Friday, May 3, 2024

அருள்மிகு பிரம்மபுரிஸ்வரர் (திருக்கரவீரம்),மணக்கால் ஐயம்பேட்டை, வடகண்டம் ,திருவாரூர்.

அருள்மிகு பிரம்மபுரிஸ்வரர் / கரவீரநாதர் கோயில்,
கரையாபுரம் (திருக்கரவீரம்),
மணக்கால் ஐயம்பேட்டைஅஞ்சல்,
வடகண்டம் வழி,
குடவாசல் தாலுகா,
திருவாரூர் மாவட்டம்,
தமிழ்நாடு – 610 104.     
*மூலவர்:   பிரம்மபுரீஸ்வரர்,  கரவீரேஸ்வரர்,  
அரளி வன நாதர்

*அம்பாள்:  பிரத்யட்ச மின்னம்மை,  
கரவீர நாயகி

*தீர்த்தம்:   
அனவரத தீர்த்தம்/பிரம்ம தீர்த்தம்.

*தல விருட்சம்:  பொன் அரளி / செவ்வரளி (கரவீரம்)

*இது பாடல் பெற்ற தலம். தேவாரப்பதிகம்  அருளியவர்  திருஞானசம்பந்தர்.            .
*இங்குள்ள மூலவரை பிரம்மா வழிபட்டதால்  இத்தல இறைவர் பிரம்மபுரிஸ்வரர் எனப் போற்றப்படுகிறார்.  

*இக்கோயிலின் தல விருட்சம் கரவீரம்  (“பொன் அரளி” / “செவ்வரளி”)        என்பதால் இத்தலம் கரவீரம் எனப் பெயர் பெற்றது.  (தற்போது இந்த இடம் வடகண்டம் கரையாபுரம் என்று அழைக்கப்படுகிறது.)

 *இக்கோயிலில் சிவன் மற்றும் பார்வதி தேவியின் சந்நிதிகள் கிழக்கு திசை நோக்கி உள்ளன. சிவன் சந்நிதியின் வலது பக்கத்தில் பார்வதி தேவியின் சந்நிதி உள்ளது. இது அவர்களின் திருமணக் கோலமாக  கருதப்படுகிறது. எனவே இத்தலம் திருமண வரம் அருளும் திருத்தலமாக விளங்குகிறது.

*இந்த ஆலயத்தில் அமாவாசை அன்று செய்யப்படும் ஹோமம் மிகவும் முக்கியமானதாகும். அமாவாசை சிறப்பு ஹோமத்தில் கலந்துகொண்டு இறைவனையும் இறைவியையும் வழிபட்டு வந்தால், திருமாங்கல்ய பலம் மற்றும் மழலைச் செல்வம் கிடைப்பது கண் கண்ட உண்மையாகும். 

*சிவன் மற்றும் பார்வதி தேவியின் சிலைகள் ஆறரை அடி உயரம் கொண்டவை. 
இந்த இரண்டு கருவறை கோபுரங்களும் மிகவும் உயரமானவை. 

*இக்கோயிலின் விநாயகர் "ராஜ கணபதி" என்று போற்றப்படுகிறார்.                  

*கௌதம முனிவர்:
இத்தலத்தில் கடும் தவம் புரிந்த கெளதம முனிவரிடம் சிவபெருமான், ஒரு வரம் கேட்கச் சொன்னார். அதற்கு கெளதமமுனிவர்,  தனது வாழ்நாளுக்குப் பிறகு, தான் இங்கு தல விருட்சமாக  இருக்க விரும்புவதாக கூறினார். முனிவர் இங்கு ஜீவ சமாதி அடைந்தபோது, அவர் ஸ்தல விருட்சத்தில் இணைந்தார், இது பொன் அரளி (செவ்வரளி), மற்றும் கரவீரம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் இத்தலத்திற்கு  கரவீரம் என்றும்  இங்குள்ள சிவபெருமானுக்கு கரவீரநாதர் என்றும் பெயர் ஏற்பட்டது. 

*கௌதம முனிவருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.  

*வடக்குப்பிரகாரத்தில் உள்ள இக்கோயிலின் தீர்த்தக்கிணறு "பிரம்மதீர்த்தம்" எனப்போற்றப் படுகிறது. இக்கிணற்று நீரை குடத்தில்  கொண்டு சென்று  மேற்கு வெளிப் பிராகாரத்தில், இறைவன்  சந்நிதி விமானத்துக்குப் பின்புறம் உள்ள தலவிருட்சமான செவ்வரளிக்கு ஊற்ற நாம் நினைத்த காரியம் நிறைவேறும். 

*செவ்வரளிக்கு மூன்று குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாளின் திருப்பாதத்தில் மூன்று மஞ்சள் கிழங்கு வைத்து வழிபட்ட பிறகு இந்த மஞ்சளை தண்ணீரில் கரைத்து, அந்த நீரில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைக் குளிப்பாட்டினால் நோய் குணமாகும்; குழந்தைகள் நோயின்றி வாழ்வார்கள் என்பது ஐதீகம். 

*திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு தாமதமாக  வந்ததால், அன்று இரவு இங்கு தங்கி, மறுநாள் காலை கோயிலில் தனது பதிகம் பாடினார். 

*சம்பந்தர் தான் பாடிய 
பதிகத்தில் இப்பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே, பக்தர்கள் ஏதேனும் ஒரு இரவு இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால், எப்படிப்பட்ட கஷ்டமும் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.  

*கழுதை ஒன்று சிவபெருமானை தரிசனம் செய்ய கடும் தவம் செய்தது. ஆனால் முடியவில்லை. விரக்தியடைந்து, தன் வாழ்க்கையை
முடித்துக் கொள்ள முடிவு செய்து, நாகூர் வரை சென்று கடலில் மூழ்க முயன்றது. இறைவன் அதைக் கூப்பிட்டு இங்கிருந்தே தரிசனம் கொடுத்தார்.   அந்நாட்களில், இந்த கோவிலுக்கும் நாகூருக்கும் இடையில் எந்த கட்டுமானமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
   
*திருக்கண்ணமங்கை பெருமாள் கோயிலோடு இணைந்த  இக்கோயில்  தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் (HR&CE) நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.      
 
இத்தலம் திருவாரூரில் இருந்து பத்து கி.மீ தொலைவில் உள்ளது. திருவாரூர் - கும்பகோணம் சாலையில் 'வடகண்டம்' என்னும் ஊரையடுத்து 'கரையபுரம்'  கோயில் உள்ளது.     
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...