Friday, May 17, 2024

அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர், செல்லூர் - 613705, குடவாசல் வழி, திருவாரூர் மாவட்டம்.

அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர், செல்லூர் - 613705, குடவாசல் வழி, திருவாரூர் மாவட்டம்.          
*மூலவர்: வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர்

*தாயார்: சௌந்தர நாயகி

*தீர்த்தம்: பிரம்மதீர்த்தம், அகத்திய தீர்த்தம், காண்டீப தீர்த்தம்,               வெட்டாறு (முள்ளியாறு, அகத்திய காவேரி)

*இது ஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். 
*வழிபட்டோர்:
விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேடன், இடைக்காடர், வரகுண பாண்டியன், கோச்செங்கட்சோழன், பிருகு முனிவர், காசிப முனிவர், கண்வ முனிவர், அகத்திய முனிவர், வசிட்ட முனிவர், வாமதேவர்.

*தல விருட்சம்: வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது வேறுபெயர். கூவிளம்புதூர் என்ற பெயர் மருவி காலப்போக்கில் கொள்ளம்புதூர்  ஆனது.    

*பஞ்சாரண்ய ஷேத்திரங்கள் எனப்படுபவை
முல்லை வனம் (திருக்கருகாவூர்), பாதரிவனம் (அவளிவநல்லூர்), வன்னிவனம் (அரித்துவாரமங்கலம்), பூளைவனம் (ஆலங்குடி), வில்வவனம் (திருக்கொள்ளம்புதூர்) ஆகிய ஐந்தும் ஆகும். (ஆரண்யம் என்றால் காடு) 
இந்த ஐந்து வனத் தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் சிவபெருமானின் பேரருளைப் பெறலாம் என்பர்.

பஞ்ச ஆரண்யத் தலங்களில் நிறைவானது ‘திருக்கொள்ளம்புதூர்’ திருத்தலம். 

இங்கு, மாலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை நடைபெறும் அர்த்தஜாமப் பூஜையில்  அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் மற்றும் செளந்தரநாயகி அம்மனை வழிபட்டு பஞ்ச ஆரண்ய தரிசனத்தை நிறைவு செய்ய வேண்டும். 

*சம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க  வரும்போது கோயிலுக்கு மேற்கே ஓடும் முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் ஆலயத்திற்குச் செல்ல ஓடக்காரன் ஒருவரும் காணப்படவில்லை. அடியார்கள் அக்கரை செல்வது எப்படி என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து, ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி "கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர்" என்று தொடங்கும் பதிகம் பாடினார்.

இறைவனின் திருவருளால் ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும் அவர்தம் அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது.

திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து  இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு.

இங்கு ஆற்றின் எதிர்க்கரையில் திருஞானசம்பந்தருக்கு திருக்கோயில் அமைந்துள்ளது.   

இந்த ஆறு ஓடம்போக்கி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.  

*ஓட விழா, ஐப்பசி அமாவாசையில் நடத்தப்பெறுகிறது. இவ்விழா இத்திருகோயிலில் நடைபெறும் சிறப்பான விழாவாகும்.    

*ஓடம்போக்கி ஆற்றில்  திருஞானசம்பந்தர் பதிகம் பாடி ஓடம் செலுத்திய, துலா மாதத்தில் அமாவாசை உதித்த முதல் பாதத்தில் நீராடி வழிபட்டால், வேண்டும் சித்திகளையும், வலிமையையும் பெறலாம்.
 
*சித்தசுவாதீனம் இல்லாதவர்கள் இங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு. 
*சுவாமி விபுலானந்தர் இயற்றிய யாழ் நூல் அரங்கேறிய திருத்தலமும் இதுவே.
 
*இத்தலம் கும்பகோணத்தில் இருந்து  20 கி.மீ.  தொலைவிலுள்ளது. கும்பகோணத்தில் இருந்து கொரடாச்சாரி செல்லும் வழியில் செல்லூர் எனும் ஊரில் இறங்கி சுமார் ஒரு கி.மீ சென்று இத்தலத்தை அடையலாம்.          
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன். 

No comments:

Post a Comment

Followers

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே தாயுமான சுவாமிகள் குருபூஜை..

திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா தை மாதம் விசாகம் நட்சத்திரம் இன்று 23-01-2025 தாயுமானவ...