சங்கடஹர சதுர்த்தி விரதம்
பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி.
ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும்.
இந்நாளில் விரதம் அனுஷ்டித்து வந்தால் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் விநாயகரை எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
மிகவும் சக்தி நிறைந்த வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகப் பெருமானைத் தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாது போகும். வாழ்வில் எல்லா வளமும் இல்லம் தேடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சதுர்த்தி திதி மே 26ம் தேதியான இன்று மாலை 06:20 மணிக்குத் தொடங்கி மே 27 ஆம் தேதியான நாளை திங்கட்கிழமை மாலை 04:50 மணிக்கு முடிவடையும், வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் தனித்துவமானது சிறப்புமிக்கது. இன்று விரதம் இருந்தால் நல்லது. அதிலும் இன்று சந்திரனையும், விநாயகரையும் வழிபடுவது மிகவும் மங்களகரமானது என்பது ஐதீகம்.
சந்திர தரிசனம் காணப்படாவிட்டால் சங்கடஹர சதுர்த்தி விரதம் முழுமையடையாது. இம்முறை சந்திரன் இரவு 09.20 மணிக்கு உதயமாகும், சந்திரனை தரிசனம் செய்த பிறகே விரதத்தை முடிக்க வேண்டும்.
ஒரு வருடத்தில் சுமார் 13 சங்கடஹர சதுர்த்தி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் ஒவ்வொரு சதுர்த்திக்கும் உருவாகும் யோகமும் பலன்களும் வேறுபட்டது.
இந்த ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தியில், விநாயகருக்கு அபிஷேக பொருட்கள் வழங்குங்கள். அருகம்புல் மற்றும் வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். சர்க்கரை பொங்கல் அல்லது கேசரி அவள் பாயாசம் நைவேத்தியம் செய்து அருகில் உள்ளவர்களுக்கு வழங்குங்கள். நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்து வைப்பார் ஆனைமுகத்தான்.
*விரதம் இருக்கும் முறை :*
சங்கடஹர சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள விநாயகர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அருகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்தல் நல்லது. பின்னர் தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.
*பூஜை செய்யும் முறை :*
பின்னர் விநாயகருக்கு விளக்கேற்றி, கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்கு சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம்.
*பிரசாதம் :*
பிரசாதத்திற்கு லட்டு அல்லது மோதகம் மிகவும் நல்லது. இவை இரண்டும் விநாயகருக்கு பிடிக்கும். மேலும் கடவுளுக்கு நெய் தீபமேற்றி, கணேஷ் ஸ்துதி சொல்லி, ஆரத்தி செய்யவும். மேலும், இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து இரவில் சந்திர தரிசனம் செய்து உணவு உண்ண வேண்டும். சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது.
No comments:
Post a Comment