Friday, July 19, 2024

*தில்லை நடராஜர் சிலை உருவான கதை...

*தில்லை  நடராஜர்  சிலை உருவான ரகசியம்* 
                                                                                  
ஆடல் அரசன் அம்பலக் கூத்தன் உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய ஈசன் மகேசன் அம்பலக் கூத்தன் வலது  திருப்பாதம் ஊன்றி, தூக்கிய மறு பாதத்தின் பெருவிரல் நுனி பூமியின் நடு மையப்புள்ளியை குறித்தும்,  வலக்கையில் துடியும், இடக்கையில் அனலும் ஏந்தி  கருணை புன்னகையோடு உலகத்தில் ஒவ்வொரு அணுவையும் இயங்கச்செய்யும்,  "அழகே உருவான திருஉருவ நடராஜர் சிலை"  நாம்  வழிபட எப்படி கிடைத்தது ?!!!  
சோழ மன்னர்கள் சைவத்திற்கு வெகுவாக தொண்டு படைத்துள்ளார்கள் என்பது நாம் அறிந்தது அல்லவா?
ஸ்தல யாத்திரையாக ஒவ்வொரு கோவிலாக சென்று ஈசனை வழிபட்டு தில்லையை வந்தடைந்தான் இரணியவர்மன். அங்குள்ள சிவகங்கை திருக்குளத்தில் புனித நீராட எண்ணி குளத்தினுள் இறங்கி மூழ்கினான். அவன் செவிகளில் இனிய ஒலியாக 'ஓங்காரம்' ஒலித்தை அவன் உணர்ந்தான். மிக்க ஆச்சரியத்தோடு நீருக்குள் இருந்து எழுந்தான். அந்த ஓங்காரத்தின் இனிய ஒலி நின்றுவிட்டது. அவன் மறுபடியும் நீருக்குள் மூழ்கிய போது ஓங்காரத்தின் ஒலியை இனிதே உணர்ந்தான். மிக்க ஆச்சரியத்தோடு இன்னும் நீரின் ஆழத்திற்கு சென்றான். ஓங்காரத்தின் ஒலி இன்னும் சப்தம் அதிகமாவதை உணர்ந்தான். மிக ஆர்வமாக ஆழத்திற்குச் செல்ல செல்ல ஒலியும் கூடியதை உணர்ந்ததோடு அவன் கண்கள் இன்னுமொரு திருக்காட்சியையும் கண்டது. சோழமன்னன் மெய்சிலிர்த்துப் போனான். விரித்த கண்களை இமைக்காமல் அந்த "திருக்காட்சியை" பதிய வைத்துக் கொண்டான்.
                பரவசத்தோடு குளத்திலிருந்து மேலெழுந்து வெளியே வந்தவன் நேராக அரண்மனைக்குச் சென்றவுடன் தான் கண்ட அந்தக் திருக்காட்சியை தன் கைப்பட ஓவியமாக வரைந்தான்.
                  மிகச்சிறந்த சிலை வடிக்கும் சிற்பிகளை வரவழைத்து தான் வரைந்த ஓவியத்தையும் சிலை செய்வதற்கான தேவையான சொக்கத் தங்கத்தையும் கொடுத்து, செம்பு கலவாமல் நான் வரைந்த ஓவியம் போன்று 48 நாட்களுக்குள் சிலை செய்து முடிக்க வேண்டும் என்றும்,  தவறினால் கழுவில் ஏற்ற படுவீர்கள் என்றும் கட்டளையிட்டான்.
47 நாட்கள் முடிந்து அரசன் சொன்னதுபோல் சிலை செய்ய இயலாமல் சிற்பிகள் செய்வது அறியாது திகைத்து நின்றதை பெரும் சித்தரான போகர் தன் ஞானத்தால் கண்டுணர்ந்தார். தன் சிஷ்யர் கருவூரார் சித்தரை அழைத்து மன்னன் விரும்பிய சிலையை நீ முடித்துக் கொடுத்துவிட்டு வரவும் என்றும், அதற்கான உபாயத்தையும் கூறி அனுப்பினார். குருவின் திருவாக்கை தலைமேற்கொண்டு கருவூரார் சித்தர் அந்த சிற்ப்பிகளிடத்தில் வந்தடைந்தார்.
                 இன்னும் மன்னன் சிலை செய்ய கொடுத்த கெடுவிற்கு ஒருநாள் மட்டுமே இருப்பதாகவும் தங்களால் சிலையை செய்யமுடியவில்லை என்று சிற்பிகள் வருத்தத்துடன் கூற, ஒருநாள் தேவையில்லை ஒரு மணி நேரம் போதும் என்று கூறி அறையினுள் சென்று தாழிட்டுக் கொண்டார். தன் சொற்படி ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தவர் மற்ற சிற்பிகளை உள் சென்று 'சிலையை' காணும் படி கூறினார். சென்ற சிற்பிகள் தங்களையே நம்பமுடியாமல் பரவசப்பட்டு நின்றார்கள்.
                 குருவின் திருவார்த்தையை முடித்து விட்டு  கருவூர்சித்தர் அங்கிருந்து கிளம்பினார். மன்னனுக்கு சிலை செய்து முடித்துவிட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது. மன்னரும் நீராடி தன் உடலெங்கும் நீறு பூசி பரவசத்தோடு அச்சிலையை காண வந்தார். கண்டவர் கண் கலங்கி நின்றார். தான் வரைந்த ஓவியத்தை விட இன்னும் செவ்வனே அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது கண்டு மனம் உருகி நின்றார்.
