Friday, May 24, 2024

முக்தீஸ்வரர் திருக்கோயில், மதுரை,

முக்தீஸ்வரர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டம்
மூலவர்: முக்தீஸ்வரர்
அம்மன்: மரகதவல்லி 
தலவிநாயகர்: வல்லப விநாயகர்
தலமரம்: வில்வம் 
தீர்த்தம்: வைகை நதி 

சிறப்பு:
1. மதுரையில் உள்ள பஞ்சபூத சிவஸ்தலங்களில், காற்றுக்குரிய திருத்தலம் (வாயு தலம்).
2. பாஸ்கர ஷேத்ரம். 
    

1. மதுரையிலுள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

2. மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தலவரலாறு:

ஐராவதம் தேவர்களின் தலைவனான தேவேந்திரனின் வாகனம். வெள்ளை நிறம் கொண்ட தெய்வீக யானையான ஐராவதத்திற்கு, அபிர மடங்கா, நாக மல்லா, அர்க்கஸோடரா போன்ற பிறபெயர்களும் உண்டு.

ஒருமுறை சிவபூஜை முடித்து, பிரசாதமாக இறைவனுக்கு சாற்றிய மாலையுடன் துர்வாச மகரிஷி நடந்து வந்துக் கொண்டிருந்தார். 

அப்போது, அவருக்கு எதிரில் தேவேந்திரன் ஐராவதத்தின் மேல் அமர்ந்து வந்துக் கொண்டிருந்தான். 

இருவரும் சந்தித்த வேளையில் துர்வாச மகரிஷி தன்னிடம் இருந்த மாலையை தேவேந்திரனுக்கு கொடுத்தார். தேவேந்திரன் அதனை ஐராவதத்திடம் கொடுத்தான். 

தெய்வீக தன்மையால் செருக்குற்றிருந்த ஐராவதம் மாலையை நிலத்தில் வீசி காலால் மிதித்தது.

இச்செயலால் ஆத்திரம் அடைந்த துர்வாச மகரிஷி ஐராவதத்தை சபித்தார். "தெய்வீக தன்மை இழந்து, தேவலோகத்தை துறந்து, பூலோகம் சென்று, காட்டு யானையாகத் திரிவாய்" எனக் கூறினார். 

தன் தவறை உணர்ந்த ஐராவதம், மகரிஷியின் தாள் பணிந்து சாப விமோட்சனம் வேண்டியது. மன்னிப்பு வழங்கிய மகரிஷி, ஐராவதத்திற்கு மார்கதரிசனம் நல்கினார்.

சிவபூஜையே  உய்விக்கும் வழி என்றுரைத்தார். மகரிஷியின் அறிவுரைப்படி சிவபூஜை செய்யும் முடிவுடன் ஐராவதம் பூலோகம் அடைந்தது. 

100 ஆண்டு காலம் காட்டுயானையாக திரிந்தது. முக்தீஸ்வரரை தொழுது சாப முக்தி பெற்று தேவலோகம் சென்றடைந்தது. 

அன்று ஐராவதம் பூஜை செய்த முக்தீஸ்வரரே இன்றும் மதுரையில் அருள்பாலிக்கின்றார்.

புராணக் காலம் தொட்டு மதுரையில் உறையும் முக்தீஸ்வரருக்கு, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், திருமலை நாயக்கரின் அண்ணனான முத்து வீரப்ப நாயக்கர் திருக்கோயில் எழுப்பினார் என்பது தலவரலாறு.    

தலபெருமை:
1. சூரிய பகவான் பூஜை செய்யும் தலங்களில் இக்கோயிலும் ஒன்று. சூரிய பகவானின் கதிர்கள் மூலவர் திருமேனியில் படர்வது கண் கொள்ளா காட்சி. இத்தகைய தலங்களுக்கு பாஸ்கர க்ஷேத்ரம் என்று பெயர்.   

2.  திருக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. திருக்கோயிலுள் நவகிரக சன்னதி இல்லை. இத்தகைய அமைப்பிற்க்கான சரியான காரணம் தெரியவில்லை. 

3. கொடிமரம் முதல் கருவறை வரை உள்ள மண்டபங்களில் நாயக்கர் கால சிற்பக் கலையை காண முடிகிறது. தூண்களில் சிவபெருமானின் திருவிளையாடல் மற்றும் முனிவர்களுடைய அற்புத சிற்பங்கள் பல காணப்படுகின்றன.

