Saturday, August 31, 2024

பழனி முருகனின் ஆண்டி கோலம் ஆபத்தானதா?

_முருகனின் சுப்பிரமணியர் என்ற பெயருக்கும் பழனி ஆண்டி கோலத்திற்கும் உண்மையான காரணம்_


அதே போல் முருகனுக்கு எத்தவையோ பெயர் இருந்தாலும் சுப்பிரமணியன் என்ற பெயரில் தான் பல இடங்களில் முருகன் காட்சி தருகிறார். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். இந்த சுபரமணியன் என்ற பெயருக்கு அப்படி என்ன சிறப்பு? பல இடங்களிலும் சுப்ரமணியன் என்ற பெயரிலேயே முருகன் காட்சி தர காரணம் என்ன என்பதை பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
முருகனின் திருப்பெயர்கள் :

தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு எத்தனையோ பெயர்கள் உள்ளன. கந்தன், குகன், குமரன், கார்த்திகேயன், கடம்பன், கதிர்வேலன், சண்முகன், ஆறுமுகன் என பல பெயர்கள் உள்ளன. இருந்தாலும் முருகப் பெருமான், பெரும்பாலான கோவில்களில் சுப்ரமணியன் என்ற பெயரிலேயே மூலவராக காட்சி தருகிறார். எத்தனையோ பெயர்கள் இருந்தால் எதற்காக முருகன் மூலவராக இருக்கும் கோவில்களில் அவர் சுப்ரமணியன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார் ? இதற்கு என்ன காரணம் என தெரிந்து கொள்ளலாம்.

சுப்பிரமணியன் பெயருக்கு அர்த்தம் :

சுப்பிரமணியன் பெயருக்கு அர்த்தம் :
சுப்ரமண்யர் என்ற பெயரில்‘பிரமண்யன்’ என்றால் பிரம்மத்தை உணர்ந்த பரம ஞானத்தைப் பெற்றவன் என்று பொருள். அதில் உள்ள ‘சு’ என்பது சிறப்பிக்கும் ‘அதி உன்னத மான’ என்ற அடைமொழி. அதாவது அதி உன்னதமான பரம ஞானத்தை பெற்றவன் என்பது தான் ‘சுப்ரமண்யன்’ என்பதன் பொருள். ஞானத்தின் உயர் நிலையான பிரம்மண்யத்தின் அதி உயர் நிலையை அடைந்தவன் என்பது இதன் பொருள். அதனால் தான் முருகனை ஞானக் கடவுள் என்கிறோம். அவனை விட ஞானமும்,தேஜஸும் வேறு யாருக்கும் இல்லை என்பதால் தான் அழகென்றால் முருகன் என சொல்லுவது உண்டு.

ஆண்டிக்கோல முருகன் :

ஆண்டிக்கோல முருகன் :
ஞானமே வடிவான முருகப் பெருமான், கைலாயத்தில் தேவலோக ஞானப் பழத்தை பெற முடியவில்லை என்ற கோபத்தில் ஆண்டி கோலம் பூண்டு பழநி மலைக்கு சென்று விட்டதாக ஒரு புராணக்கதை உண்டு. ஆனால் அதன் பின் உள்ள மிக முக்கிய ஞானத்தை பெற ஏற்ற கோலம் என்ற உண்மையை உணர்த்தும் கதை ஒன்றும் உள்ளது. எத்தனையோ திருக்கோலங்கள் இருந்தாலும் போகருக்கு, நவபாஷாண சிலையை செய்வதற்காக முருகன் காட்சி கொடுத்தது ஆண்டி கோலத்தில் தான். பழநி முருகன் ஆண்டிக் காலத்துடனேயே காட்சி தருவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் இது தான்.

ஞானப்பழத்திற்கு போட்டி :

ஞானப்பழத்திற்கு போட்டி :
நாரதர் கொண்டு வந்த ஞானப்பழத்தை பெற வேண்டுமானால் ஈசன் படைத்த ஏழு உலகையும் முதலில் சுற்றி வருபவருக்கு தான் என்று கூறியதும், முருகப் பெருமான் தன்னுடைய வாகனமான மயில் மீது ஏறி வேகமாகப் புறப்பட்டார். ஆனால் முருகனின் அண்ணன் விநாயகரோ அந்த ஏழு உலகத்தையும் தன்னில் அடக்கி அருள்பாலிப்பவர்கள் சிவ சக்தி என கூறி, அவர்களை வலம் வந்து ஞானப் பழத்தை பெற்றார். உலகை சுற்றி வந்த முருகன், அண்ணனின் கையில் ஞானப்பழம் இருப்பதை கண்டு அது எப்படி அவர் கையில் சென்றது என தெரிந்து கொண்டார்.

முருகனின் ஆண்டிக்கோல காரணம் :

முருகனின் ஆண்டிக்கோல காரணம் :
பழம் கிடைக்காத கோபத்தில் முருகன் பழனிக்கு சென்று ஆண்டி கோலத்தில் அமர்ந்தார் என்பத உண்மை கிடையாது. ‘உமா_மகேஸ்வரனே உலகம் அனைத்தும்’என்ற உண்மை தனக்கு தெரியாமல் போனதே என ஒரு கணம் எண்ணி பார்த்தார். அது எப்படி அண்ணன் கணபதிக்கு மட்டும் இது தெரிந்தது என்பதை ஆராய்ந்த கந்தனுக்கு, பிள்ளையார் பிரணவ வடிவம், அவர் ஞான ஸ்வரூபன் அந்த ஞானம் அவரின் கடும் தவத்தினால் கிடைத்தது. அதனால் தான் இந்த ஏழு உலகமும் சிவ பார்வதியின் வடிவம் என்பதை உணர்ந்தார். அண்ணனைப் போல் தானும் அந்த ஞானம் பெற, அதாவது பிரம்மண்யனான தாம் சுப்ரமண்யனாக, பாலசுப்ரமண்யனாக விரும்பினார். அதன் விளைவாக தான் தவக் கோலம் ஏற்று ஆண்டியாக பழனி மலையில் ஆண்டிக்கோலம் ஏற்றார்.

ஞான வடிவமான முருகன் :

ஞான வடிவமான முருகன் :
அண்ணன் கணபதியைப் போல தானும் தவமியற்றி ஞானத்தைப் பெற ஞானஸ்கந்தனாக பழநியில் காட்சியளிக்கிறார். நெற்றிக் கண்ணில் உதித்த முத்துக்குமரன், ஞானக் கடலாக ஞானத்தை பெறவும், அதை காக்கவும் எடுத்துக் கொண்ட கோலம் தான் பழனி ஆண்டிக்கோலம். அவர் பழம் கிடைக்க வில்லை என்ற ஆதங்கத்தில் ஆண்டியாகவில்லை அந்த ஞானத்தைப் பெற்று மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகவும், ஞானத்தை வழங்கவும் ஏற்ற கோலம் ஆகும். தன்னை வணங்கக் கூடியவர்களுக்கும், அந்த ஞானத்தை வழங்க கூடியவர் முருகன். வெறும் அசுரர்களை அழிக்க மட்டும் உருவான உருவமல்ல. அவர் தர்மத்தை காக்கவும், ஞானத்தை கொடுக்கவும் உருவானவர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்.....

தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான #திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பழமையான 
#திருக்கோழி என்ற #உறையூர் (#திருமூக்கீச்சுரம்)
#பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள 
#மதம்_பிடித்த_யானையை_அடக்கிய_கோழி!

சோழ மன்னன் கரிகால-பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம்வந்து கொண்டிருந்தபோது திடீரென  யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்தது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான்.
சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அந்தக் கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீது அமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது கோழியும் அங்கே வந்தமர்ந்தது.
கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலம் திருக்கோழியூர் (உறையூர்)
என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. 

#மூக்கீச்சுரம்:
சோழ அரசர்களில் ஒருவர் பட்டத்து யானை மீது உலா வருகின்றபோது, யானைக்கு மதம் பிடித்தது. அரசனும் பாகனும் திகைத்திருந்தனர். அப்போது இறைவன் அருளால் ஒரு கோழியொன்று வந்து பட்டத்துயானையின் மீது ஏறி யானையின் மத்தகத்தின் மீது மூக்கால் கொத்தியது. அதன் பின்பு யானை மதம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தது. அக்கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. வில்வ மரத்தடியில் தேடிப்பார்த்தபோது சிவலிங்கமொன்ரு இருப்பதைக் கண்டு அவருக்கு கோயில் எழுப்பினான்.அது திருமூக்கிச்சுரம் என்று அழைக்கப்படுகிறது.
உறையூர் பகுதியானது முக்கீச்சுரம் என்றும், கோழியூர் என்றும் புராணக் காலத்தில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி சண்டையிட்டு வென்றதால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.
முக்கீச்சுரம் திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூரே முக்கீச்சுரம் எனப்படுகிறது. கடைத்தெருவில் இக்கோயில் உள்ளது.

