பிரசித்தி பெற்ற காரைக்கால் மாங்கனி திருவிழா!*
களில் ஒரே பெண் நாயன்மார் என்ற சிறப்பைக் கொண்டவர் காரைக்கால் அம்மையார். சிவபெருமானின் திருவாயால், ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை போற்றும்விதமாக, காரைக்காலில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது.
முன்பொரு காலத்தில் சோழ மண்டலத்தின் காரைக்காலில் தனதத்தன் என்பவருக்கு புனிதவதி என்று ஒரு மகள் பிறந்தாள். செல்வ செழிப்போடு வளர்ந்த அம்மகள் சிறு வயதிலிருந்தே சிவபெருமானின் பக்தையாக வளர்ந்தாள்.
அதனால் அவள் சிவனடியார்களுக்கு அன்னமிட்டு அவர்கள் ரூபத்தில் ஈசனை கண்டு மகிழ்ந்தாள். உரிய வயதில் புனிதவதியை நாகப்பட்டினத்தில் வசித்த பரமதத்தன் என்ற வியாபாரிக்கு மணமுடித்து வைத்தனர் பெற்றோர். எந்தக் குறையும் இல்லாமல் திருமணம் நடந்து முடிந்து இவர்களும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், வியாபார ரீதியாக வந்த ஒருவர் பரமதத்ததினிடம் இரு மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றார். அந்த மாங்கனிகளை வீட்டில் உள்ள தனது மனைவியிடம் கொடுத்துவிடுமாறு வேலையாளிடம் சொல்லிவிட்டு இவர் தனது வியாபாரத்தில் கவனம் செலுத்தினர். புனிதவதி சுவையாக அன்னம் சமைத்து தயார் செய்து தனது கணவருக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் சிவபெருமான், தனது பக்தையின் புகழை உலகம் அறியும் பொருட்டு ஒரு சிவனடியார் போன்று வேடம் பூண்டு புனிதவதியின் வீட்டுற்குச் சென்றார். சிவனடியாரை சந்தித்த சந்தோஷத்தில் அவரை கும்பிட்டு தம்மிடமிருந்த மாங்கனிகளில் ஒன்றை வைத்து அவருக்கு அமுது படைத்தார். வந்த சிவனடியார் வயிறார சாப்பிட்டு விட்டு, புனிதவதியை வாழ்த்திச் சென்றார்.
உணவருந்த வந்த பரமதத்தன் ஒரு மாங்கனியை சுவைத்து விட்டு, ‘இது என்ன அமுதம் போன்று இனிக்கிறதே’ அந்த இன்னொரு பழத்தையும் எடுத்து வா’ என்று கூறினார். பூஜை அறைக்குச் சென்று சிவபெருமானிடம், ‘நான் இப்போது என்ன செய்வேன்? இறைவா, என் கணவர் என்னிடம் இன்னொரு பழம் கேட்கிறாரே. அதை நான் சிவனடியாருக்கு அமுது படைத்து விட்டேனே. என்ன செய்வேன்?’ என்று அழுது முறையிட, உடனே புனிதவதி கையில் ஒரு மாங்கனி வந்தது. ஆனந்தத்தில் புனிதவதி அந்தக் கனியை தனது கணவருக்கு பரிமாறினாள்.
அதை சாப்பிட்ட பரமதத்தன், ‘இது என்ன தேவாமிருதம் போலிருக்கிறது. ஒரு மரத்து கனிகளின் சுவை எப்படி வேறுபடும்’ என்று கேட்டார். ‘அவை ஒரு மரத்துக் கனிகள் அல்ல. இரண்டாவது கனி எனக்கு சிவபெருமான் கொடுத்தது’ என்றாள் புனிதவதி. ‘என்ன கடவுளிடம் பேசுகிறாயா? அப்படியானால் நீ கடவுளுக்கு சமம். நீ உயர்ந்தவள். உன்னுடன் என்னால் வாழ முடியாது’ என்று வீட்டை விட்டு வெளியேறினான் கணவன் பரமதத்தன். தனது கணவருக்காக பல காலம் காத்திருந்து, சிவபெருமானைக் காண பேயுருவம் கொண்டு கயிலாயத்திற்கு கையால் நடந்து சென்றார் அந்த அம்மையார். புனிதவதியாரைக் கண்ட சிவபெருமான், ‘அம்மையே’ என்று அன்புடன் அழைத்து, ‘இனி உன் புகழ் இவ்வுலகம் எங்கும் பரவும் அம்மையே. அதற்காகத்தான் நீ இவ்வளவு துயரம் அடைந்திருக்கிறாய்’ என்று கூறி, தம் திருப்பாதத்தில் அமர்த்திக் கொண்டார். அன்று முதல் இன்று வரை இந்த மாங்கனி திருவிழா காரைக்கால் திருத்தலத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆனி பௌர்ணமி அன்று காலை சுமார் பத்து மணி அளவில் துவங்கும் இந்தத் திருவிழாவில், அடியார் கோலத்துடன் பத்மாசனத்தில் அமர்ந்து புனிதவதியாரின் திருமாளிகைக்கு பிட்ஷைக்காக எழுந்தருளுவார் இறைவன். வேத கோஷங்களுடன் பிட்சாடனராக உலா வரும் இறைவனுக்கு மாங்கனி படைக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இறைவன் பிட்ஷைக்கு வரும்போது தேங்காய் உடைக்கப்படுவதில்லை. பதிலுக்கு மாங்கனி மட்டுமே சமர்ப்பிக்கப்படும்.
வேண்டுதலின் பொருட்டு பக்தர்கள் தங்கள் வீட்டுக் கூரையின் மீதிருந்து கூடை கூடையாக மாங்கனிகளை கொட்டுவார்கள். இந்தக் கனிகளை உண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த மாங்கனியை பெற மக்கள் அலைமோதுவார்கள். ஊர்வலம் முடிந்து அம்மையார் இல்லம் வந்து சேரும் சிவனடியாரை வரவேற்று அமுது படைக்கும் வைபவம் நிகழும். தயிர் சாதம் மாங்கனி இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் அடங்கிய மகா நைவேத்தியம் படைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.
இதைத் தொடர்ந்து பரமதத்தர் உணவருந்த வருதலும், புனிதவதியார் மாங்கனி வரவழைக்கும் அற்புதமும், இதைக்கண்டு பயந்து பரமதத்தர் பாண்டிய நாட்டுக்கு செல்லும் வைபவமும் நிகழும். பௌர்ணமி அன்று இரவு பரமதத்தருக்கு இரண்டாம் திருமணம் நடைபெறும். தொடர்ந்து புனிதவதி அம்மையார் எழுந்தருள்வார். மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் புனிதவதியார் பேயுரு ஏற்று அற்புத திருவந்தாதி மற்றும் இரட்டை மணிமாலை பாடியபடி கயிலாயத்திற்கு எழுந்தருள, அம்மையின் நாமம் காரைக்கால் அம்மையார் என்றாகிறது. அன்று மாலை 5 மணிக்கு அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் முன்பு பஞ்ச மூர்த்திகளும் அம்மையாருக்கு கயிலை திருக்காட்சி அருளுகின்றார். பிறகு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வருவார்கள்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment