Sunday, April 14, 2024

காஞ்சி மண்டலத்தில் ஈஸ்வரன் கோவில்கள் எதிலும் அம்பாள் ஸந்நதியே இல்லாமல் இருக்கிறது ஏன்?

ஒரு வீட்டில் பெண்களின் ஆதிக்கம் நடக்கிறது என்றால் அவ்வீடு “மதுரை’ என பெயர் பெறும் அளவுக்கு மீனாட்சிஅம்மனின் புகழ் கொடிகட்டிப் பறக்கிறது.
தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி. தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். 

மதுரையம்பதி, 
கூடல் நகர், கடம்பவனம் என்று தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மதுரை நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறை, கலை அறிவு, நாகரிக மேன்மை இவற்றின் அழிக்க முடியாத அடையாளங்களாக நிமிர்ந்து நிற்கின்றன

பெரிய பெரிய கோபுரங்கள், பிராகாரங்களுடன் வெள்ளைக்காரர்களும் பார்த்துப் பிரமித்துக் கொண்டாடும் படியான ஆலயம் மீனாக்ஷிக்கே ஏற்பட்டிருக்கிறது. அங்கே இருக்கிற சிற்பச் செல்வங்களுக்குக் கணக்கு வழக்கில்லை. மற்ற க்ஷேத்ரங்களில் ஈஸ்வரன் பேரிலேயே கோவிலைச் சொல்லி அதில் இன்ன அம்பாள் ஸந்நிதி இருக்கிறது என்பார்கள். 

ரொம்பவும் சக்தியோடு, ஜீவகளையோடு பாலாம்பாள், கல்பகாம்பாள், மங்களாம்பாள் முதலிய தேவீ மூர்த்தங்கள் இருக்கிற கோயில்களைக் கூட வைத்யநாத ஸ்வாமி கோவில் (அல்லது முத்துக் குமார ஸ்வாமி கோவில்) , கபாலீச்வரர் கோவில், கும்பேச்வர ஸ்வாமி கோவில் என்றுதான் சொல்கிறோம். 

ஆனால் மதுரையில் மட்டும் ஸுந்தரேச்வரர் கோவில் என்று சொல்வதில்லை. மீனாக்ஷியம்மன் கோவில் என்றுதான் சொல்கிறோம். அங்கேதான் ஸுந்தரேச்வரர் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் பண்ணியிருக்கிறார். ஸுந்தரேச்வரரை ஸ்தோத்திரம் பண்ணி, விபூதி மஹிமையாலேயே ஞான ஸம்பந்தர் பாண்டிய ராஜாவின் வெப்பு நோயைத் தீர்த்து, அது வரை ஜைனனாக இருந்த அவனை சைவனாக்கினார். 

இப்படி நம் தேசத்தில் மறுபடி வைதிக மதம் நன்றாக ஸ்தாபிதமாவதற்கே ஸுந்தரேச்வரர் தான் காரணமாயிருந்திருக்கிறார். ஆனாலும் அவர் பெருமையை எல்லாம் ஒன்றுமில்லை என்று பண்ணிக்கொண்டு அம்பாள் மீனாக்ஷியே அங்கே முக்கியமாயிருக்கிறாள். மீனாக்ஷியம்மன் கோயில் என்றே சொல்கிறோம்.

காஞ்சி மண்டலத்தில் ஈஸ்வரன் கோவில்கள் எதிலும் அம்பாள் ஸந்நதியே இல்லாமல் இருக்கிறது. அதற்கு எதிர் வெட்டாக அம்பாள் மட்டும் ஈஸ்வரன் இல்லாமல் காமாக்ஷி கோவிலில் இருக்கிறாள்! அதனால் அதைக் காமாக்ஷியம்மன் கோவில் என்பதில் ஆச்சரியமில்லை. சைவாகமங்களின்
படி ஈஸ்வரனின் ஆலயமாகவே உள்ள மதுரையில் ‘மீனாக்ஷியம்மன் கோவில்’ என்று பெயர் ஏற்பட்டிருப்பதுதான் விசேஷம்! 

ஜம்புகேச்வரத்தில் அகிலேண்டச்வரி ஆலயம் என்று சொல்கிற வழக்கம் இருந்தாலும், ஊருக்கே ‘ஜம்புகேச்வரம்’ என்பதாக ஸ்வாமி பெயர்தான் ஏற்பட்டிருக்கிறது!

மீனாக்ஷியை ஆதி காலத்திலிருந்து அநேக மஹான்களும் கவிகளும் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்கள்.

சிறப்பம்சம் மிக்க மீனாட்சி தேவியின் சிலை:மதுரை மீனாட்சி கோயிலின் மற்றொரு சிறப்புமிக்க விஷயம் அம்மனின் சிலை. இங்கு மீனாட்சி என்று அழைக்கக்கூடிய பார்வதி தேவி சிலை மரகத கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மனின் திருமேனி பச்சை நிறத்தால் காட்சியளிக்கும். இது நம்பமுடியாத அழகாகவும், தனது ஒளிரும் கண்களால் அம்மன் உயிருடன் இருப்பதைப் போல தெரியும் காட்சிகள் அனைத்தும் தெய்வீகமானது. பார்வதி மூன்று மார்பகங்களுடன் பிறந்ததால் இக்கோயிலில் அம்மன் தெய்வத்தை மூன்று மார்பகங்களுடன் காணலாம். அதே போல மீனாட்சி அம்மனின் வலது கால் சற்று முன்னோக்கி இருப்பது போன்று இருக்கும். காரணம் பக்தர்களின் அழைப்பிற்கு உடனே ஓடி வந்து அருள்புரியக்கூடியவள் என்பது பொருள்.