4. அர்த்த மண்டபத்தில் ஏகாபத்ரிமூர்த்தியின் சுதை சிற்பம் காணப்படுகிறது. படைக்கும் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான பெருமாள், மற்றும் மோகத்தை அழித்து ஆட்கொள்ளும் கடவுளான சிவபெருமானின் ஒருங்கிணைந்த திருமேனியே ஏகாபத்ரிமூர்த்தி. மிக அரிதாக சில தலங்களில் மட்டுமே இம்மூர்த்தியைக் காண முடியும்.

5. பொதுவாக தென்மேற்கு எல்லையான கன்னிமூலையில் தான் பிள்ளையார் சன்னதி இருக்கும். மாறாக, வடமேற்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் பிள்ளையார் சன்னதிகள் காணப்படுகின்றன.

6. பஞ்ச வில்வங்களாக போற்றப்படும் ஐந்து மரங்களில் நான்கு மரங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம். அவையாவன, நெல்லி, கிளுவை, மாவிலங்கை மற்றும் வில்வம் ஆகும்.  
      
முக்தி தரும் சிவன்

பூமியில் பிறக்கும் அத்தனை ஜீவராசிகளுக்கும் முக்தியைக் கொடுக்கும் தலம் மதுரையம்பதி அல்லவா! இதனை "ஜீவன் முக்திபுரம்" என்று ஹாலாஸ்ய புராணம் வர்ணிக்கிறது. 

ஐராவதம் போன்று, இம் மதுரையிலே நாரைக்கும் கூட முக்தி கிட்டியது. ஆறறிவு மக்களுடன் ஐந்தறிவு விலங்கு இனங்களுக்கும் இறைவன் முக்தி அளிப்பதனால், மதுரையம்பதி "ஜீவன் முக்தி புரம்" என அழைக்கப்படுகிறது.

இன்றும் அரசு ஆவணங்களில் இக்கோயில் அமைந்துள்ள பகுதி ஐராவதநல்லூர் என்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐராவதம் வழிபட்ட முக்தீஸ்வரர் ஆலயம், புராண காலத்திற்குப் பிறகு, சுமார் 400ஆண்டுகளுக்கு முன், முத்து வீரப்ப நாயக்கர் என்பவரால் ஓர் ஏக்கர் பரப்பளவில் கோவிலாக நிர்மாணிக்கப்பட்டது.

முக்தி விளக்கு

ஆதியில், இங்குள்ள சிவனார்,  முத்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். மேலும் இவரை இந்திரேஸ்வரர் என்றும், ஐராவதேஸ்வரர் என்றும் அழைத்துவந்தனர். காலப்போக்கில், இங்கு வாழும் மக்கள், சிவபதம் அடைந்தவர்களுக்காக இந்தச் சிவ சந்நிதியில் "முக்தி விளக்கு" ஏற்றலாயினர்.

இக்காரணத்தினால் தற்பொழுது "முக்தீஸ்வரர்" என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

ஆலயத்தின் சிறப்புகள்:

இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10ம் தேதி முதல் 22ம் தேதி வரையிலும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் சூரிய ஒளி இறைவன் மீது பிரகாசிக்கிறது. இந் நிகழ்ச்சி தினமும் இருபது நிமிடம் வரை நீடிக்கிறது.

நவகிரக தோஷம் நீங்கும்

சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என தனி சன்னதி கிடையாது. முக்தீஸ்வரரை வழி பட்டாலே நவகிரக தோஷங்கள் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.
ஆலயத்தின் மூலவரான முக்தீஸ்வரரை வணங்குவதின் மூலம் நவக்கிரக தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

விநாயகர் மகிமை

இத்திருத் தலத்தில் வடகிழக்கிலும் வடமேற்கிலும் விநாயகர் அமர்ந்து அருள் பாலிக்கிறார். 

இங்கு வடமேற்கில் உள்ள வில்வமரத்தின் கீழ் அருள்பாலிக்கும் விநாயகருக்கு நாற்பத்தியெட்டு நாட்கள் தீபம் ஏற்றி வலம் வந்து வழி பட்டால் வேண்டியற்றை அருள்வார் என்பது ஐதீகம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...