Wednesday, July 3, 2024

திருநெல்வேலி புளியறை சதாசிவமூர்த்தி திருக்கோயில்..

அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில்.. 
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்   –     சதாசிவமூர்த்தி

உற்சவர்   –     சதாசிவம்

அம்மன்   –     சிவகாமி

தல விருட்சம்   –     புளியமரம்

தீர்த்தம்   –     சடாமகுடம்

பழமை   –     500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்   –     புளியரை

மாவட்டம்   –     திருநெல்வேலி

மாநிலம்   –     தமிழ்நாடு
சமண மதம் மேலோங்கிருயிருந்த காலத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் அவர்களின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது. இதனால் சிவபக்தர்கள் நடராஜர் சிலையை எடுத்துக் கொண்டு தெற்கே வந்தனர். திரிகூடாசல மலை எனப்படும் குற்றாலத்தைக் கடந்து, புளியமரங்கள் நிறைந்த வனத்தை அடைந்தனர். சுவாமியை அங்கிருந்த பெரிய புளிய மரப்பொந்து ஒன்றில் மறைத்து வைத்தனர். அம்மரத்தின் உரிமையாளரின் கண்ணில் சிலை பட்டது. அவர் தினமும் நடராஜரை வணங்கி வந்தார். பல ஆண்டுகள் கழித்து சிலையை மீட்க சிதம்பரம் பக்தர்கள் புளியமரப் பொந்தை தேடி வந்தனர். சிலையை மீட்டுச்சென்றனர்.

சுவாமியை பூஜிக்க வந்த மரத்தின் உரிமையாளர் சிலை காணாமல் போனது கண்டு வருந்தினார். சுவாமியை வேண்டினார். அந்த இடத்தில் மீண்டும் எழுந்தருள வேண்டினார். சுவாமி இலிங்க வடிவில் அங்கே சுயம்புவாகத் (தானாக) தோன்றினார். இவரை “சதாசிவம்” என அழைத்தார். இதையறிந்த அப்பகுதி மன்னர் அவ்விடத்தில் கோயில் கட்டினார்.

பொதுவாக தெட்சிணாமூர்த்தி சன்னதி சிவாலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால், இத்தலத்தில் மூலவருக்கும், வாசலில் உள்ள நந்திக்கும் நடுவே உள்ளது. இது வேறெந்த சிவாலயத்திலும் இல்லா சிறப்பு. கோயிலுக்குள் நுழைய 27 படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை 27 நட்சத்திரங்களாக கருதப் படுகின்றன. ஜாதகதோஷம் உள்ளவர்கள் இந்தப் படிகளில் ஏறிச் சென்று, சிவனைப் பூஜித்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

புளிய மரத்தின் அடியில் சிவன் அருட்காட்சி தந்ததால், புளியரை என்றழைக்கப்படும் இவ்வூர், சிறிய சிருங்கேரி என்ற சிறப்பு பெயருடனும் அழைக்கப்படுகிறது. சிவாலயமாக இருந்தாலும் தெட்சிணாமூர்த்திக்கே மதிப்பு. குருபரிகார ஸ்தலமாக திகழும் இங்கு வியாழக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகளவில் உள்ளது. சதாசிவமூர்த்திக்கு வலப்புறம் அருள்பாலிக்கும் அம்பாள், சிதம்பரத்திலிருந்து கொண்டு வரப்பட்டமையால் சிவகாமி அம்பாள் என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள்.

சிவனுக்கு வலது பின்திசையில் நவநீதகோபாலர், சுற்றுப்பிரகாரத்தில் சதாசிவமூர்த்தி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரன், சுப்பிரமணியர், பைரவர், நாகர், சந்திரன் மற்றும் சப்தகன்னிகள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இத்தலவிநாயகர் தெப்பக்குளவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைக்கின்றனர்.

திருவிழா:

தை மாதம் 10 நாட்கள் பிரதானத்திருவிழா, குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, மகாசிவராத்திரி, நவராத்திரி, ஆடிப்பூரம்.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, குழந்தைபாக்கியம் கிடைக்க, கல்வி, வேலை, வியாபாரங்களில் சிறக்க, நட்சத்திரம் மற்றும் நாகதோஷங்கள் நீங்கிட வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டிக்கொண்ட காரியங்கள் நடந்திட சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி பூஜை, குருபகவான், தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை, முல்லைப்பூ மாலை சாத்தி தயிர்சாத நைவேத்யம் படைத்து கோடி தீபம், சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றப்படுகிறது.

இருப்பிடம் :

தென்காசியில் இருந்து புளியரை செல்ல பல பஸ்கள் உள்ளன. ஸ்டாப்பில் இறங்கி ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள கோயிலை அடையலாம்.

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..

அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....