‘ச்யாமளா தண்டகம்’என்று காளிதாஸன் செய்திருக்கிற பிரஸித்த ஸ்துதியில் சொன்ன ச்யாமளாதான் மீனாக்ஷி. ச்யாமளா, மாதங்கி, மந்த்ரிணி என்றெல்லாமே மந்திர தந்திர சாஸ்த்ரங்களில் மீனாக்ஷிக்குப் பேர். ஸங்கீதத்துக்கு அதிதேவதையாக எப்போதும் மாணிக்க வீணையை மீட்டிக் கொண்டிருக்கிறவள் அவள். கானாம்ருதத்தாலேயே மோக்ஷாம்ருதத்தை ஸாதித்துத் தருகிறவள்.

குறிப்பாக “ச்யாமளா தண்டக”த்தில்

மாதா மரகத ச்யாமா மாதங்கீ மதசாலிநி |

குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவநவாஸிநீ ||

என்று வருவது, மரகதப் பச்சையாக ஜ்வலிக்கிற மீனாக்ஷியைச் சொல்வதாகவே இருக்கிறது. ‘கதம்ப வனம்’ என்பதுதான் மதுரை. ‘கடம்ப வனம்’ என்று தமிழில் சொல்வார்கள்.

“ஓங்கார பஞ்ஜர சுகீம்” என்று ஆரம்பிக்கிற ‘நவரத்ன மாலிகை’யிலும் அம்பிகையை ஸங்கீத தேவதையாகத்தான் காளிதாஸன் வர்ணித்திருக்கிறான். “ஓங்காரம் என்ற கூட்டிலிருக்கும் கிளி” என்று அம்பிகையை வர்ணிக்க ஆரம்பிக்கிறான். மதுராபுரியில் மீனாக்ஷி வீணாதாரிணியாக இல்லாமல், கிளியைத் தான் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள்!

‘மீனாக்ஷி பஞ்சரத்னம்’ என்று ஆசார்யாளும் பண்ணியிருக்கிறார்.

பாதி மாதுட னாய பரமனே

ஞால நின்புக ழேமிக வேண்டும் – தென்

ஆல வாயில் உறையும் எம் ஆதியே

என்று ஞானஸம்பந்தர் ஈஸ்வரனைப் பாடுகிற போது கூட ‘பாதி மாது’ என்று முதலில் ஈஸ்ரவனுடைய அர்த்தாங்கனாவாக இருக்கிற அவளைத்தான் சொல்லியிருக்கிறார்.

இப்படிப் பல கவிவாணர்கள் அம்பாளைப் பாடியிருக்கிறார்கள். குமரகுருபரர் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ என்று, ஸாக்ஷாத் ஜகன் மாதாவைக் குழந்தையாக வைத்து ஸ்தோத்திரித்திருக்கிறார். அதைக் கோவிலிலேயே அரங்கேற்றம் பண்ணினார்கள். அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த திருமலை நாயகரின் அக்ராஸனத்தில் அரங்கேற்றம் நடந்தது. குமரகுருபரர் பாட்டுகளைச் சொல்லிக் கொண்டு வரும் போதே திடீரென்று அங்கே அர்ச்சகருடைய பெண் குழந்தை வந்து, திருமலை நாயகரின் கழுத்தில் போட்டுக் கொண்டிருந்த முத்து மாலையைக் கழற்றிக் குமரகுருபரரின் கழுத்திலே போட்டு விட்டதாம். ‘இதென்னடா, இந்தப் பெண் இப்படிப் பண்ணுகிறது?’ என்று எல்லோரும் பிரமித்துப் போயிருக்கும் போது அந்தப் பெண் அப்படியே கர்ப்பக்ருஹத்துக்குள் போய் அந்தர்தானமாகி விட்டதாம்! அப்போதுதான் எல்லோருக்கும் மீனாக்ஷியே இந்த ரூபத்தில் வந்து குமரகுருபரருக்கு பஹுமானம் பண்ணி விட்டுப் போயிருக்கிறாள் என்று தெரிந்தது.

தமிழில் 
‘அங்கயற்கண்ணி’ என்று அம்பாளைச் சொல்வார்கள். ‘அம்’ என்றால் அழகிய, ‘கயல்’ என்றால் மீன். மீன் போன்ற அழகிய கண்ணுள்ளவள், மீனாக்ஷி என்று அர்த்தம். ‘அங்கச்சி, அங்கச்சி’ என்றே மதுரையில் எந்தப் பெண்ணையும் கூப்பிடுவது இதனால் தான்.

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...