தங்களது வீட்டிலேயே ஞானசம்பந்தரைத் தங்க வைத்தனர். ஆனால் சம்பந்தருடன் வந்த நீலகண்ட யாழ்ப்பாணர் மற்றும் அவரது மனைவி மதங்கசூளாமணி இருவரையும் உயர் சாதியினர் அல்ல என்று கருதி, அன்றிரவு அவர்களைத் தன் வீட்டிற்குள்ளே தூங்க விடாமல், வெளியில் இருந்த யாகக் குழியின் அருகேயே உறங்கச் செய்தார். நீலகண்ட யாழ்பாணரும் அவர் மனைவியும் குழியை நெருங்கியதும் அது தானாக எரிய ஆரம்பித்தது. நீலநக்கர் இது அவர்களின் பக்தியின் சக்தியால் என்று புரிந்துகொண்டு "பிறப்பால் உயர்வு தாழ்வு" குறித்த தமது கருத்துக்களை கைவிட்டார்.
*திருஞானசம்பந்தர் இங்கிருக்கும் போது வெளுத்த வானமும், சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்த வெயிலும் திடீரென மறைந்து, மேகங்கள் கறுக்கத் தொடங்கின. லேசாக மழை பெய்து, சட்டென்று மழை நின்று, வெளுக்கத் தொடங்கி விடுகிறது. இப்படி ஆகாயத்தால் அடிக்கடி அதிசயம் நடந்து கொண்டிருக்கும் சீயாத்தமங்கை தலத்தை பார்த்த அவர், ‘மேகம் உறிஞ்சும் பெருஞ்சாத்த மங்கை’ எனப்பாடினார்.
(நாம் அங்கு சென்றபோது திடீரென்று மேகம் சூழ்ந்து மழைபெய்தது குறிப்பிடத்தக்கது)
*இத் தலத்து சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
*இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்த வைகாசி மூல நட்சத்திர நன்னாளில், திருநீலநக்க நாயனாருக்கு குருபூஜை மிக விமரிசையாக நடக்கிறது.
ஆகவே, மூல நட்சத்திரக்காரர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இதுவாகும்.
*ஆவணி மாத மூல நட்சத்திர நாளில், இருமலர்கண்ணியம்மை சமேத அயவந்தீஸ்வரருக்கு நடைபெறும் திருமண வைபவத்தை தரிசித்து, அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத் தடை நீங்கும்.
*பயணிகளுக்கு வழிகாட்டிய இங்கு அருள்பாலிக்கும் அம்பிகை தான் இத் தலத்தில் ஆலயம் மிகப் பிரமாண்டமாக உருவாக காரணமாவார். காரைக்குடியில் இருந்து, தொழில் நிமித்தமாக நாகப்பட்டினம் நோக்கி ஒரு கூட்டத்தினர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பயணிகள் வழி தெரியாமல் அவதிப்பட்டனர். அந்த வேளையில் அங்கு சிறுமி ஒருத்தி வந்தாள். பயணிகள் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவரின் கையைப்பிடித்தாள்.
“என்னுடன் வாருங்கள். நீங்கள் செல்லும் இடத்துக்கு வழி காட்டுகிறேன்” என்று அழைத்துச் சென்றாள். மொத்தக் கூட்டமும் அவளைப் பின் தொடர்ந்தது. சற்று தூரத்தில் அமைந்திருந்த ஆலயத்தை அந்த கூட்டத்தினர் நெருங்கினர்.
அந்தச் சிறுமி சட்டென மறைந்து போனாள். சிறுமியாக வந்தது, அந்தக் கோவிலில் அருள்பாலிக்கும் இருமலர்க்கண்ணி அம்மையே என்பதை அவர்கள் அறிந்து வியந்தனர். கோவில் திருப்பணிகளில் ஆர்வம் கொண்ட அந்த அன்பர்கள், அம்பிகை வழி காட்டிய கோவிலுக்கு திருப்பணிகள் செய்து பிரமாண்டமான ஆலயமாக எழுப்பினர்.
*அம்பிகை இருமலர்கண்ணியம்மைக்கு, உபயபுஷ்ப விலோசினி என்றொரு திருநாமமும் உண்டு. சிவசொரூபமாக ருத்ராட்சம், சிரசில் கங்கை மற்றும் நெற்றிக்கண்ணுடன் சிவபாகத்தைக் கொண்டவளாக காட்சி தரும் இந்த அம்பிகையின் தரிசனம் அபூர்வமானது. அம்பாள், அக்னி வடிவமாகத் திகழ்கிறாள். எனவே, அவளைக் குளிர்விக்கும் வகையில், பவுர்ணமி தினங்களில் அபிஷேகங்கள் செய்வித்துப் பிரார்த்தித்தால், உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், பவுர்ணமியில், இங்கேயுள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி, அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால், விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும்.
* இங்கு ஐந்து பவுர்ணமிகள் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கிறது.
*நாகப்பட்டினம்- கும்பகோணம் சாலையில், திருபுகலூரில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து 13 கி.மீ அமைந்துள்ளது சீயாத்தமங்கை.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment