Friday, May 17, 2024

சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள்....



சோழர் காலத்தில் கோவில்கள் பெருகின. வழிபாட்டு முறைகள் பெருகின.வழிவழிச் சைவரான சோழ மன்னர் எல்லாக் கோவில்களிலும் திருமுறை ஓதுவார்களை நியமிக்க ஏற்பாடு செய்தனர். இராச ராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் பண்பட்ட ஓதுவார் 48 பேர் அமர்த்தப்பட்டனர். 
ஆடல் பாடல்களுக்காக நானூறு பதியிலார் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு கோவிலிலும் விழாக்கள் நடைபெற்றன. சைவ சமய நூல்கள் படித்துப் பொதுமக்களுக்கு விளக்கப் பட்டன. சைவ சித்தாந்த சாத்திரங்களான சிவஞான போதம் முதலிய நூல்கள் தோன்றின.

காஷ்மீர் நேபாள நாடுகளிம் சிவன் கோவில்களும், அதனை ஒட்டி மடங்களும் தோன்றி வளர்ந்தன.

 கோவில்களை அடுத்து மடங்கள் இருந்து சமயக் கல்வியை வளர்த்து வந்தன. அம்மடங்களில் யாத்திரிகர் உண்பிக்கப்பட்டனர். பெரிய கோவில்களில் சரசுவதி பண்டாரம் என்ற நூல் நிலையங்கள் இருந்தன. 

பெரிய கோவில்களில் மருத்துவ மனைகளும் அமைந்திருந்தன. அவற்றில் அறுவை மருத்துவரும் (Surgeon), நோய் மருத்துவரும் (Physician), தாதிமாரும் (Nurses) இருந்தனர். மருந்து வகைகளைக் கொண்டுவருவோரும், அவைகளைப் பக்குவம் செய்வோரும் இருந்தனர்.
 கோவில் மண்டபங்களில் இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் வளர்க்கப்பட்டன. சிற்ப ஓவியக் கலைகள் கோவில்களில் வளர்ச்சி பெற்றன. கோவிலுக்குள்ளேயே ஊராட்சி மன்றமும் நடை பெற்றது. ஊரில் பஞ்சம் ஏற்பட்டு நாட்டு மக்கள் நலியும்பொழுது கோவிலில் உள்ள பொன் வெள்ளி நகைகளும் பாத்திரங்களும் உருக்கி ஊரார்க்குக் கடனாகத் தரப்பட்டது என்று ஆலங்குடிக் கல்வெட்டுக் கூறுகின்றது.

 இத்தகைய முறைகளால் கோவில் அறிவு வளர்ச்சிக்கும், ஆன்ம வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்ற நிலைக்களனாய் இருந்து வந்தது. அரசன் முதல் ஆண்டி ஈறாக அனைவரும் கோவிலைத் தம் உயிராக மதித்தனர். கோவில் ஊர் நடுவிலே அமைந்து மக்களைத் தன்வயப்படுத்திவந்தது.
ஆதித்த சோழன்( கி.பி,871-907) செய்த திருப்பணிகளுள் சிறந்தது காவிரியின் இருகரைகளிலும் இருந்த பாடல்பெற்ற கோவில்களைப் புதுப்பித்தமையாகும். ஆதித்தன் மகனான முதற்பராந்தகன் (கி.பி.907-953) தில்லை சிற்றம்பலத்தில் பொன் வேய்ந்தான். பராந்தகனின் மூத்த மகன் இராசாதித்தன் திருநாவலூர்க் கோவிலில் ஒரு புதிய கோவிலைக் கட்டினான்.

இராசாதித்தன் தம்பியான கண்டராதித்தர் (கி.பி.947-957) திருவிசைப்பா ஆசிரியருள் ஒருவர். அவர் திருப்பழனத்துக்கு பக்கத்தில் சதுர்வேதிமங்கலம் என்ற ஊரை உண்டாக்கி அங்கு சிவன் கோவிலைக் கட்டினார். 

இவர் மனைவி செம்பியன் மாதேவியார் திருத்துருத்தி, திருக்கோடிகா, திருவக்கரை, திருமுதுகுன்றம் , தென்குரங்காடுதுறை முதலிய கோவில்களை கற்றளியாக்கினார். ஐயாறு, தலைச்சங்காடு, ஆரூர், திருப்புறம்பியம், திருவெண்காடு முதலிய கோவில்களுக்கு நிலதானமும், பொன் தானமும் செய்துள்ளார்.

முதலாம் ராஜராஜன் (கி.பி.985-1014) தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டி அவருடைய பெயரையே சூட்டினார். அக்கோவில் “ராஜராஜேஸ்வரம்” என்று அழைக்கப்பட்டது. இன்று அதை தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் கட்டும் பணி ஆறு ஆண்டுகள் அரும்பாடுபட்டு நடைபெற்றது.

முதலாம் இராசேந்திரன் (கி.பி.1012-1044) உடையார் பாளையத்தில் நகரை நிறுவி, தஞ்சை கோவிலைப் போல் பெரிய சிவன் கோவிலக் கட்டினான்.

சைவ நெறிக்கருவூலம் எனப்படும் பன்னிருதிருமுறைகளை, இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார். 

பல நூறு தலங்களில் எழுச்சி பெற்ற சைவப் பண்பாட்டு அசைவுகள் திருமுறைகள் தொகுக்கப்பட்ட காலத்தில் மாபெரும் ஒருமைக்குள் கொண்டுவரப்பட்டன.

முதல் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) காலத்தில் திராட்சாரமம்-பீமேஸ்வரர் கோவில் சிறப்படைந்தது. தில்லை கூத்தபெருமான் கோவில் ஊர்வலம் நடைபெற ஏற்பாடு செய்தான் என “தில்லையுலா” நூல் குறிப்பிடுகிறது.
விக்கிரம சோழன் (கி.பி1120-1135) வரியிஉல் பெரும்பங்கு தில்லை கோவிலைப் புதுப்பிக்கவே செலவு செய்தான்.

 இரண்டாம் குலோத்துங்கள் (கி.பி,1133-1150) தில்லையில் எழுநிலைக் கோபுரங்களை அமைத்தான்.

 அம்மனுக்கு திருமாளிகை அமைத்தான். பேரம்பலத்தை பொன் வேய்தான்.

இரண்டாம் இராசராஜன் (கி.பி.1146-1173) கும்பகோணத்திற்கு அடுத்துள்ள தாராசுரத்தில் பெரிய சிவன் கோவிலைக் கட்டினான். 

மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178-1218) திருவிடைமருதூருக்கருகில் திருபுவன வீரேசுரம் என்னும் பெரிய சிவன் கோவிலைக் கட்டினான்.


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே தாயுமான சுவாமிகள் குருபூஜை..

திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா திரு தாயுமான சுவாமிகள் குருபூஜை விழா தை மாதம் விசாகம் நட்சத்திரம் இன்று 23-01-2025 தாயுமானவ...