Tuesday, April 9, 2024

குத்து விளக்கு பூஜையும் கூட்டு பிராத்தனையின் நன்மைகள்

சுமங்கலி பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய விளக்கு பூஜை
 
ஆலயங்களில் பெண்கள் கூட்டாக நடத்தும் விளக்கு பூஜையை சுமங்கலிப்பெண்கள் மேற்கொள்வதால் இந்த பூஜையை சுமங்கலி பூஜை என்றும் திருவிளக்கு பூஜை என்றும் கூறுவார்கள். பெண்கள் இந்த விளக்குப் பூஜையை கூட்டுப்பிரார்த்தனையாக கோவிலில் ஏன் மேற்கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் அதன் பலன்களைப் பற்றியும் இந்த பதிவில் நாம் காண்போமா.
விளக்கு பூஜை என்பது நமது கோவில்களில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றது. கோவில்களில் கொண்டாடப்படும் இந்த பூஜையில் விளக்குகள் 101 1001 இந்த கணக்கில் ஏற்றப்பட்டு பூஜை நடத்தப்படுகின்றது. இந்தப் பூஜையானது முழுக்க முழுக்கப் பெண்களால் நடத்தப்படும் பூஜை. நம் கோவில்களில் பெண் தெய்வங்களை முக்கிய தெய்வங்களாக பழங்காலத்திலிருந்தே வழிபட்டு வருகின்றனர். பெண்மையை மதிக்க வேண்டும் என்ற காரணத்தினால் பெண் தெய்வத்தையும் முக்கியத்துவம் கொடுத்து வழிபடுகிறோம்.


இந்த பூஜை செய்வதன் மூலம் நம் குடும்பத்திற்கு எந்த தீங்கும் வராமல் இருப்பதாகவும், பெண்களின் தாலி பாக்கியம் நிலைத்து இருக்கும் என்பதும் பெண்களின் நம்பிக்கை. அதுமட்டுமல்லாது எந்த ஊர் மக்கள் இந்த விளக்குப் பூஜையை கூட்டு பிரார்த்தனையாக மேற்கொள்கிறார்களோ, அந்த ஊரானது செழிப்பாக இருக்க வேண்டும். ஊர் மக்கள் அனைவரும் நலமோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த பூஜையானது மேற்கொள்ளப்படுகிறது.

பூஜையை மேற்கொள்ளும் முறை



வாழை இலையை விரித்து, அதன் மேல் பச்சரிசியை பரப்பி, குத்துவிளக்கை பச்சரிசியில் மேல் வைத்துதான் இந்த விளக்கு பூஜை செய்யப்படுகிறது. இதன் அர்த்தம் வாழையடி வாழையாக நம் வம்சம் வளரவேண்டும் என்பது தான். குத்து விளக்கு என்பது ஒரு மங்களச் சின்னமாக கருதப்படுகிறது.

முதலில் விநாயகரை வழிபட வேண்டும் என்பது வழிபாட்டு மரபு என்பதால், மஞ்சளில் விநாயகரைப் பிடித்து ஒரு வெற்றிலையின் மீது அமர வைத்து பின்பு தான் விளக்குப் பூஜையை தொடர வேண்டும்.

அம்பாள் வழிபாடு நடக்கின்ற போது 108 1008 என்று அம்பாளின் மந்திரங்களைச் சொல்லி வழிபடுகின்ற வேளையில் மலர் அல்லது குங்கும் அர்ச்சனை நடைபெறும். இவ்வாறு அர்ச்சனை செய்யப்படும் போது ஆள்காட்டி விரலையும் பெருவிரலையும் சேர்த்து குங்குமத்தையோ அல்லது பூவையோ எடுத்து விளக்கின் மீது போட வேண்டும். இந்த அர்ச்சனை முடிந்தவுடன் அம்மனுக்கு நைவேத்தியம்  படைக்கப்பட்டு ஆரத்தி காட்டப்படும். பின்பு பெண்கள் அனைவரும் திருவிளக்கின் முன்னால் நமஸ்காரம் செய்யது பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.



திருவிளக்கு வழிபாட்டின் போது எவர்சில்வர் விளக்குகளை வழிபாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது. பித்தளை அல்லது வெங்கல விளக்குகளை பயன்படுத்தலாம். உடைந்த கீறல் விழுந்த விளக்குகள் வழிபாட்டிற்கு உகந்தது அல்ல. விளக்கை துணை விளக்கின் உதவியோடுதான் ஏற்றவேண்டும். தீக்குச்சியால் ஏற்றக்கூடாது. விளக்கு பூஜை முடிந்தபின்பு தீபத்தினை கையால் விசியோ, வாயால் ஊதியும் அணைக்கக் கூடாது. பூவின் மூலமாகத்தான் குளிர வைக்க வேண்டும்.

குத்துவிளக்கையும், பெண்களையும் ஒப்பிட்டு கூறுகின்றார்கள். குத்து விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் பெண்களின் ஐந்து குணங்களை குறிக்கின்றது. அதாவது அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை. திருவிளக்கு பூஜை ஆனது பெண்களையும் பெண் தெய்வத்தையும் போற்றும் வகையில் நம் கோவில்களில் நடத்தப்படுகின்றது.

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...