வாழ்க்கை ஒழுக்கத்தை , சமுதாய ஒழுக்கத்தை அதிகமாக வற்புறுத்துவது இந்து மதம்தான்.
அதன் பண்பாடுகள் உன்னதமானவை.
அதன் சடங்குகள் அர்த்தம் உள்ளவை.
மங்கல வழக்கு, அமங்கல வழக்கு எனப் பிறந்தது இந்துக்களிடம்தான்.
சில சின்னங்களை மங்கலமாகவும் சிலவற்றை அமங்கலமாகவும் அவர்கள் காட்டினார்கள்.
மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும் வீட்டில் அமங்கல வார்த்தை கேட்கக் கூடாது என்றார்கள்.
பெண்ணுக்கு மங்கலம் என்பது தாலி.
திருமணத்தில் கட்டப்படும் அந்த தாலியை மரணத்தின் போது தான் கழற்றவேண்டும்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது கூட கழட்டக்கூடாது. அவ்வளவு புனிதமானது.
ஒரு உத்தமியின் கழுத்தில் உள்ள தாலியை யார் அபகரித்தாலும் அந்த தாலி அவர்கள் குடும்பத்தையே அழித்துவிடும் என்பது இந்துக்கள் நம்பிக்கை.
அன்னையும் பிதாவும் முதல் தெய்வம் என்பது இந்துக்கள் சம்பிரதாயம்.
தாயைப் பணிந்தவன் கோவிலுக்கு போக வேண்டாம் என்பார்கள்.
தாய் தந்தையை சுற்றி வந்த கணபதிக்கு தான் சிவபெருமான் மாம்பழத்தை அளித்தார். உலகத்தை சுற்றி வந்த முருகனுக்கு அல்ல.
தாய் தந்தையருக்கு தொண்டு செய்து கொண்டிருந்த ஒரு பக்தன் மாறுவேடத்தில் வந்த இறைவனை கவனிக்கவில்லை என்றும், இறைவன் ஆத்திரமுற்றபோது தன் முதற்கடமை இதுதான் என்று அவன் உறுதியாக கூறினான் என்றும், இறைவனே மனம் மயங்கி அவன் பாதத்தில் விழுந்தான் என்று நாம் படிக்கிறோம்.
அந்தத் தாய் தந்தையரை மனமார நேசிக்கும் எவனுக்கும் எதிர்காலம் உண்டு.
நம் கண் எதிரிலேயே பலரைப் பார்க்கிறோம்.
தாய் தகப்பனுக்குச் செய்யும் பாவம் உன் தலையை சுற்றி அடிக்கும்.
ஆயிரம் மனைவிமார்களை விலைக்கு வாங்கலாம். அன்னையும் பிதாவும் மறுபடி வர முடியாது.
இந்துக்கள் சொன்ன தத்துவம் வேடிக்கை கதை அல்ல.
யாருக்கு நீ பாவம் செய்தாலும் அதற்கு தண்டனை உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.
பாவத்தின் அளவே தண்டனையின் அளவு.
இறைவன் தீர்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை இந்துக்கள் சொன்னது போல் வேறு யார் சொன்னார்கள்?
இறைவா இந்து சமூகம் உன்னையும் உன் ராஜாங்கத்தையும் சரியாக அளந்து வைத்திருப்பதை எண்ணி எண்ணி நான் வியக்கிறேன்.
சொந்த நிகழ்ச்சிகளில் இந்த அனுபவத்தை காணாதவரை ஞான மார்க்க உபதேசிகளை நான் கேலி செய்ததுண்டு.
ஒவ்வொரு படிக்கட்டிலும் ஒவ்வொரு உண்மையை காண நமது ஞானிகள் அறிவுலகத்தின் சுடரொளிகள் என்றுதான் நான் நம்புகிறேன்.
இசையின் சுவையை பாடல் அதிகப்படுத்துவது போல் தத்துவத்தின் உண்மையை சம்பவங்களே உறுதி செய்கின்றன.
இந்து மகாசமுத்திரம் என்ற பெயர் இந்து மதத்திற்கே சரியாகப் பொருந்தும்.
அர்த்தமுள்ள இந்து மதத்தில் இருந்து
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment