Monday, May 6, 2024

அமாவாசை வழிபாடும், முன்னோர்கள் நினைவும்



சிறப்பு: அமாவாசை விரதம்
வழிபாடு: தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
அமாவாசை வழிபாட்டை, அமாவாசை தர்ப்பணத்தை, அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். மிக மிக முக்கியமான இந்த வழிபாடு என்பதை மறந்துவிடாதீர்கள்.

வருடத்தில் எந்த வழிபாட்டை வேண்டுமானாலும் செய்யாமல் இருக்கலாம். ஆனால் முன்னோர் வழிபாட்டை மட்டும் ஒருபோதும் செய்யாமல் இருக்கக் கூடாது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

நம் முன்னோர்களை நாம் வணங்குவதற்கு உரிய மிக உன்னதமான நாள். இறந்துவிட்ட நம் முன்னோர்களை வணங்கி, அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறும் நாள். எனவே மறக்காமல்,  அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாட்டைச் செய்யுங்கள். பித்ரு சாபமில்லாத வாழ்வைப் பெறுவீர்கள்.

அமாவாசை என்பது சாதாரணமானதொரு நாளில்லை. சந்திரன் இந்தநாளில் இருந்து வளருகிறான். அதனால்தான் அமாவாசைக்கு அடுத்தநாளில் இருந்து பெளர்ணமி வரைக்குமான நாட்களை, வளர்பிறை நாட்கள் என்கிறோம்.

அதேபோல், சந்திரன் மனோகாரகன். நம் மன ஓட்டங்களைத் தீர்மானிப்பவன். இந்தநாளில், நல்ல நல்ல சத்விஷயங்களில் நாம் ஈடுபட்டால், மனதில் நல்லெண்ணங்களை வளர்த்து வழிநடத்துவான் சந்திர பகவான் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அமாவாசை நாளில், விரதம் மேற்கொண்டு, காகத்துக்கு உணவு வைத்த பின்னரே மதியம் இலையில் சாப்பிடவேண்டும். அமாவாசை நாளில், நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடும் நம் முன்னோர்களுக்குப் போய்ச் சேரும். அவர்களுக்குச் சேரும் புண்ணியம் யாவும் நமக்கும் வந்துசேரும். நமக்கு மட்டுமின்றி, நம் சந்ததிக்கும் வந்துசேரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

அமாவாசை நாளில், காலையில் தர்ப்பணம் செய்ய வேண்டும். காலை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். பின்னர், நம் முன்னோருக்குப் பிடித்தமான உணவை இலையில் வைத்து, அவர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, குடும்பத்துடன் வணங்க வேண்டும்.

பின்னர், காகத்துக்கு சமைத்த உணவு அனைத்திலிருந்தும் கொஞ்சம் எடுத்து வழங்க வேண்டும். இதன் பின்னர், இலையில் உணவு சாப்பிட வேண்டும். முக்கியமாக, முன்னோரை நினைத்து நான்கு பேருக்காவது உணவு வழங்க வேண்டும். இது, இருப்பதிலேயே மிகப்பெரிய புண்ணியம்.

இந்தநாளில், நாம் முன்னோரை நினைத்துச் செய்கிற எல்லாக் காரியங்களும் மும்மடங்கு பலன்களை நமக்கு வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாலையில், விளக்கேற்ற வேண்டும். மீண்டும் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து நம் முன்னோர்களையும் இறைவனையும் நமஸ்கரிக்கவேண்டும்.

அமாவாசை நாளில், யாரெல்லாம் பித்ருக்கள் என்று சொல்லப்படும் முன்னோர்களை, முறையே வழிபட்டு வணங்கி ஆராதிக்கிறார்களோ, அதனால் கிடைக்கும் பலன்கள் மொத்தமும் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பிள்ளைகளுக்கும் போய்ச் சேரும் என்று தர்மசாஸ்திரம் நமக்கு அறிவுறுத்துகிறது.

அமாவாசை நாளில், பெற்றோர் இல்லாத கணவன் விரதமிருக்கலாம். அதேசமயம், கணவன் விரதம் இருக்கிறாரே, சாப்பிடாமல் இருக்கிறாரே என்று மனைவியும் விரதம் இருக்கக் கூடாது. கணவன் இருக்கும் போது அவர்களை சுமங்கலிகள் என்று சொல்வார்கள். சுமங்கலிகள் ஒருபோதும் அமாவாசை நாளில் விரதம் இருக்கக் கூடாது. ஆகவே, மனைவியானவள், விரதம் இருக்காமல் சாப்பிட வேண்டும்.

இன்னொரு விஷயம்... அமாவாசை விரத நாளில், விரதப் படையலாக, மாமனார், மாமியாருக்காகச் சமைக்கும் உணவை வெறும் வயிற்றுடன் சமைக்கக்கூடாது என்றும் காலை உணவை எடுத்துக் கொண்ட பிறகுதான் சமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், அமாவாசை அன்று  தர்ப்பணம் செய்த கணவருக்கு இரவு டிபன் உணவுதான் கொடுக்க வேண்டும். மனைவியானவர், டிபனே சாப்பிட்டாலும் கொஞ்சம் கைப்பிடியேனும் சாதம் சாப்பிடவேண்டும் என் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுதான், மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் முழுமையாக மருமகளுக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நம் வாழ்வின் சிக்கல்களையும் பிரச்சினைகளையும், நமக்கு ஏற்பட்டிருக்கிற கவலைகளையும் துக்கங்களையும் முன்னோர்கள் உணர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள். நம் வாழ்க்கையை சீரும் சிறப்புமாக அமைத்துக் கொடுத்து அருளுவார்கள்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...