Wednesday, May 29, 2024

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன்



மதுரை: மீனாட்சி அம்மன் 
கோயிலின் ஒவ்வொரு கோபுரத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. 
இதில், 152 அடி உயரம் உள்ள வடக்கு கோபுரம் மொட்டை கோபுரம் என்றழைக்கப்படுகிறது என்றால் ஆச்சரியம் தானே. 

மதுரை மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாடு என்பது மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் அமைந்துள்ள மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் வழிபாட்டைக் குறிக்கின்றது. 

இதன் பின்னணி இன்னும் சுவராஸ்யம்... 

ஒன்பது நிலைகளை கொண்ட இக்கோபுரத்தை, 1564-72ல், 
கிருஷ்ண வீரப்ப நாயக்கர் கட்டினார். 

ஆனால், என்ன காரணத்தினாலோ, மேற்பூச்சுஇன்றி, முழுமை பெறாமல் நின்று விட்டது. 

பின், 1623ல், இக்கோபுரம் முழுமை பெற்றது. 

நீண்ட நாட்கள் மேற்பூச்சின்றி இருந்ததால், மொட்டைக்கோபுரம் என்றழைக்கப்பட்டது. 

இன்றும், இச்சொல் வழக்கில் உள்ளது. 

கோபுர வாசலில் அமைந்துள்ள முனியாண்டி கோயிலும் 
மொட்டைக் கோபுரம் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது. 

வடக்கு கோபுரத்தின் அகலம் 66 அடி. 

404 சுதைகளே உள்ளன. 

மற்ற கோபுரங்களைவிட, சுதைகள் குறைவாக உள்ளதாலும் மொட்டைக்கோபுரம் என்றுஅழைப்பதாக கூறுகின்றனர். 

வடக்கு கோபுரம் எவ்வளவு முயன்றும் கட்ட முடியாமல் தடைப்பட்ட போது, இக்கோபுரத்தைத் திருப்பணி செய்த நாகப்ப செட்டியார் இங்கு முனீ சுவரர் சாந்நித்யம் இருப்பதை அறிந்து முனீஸ்வரருக்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார். 

இக்கோபுரம் எழும்பும் போது முனீஸ்வரருக்கும் சன்னதி எழுப்பப்படும் எனச் சத்தியம் செய்தபடி இப்போதுள்ள மகா முனீஸ்வரர் ஆலயத்தை வடக்கு வாசலை ஒட்டி எழுப்பினார்.

அமராவதிபுதூர் வயிநாகரம் நாகப்ப செட்டியார் மொட்டை கோபுரமாக இருந்த வடக்கு கோபுரத்தை, தனது செலவில் 152 அடி உயர பிரம்மாண்ட கோபுரமாக 1878 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்.

1960-63ல் நடந்த திருப்பணியின் போது, கடைசியாக இக்கோபுரத்தில் தான் திருப்பணி முடிக்கப்பட்டது. 

இக்கோபுர வாசல் வழியாக, இடது புறம் சென்றால், இசைத்தூண்கள் நம்மை வரவேற்கும் என்பதால், வேறு எந்த கோபுரத்திற்கும் இல்லாத பெருமை இக்கோபுரத்திற்கு உண்டு என்றால் அது மிகையில்லை.

மொட்டைக் கோபுரம் என்ற பெயருக் கேற்ப இக்கோபுரத்தில் பிற கோபுரங்களைப் போலச் சுதைச் சிற்பங்கள் கிடையாது. 

மாடம் போன்ற அமைப்பும் தூண்களும் அமைந்துள்ள கோபுரத்தில் வெள்ளி செவ்வாய் மற்றும் விழா நாட்களில் கோபுரத்தின் உச்சியிலிருந்து முனீஸ்வரர் சன்னதி வரை பூ மாலைகள் பூச்சரங்களாய்த் தொங்கி நிற்கும்.

வடக்கு கோபுரம் கட்டப் படுவதற்கு முன்பே முனீஸ்வரன் என்ற நாட்டுப்புற சிறு தெய்வக் கோவில் சிறிய இடத்தில் அமைந்திருந்தது. 

வடக்குக் கோபுரம் கட்டப்படாத நிலையில் அதன் கீழ் இருந்த முனீஸ்வரன் கோவில் மொட்டைக்கோபுரம் முனீஸ்வரன் கோயில் என்று அழைக்கப்பட்டது

தனியார் ஒருவருக்குச் சொந்தமான குலதெய்வக் கோவில் இது. 

யாழ்கீத சுந்தரம் பிள்ளை குடும்பத்தார் இதனை அமைத்தனராம். 

சைவ பிள்ளை வகுப்பைச சேர்ந்த சுந்தரம் பிள்ளை இன்று உயிருடன் இல்லை. 

இவர் வாரிசுகளான நான்கு மகன்கள் இக்கோவிலை இன்றும் பராமரித்து வருகிறார்கள். 

என்றாலும் முனீஸ்வரன் பல்வேறு சாதியினராலும், பல்வேறு மதத்தவராலும் வழிபடப்படுகிறார்

இக்கோவிலுக்குரிய இடம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்கு வாசலில் மொட்டைக் கோபுரத்தின் அடியில் ஒரு மண்டபமாக இருந்துள்ளது. 

சிறிய கோவிலாக தொடங்கப் பட்ட முனீஸ்வரன் சன்னிதி மரத்தாலான கதவு இருந்ததாக பக்தர்கள் சொல்கிறார்கள். 

அந்நாளில் தரையோடு உள்ள வளையத்தில் சங்கிலியினை இணைத்து பூட்டுவது உண்டாம். 

ஆலய அமைப்பு:

முனீஸ்வரன் சன்னிதியின் முன்புறம் பெரிய கல்லாலான தூண்கள் உள்ளன.

சிறிய பலிபீடமும் ஒரு ஆள் மட்டுமே அமரக்கூடிய இடத்தில் முனியாண்டி சிலையும் அலங்காரத்தோடு அமைந்துள்ளது. 

மதுரையைச் சுற்றியுள்ள முனீஸ்வரர் கோவில்களுக்கெல்லாம் இந்த முனீஸ்வரரே தலைமையாக உள்ளார் என்று நம்புகின்றனர்.

சிலையின் இரு பக்கங்களிலும் கதைகள், அரிவாள்கள் உள்ளன. 

முறுக்கிய மீசையும் வீரத்தை வெளிப்படுத்தும் விழிகளும் கவசங்களோடும் பாதுகைகளோடும் நிற்கும் முனீஸ்வரர் கோவிலை நெருங்கும் போதே பெண்கள் சிலர் குலவையிடு வதையும் சாமியாடுவதையும் காணலாம்.

இக்கோவில் மூலவர் முனீஸ்வரர் வடக்குக் கோபுரத்திலேயும் சிலையாக வடிக்கப்பட்டுள்ளார்.  

இக்கோவில் கட்டப்பட்ட காலந் தொட்டு, யாழ்கீத சுந்தரம் குடும்பத்தினர் தான் பூசனை செய்தல், பூ மாலைகள் அபிஷேகப் பொருட்கள் கொடுத்தல், விழா நடத்துதல் போன்ற வற்றைச் செய்து வருகின்றனர். 

எட்டு தலை முறையாக இவர்கள் குடும்பப் பணி தொடர்கிறது.

மீனாட்சியம்மன் கோவிலில் பணியாற்றும் பட்டர்கள் எனப்படும் அர்ச்சகர்கள் பலருக்கு மகா முனீசுவரரே குல தெய்வமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிராமண சமூகத்தினர் பலருக்கு 
சிறு தெய்வங்கள் குல தெய்வமாக உள்ளது ஆய்வுக் குரியது. 

ஆனால் அவர்கள் பெருந்தெய்வக் கோவில் அர்ச்சகர்களாக இருக்கின்றனர்.

இக்கோவிலுக்கு இந்துக்கள் மட்டுமல்லாது, இஸ்லாமியர், கிறிஸ்துவ மதத்தினரும் வருகின்றனர். 

பிறந்த குழந்தைகளை, பிறந்து 31 நாட்கள் கழித்த பின் இக்கோவிலில்  சன்னதி முன் கிடத்தி வணங்குவர். 

இதன் மூலம் இக்குழந்தை நலனை முனீசுவரரே பேணுவார் என்று நம்புகின்றனர். 

நிறைய சுற்றுலாப் பயணிகள் இங்கே வந்து செல்கின்றனர்.

திருவிழாக்கள்.

மாசி மாதம் வரும் வருஷ சிவராத்திரி மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. 

கோவில் பங்காளிகள் மற்றும் உரிமைக்காரர் மூலம் சக்தி கரகம் வைகை ஆற்றிலிருந்து அழைத்து வரப்படுகிறது. 

வழி நெடுக பூசாரி கரகம் பக்தர் வீடுகளின் எதிரே நிற்கும்போது கற்பூரம் காட்டுகிறார்கள். 

பூசாரி சாமியாடுகிறார். சிவராத்திரி அன்று படையல் போடுகிறார்கள். 

ஆடிப்பௌர்ணமி அன்று அழகர் கோயில் பதினெட்டாம் படிக் கருப்பணசாமியின் சந்தனக்குடம் இத்திருக்கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...