Friday, March 15, 2024

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள்...

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்களை விவரிக்கத் தொடங்கினார் அகத்தியர்......
எவனொருவன் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப் பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள்.

பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப வேண்டும் என நினைத்தாலே அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாபங்களினின்று விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தானாகில் சகலமான போகங்களையும் அடைவான்.

கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புவானாகில், அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆயிரம் வருஷம் சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.

சிவலிங்கத்தைச் செய்விப்பவன் சிவலோகத்தில் அறுபதினாயிரம் வருஷம் இருப்பான். அவன் வமிசத்தவரும் சிவலோகத்தை அடையும் பலனைப் பெறுவார்கள்.

சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவன் எட்டுத் தலைமுறைக்கு இறந்த தன் முன்னோர்களைத் தன்னுடன் சிவலோகத்தை அடையச் செய்வான்.

ஒருவனால் செய்ய முடியவில்லையென்றாலும், பிறர் செய்ததைக் கண்டு, நாமும் செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும், அவன் முக்தி அடைவானாம்.

பிரம்மதேவன், யமதர்மனுக்குப் பாசமும் தண்டமும் கொடுத்துப் பாபம் செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் அளித்தபோது சிவபக்தர்களை அண்டக் கூடாது என எச்சரித்திருக்கிறார்.

எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், பகவானை மலர்களால் அர்ச்சிப்பவர்கள், சிதிலமாகிக்கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள்,

காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கிக் சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கக் கூடாது என எச்சரித்துள்ளார். அவர்கள் வமிசத்தவர்கள் கூட யமதூதர்களால் நெருங்கப் படாதவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

சிவாலயம் சென்று பகவானைத் தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூஜிப்பவன் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைவான்.

கிருஷ்ணபக்ஷ சதுர்தசியில் சிவலிங்கத்துக்கு நெய்யினால் அபிஷேகம் செய்தால் செய்த பாபங்கள் விலகும். 
பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் சிவலிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் செய்பவன் சகல பாபங்களினின்றும் விடுபடுவான்.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான எம் ஐயனை துதிப்போம் அவன் அருள் பெறுவோம். திருச்சிற்றம்பலம்.ஓம் நமசிவாய... 

No comments:

Post a Comment

Followers

சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள்....

சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விரதங்கள் பற்றிய பதிவுகள் :* அபிஷேகப் பிரியனான சிவனுக்காக எட்டு விதமான விரதங்கள் கடைப்பிடிக...