மனம் மகிழ்ந்து சிற்பிகளுக்கு தகுந்த சன்மானம் வழங்க முற்படுகையில் சிலையை பரிசோதித்து பின் பரிசு கொடுக்கலாம் என்று மந்திரி, மன்னன் இடத்தில் கூற, சிலை செய்த தங்கத் துகள்களை பரிசோதிக்கப் பட்டது. செம்பு கலந்திருப்பது கண்டறியப்பட மன்னன் மிகுந்த கோபம் கொண்டான்.
அரசன் சிற்பிகளுக்கு தண்டனை வழங்க முற்படுகையில், அதுவரை அமைதி காத்த சிற்பிகள் மன்னவரே மன்னிக்க வேண்டும். இந்த சிலையை செய்தது ஒரு சிவனடியார். நாங்கள் அல்ல என்று உண்மையை உடைத்தனர்.
மன்னன் உத்தரவுப்படி கருவூராரும் வரப்பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு தண்டனையை வழங்கி நேரத்தை வீணடிப்பதை விட சிலையை ரசிக்கவே மனம் எண்ணவும் ஏங்கவும் செய்தது மன்னனுக்கு. நாளை அவருக்கு தண்டனை வழங்குவதாக சொல்லி சிலையை மாளிகைக்கு எடுத்துச் சென்றார். அங்கு சென்ற மன்னர் வடிவினனை கண்டு கண்டு மனம் மகிழ்ந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தார். 
             அவ்வேளையில் போகர் சித்தர் தன் ஐந்து சீடர்களோடு அங்கு வந்தார். “ஊன் உருக கண்ணில் நீர் பெருக நீ கண்டுகளிக்கும் இந்த சிலையை செய்து கொடுத்தவரை சிறையில் அடைப்பதுதான்  உன் அரசாட்சியின் தர்மமோ?!!” என வினவினார். “நான் கூறியபடி எனது சீடன் இந்த சிலையை செய்து கொடுத்தான். அதை பாராட்டாமல் சிறை வைத்தது சரியா?” எனக் கேட்டார்.
             “சொக்கத் தங்கத்தில் செய்யவே நான் கட்டளையிட்டேன் அதில் செம்பு கலந்தது தவறு இல்லையா?” என்று பதிலளித்தான் மன்னன்.
“மன்னா உனக்குத் தெரியாத இரண்டு விஷயங்களை கூறுகிறேன். தெரிந்துகொள். சொக்கத் தங்கத்தில் சிலை வடிக்க இயலாது. செம்பு கலக்கப் பட்டே ஆகவேண்டும். மேலும் தங்கச் சிலைக்கு தீப ஆராதனை காட்டும் பொழுது அந்த ஒளியானது, சிலையின் மீது பட்டு அதை தரிசிப்பவர்களின் பார்வையின் ஒளியை இழக்கச் செய்யும். ஆகவே என் உத்தரவின்படி செம்பும்,சில மூலிகைச்சாறும் கலந்தே எனது சிஷ்யன் சிலை வடித்தான். அறியாமல் தவறு கண்டாய். இச்சிலையை நானே எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லி தன் சீடர்களிடத்தில் தாங்கள் கொண்டு வந்த தங்கத்தை தராசில் ஒரு தட்டிலும் சிலையை மறு  தட்டிலும் வைக்கச் சொல்லி உத்தரவிட்டார். சிலைக்கு ஈடான தங்கத்தை நீர் எடுத்துக் கொள்ளும். சிலையை நான் எடுத்துச் செல்கிறேன்” என்று சொல்லி சிலையுடன் புறப்பட்டார்.
மன்னன், போகர் சித்தரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரி சிலையை தன்னிடமே கொடுத்து விடும்படி கதறி அழுதான். அதற்கு என் சிஷ்யன் சிறையிலுள்ளானே என்றதும், தாங்கள் அழைத்தால் தங்களது சிஷ்யன் உடன் இங்கு வந்து விடுவாரே என்று பணிவோடு சொன்னதும், போகர்,  கருவூராரா வா என அழைத்தவுடன் அவரும் அங்கு தோன்றினார். மன்னன் அவரது கால்களிலும்  விழுந்து மன்னிப்புக் கோரினான்.
             அதன்பின் கருவூராருக்கு, இன்னும் சில காலங்கள் இங்கு தங்கி இருந்து மன்னனுக்கு சில விஷயங்களை தெளிவு படுத்தி விட்டு வா என்று உத்தரவிட்டு கிளம்பினார் போகர் சித்தர்.
அதன் பிறகு சோழ மன்னனை தில்லைக்கு அழைத்துச் சென்று தற்போதுள்ள சிதம்பரத்தில் சிற்சபையில் அந்த சிலையை எங்கு எப்படி எந்த முறையில் எந்த அளவில் சபை அமைய வேண்டும், மற்ற தெய்வங்களை எப்படி எங்கு பிரதிஷ்டை  வேண்டும் என தெளிவுபட எடுத்துக்கூறி சாஸ்திர முறைப்படி அந்த சிற்சபையை அமைத்து கொடுத்தார் கருவூரார் சித்தர்.
            திருச்சிற்றம்பலத்தில் நடராஜப் பெருமானை இப்படியாகத் தான் நாம்  கிடைக்கப் பெற்றோம். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...