சிவபெருமான்
60,000 முனிவர்களுக்கும் துர்வாசருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்த தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,
கேது பரிகார தலமான, திருப்புகழ் வைப்புத் தலமான
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள
#திருக்களர்
#பாரிஜாதவனேஸ்வரர் (களர் முளை நாதர்)
#அமுதவல்லி_அம்மை (அழகேஸ்வரி)
திருக்கோயில் வரலாறு:
திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 105ஆவது சிவத்தலமாகும்.
நிறைவான வாழ்வுக்கு இத்தல இறைவன் பாரிஜதவனேஸ்வரரை வணங்கி வழிபாடு செய்தால், கேது பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வளம் பெறலாம் என்பது ஜதீகம். இத்தலத்தில் வழிபாடு செய்தால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும் என்பதும் இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும்.
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது.
பொன்னியாறு வளம் பொழியும் புண்ணியம் பெற்றது சோழ நாடாகும். அதன் இரு கரையிலும் அமைந்த பாடல் பெற்ற முக்கிய சிவாலயங்கள் 190 ஆகும். அவற்றில் காவேரியின் வடகரையில் 63ம் தென்கரையில் 127ம் உள்ளன.
தென்கரையின் 105வது ஸ்தலமாக திருக்களர் அமைகிறது. துர்வாச முனிவருக்கு நடராஜ பிரான் தன் பிரம்ம தாண்டவ தரிசனம் அளித்த பெருமையால் திருக்களர் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
இவ்வூர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடிக்கு தெற்கே பதிமூன்று மைல் தூரத்திலும், திருத்துறைப்பூண்டியிலிருந்து மேற்கே ஏழு மைல் தூரத்திலும் அமைந்துள்ளது.
இத்தலத்தில் பராசர முனிவன், கால பைரவர், துர்வாசர் ஆகியோர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.
மூலவர்:பாரிஜாதவனேஸ்வரர் என்ற களர்முளைநாதேஸ்வரர்
அம்மன்:அமிர்தவல்லி என்ற இளம்கொம்பன்னாள்
தல விருட்சம்:பாரிஜாதம்
தீர்த்தம்:துர்வாச, ஞான, பிரம்ம, ருத்ர தீர்த்தங்கள்
புராண பெயர்:திருக்களர்
ஊர்:திருக்களர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம் :
"கொங்கு லாமலாச் சோலை வண்டினம் கிண்டி மாமது வுண்டிமை சைசெயத் தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள் மங்கை தன்னெடுங் கூடிய மண வாளனே பிணை கொண்டார் கைத்தலத் தங்கையிற் படையாய் அடைந்தார்க்கு அருளாயே.
-திருஞானசம்பந்தர்
களர் = சபை, அரங்கம். துர்வாசருக்கு இறைவன் திருநடனக்காட்சி காட்டிய திருத்தலம்.
இத்தலத்திற்குப் பாரிஜாதவம் தருவனம், கற்பகவனம், என்னும் பெயர்களுண்டு.
*சம்பந்தர் பாடல் பெற்றது:
களரி என்பதற்குக் கூட்டம், சபை, அரங்கம் எனப் பல பொருள்கள். துர்வாசருக்குச் சிவபெருமான் பிரமதாண்டவ தரிசனம் தந்தருளியமையால் 'களரி' என்னும் இத்தலப்பெயர் பின்பு 'களர்' என்றாயிற்று. துர்வாசருக்கு நடராஜர் நடனக் காட்சிதந்தவடிவமும் அதன் எதிரில் துர்வாசரின் வடிவமும் (கைகூப்பிய நிலையில்) உள்ளது.
*புராண வரலாறு:
பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும், சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர், தானும் அந்தப் பாக்கியத்தைப் பெற விரும்பினார். துர்வாச முனிவர் இத்தலத்தின் மகிமையை உணர்ந்து, தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாதத்தை இங்கு கொண்டுவந்து வைத்து வளர்த்தார். அது நாளடைவில் மிகவும் பெருகி பாரிஜாத வனமாயிற்று. பிறகு துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து, அதை பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து, பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து, தேவதச்சன் மூலமாக இக்கோவிலை எடுப்பித்தார் என்று தல வரலாறு கூறுகிறது.
இத்தலத்தில் துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரமதாண்டவ தரிசனம் கொடுத்தருளியதால், துர்வாசர் இத்தலத்தில் எப்போதும் நடராஜ பெருமானின் பிரமதாண்டவத்தை தரிசித்துக்கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இதன் அடையாளமாக, இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளன. நடராஜப் பெருமானின் 8 தாண்டவத் தலங்களுள் இரண்டாவது தலமாக திருக்களர் தலம் அமைந்திருக்கிறது.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும், இத்தல இறைவனை வழிபடுவோர்க்கு அருள் செய்பவன் என்று இத்தல இறைவனை போற்றிப் பாடியுள்ளார்.
1. நீருளார் கயல் வாவி சூழ்பொழில் நீண்ட மாவய லீண்டு மாமதில்
தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
ஊரு ளாரிடு பிச்சை பேணும் ஒருவனே யொளிர் செஞ்ச டைம்மதி
ஆரநின் றவனே அடைந்தார்கு அருளாயே.
2. தோளின் மேலொளி நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
தாளினார் வளருந் தவமல்கு திருக்களருள்
வேளின் நேர்விச யற்க ருள்புரி வித்த காவிரும் பும்ம டியாரை
ஆளுகந் தவனே அடைந்தார்க்கு அருளாயே.
3. பாட வல்லநல் மைந்த ரோடு பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர் வாழ்பொழில் சூழ்செழுமாடத் திருக்களருள்
நீட வல்ல நிமல னேயடி நிரை கழல்சிலம் பார்க்க மாநடம்
ஆடவல் லவனே அடைந்தார்க்கு அருளாயே.
4. அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை
செம்பொனார் பொழில்சூழ்ந் தழகாய திருக்களருள்
என்பு பூண்டதோர் மேனி யெம்மிறை வாஇ ணையடி போற்றி நின்றவர்க்
கன்புசெய் தவனே அடைந்தார்க்கு அருளாயே.
5. கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங் கிண்டி மாமது வுண்டி சைசெயத்
தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடுங் கூடிய மண வாளனே பிணை கொண்டொர் கைத்தலத்
தங்கையிற் படையாய் அடைந்தார்க்கு அருளாயே.
6. கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்
சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்
நீல மேவிய கண்டனே நிமிர் புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
ஆலநீழ லுளாய் அடைந்தார்க்கு அருளாயே.
பொது தகவல்:
80 அடி உயர ராஜ கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கி தனி சன்னதிகளில் அருளுகின்றனர். பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், விஸ்வநாதர், கஜலட்சுமி, அகத்தியர், நாயன்மார்கள், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், துர்க்கை, லட்சுமி, சண்டிகேஸ்வரர் உள்ளனர். அஷ்டபுஜ துர்க்கை சிம்மத்தின் மீது அமர்ந்த கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறாள். அகோர வீரபத்திரர் தனி சன்னதியில் மேற்கு முகமாக வீற்றிருக்கிறார்.
தலபெருமை:
முருகப்பெருமான் அறுபதினாயிரம் முனிவர்களுக்கும், துர்வாசருக்கும், பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில் தான். எனவே முருகப்பெருமான் இத்தலத்தில் வள்ளி, தெய்வானை இல்லாமல் குரு வடிவில் அருள்பாலிக்கிறார். கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு. சிதம்பரம், பேரூரில் ஆனந்த தாண்டவம், திருவாரூரில் அஜபா தாண்டவம், மதுரையில் ஞான சுந்தர தாண்டவம், அவினாசியில் ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவம் தந்தருளிய சிவபெருமான் இத்தலத்தில் பிரம தாண்டவ தரிசனம் தந்துள்ளார்.
நடராஜரின் பிரமதாண்டவ தரிசன வடிவமும், எதிரில் துர்வாசர் கைகூப்பிய நிலையில் உள்ள வடிவமும் உள்ளது. துர்வாச முனிவரே இக்கோயிலுக்கு முதலில் கும்பாபிஷேகம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. கோவிலூர் மடாதிபதி வீரசேகரஞான தேசிக சுவாமிகளின் ஜீவ சமாதி கோயிலின் அருகே உள்ளது. இவர் இக்கோயிலுக்கு அதிக திருப்பணிகள் செய்துள்ளார். எனவே இவரை “திருக்களர் ஆண்டவன்’ என வழிபாடு செய்கிறார்கள். பராசர முனிவர், காலவ முனிவர் வழிபட்ட தலம்.
இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும் எனவும், கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.
தல வரலாறு:
பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தனக்கும் நடன தரிசனம் தர வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவர் தேவலோக மலராகிய பாரிஜாதத்தை கொண்டு வந்து இப்பகுதியை பாரிஜாத வனமாக்கினார். பின் தீர்த்தம் உண்டாக்கி, பாரிஜாத மரத்தின் அடியில் லிங்கத்தையும், அருகே அம்பாளையும் பிரதிஷ்டை செய்து, தேவ தச்சனை கொண்டு கோயில் கட்டி வழிபாடு செய்தார். இதனால் இத்தலத்திற்கு பாரிஜாத வனம், தருவனம், கற்பகவனம் என்ற புராணப்பெயர்கள் உண்டு.
இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் இத்தலத்தில் “பிரமதாண்டவ தரிசனம்’ தந்தருளினார். களரி என்பதற்கு தாண்டவம் என்றும் பொருளுண்டு. களரி என்பது மருவி “திருக்களர்’ ஆனது. இதனால் இத்தல இறைவன் களர்முளை நாதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இத்தலத்தில் பராசர முனிவன், கால பைரவர், துர்வாசர் ஆகியோர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.
சோழர்கள் கால எட்டு கல்வெட்டும், பாண்டியர்களது இரண்டும், விஜய நகரத்தாரது மூன்றும் படி எடுக்கப் பட்டுள்ளன.
*கோயில் அமைப்பு :
காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான இத்தலம், ஊரின் நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. களர் நிலத்தில் அமைந்த கோயிலை உடைய ஊர் என்பதால், திருக்களர் என்னும் பெயர் பெற்றது. ஆலயத்தின் எதிரே நான்கு பக்கங்களிலும் நான்கு படித்துறைகளைக் கொண்ட பெரிய திருக்குளம் உள்ளது. 80 அடி உயரமுள்ள ராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. இவ்வாலயம் மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது.
முதல் பிராகாரத்தில் இருந்து உள்ளே செல்ல, சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளுக்கு தனித்தனியே கோபுர வாயில்கள் உள்ளன. சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கி தனி சந்நிதிகளில் அருள்புரிகின்றனர். சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளுக்கு நடுவில் பாரிஜாத விருட்சம் (பவள மல்லிகை) தலவிருட்சமாக உள்ளது. அம்மன் சந்நிதி கருவறைச் சுற்றில், சிம்ம வாகனத்தில் அமர்ந்துள்ள அஷ்டபுஜ துர்க்கை சந்நிதி உள்ளது. வலம்புரி விநாயகர் சந்நிதியும், துர்வாசர் சந்நிதியும், விஸ்வநாதர், கஜலட்சுமி, 63 நாயன்மார்கள் சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. துர்வாச தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ருத்ர தீர்த்தம் ஆகியவை இவ்வாலயத்தில் உள்ள தீர்த்தங்கள் ஆகும்.
இத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் மிக்க அழகுடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் வள்ளி - தெய்வானையுடன் இல்லாமல், தனியே குரு மூர்த்தமாக அருள் புரிகிறார். முருகப் பெருமான் 60000 முனிவர்களுக்கும், துர்வாசருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில்தான் என்பது ஐதீகம். கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு. இத்தலம், முருகப் பெருமானின் திருப்புகழ் வைப்புத் தலமாக உள்ளது.
வலம்புரி விநாயகர் சந்நிதியும் காணச்சிறப்பானது.
கோவிலூர் மடாலயத்தில் அதிபராக இருந்த வீரசேகர ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக் கோயில் ஆலயத்திற்குப் பக்கத்தில் உள்ளது. அவருக்குத் திருக்களர் ஆண்டவர் என்று பெயர். நன்கு பராமரிக்கப்படும் இக்கோயிலில் - மடாலயத்தில் சாதுக்கள் இருந்து வருகின்றனர். கோவிலின் பக்கத்தில் வேதபாடசாலையும், பசுமடமும், வேதாந்த மடமும், அறுபத்துமூவர் குருபூஜை மடமும் உள்ளன. இத்தலத்தில் பிடாரி கோயிலும், ஐயனார் கோயிலும், மாரியம்மன் கோயிலும் உள்ளன. இத்திருக்கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கோயிலுக்குள் மூன்று பிராகாரங்கள் உள்ளன. முன்னே இருப்பது துர்வாச தீர்த்தம்.
ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. உள்நுழைந்தால் நந்தியும் கொடிமரமும் உள்ளன. ஆலயத்தின் தென்மேற்கு முனையில் விநாயகர் கோயிலும், வடக்கில் வசந்த மண்டபமும் யாகசாலையும் உள்ளன. இதையடுத்து சுவாமிக்கும் அம்பாளக்கும் ஒசூர வரிசையில் இரண்டு கோபுரவாயில்கள் உள்ளன.
உள்ளே ஆண்டவர் உருவமும் நவக்கிரகங்களும் உள. உள்வாயிலைக் கடந்து சென்றால் சந்திரன், பிரம்மா, விஸ்வகர்மா, வழிபட்ட சந்நிதிகளும் உள்ளன. நால்வர் சந்நிதி உளது. மோக்ஷத்துவாரேஸ்வரர், சோமாஸ்கந்தர் தல (வலம்புரி) விநாயகர், வள்ளி தெய்வயான சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகள் தரிசிக்கத்தக்கன. நடராஜர் சந்நிதி (பிரம தாண்டவமூர்த்தி) இத்தலத்தில் விசேஷமானது.
கிழக்கில் பெருமாள் சந்நிதியும் சூரியசந்நிதியும் உள்ளன. மூலவர் - பாரிஜாதவனேஸ்வரர். சிவலிங்கத் திருமேனி. இருபுறமும் துவார பாலகர்கள், நந்தி பலிபீடமும் உள்ளன. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது தனியே உள்ளது. இருபுறமும் துவாரசக்திகள். வெளி மண்டபத்தின் கீழ்க்கோடியில் அஷ்டபுஜதுர்க்கை சந்நிதி உள்ளது. சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு மத்தியில் தல விருக்ஷம் உள்ளது. கல்வெட்டில் சுவாமியின் பெயர் - களர் முளைத்த நாயனார், அடைந்தார்க்கு அருள் செய்த நாயனார் - என்று குறிக்கப்படுகின்றது. ஞான சம்பந்தர் தம் பதிகத்தில் 'அடைந்தார்க்கு அருளாயே' என்று பாடுவது இங்கு நினைக்கத்தக்கது.
வலம்புரி விநாயகர் சந்நிதியில் - கோபுரத்திற்கு உள்புறத்தில் அகோரவீரபத்ரர் மேற்கு நோக்கி வீரமுடன் காட்சி தருகின்றார். 'விடங்கர் லிங்கம்' நடராஜருக்குப் பக்கத்தில் பேழையில் உள்ளது. நடராஜர் (பிரபையுடன்) அழகாகத் தரிசனம் தருகின்றார் - அற்புதத் தரிசனம். ஆண்டுக்கொருமுறை ஆதிரையில் மட்டும் புறப்பாடு. இங்குள்ள தீர்த்தங்களுள் துர்வாச தீர்த்தமே சிறப்புடையத. மற்றையவை - 1) பிரமதீர்த்தம் (சிந்தாமணிதீர்த்தம்) (தெற்கு வீதியில் உள்ளது)
2) ருத்ரதீர்த்தம் (மேல வீதியில் உள்ளது)
3) ஞானதீர்த்தம் (வடக்கு வீதியில் உள்ளது)
சுவாமிக்குச் செய்துள்ள திருப்பணிகளுள், திருக்களர் ஆண்டவர் செய்துள்ள திருப்பணிகளே சிறப்பானவை. பூஜைகள் செம்மையாக முறையாக நடைபெறுகின்றன. சிறப்பான உற்சவங்களும் அவ்வப்போது உரிய காலங்களில் நடத்தப்பெறுகின்றன. மாசி மகத்தில் சிந்தாமணி தீர்த்தத்திலும் பங்குனி உத்திரத்தில் ருத்ர தீர்த்தத்திலும் நடைபெறும் தீர்த்தவாரி சிறப்பு.
அம்பாளுக்கு முழு உருவத்திற்குமாக ஓர் அன்பரின் உபயமாகத் தங்கக்கவசங்கள் செய்யப்பட்டு, விசேஷ காலங்களில் மட்டும் சார்த்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தங்கக்கவசக் காட்சியைக் காண கண்கோடி வேண்டும் - அற்புதமான ஆனந்தக் காடசி. மனதிற்குப் பெரும் நிறைவைத் தருகின்றது. அழகேஸ்வரிக்கு அழகான அலங்காரம். இத்லத்திற்குத் தலபுராணம் உள்ளது - இயற்றியவர் களப்பால் என்னும் ஊரில் வாழ்ந்த ஆதியப்பர்.
தமிழ் நாடு மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment