திருவாரூர் கமலாலய திருக்குளம்!
சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலின் சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பது கமலாலய திருக்குளம். இதன் பிரமாண்டமும் எழில் தோற்றமும் காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும்.
முசுகுந்த சக்கரவர்த்திக்காக பூவுலகம் வந்த தியாகவிடங்கரை தரிசிக்க ஆவல் கொண்டாள் தேவி சக்தி. அதனால் திருவாரூருக்கு வந்தவள், இந்தக் குளத்தை உருவாக்கி குளக்கரையில் பர்ண சாலை அமைத்து வழிபட்டாள் என்கின்றன புராணங்கள்.
சக்தி கமலாம்பிகை என்ற திருநாமத்தில் இங்கு எழுந்தருளியதால், அவளின் பெயரால் இந்தக் குளமும் கமலாயலயம் என்று பெயர் பெற்றதாம். திருக்குளமே கோயிலாகவும் திகழ்வதால் கமலாலயம் எனும் திருப்பெயர் மிகப் பொருத்தமே.
திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மேற்கு திசையில் இத்திருக்குளம் அமைந்துள்ளது. கமலாலயக் குளத்தை ஆதி தீர்த்தம் எனப் போற்றுகின்றன ஞான நூல்கள். `கோயில் ஐந்து வேலி; குளம் ஐந்து வேலி’ எனும் வாக்குக்கு இணங்க, திருவாரூர் கோயிலின் பிரமாண்டத்துக்கு இணையாகத் திகழ்கிறது கமலாலயம்.
காசியின் கங்கையை விடவும் மேலான புண்ணியம் தரவல்லது இந்தத் தீர்த்தக்குளம் என்பது பெரியோர் வாக்கு. ஆம், காசி - கங்கை தீரத்தில் 63 தீர்த்தக் கட்டங்களே உள்ளன. ஆனால், திருவாரூர் கமலாலயத்தில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன.
இதன் பெருமையைப் பலவாறு போற்றுகிறது கமலாலய மகாத்மியம் எனும் ஞானநூல். தமிழில் அருளப்பட்ட `தியாகராஜ சுவாமி திருக்கோயில் தல புராணம்’ நூலின் தேவதீர்த்த சருக்கத்தில், கமலாலயம் குறித்து 40 பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
பங்குனி உத்திரத் திருநாளன்று, குளத்தின் தேவ தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வணங்கிட, இந்திரனுக்கு இணையான வாழ்வு கிட்டும். இந்தத் தீர்த்தத்தில் வாழ்வில் ஒரு முறை நீராடிய அன்பர்கள், வேறு எந்த இடத்தில் மரித்தாலும் அவர்களுக்கு சிவலோக வாசம் நிச்சயம் என்கிறது புராணம்.
சுந்தரர், தண்டியடிகள், நமிநந்தி அடிகள் ஆகிய மூன்று நாயன்மார்களோடு தொடர்புடையதாகத் திகழ்கிறது கமலாலயக் குளம். நமிநந்தியடிகள் அறநெறியப்பர் சந்நிதியில் நீரால் விளக்கேற்றுவதற்காக, இந்தக் குளத்தின் நீரையே பயன்படுத்தினார்.
பிறவியிலேயே பார்வையற்ற தண்டியடிகள், சமணர்களின் சவாலை ஏற்று, இந்தக் குளத்தை தூர்வாரி திருத்தொண்டு புரிந்து, இறை அருளையும் கண்பார்வையையும் பெற்றார்.
சிவபெருமான் கொடுத்த தங்க ஆபரணங்களைக் கள்வருக்குப் பயந்து விருத்தாசலம் ஆற்றில் விட்டார் சுந்தரர். பிறகு அவர் திருவாரூருக்கு வந்து இந்தக் குளத்திலிருந்து அந்த நகைகளை எடுத்ததாக பெரியபுராணம் விவரிக்கிறது. அந்தத் தங்கத்தின் தரத்தை மாற்றுரைத்து சொன்ன விநாயகரும், குளத்தின் வடகிழக்கு மூலையில் மாற்றுரைத்த விநாயகராக அருள்கிறார்.
