Sunday, June 23, 2024

அடிமுடிசித்தர் திருவண்ணாமலை.

திருவண்ணாமலை அடிமுடிசித்தர்
நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை, எண்ணற்ற சித்தர்கள் மற்றும் மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி ஆகும். இங்கு இன்றும் தன் தவ வலிமையினால் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அவர்களின் ஊழ்வினைகளை நீக்கி நல்லதொரு வாழ்வளிக்கும் அடிஅண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ அடிமுடி சித்தர் பற்றி பெரும்பாலானோருக்கு தெரியாது.
சித்தர்களைப் பற்றியும், அவர்கள் செய்த அற்புதங்களை பற்றியும் பல ஆன்றோர் பெருமக்கள்  பல்வேறு விதமாக கூறுகின்றனர். இக்கலியுகத்தில் மனித குலத்தை கர்மவினை பிடியில் இருந்து மீட்டு அவர்களின் வாழ்வை நல்முறைபடுத்தும் சித்தர்கள் சிலரே. அவர்களில் முக்கியமானவர் அடிஅண்ணாமலையில் ஜீவசமாதி அடைந்த அடிமுடி சித்தர்.

     சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை அடர்ந்த மூலிகை வனங்கள் சூழ்ந்த இயற்கை எழில் நகராக திகழ்ந்தது. அக்காலத்தில் கிரிவலப்பாதை கற்கள் நிறைந்த கரடுமுரடான, குறுகலான பாதையாகவும், வெளிச்சமற்றும் காணப்பட்டது. இதனால் பக்தர்கள் கிரிவலம் செல்ல மிகவும் கடினமாக இருந்தது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மகான் ஒருவர் குடில் அமைத்து தமது சீடர்களுடன் தவம் செய்து வந்தார். இவரின் சீடர்களில் அடிமுடி சித்தரும் ஒருவர். இவர் எளிமையான தோற்றம் கொண்டவர், சிவனடியார்களுக்கு உதவுவதையே பணியாக கொண்டவர்.

     பக்தர்களின் வசதிக்காக அடிமுடி சித்தர் தனது குருவிற்கு பணிவிடை செய்த காலம் தவிர மற்ற நேரங்களில் பக்தர்களுக்காக கிரிவலப்பாதையை துப்புரவு செய்து வந்தார். இதனை கண்ட அருகில் உள்ள குடில்களில் இருந்த சிவனடியார்களும், சில தொழிலாளர்களும் தாமாக முன்வந்து இந்த ஆன்மீக பணியை செய்துவந்தனர்.   ஆனால், தன்னுடன் இணைந்து பணியாற்றும் தொழிலளர்களுக்கு துப்புரவு பணிசெய்த இடங்களில் இருந்து குப்பையை தன கரங்களில் எடுத்து அளிப்பார், கைவிரித்து அவர்கள் பார்க்கும் பொழுது பணமாக இருக்கும். இவ்வாறாக சித்தர் பெருமானின் அற்புதங்கள் ஏராளம்.
     திருவண்ணாமலையில் உள்ள அரியவகை மூலிகைகளை கொண்டு தன்னை நாடி வரும் அன்பர்களின் நோய்களை குணமாக்கினார். தான் ஜீவசமாதி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த அவர் தன சீடர்களை அழைத்து "நான் தவத்தில் ஆழ்ந்தவுடன் என் உடலை தொடாமல் கால் பெருவிரல் இரண்டிலும் வைக்கோல் கயிற்றால் கட்டி இழுத்து செல்லுங்கள் எவ்விடத்தில் இக்கயிறு அறுந்துவிடுகிறதோ அங்கே என்னை அடக்கம் செய்யுங்கள்" என்று கூறி ஜீவசமாதி அடைந்தார்.

     பின்பு அவர் கூறியவாறு , வைக்கோல் கயிற்றால் கட்டி கிரிவலப்பாதையில் அவர் உடலை இழுத்து செல்லும்போது அடிஅண்ணாமலை கவுதம மகரிஷியின் ஆசிரமத்திற்கு எதிரில் கயிறு அறுந்ததால் சித்தரை அவ்விடத்திலேயே அடக்கம் செய்தனர். சிலநாட்களுக்கு பின்பு சித்தரின் ஜீவசமாதி உரிய பராமரிப்பு இல்லாமல் பாம்பு புற்றாக மாறியது.

      இந்நிலையில் கிரிவலம் வந்த சிவனடியார் ஒருவருக்கு சற்று தூரத்தில் ஜோதி வடிவில் ஓர் ஒளிப்பிழம்பு தென்ப்பட்டது. அவ்விடத்தை நோக்கி சென்றபோது அங்கே மிகப்பெரிய பாம்பு புற்று ஒன்று இருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தார். மேலும் அடிமுடி சித்தரின் மகிமைகளை அறிந்துகொண்ட அவர் அங்கேயே தனது இறைபணியை மேற்கொண்டார். சில நாட்களுக்கு பிறகு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதுநாள் வரை இதுபோன்ற மழையில் கரையாத புற்று அன்று சிறிது சிறிதாக கரைந்து கொண்டிருக்கும்போது அப்புற்றில் இருந்து சுயம்பு லிங்கம் ஒன்று தோன்றியது.  

     அச்சிவலிங்கத்தினை மூலவராக கொண்டு அங்கு சிறிய கோவில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. அன்றிலிருந்து கிரிவலப்பாதை அடிஅண்ணாமலையில் கவுதம மகரிஷியின் ஆசிரமத்திற்கு எதிரில் உள்ள இக்கோவிலுக்கு வந்து அன்பின் உருவான அடிமுடி சித்தரின் அருள் பெற்று தங்களின் கர்மவினைப் பயனை போக்கி நல்வாழ்வு பெற்றவர்கள் எண்ணிலடங்காது. இன்னும் இங்குவரும் பக்தர்கள் அடிமுடி சித்தரை நினைத்து தியானம் செய்வதால் மன அமைதியும் நிம்மதியும் பெறுகின்றனர்.

ஜீவ சமாதி உள்ள இடம் ஆற்றல் நிரம்பிய இடமாகும். அவர்களை பூரணமாய் வணங்கி  பழங்கள், அச்சு வெல்லம், அவள், தாம்பூலம், வாசனை உடைய மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வழிபடுவது சிறப்பு.

பொதுவாக குருவை தேடுபவர்கள் மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதியில் வழிபாடு செய்தால் குருவருள் கிட்டும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...