Saturday, June 22, 2024

கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம்.

தென்னாட்டில் உள்ள தேவாரத் தலங்கள் 274ல் காவிரியாற்றின் தென்கரையில் 127 தலங்கள் அமைந்துள்ளன.
இவற்றில் மூன்று கும்பகோணத்தில் அமைந்து உள்ளன.

இவை மட்டுமல்லாது இந்நகரை சுற்றிலும் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் பத்துக்கும் மேற்பட்ட தேவாரத் திருத்தலங்கள் அமைந்துள்ளன.

இந்நகரில் 100க்கும் மேற்பட்ட பெரியதும், சிறியதுமான கோவில்கள் இருப்பதால் இந்நகரம் கோவில்நகர் என்றும் போற்றப்படுகின்றது.

அவற்றில் முதன்மையானது கும்பேஸ்வரர் ஆலயம். ஈசன் தன் கரத்தினால் சிருஷ்டித்த தலம் என்பதால் சிறப்பைப் பெற்றது.
முதல்வர், வானவர், மன்னவர் என அனைவரும் அவரை பூஜித்திருப்பதால் இத்தலம் மூர்த்தி சிறப்புடையது.

தேவர்கள், திருமால், பிரம்மா, இந்திரன், தேவ மாதர்கள் என அனைவரும் தீர்த்தமாடிய திருக்குளமாக மகாமகக் குளம் அமைந்து இருப்பதால் இத்தலம் தீர்த்த சிறப்பையும் பெற்று மேன்மை பொருந்திய தலமாக விளங்குகிறது.

பிரளயத்தின் போது அதில் மிதந்து வந்த அமுதக் கலசமான குடத்தை இறைவன் அம்பை செய்து அதன் மூக்கை உடைத்தமையால் குடமூக்கு என்னும் பெயர் இத்தலத்திற்கு உரியதாயிற்று.

சமயக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் வைணவ ஆழ்வாரான பூதத்தாழ்வார் ஆகியோர் இத்தலத்தைக் குடமூக்கு என்றும், பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார் ஆகியோர் இத்தலத்தைக் குடந்தை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இத்தலத்தை மலை தனி வந்து கும்பகோண நகர் வந்த பெருமானே! என்று அருணகிரியார் குறிப்பிடுகின்றார்.

குடமூக்கு என்னும் பெயர் இடைக்காலத்தில் தான் கும்பகோணம் என மாறியுள்ளது என்பது அருணகிரியாரின் பாடல் வாயிலாக உணர முடிகிறது.

குடம் என்தற்குக் கும்பம் என்ற பெயரும் உண்டு.

கும்பம் உடைந்த பகுதி கோணாலானதால் கும்பகோணம் என்றாயிற்று.

இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் ஆதிகும்பேஸ்வரர் ஆவார்.

இவர் உலகத்திற்கு ஆதி காரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியமையால் ஆதிகும்பேஸ்வரர் என்றும் நிறைந்த சுவை கொண்ட அமுதத்தில் இருந்து உதித்தமையால் அமுதேஸர் என்றும் அழைப்படுகின்றார்.

இறைவன் வேடுவர் உருக்கொண்டு அமுத கும்பத்தை தம் அம்பினால் எய்தியமையால் கிராதமூர்த்தி என்னும் திருப்பெயரையும் பெற்றார்.

மகா பிரளயத்திற்குப் பின் படைப்புத் தொழிலினை பிரம்மா தொடங்குவதற்கு இறைவன் இத்தலத்தில் எழுந்தருளிய லிங்கத்துக்குள் உறைந்து சுயம்பு வடிவானவர்.

இதனால் இத்தலம் உயிர்ப் படைப்பின் தொடக்க இடமாததால் படைக்கப்பட்ட படைக்கப்படுகின்ற ஒவ்வொரு மனித உயிர்களும் வாழ்நாளில் ஒருமுறையேனும் இத்தலத்தை அடைதல் அவர்களின் பிறவிக் கடமையாகும்.

எந்த ஒன்றிற்குமே மூலம் தான் சிறப்புடையது.

உயிர்களின் தோற்ற மூலமான இத்தலம் பிற தலங்களுக்கு எல்லாம் புண்ணியம் நிறைந்த முதன்மைத் தலமானது.

அதுமட்டுமல்லாது புராணப்படி மகாபிரளயத்திற்குப் பின் நிலவுலகில் தோன்றிய முதல் தலமும் இதுவேயாகும்.

இத்தலத்து அம்பிகை மங்கள நாயகி ஆவாள். இவள் மந்திர பீடேஸ்வரி, மந்திர பீடநலத்தாள், வளர்மங்கை என்றும் போற்றப்படுகின்றாள்.

தம்மை அன்புடன் தொழுவார்க்குத் மங்களம் அருளும் தன்மையால் “மங்களநாயகி” என்றும் சக்தி பீடங்களுள் ஒன்றாக விளங்கும் மந்திரபீடத்தில் அன்னை விளங்குவதால் மந்திரபீடேஸ்வவி என்றும் தம் திருவடிகளைப் பணிந்தவர்களுக்கு மந்திர பீடத்திலிருந்து நலம் அருளுவதால் “மந்திரபீட நலத்தாள்” என்றும் போற்றப்படுகின்றாள்.

தம் தேவாரப் பதிகத்தில் திருஞான சம்பந்தர் பெருமான், “வளர்மங்கை” என்று அன்னையைப் போற்றுகின்றார்.

திருச்செங்கோடு தலத்தில் இறைவன் தம் இடபாகத்தை அம்பிகைக்கு அருளியமைபோன்று இத்தலத்தில் இறைவன் தம் 36000 கோடி மந்திர சக்திகளையும் அன்னைக்கு வழங்கினார்.

இதனால் அன்னை இத்தலத்தில் மந்திர பீடேஸ்வரியாகத் திகழ்கின்றாள்.

அம்மனின் உடற்பாகம் பாதநகம், முதற்கொண்டு, உச்சி முடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சி அளிக்கின்றன.

இவற்றுள் பிற தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே சக்தி வடிவினை மட்டும் கொண்டதாகும்.

இத்தலத்து அன்னை ஐம்பத்தோரு சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாக உள்ளடக்கியவளாய், சக்தி பீடங்கள் அனைத்திற்கும் பிரதானமானவளாய் விளங்குகிறாள்.

இத்திருக்கோவிலில் காலையில் முதலில் சூரிய பகவானுக்கும், மாலையில் சந்திரனுக்கும் வழிபாடுகள் நிகழ்கின்றன.

இத்திருக்கோவிலில் உள்ள 16 தூண் மண்டபம் மிக்க கலையழகுகளுடன் திகழ்கிறது.... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..

அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....