மூன்றரை கோடி தீர்த்தங்களின் சங்கமம் எனவும் வற்றாத குளம் எனவும் இத்திருக்குளம் போற்றப்படுகிறது. துர்வாசர், சப்த மகரிஷி உள்ளிட்டோர் இதில் நீராடி பேறு பெற்றனர். சங்கீத மும்மூர்த்திகளான தியாகபிரம்மம், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் இந்தக் குளத்தின் கரைகளில் பாடிய கீர்த்தனைகள் அற்புதமானவை.
பங்குனி உத்திரத்தில் தியாகராஜரும், ஆடிப்பூரத்தில் மனோன்மணி அம்மையும் இந்தக் குளத்தில் தீர்த்தவாரி வழங்குவர்.
தெப்பத்திருவிழா இந்தக் குளத்தில்தான் நடைபெறும். ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாள்களில், இந்தத் தீர்த்தத்தில் நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது சிறப்புக்குரியது.
திருக்கடல் போன்று திகழும் கமலாலயக் குளத்தின் நடுவே நடுவாண் கோயில் அமைந்துள்ளது. நடுவனக் கோயில், நடுவணாங் கோயில், நடுக்கோயில், நாகநாத சுவாமி கோயில் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் அருளும் ஶ்ரீநாகநாதரும் ஶ்ரீயோகாம்பாளும் யோகக் கலைகள் ஸித்திக்க வரம் தரும் தெய்வங்களாகத் திகழ்கிறார்கள்.
கரையில் இருந்து பார்த்தால் சிறியதாகத் தோன்றும் கோயில், அருகில் நெருங்கினால் பிரமிக்க வைக்கிறது. குளத்தின் நடுவே சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் இக்கோயில் அமைந்துள்ளது; இரண்டு திருச் சுற்றுக்களைக் கொண்டது. மூலவர் சந்நிதியின் நுழைவு வாயிலில் உள்ள சுதைச் சிற்பத்தில் முசுகுந்த சக்கரவர்த்தி இறைவனை பூஜிக்கும் காட்சியைக் காணலாம். விநாயகர், ஜேஷ்டாதேவி, நாகர், சண்டிகேஷ்வரர், நந்தி, அவருக்கு அருகில் ஓர் சிவலிங்க மூர்த்தி ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.
நாகநாதர் கோயிலைச் சுற்றிலும் 16 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு நடுவே அமைந்த ஆலயம் என்பதாலும் இது நடுக்கோயில் எனப் பெயர்பெற்றது என்பர்.
இக்கோயிலின் தல விருட்சம் வில்வ மரம். இக்கோயில் நுழைவுப் பகுதியில் யானை சிலை ஒன்று உள்ளது. கனமழை பொழியும் காலங்களில் கமலாலய குளத்தின் நீர்மட்டம், இந்த யானையின் கால்களைத் தொடுவிட்டால் மழை நின்றுவிடும் என்பது நம்பிக்கை.
‘அஞ்சனை வேலியாரூ ராதரித் திடங்கொண்டார்’ எனும் திருநாவுக்கரசரின் பதிக வரிகள் இக்கோயிலின் மேன்மையைச் சொல்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஐந்து பிரதோஷங்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று, அபிஷேகத் தயிரை வாங்கி அருந்தினால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பிரதோஷ காலம் மட்டுமன்றி சோமவாரம், சிவராத்திரி, திருவாதிரை போன்ற சிவபெருமானுக்கு உகந்த புண்ணிய தினங்களில் இந்த ஆலய இறைவனையும் அம்பிகையையும் தரிசித்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்; வியாபாரம் பெருகும்.
இந்தக் கோயிலுக்குப் படகில்தான் செல்ல முடியும். குளத்தின் வடகரையிலிருந்து படகு மூலம் அர்ச்சகர் சென்று வருவார்.
தினமும் மாலை 5 முதல் 6 மணி வரை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ தினங்களில் மதியம் 2 முதல் இரவு 10 மணி வரை கோயில் திறந்திருக்கும். சிவராத்திரி அன்று, இங்கு நான்கு கால பூஜை நடைபெறும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment