Wednesday, April 10, 2024

விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் (சுயம்பு முருகன்)

#முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்புரியும் 
கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற #திருமுதுகுன்றம் என்ற #விருத்தாசலம் அருகே உள்ள #மணவாளநல்லூர்
#கொளஞ்சியப்பர் (சுயம்பு முருகன்)
#சித்திவிநாயகர் 
திருக்கோயில் வரலாறு:

ஆண்டவனின் நீதிமன்றத்தில் தவறுகளுக்கு நிச்சயம் தண்டனை உண்டு, தவறு செய்து வருந்துபவர்களுக்கு மன்னிப்பும் உண்டு. அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற நீதியின் காவலனாகத் திருக்கோயில் கொண்டு உள்ளவரே கொளஞ்சியப்பர்.

மணவாள நல்லூர் விருத்தாசலம் - சேலம் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொளஞ்சியப்பர் அருள்பாலிக்கும் மணவாள நல்லூர் திருத்தலம். இங்கே கொளஞ்சியப்பர் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்.

எங்கும் நிறைந்த, எல்லாம் அறிந்த இறைவன், தன்னை மனமுருகி மெய்யுருகி வேண்டுவோருக்கு வேண்டியதை அருள்பவன். அந்த அருளாளன் உருவமாகவும் அருவமாகவும் அருள்பாலிக்கும் ஆலயங்கள், நம்முடைய ஆன்மாவுக்கு சக்தி அளிக்கும் கேந்திரங்களாகும். இதை வலியுறுத்தும் விதமாகவே அவ்வை பிராட்டி ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று பாடினார். பண்டைய அரசர்கள் இத்தகைய ஆலயங்களை மையமாக வைத்தே ஆட்சி செய்தனர். இதனால் நாடும் சுபீட்சமாக இருந்தது; நல்லாட்சியும் நடந்தது. அதற்காக எந்த மன்னரும் தன்னிச்சையாக எந்த ஆலயத்தையும் உருவாக்கிவிடவில்லை. புராண வரலாறு அல்லது வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆலயத்தையும் உருவாக்கினர்.

இப்படிப்பட்ட வழிவழி வந்த வரலாற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றே ‘கொளஞ்சியப்பர் திருக்கோவில்.’ சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த காடாக இருந்த பகுதியில் உருவாக்கப்பட்ட இவ்வாலயம், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் மணவாளநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கொளஞ்சியப்பர் என்ற பெயரில் அருள்பாலிப்பவர் சாட்சாத் முருகப்பெருமானே ஆவார். 

மூலவர்: கொளஞ்சியப்பர் (சுயம்பு முருகன்), சித்தி விநாயகர்
தல 
விருட்சம்:கொளஞ்சிமரம்
தீர்த்தம்: மணிமுத்தாறு
ஊர்: மணவாளநல்லூர் (விருத்தாசலம்)
மாவட்டம்: கடலூர்
மாநிலம்: தமிழ்நாடு 

#தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசுமாடு ஒன்று, கொளஞ்சி செடிகள் புதராய் மண்டிக் கிடந்த ஒரு இடத்தை தன் கால்களால் தேய்த்து, பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொரிந்தது. அனுதினமும் இதை வழக்கமாக மேற்கொள்ள இதை கண்ணுற்ற பொதுமக்கள், அந்த பலிபீடம் புனிதத்துக்குரியது என்று கருதி அதை வெளியே எடுத்து வழிபடத் தொடங்கினர். 
உருவ அடையாளம் இல்லாததால் அது என்ன தெய்வம் என்று தெரியாமல் வணங்கி வந்தனர். காலப்போக்கில் இதற்கான தேடல்களை மேற்கொண்டபோது, விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் இருந்து விடை கிடைத்தது.

ஒரு சமயம் தம்பிரான் தோழன் (இறைவனின் தோழன்) என்று போற்றப்படுகின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் தில்லைக்கு மேற்கேயுள்ள தலங்களை தரிசித்தவாறு விருத்தாசலம் எனப்படும் திருமுதுகுன்றத்துக்கு வந்தார். அப்படி வந்தவர் ஊர் மற்றும் சுவாமியின் பெயரை கேள்விப்பட்டு முதுமையை எட்டியுள்ள இவ்வூரையும் இப்பெருமானையும் பாடினால் பொன்பொருள் கிடைக்காது என்று முடிவுசெய்து பண் பாடாது பயணத்தைத் தொடர்ந்தார். இதுபுரிந்த திருமுதுகுன்றீசுவரபெருமான், அவரோடு விளையாட விரும்பி தன் மைந்தன் முருகனிடம், ‘சுந்தரர் எம்மை மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச்செய்’ என்று வாய்மொழியாக வேண்டுகோள் வைத்தார். (இதை எழுத்து வடிவமாக தரும்போது அது ‘பிராது’ எனப்படும். பிராது என்பது முறையீடு செய்தல் அல்லது நியாயம் வேண்டி புகார் அளித்தலாகும்).

அதை ஏற்ற முருகப்பெருமான், கள்ளர் வடிவில் சென்று சுந்தரரின் கைவசம் இருந்த பொன் பொருளை அபகரித்தார். பதறிய சுந்தரரிடம், ‘நீ உன்பொருளை திரும்பப் பெறவேண்டுமானால் திருமுதுகுன்றீஸ்வரரிடம் சென்று முறையிடு’ என்று கூறி அனுப்பிவைத்தார். சுந்தரரும் அதை ஏற்று திரு முதுகுன்றீசுவரரிடம் வந்து நின்றார். அவரிடம் ஈசன், ‘எம்மை மதியாமல் சென்ற உமக்கு பாடம் புகட்டவே முருகனை விட்டு களவாடச்செய்தோம். இதோ உமது பொன்னும் பொருளும். எடுத்துக் கொள்’ என்று கூறி தந்தார். மனமகிழ்ந்த சுந்தரர் தன் தவறுக்கு மன்னிப்புக் வேண்டியதுடன், இத்தலப் பெருமானை பாடவும் செய்தார். அதற்காக ஈசன் பன்னிராயிரம் பொற்காசுகளைத் தர, ஏற்கனவே வழிப்பறிக்கு ஆளான அனுபவத்தில் ‘இவ்வளவு பொற்காசினை எப்படி எடுத்துச் செல்வேன்’ என்றார், சுந்தரர்.

அதற்கு சிவன் ‘இப்பொற்காசினை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு திருவாரூர் கமலாலயம் குளத்தில் சென்று எடுத்துக் கொள்’ என்று கூறினார். சுந்தரரும் அதன்படியே செய்தார். சுந்தரர் மீது ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளநல்லூர் எல்லை என்பது தெரியவந்தது. அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கே பலிபீட உருவில் அமர்ந்திருப்பவர் சாட்சாத் முருகன் என்று உறுதி செய்யப்பட்டது. கொளஞ்சி செடியின் ஊடேயும், பசுவின் குளம்புகளின் மூலமும் வெளிப்பட்ட அவருக்கு ‘கொளஞ்சியப்பர்’ என்னும் திரு நாமத்தை சூட்டி வழிபடலாயினர்.
தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஒரே திருத்தலமாக இத்தலம் விளங்குகிறது. பிரசித்திப் பெற்ற பிரார்த்தனை தலமாகவும், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவாகத் திகழ்ந்த அகப்பேய் சித்தர் ஜீவசமாதி (வாய்மொழிக் கூற்று) அடைந்த திருத்தலமாகவும் இது விளங்குகிறது.

ஸ்ரீ கொளஞ்சியப்பர் இங்கே சுயம்பு திருமேனியாகக் காட்சியளிக்கிறார். தங்களின் பிரார்த்தனைகள் கைகூட ஏராளமான பக்தர்கள் இங்கே வருகிறார்கள். வேண்டிக்கொண்டு குழந்தை பாக்கியம் வாய்ந்ததும் அந்த குழந்தையைப் பெருமானின் சன்னதியில் கொண்டு வந்து அவர் திருமுன் இட்டு நன்றி தெரிவிக்கிறார்கள்.

அவர் சன்னதியிலே காது குத்தும் வைபவத்தையும் நிறைவேற்றி மகிழ்கிறார்கள். திருமணம் கைகூடினால் அவர் சன்னிதிக்கு வந்து மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.

இவ்வாலயத்தில் முருகப்பெருமான் நீதி வழங்குபவராகவும், வைத்தியராகவும் இருந்து அருள்பாலித்து வரு கிறார். எனவே தீராத நோய் உள்ளவர்கள் இத்திருத்தலத்தில் ஒரு மண்டலம், அரை மண்டலம் என அவரவர்களுக்கு வசதிப்படும் நாட்கள் தங்கி கொளஞ்சியப்பரை தரிசிப்பதுடன், அவரது சன்னிதியில் பூஜித்து வழங்கப்படும் வேப்ப எண்ணையைப் பெற்று உடம்பில் பூசியும், அருந்தியும் பூரண குணமடைந்து செல்வதும் இத்திருக்கோவிலின் மகிமையாகக் கூறலாம். தங்களது குறை நீங்கப் பெற்றவர்கள் திருக் கோவிலுக்கு தங்கம், வெள்ளி, பித்தளை, ரொக்கப்பணம், தானியங்கள் கால்நடைகள் ஆகியவற்றை நேர்த்தி காணிக்கையாகச் செலுத்துவதும் வழக்கமாக உள்ளது.

#வேப்பெண்ணெய்:

இத்திருத்தலத்தில், பூசித்து விபூதியிடப்பட்ட வேப்பெண்ணெய் மருந்தாக வழங்கப்படுகின்றது.

#சூறை விடுதல்:

விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சல் கிடைக்க இக்கோயில் வேண்டிக்கொள்கிறார்கள். அறுவடைக்குப் பிறகு வரும் பங்குனி உத்தர திருவிழா அன்று தாங்கள் விளைவித்த பயிர் விளைச்சலில் ஒரு பங்கினை கோயிலுக்கு கொண்டு வந்து மக்கள் கூட்டத்தில் மேலே எறிவார்கள் இது சூறைவிடுதல் எனப்படுகிறது. பொதுவாக சூறைவிடுதலில் முந்திரிக் கொட்டைகள் முக்கிய இடம்பெறும்.

#கோயிலின் சிறப்பு:

முருகப் பெருமான் வேண்டுதல் கடவுளாக உள்ளார். பக்தர்களின் கோரிக்கைகள் பிரார்த்தனை சீட்டில் எழுதப்பட்டு இங்குள்ள தல விருட்சத்தில் வேண்டுதலாக கட்டப்படுகிறது.நியாயமான கோரிக்கைகள் 3 நாட்கள் அல்லது 3 வாரங்கள் அல்லது 3 மாதங்களில் முருகக் கடவுள் நிறை வேற்றி வைப்பார் என பக்தர்களால் நம்பப் படுகிறது.

பிரார்த்தனை சீட்டு விபரம்:

கோவில் நிர்வாகம் ஒரு சிறு காணிக்கை பெற்றுக் கொண்டு காணிக்கை சீட்டை விநியோகிக்கிறது. பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறியவுடன் திரும்ப காணிக்கை செலுத்தி பிரார்த்தனை சீட்டை எடுத்து விட வேண்டும் என்பது கோவில் ஜதீகம்.

#பிராது கட்டுதல்:

பிராது என்கிற வார்த்தைக்கு முறையீடு, குற்றச்சாட்டு, புகார், குறை கூறல் என்பது பொருள். இயல்பு வாழ்க்கையில் மக்கள் தங்கள் புகாரினை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, மக்கள் தங்கள் புகார்களை, வேண்டுகோளை ஒரு காகிதத்தில் எழுதி கொளஞ்சியப்பரை நீதிபதியாக கருதி சமர்பிப்பார்கள். சமர்பித்த மூன்று நாட்களுக்குள்ளோ, மூன்று வாரங்களுக்குள்ளோ, மூன்று மாதங்களுக்குள்ளோ, மூன்று வருடங்களுக்குள்ளோ முறையிடப்பட்ட குறை, புகாரின் தன்மையைப் பொறுத்து கொளஞ்சியப்பரே ஆய்ந்து நல்ல முடிவை தந்து, குறையை தீர்த்து, வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதாக நம்பப்படுகிறது. வெளியூர்களில் இருந்தும் கூட பலரும் இங்கு வந்து இந்த பிராது பிராத்தனையை மேற்கொள்கின்றனர்.

பிராது கட்டுதலில் பின்பற்றப்படும் வழிமுறைகள்
மக்கள் காகிதத்தில் எழுதி கொடுக்கும் குறைகள் முதலில் மூலவரான கொளஞ்சியப்பர் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோயில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் முனியப்பர் சன்னிதானத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சூலம், ஈட்டி போன்றவற்றில் கட்டப்படும். தங்கள் வேண்டுதல், கோரிக்கை நிறைவேறிய பிறகு மக்கள் மீண்டும் இந்தக்கோயிலுக்கு வந்து தங்கள் பிராதினை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். பிராது கட்டும் வேண்டுதலுக்கு வசூலிக்கும் கட்டணத்திலும் ஒரு புதுமையான முறைமை கடைபிடிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் பொதுவான கட்டணத்திற்குப் பிறகு, பிராது கட்டும் நபர் எங்கிருந்து வருகிறாரோ அந்த இடத்திற்கும் கோயிலுக்கும் இடையே உள்ள தொலைவு கணக்கிடப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது.

#சிறப்பு_வழிபாட்டு முறை:

இங்கே முக்கியமாக நடைபெறும் அதிசயம் என்னவென்றால் மக்கள் ஆண்டவரிடமே பிராது கொடுக்கலாம். உடைமைகள் திருடு போனாலோ, மாட்டாரால் அபகரிக்கப்பட்டாலோ காவல் நிலையத்தில் எழுத்து மூலம் புகார் செய்வது போலவே கொளஞ்சியப்பரிடம் முறையிட வேண்டும்.

குறைந்தபட்ச கட்டணம் பத்து ரூபாய்தான். தங்கள் ஊரிலிருந்து கோவில் வரை உள்ள தூரத்தைக் கிலோமீட்டருக்கு பத்து பைசா வீதம் கணக்கிடுகிறார்கள். கட்டணத்தைக் கணக்கிட்டு அலுவலகத்தில் செலுத்தி விட்டு ஒரு வெள்ளைத் தாளில் பிராதுகளை எழுதித் தர வேண்டும்.

#எப்படி எழுதுவது:

அருள்மிகு கொளஞ்சியப்பரின் திருப்பாத கமலங்களைப் பணிந்து என்னுடைய குறைகளைப் பிராது மூலம் திருவடிகளுக்கு விண்ணப்பிக்கிறேன் என்று துவங்கி முகவரியோடு தங்கள் குறையைக் கூற வேண்டும்.

இந்த கடிதத்தைக் கோவில் பூசாரி தட்டில் வைத்து கொளஞ்சியப்பரின் பாதங்களில் வைத்து வழிபட்டு அதனை மடித்து பக்தர்களிடம் தருவார். அதனை முனியப்பனின் சன்னதியில் உள்ள வேலில் கட்டி விடுவர்.

மணவாள நல்லூரில் கோவில் கொண்டுள்ள கொளஞ்சியப்பரை அற்புதம் நிகழ்த்தும் ஆனந்த மூர்த்தியை கண்ணாரக்கண்டு, மனமாரத் துதித்தால் இன்பங்களும் ஆறாகப் பெருகும் என்பது ஐதீகமாகும்.

திருக்கோயிலின் தென்மேற்கு பகுதியில் ஒரே கருவறையில் இடுபடும் கடம்பனும் நின்ற காலத்தில் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குரு அகப்பை சித்தர் இந்த திருத்தலத்தில் ஜீவசக்தி பெற்றுள்ளார். இக்கோயிலில் கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது மட்டுமல்லாமல் நான்கு கால பூஜைகளும் சிறப்புடன் நடந்து வருகின்றது.

இந்த ஆலயத்தில் தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றது. பவுர்ணமி, கிருத்திகை போன்ற மாத பூஜைகள் தவிர, சித்திரை பவுர்ணமிஅன்று பால்குட அபிஷேக விழா, வைகாசி விசாகத்தன்று புஷ்பாஞ்சலி மற்றும் ஏக தின லட்சார்ச்சனை, கந்தசஷ்டி லட்சார்ச்சனை, ஆங்கிலப்புத்தாண்டு மற்றும் தமிழ்புத்தாண்டு வழிபாடு, பங்குனி மாதத்தில் பத்துநாட்கள் பிரம்மோற்சவம் என வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தின் போது நேர்த்திகடன் செலுத்த இவ்வாலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் மற்றும் வடக்கு கோபுரம் என இரு கோபுரங்களுடன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம் என அனைத்தும் சமீபகால கட்டிடமாக, அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது. மகாமண்டபத்தின் வலது பக்கத்தில் அலங்கார மண்டபம் இருக்கிறது. அதனுள் கொளஞ்சியப்பரின் உற்சவ திருமேனி இடம்பெற்றுள்ளது. இடதுபுறத்தில் குதிரை வாகனத்துடன் கூடிய சுதைவடிவ முனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அலங்கார மண்டபத்தின் பின்பகுதியில் காணிக்கை தானிய களஞ்சியமும், கிழக்குப் பகுதியில் அகப்பேய் சித்தரின் மண்டபமும் உள்ளது.

கருவறையில் விநாயகரும், மூன்றடி உயரத்தில் பலிபீட வடிவிலான முருகப்பெருமானும் தனித்தனி சன்னிதியில் காட்சிதந்து அருள்பாலிக்கின்றனர். வடக்குகோபுரம் அருகில் மகாமண்டபத்தை ஒட்டி பிராது கொடுக்கும் முனீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் பின்பகுதியில் ஏரழிஞ்சி மரங்களுக்கு இடையே இடும்பன் கடும்பனுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சமான கொளஞ்சி செடி நந்தவனத்தில் வளர்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள இந்த ஆலயம், தினமும் காலை மணி 6.30 முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும்.

பிராது கொடுக்கும் வழிபாடு : 

பக்தர்கள் தங்களின் அனைத்து வித நியாயமான கோரிக்கைகளையும், எழுத்து மூலம் சுவாமியிடம் பிராது செலுத்தும் நடைமுறை இங்கு வழக்கத்தில் உள்ளது. அப்படி பிராது செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள், அந்த கோரிக்கை முழுவதுமாக நிவர்த்திப் பெறுவதும், வேண்டுதல் பலித்தவர்கள் சுவாமியிடம் செலுத்திய பிராதினை திரும்பப் பெற்றுக் கொள்வதும் நடைமுறை வழக்கமாகும். இதற்கு சுவாமி உள்ள இடமான மணவாளநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு கோரிக்கை உள்ள ஊரின் தொலைவினை கணக்கிட்டு, கிலோமீட்டர் ஒன்றுக்கு இருபத்தைந்து பைசா கட்டணமாகவும், சம்மன் மற்றும் தமுக்கு பணமாக இருபது ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோன்று கோரிக்கை நிறைவேறியவர்கள், பிராது வாபஸ் கட்டணமாக ஐம்பது ரூபாய் செலுத்தி பிராதினை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். பிரார்த்தனையுடன் கூடிய இவ்வழிபாடு இவ்வாலயத்தின் பிரசித்திப் பெற்ற வழிபாடாகும்.

முருகா 🙏
திருச்சிற்றம்பலம் 🙏

No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...