இத்தல வரலாற்றை நினைவுப்படுத்தும் வகையில் மூலவர் கருவறை வெளிச் சுவற்றில் வலதுபுறம் யானையின் மதத்தை கோழி அடக்கும் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இப்போதும் அந்தக் கோயிலுக்கு சென்றால் அந்த சிற்பத்தைக் காணலாம்.

#திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்:

"மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த
பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே...... 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

63 நாயன்மார்களில் ஒருவரான செருத்துணை_நாயனார்...

சிவ வழிபாட்டிற்கான பூவினை முகர்ந்து 
சிவபதாரம் செய்த பல்லவ அரசியின் மூக்கினை அரிந்த,
63 நாயன்மார்களில் ஒருவரான 
#செருத்துணை_நாயனார் 
குருபூஜை: முக்தி நாள் 
(#ஆவணி_பூசம்)
செருத்துணை நாயனார் சிவவழிபாட்டிற்கான பூவினை முகர்ந்த பல்லவ அரசியின் மூக்கினை அரிந்த வேளாளர். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.
செருத்துணை நாயனார் பண்டைய சோழ நாட்டின் ஒருபகுதியாக விளங்கிய மருகல் நாட்டின் தஞ்சாவூரில் தோன்றியவர்.

வேளாண்குடியின் தலைவராக விளங்கிய இவர் மன்னர்களுக்கு போரில் துணை செய்யும் படை உடையவராதலின் இப்பெயரினைக் கொண்டு விளங்கினார்.

இயல்பிலேயே சிவனாரிடத்தும் அவர் தம் தொண்டர்களிடத்தும் பேரன்பு கொண்டவராக செருத்துணையார் விளங்கினார்.

சிவாலயங்களுக்கு திருப்பணிகள் செய்வதை தமது கடமையாகக் கொண்டு செயலாற்றினார். திருக்கோவில்களில் வழிபாடுகள் நடைபெற வழிவகை செய்தார்.

சிவனடியார்களை காப்பதில் துணிவோடு செயல்படுவார். சிவனடியார்களுக்கு இடையூறு செய்பவர்களை கண்டிப்பார். சில நேரங்களில் தண்டிக்கவும் செய்வார்.

ஒருசமயம் செருத்துணையார் திருவாரூர் சென்று, அங்கு தங்கியிருந்து திருக்கோவிலுக்கு திருத்தொண்டுகள் வழிபாட்டினை மேற்கொண்டிருந்தார்.

அப்போது பல்லவ அரசர் கழற்சிங்க நாயனார் தம்முடைய பட்டத்தரசியுடன் திருவாரூர் திருக்கோவிலுக்கு வழிபாடு மேற்கொள்ள வந்திருந்தார்.

திருவாரூர் திருக்கோவிலின் பூமண்டபத்தில் இறைவனாருக்கு மாலைகள் தொடுத்துக் கொண்டிருக்கும் பணியினை சிலர் மேற்கொண்டிருந்தனர்.

அப்போது பூ ஒன்று கீழே விழுந்தது. அங்கு வந்த பல்லவ பட்டத்தரசி அப்பூவின் அழகு மற்றும் மணத்தால் கவரப்பட்டு பூவினை எடுத்து முகர்ந்தாள்.

பூமண்டபத்தில் இருந்த செருத்துணையார் அரசியாரின் செயலைக் கண்டார்.

“இறைவனாருக்கான பூவினை முகர்ந்தல் என்பது மிகவும் தவறானது. இச்செயல் சிறியதாயினும் குற்றமுடையதே. இதனை இப்போதே கண்டிக்காவிடில் இது வளர்ந்து பெரிய தவறாக மாறும்” என்று எண்ணினார்.

தம்மிடமிருந்த கத்தியால் தவறு செய்த பல்லவ அரசியின் மூக்கினை அரிந்தார். வலியால் பல்லவ அரசி கத்தினாள்.

அரசியின் கூக்குரலைக் கேட்டு அவ்விடத்திற்கு வந்த கழற்சிங்க நாயனாரிடம், ‘இறைவனாருக்கான பூவினை முகர்ந்து சிவபதாரம் செய்த இப்பெண்ணின் மூக்கினை நானே அரிந்தேன்.’ என்று துணிவுடன் கூறினார்.

இறைவனுக்காக அடியவர் செய்த செயலை கண்டு அரசன் வியந்தான். அடியவர்களின் பக்தியைக் கண்ட இறைவனார் அரசன், அரசி, அடியார்க்கு அருள் புரிந்தார்.

அரசி என்றும் பாராது சிவபராதம் செய்த கழற்சிங்க நாயனார் மனைவியின் மூக்கினை அரிந்த செருத்துணை நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகும் பெருமை பெற்றார்.

செருத்துணை நாயனார் குருபூஜை ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

செருத்துணை நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘மன்னவனாஞ் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்’ என்று புகழ்கிறார்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

Friday, August 30, 2024

சனி மஹா பிரதோஷம் சிறப்பு ❓



🙏இன்று சனி மஹா பிரதோஷம்🙏
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🌲சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். 

🌲அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானதாகும்.

🌲பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. 

🌲எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் அகன்றுவிடும்.

🌲சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. 

🌲எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மஹாப்பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

🌲ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.

🌲இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம், இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. 

🌲சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

🌹சனி பிரதோஷ சிறப்பு 🌹
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🌲சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

🌲பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

🌲இன்றைய நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

🌲பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. 

🌲சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

🌲அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். 

🌲இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக தரலாம். 

🌲பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.

🌲நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

🌲பிரதோஷ பூஜையின்போது அபிஷேகப்பொருட்களால் விளையும் பலன்கள் :

பால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தயிர் - வளம் உண்டாகும்.

தேன் - இனிய சாரீரம் கிட்டும்.

பழங்கள் - விளைச்சல் பெருகும்.

பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்.

நெய் - முக்தி பேறு கிட்டும்.

இளநீர் - நல்ல மக்கட்பேறு கிட்டும்.

சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்.

எண்ணெய் - சுகவாழ்வு.

சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்.

மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

கும்பாபிஷேகம் என்றால் என்ன?

#கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம் என்றால் என்ன?
கும்பாபிஷேகம் என்பது குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்ட கோவில்களில், சம்பந்தப்பட்ட தெய்வ திருமேனிகளின் மீது தெய்வ சக்திகளை எழுந்தருளும்படி செய்வதற்கான வழிமுறைகளை செய்வது ‘கும்பாபிஷேகம்’ ஆகும். அது ஆவர்த்தம், அநாவர்த்தம், புனராவர்த்தம், அந்தரிதம் என்ற பொதுவான நான்கு வகைகளில் உள்ளது.
ஆவர்த்தம்

ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்படுவது.

அனாவர்த்தம்

பூஜை இல்லாமலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

புனராவர்த்தம்

கருவறை, பிரகாரம், கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

அந்தரிதம்

கோவில் உள்ளே ஏதேனும் தகாதது நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் பரிகார பூஜை.

கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ளப்படும் அவசியமான பூஜைகள் பற்றிய விளக்கம்.

அனுக்ஞை – (அனுமதி வாங்குதல்) செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் (புரோகிதர்) தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

சங்கல்பம் – இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை. பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.

கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல். துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு செய்யப்படும் பரிகாரம்.

மிருத்சங்கிரஹணம் – (மண் எடுத்தல்) அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில் இருந்து மண் எடுத்து அந்த பள்ளத்தில் அபிஷேகம் செய்தல். ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்டப்படுத்தியதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் சாந்தி பரிகாரம்

அங்குரார்ப்பணம் – முளையிடுதல் எடுத்த மண்ணில் விதைகளை யிட்டு முளை வளர செய்தல் இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

ரக்ஷாபந்தனம் – காப்புக்கட்டுதல் பூஜைகளை செய்யும் ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் எவ்வித இடையூறுகளும் வராதபடிக் காத்தற் பொருட்டு அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு கட்டுதல்.

கும்ப அலங்காரம் – கும்பங்களை இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

கலா கர்ஷ்ணம் – விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

யாகசாலை பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

சூர்ய, சோம பூஜை – யாகசாலையில் சூரிய சந்திரனை வழிபடுதல்.

மண்டப பூஜை – அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.

நாடி சந்தானம் – யாகசாலை இடத்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல்.

விசேஷ சந்தி – 36 தத்துவ தேவதைகளுக்கும் பூஜை செய்வது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது.

பூத சுத்தி – இந்த பூத உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

அஷ்டபந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல் இதை மருந்து சாத்துதல் என்பர்.

பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.

கும்பாபிஷேகம் –  யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

மண்டலாபிஷேகம் – பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 45 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

மற்றும் சில

ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைத்தல்

பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்

நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்

உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைத்தல்

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தனை தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2 காலம், 4 காலம், 8 காலம், 12 காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது. ஆலயங்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்... 

திருநாவுக்கரசு சுவாமிகள் வரலாறு.



திருநாவுக்கரசு சுவாமிகள் வரலாறு. 
திரு அவதாரம். 

தென்னார்க்காடு மாவட்டம் என பின்னர் அழைக்கப்பட்ட திருமுனைப் பாடி நாட்டில் பெண்ணை ஆறு வளம் கொழிக்க சைவம் தழைக்க விளங்கியது திருவாமூர். 

ஆங்கு மேன்மைமிகு சைவ வேளாளர் குலத்தில் பெருமைமிகு குறுக்கையர் குடியில் புகழனார் என்பவர் கற்பின்மிக்கநங்கையாகிய மாதினியார் என்பவருடன் இல்லறம் இனிது நடத்தி வந்தார். அவர்களுக்குதிலகவதியார்திருமகளாகதோன்றினார் . அதன்பின் உலகிருள் நீக்கும் கதிரொளி போன்று "மருள் நீக்கியார்" என்னும் புதல்வர் தோன்றினார்.

திலகவதியார் திருமண பருவம் அடைந்த நிலையில் சைவ குலத்தைச் சார்ந்த சீலராக விளங்கிய கலிப்பகையார் என்பார்க்கு திருமணம் பேசினர். அத்தருணம் அரச கட்டளை என்பது அவர் போர் முனைக்குச் செல்லவேண்டியதாயிற்று.

"நெருநல்உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" என்னும் நெறிப்படி புகழனார் தனது பொன்னுடலை நீத்தார். அவரைத் தொடர்ந்து கற்பின் மாண்பறிந்த பொற்பின் திருவாகியமாதினியாரின் உயிரும் பிரிந்தது.

இளமைப் பருவத்தில் தவழ்ந்து கொண்டிருந்த திலகவதியாரும் மருள்நீக்கியாரும் ஆற்றொணாத் துயர் கடலில் அழுந்து துடிக்கும் ஞான்று திலகவதி யாருக்கு திருமணம் பேசிய கலிப்பகையார் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்த செய்தி வந்து தாக்கியது.

தன்னை மணம் பேசிய கழிப்பகையாறு தனது கணவர் இனி உலகில் வாழ்வேன் எனக்கொன்று திலகவதியார் உயிர் துறக்க துணிந்தார். அந்நிலையில் மருள் நீக்கியர் தாய் தந்தையரை பிரிந்த பின்னர்தமக்கையாரையும் இழப்பேனாயின் உயிர் தரியேன் என வேண்டத் திலகவதியார்தம்பியாரின் நலத்தை கருத்தில் கொண்டு மனைத் தவம் பூண்டு ஒழுகலானார்.

திலகவதியாரும் மருள்நீக்கியாரும் அறச்சாலைகள் வைத்தும் விருந்தளித்தும்சோலைகளை அமைத்தும் எழில் பெருக விளங்கினர்.

திலகவதி யார் சிவாலயம் சார்ந்த சிவத்துண்டாற்றி வணங்கி வரும் நாளில் மறுமைக்கு யார் சமண நெறியால் ஈர்க்கப் பெற்று சமணநெறியில்அச்சமயத்தின்பால் எய்தி அங்கு சிறந்து விளங்கி, "தர்மசேனர்" என்னும் சிறப்பு பெயர் பூண்டு இருந்தார்.

சூலைத் தந்து ஆட்கொள்ளல்.

திலகவதியார்சிவத்தொண்டாற்றி தன் தம்பியை சமணத்தில் இருந்து மீட்டு உய்விக்க வேண்டும் என வேண்டுதல் செய்யலானார். "வேண்ட முழுதும் தருவாய் நீ! வேண்டும் பரிசு ஒன்று உண்டெனில் அதுவும் உன்றன் விருப்பன்றே" என்னும் வாசகத்திற்கு இணங்க திலகவதி யாரின் வேண்டுதலும் இறைவனின்திருக்குறிப்பும்சேர்ந்து விளக்கமுறும் காலம் கனிவுற்றது.

ஈசன் திலகவதியாரின் கனவில் தோன்றி "சூலை நோய்தந்துஆட்கொள்வம்" என அருளிச் செய்தனர். இதனை சேக்கிழார் பெருமான் "உன்னுடைய மனக்கவலை ஒழி நீ! உன்னுடன் பிறந்தான் முன்னமே முனியாகி எனையடைய தவம் முயன்றான் அன்னவனை இனி சூலை மடுத்து ஆள்வம்"என உரைத்தருளினார். மருள் நீக்கியார் சூலை நோயால் துன்புறலானார். ஈசனால் தருவிக்கப்பட்ட நோய் ஈசனாலன்றி வேறு எவ்வகையால் தீரும்? மருந்தால் தீரவில்லை. சமணர் ஆற்றும் மந்திர முறைகளாலும்தீரவில்லை. இந்த நிலையில் அவர் தமது தமைக்கையாரை நினைவு கூர்ந்தார்.


ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

சனி மஹா பிரதோஷம் நோய் தாக்கத்திலிருந்து விடுதலை...

*_துன்பம்_போக்கும் #சனி_மஹா_பிரதோஷம்
சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மஹா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு சனிப்பிரதோஷத்தன்று
சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம்
மிக்க சிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.
சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.
இன்று ஈஸ்வரனையும்,
சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு உண்டு.
சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று . “ஓம் ஆம் ஹவும் சவும் ” என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம் நமது முந்தைய ஏழு பிறவிகள் நமது முன்னோர்கள் ஏழு தலை முறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.
எனவே, இந்த மந்திரத்தை, குறைந்தது ஒன்பது தடவையும், அதிகபட்சமாக 108 முறையும் ஜபித்து வந்தால் தகுந்த பலன் கிடைக்கும். .
ஆகவே, சனிப்பிரதோஷ தினமான இன்றைய நாளில் சிவனாரை தரிசிக்கிற வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
சொல்லப்போனால், ஈசனை வணங்குவதற்காக அப்படியான நாட்களாக இந்த வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்!
சனிப்பிரதோஷ நாளில், அந்த வேளையில் அதாவது மாலையில் சிவாலயம் சென்று, நமசிவாய நாமத்தைச் சொல்லுங்கள். சிந்தையில் தெளிவும் வாழ்வில் நிம்மதியும் நிச்சயம் கிடைக்கும்..
☘️
ஆவணி மாதத்தில் வரும் பிரதோஷ தினத்தன்று சிவனுக்கு ஆராதனைகள் செய்து தயிர்சாதம் நிவேதனமாகப் படைத்து பக்தர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நோய் தாக்கத்திலிருந்து மீண்டு வரக்கூடிய வாய்ப்புகள் அமையும், அதுமட்டுமல்லாமல் காரியத்தடை நீங்கி வெற்றிகள் குவியும் என்பது ஐதீகம்.

Thursday, August 29, 2024

சிவனோடு பார்வதியாகவும் மீனாட்சியாகவும் வணங்கப்படும் பச்சையம்மன்.....

_பச்சையம்மன் என்னும் ஆதி மீனாட்சியம்மன்_


தமிழ்நாட்டில் பழமையான சக்தி வழிபாட்டு முறையில் பச்சையம்மன் வழிபாடு முக்கிய அங்கம் வகிக்கிறது. தொடக்கத்தில் தனி சக்தி வழிபாட்டிலும், தாய் தெய்வ வழிபாட்டிலும் ஓர் அங்கமாக இருந்து பின்னர் சிவனோடு இணைக்கப்பட்டு பார்வதியாகவும் மீனாட்சியாகவும் வணங்கப்படுபவள் பச்சையம்மன். இவள் வளமையையும், செழுமையையும் தருபவளாக விளங்குகிறாள். அதனால்தான் பச்சையம்மன் ஆதி மீனாட்சி என அழைக்கப்படுகிறாள். மீனாட்சியாக மதுரையில் முடிசூடி ஆளும் முன்பே இப்பூவுலகிற்கு தவம் செய்வதற்காக வந்தவள் என்பதால், பச்சையம்மன் என்ற சொல் மதுரை மற்றும் அதற்கு அப்பால் இல்லை. தமிழ்நாட்டில் தொண்டை நாடு முதல் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்கள் வரை பரவலாக பச்சையம்மன் கோயில்களைக் காணலாம்.
சீலமால் இமயவரை காசிமாநகரமும் திருக்காஞ்சி அருணை நகரும் சேம்பிலிபுரம் செஞ்சி சிறுகரும்பூர் தில்லை திருமுல்லைவாயில் நெல்லூர் சேலையூர் தண்டரை சேர்ப்பாகைப் பெருந்துறை சீக்கனாங்குப்பம் மீஞ்சூர் சிதம்பரம் சீர்காழி சென்னராயபுரம் தஞ்சை திருக்கழுக்குன்றம் சேவூர் ஆலவாய்க் கருங்குழி வாழைப்பந்தல் ஒற்றியூர் அம்பிகைவனம் குடந்தை அரகண்ட நல்லூரும் சாத்தணம் நகர்முதல் அகிலமாய் அமர்ந்த தாயே! என்று பச்சையம்மன் குடியிருக்கும் பிரபலமான தலங்கள் குறித்து செங்கல்பட்டு பச்சையம்மன் கோயில் தலவரலாறு குறிக்கிறது.
பச்சை நாயகி, பச்சைவாழி அம்மன், பச்சம்மன், பச்சம்மாள், பச்சிம்மா என்றும், சிவன்கோயில்களில் ஈசனின் துணையாக மரகதவல்லி, மரகதாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறாள். தமிழகம் தவிர ஆந்திரா, கர்நாடகாவிலும் பச்சையம்மனுக்கு வேறு பெயர்கள் வழங்குகின்றன. கிராம தெய்வம், குல தெய்வம் மற்றும் காவல் தெய்வமாக பல சமூகங்களில் கொண்டாடப்படும் பச்சையம்மனை வணங்குபவர்கள் பச்சை, பச்சம்மா, பச்சையப்பன், பச்சமுத்து என தங்கள் வாரிசுகளுக்குப் பெயர் சூட்டுகின்றனர். பச்சையம்மன் கோயில்களில் வாழ்முனி, செம்முனி, கருமுனி போன்ற வித்தியாசமான பெயர்களில் பெரிய சுதை உருவங்களாக முனிவர்களது சிலைகள் காணப்படுகின்றன. மன்னாதன், மன்னார்சாமி, மன்னதீஸ்வரன் என்ற பெயர்களில் சிவனுக்கு தனிச் சன்னதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கோயில்களில் லிங்க வடிவிலும் முழு உருவமாகவும் இறைவன் வணங்கப்படுகிறார். அம்மனும் முனிகளும் மட்டும் உள்ள கோயில்களும் உண்டு.
சிதம்பரத்திற்கு அப்பால் உள்ள தலங்களில் பெரும்பாலும் பச்சையம்மன், தனது நிழலிலிருந்து உருவான காத்தாயி அம்மனுடன் சேர்ந்து அருளும் வகையில் கோயில்கள் அமைக்கப்படுகிறது. செங்கல்பட்டு ஞானகிரி பச்சையம்மன் குறித்து சென்ற நூற்றாண்டில் எழுதப்பட்ட நூலில் பச்சையம்மன் வரலாறு தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர பச்சையம்மன் குறித்து வரிவான நூல்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தற்போதைய பச்சையம்மன் வரலாறு கைலாயம் தொடங்கி காஞ்சிபுரம் வந்து செய்யாறு சென்று திருவண்ணாமலையில் திருக்கார்த்திகையன்று ஈசனுடன் இணையும் விழாவாக ஆகி மீண்டும் யோக நிலையில் பல்வேறு தலங்களில் அருளுவதாக உள்ளது. கயிலையில் ஒருநாள் சிவனும் பார்வதியும் தனிமையில் உலக இயக்கம் குறித்து பேசிக்கொண்டிருந்தனர். இடையே, அனைத்து உயிர்களுக்கும் படியளக்கச் செல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்ட ஈசனை, சோதிக்க விரும்பிய உமாதேவி, சிறிய சிமிழுக்குள் ஓர் எறும்பைப் பிடித்து மூடி எவருக்கும் தெரியாமல் வைத்துக் கொண்டாள். படியளக்கும் பணி முடிந்து திரும்பினார் சிவன். அவரிடம் மென்சிரிப்போடு, போன காரியங்கள் முடிந்ததா? படியளந்தாயிற்றா? எதுவும் மிச்சமில்லையே? யோசித்துச் சொல்லுங்கள் எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டாள் உமையவள்.
சிவனார் சிரித்துவிட்டு, இல்லை. எதுவும் மிச்சமில்லை! என பதிலளித்தார். அதைக்கேட்ட பார்வதி குறும்பாகச் சிரித்துவிட்டு, தன் பாதுகாப்பிலிருந்த சிமிழைத் திறக்க அதனுள் இருந்த எறும்பு அவள் எதிர்பார்ப்புக்கு மாறாக ஓர் அரிசியைக் கவ்வித் தின்று கொண்டிருந்ததைக் கண்டு திகைத்தாள். சிவன், என்னை சோதிக்க ஒரு பாவமும் செய்யாத ஒரு சிற்றெறும்புதான் கிடைத்ததா? இந்தச் சின்ன எறும்பை சிறை வைத்த பாவச்செயல் உன் பாவக்கணக்கில் சேர்ந்திருக்கிறதே! அதற்குக் கழுவாயாக என்ன செய்யப் போகிறாய்? எனக் கேட்க, மனம் கலங்கினாள், மகேஸ்வரி. வேறொரு நாள். அதிகாலை. கயிலையில் சிவன் முனிவர்களுக்கு ஞானத்தை நயன தீட்சையால் உபதேசித்துக் கொண்டிருந்த நேரம். அங்கு வந்த பார்வதி சூழலின் மௌனத்தை உணராமல் ஈசனின் கண்களை மெலிதாகப் பொத்தினாள். ஈசனின் கண்களை மூடியதால் அதிலிருந்து ஒளி பெற்றுக்கொண்டிருந்த சூரிய சந்திரர்கள் இருண்டார்கள். உலகம் இருண்டது. நயன தீட்சை தடைப்பட்டதால் முனிவர்களும் உணர்வற்று மயங்கி வீழ்ந்தனர்.
உலக இயக்கம் தொடர வேண்டி ஈசன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். உலகம் அதிக வெப்பத்தில் தகித்தது. நிலையை உணர்ந்த அம்பிகையின் கரங்களில் இருந்து வியர்வை பொங்கி வழிந்து பாகிரதி என்னும் கங்கை நதியாக பிரவகித்தது. தன் கைகளை விலக்கிக்கொண்டு சிவனை நடுக்கத்துடன் வணங்கி நின்றாள். சிவன் மூன்றாவது கண்ணை மூடிக்கொண்டு இரு கண்களையும் திறந்தார். உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. பார்வதி பயந்து சிவனிடம் அறியாது செய்த செயலை மன்னிக்கக் கேட்டாள். பாவங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் அதற்குரிய கழுவாய் தேடிப் போக்கத்தான் வேண்டும். உரிய காலம் வரும் வரை காத்திரு. பின்னர் பாவங்களுக்கு உரிய நிவர்த்தியைக் கழுவாயாகச் செய்து பாவம் போக்கு என இமவான் மகளிடம் எடுத்துரைத்தார் ஈசன். பிருங்கி முனிவர் தீவிர சிவபக்தர். ஒரு சமயம் அவர், சிவனை மட்டும் வலம் வந்து வழிபட்டுச் சென்றார். அதனால் வருந்திய ஈஸ்வரி, ஐயனே! இதென்ன நியாயம்? எல்லாம் அறிந்த மாமுனிவரே நம்மைப் பிரித்து வணங்கலாமா? அவர் மீண்டும் இந்த தவறை செய்யாமல் இருக்க தங்கள் உடலில் சரிபாதி எனக்குத் தரவேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினாள்.
தவம் செய்தால் தருவதாகச் சொன்னார் இறைவன். உடனே பூவுலகு வந்தாள். இங்கே இமயம் தொடங்கி குமரி வரை உள்ள அனைத்து சிவதல தீர்த்தங்களிலும் நீராடி அதன் பின்னர் தவம் செய்து பலன் பெற விரும்பினாள். அவளது தோழியரான அறுபத்து நான்கு யோகினியரும் அவளுடன் வந்தார்கள். அப்படி தல தரிசனம் செய்தவாறே கேதாரம், காசி முடித்து உஜ்ஜயினி வந்தாள் அம்பிகை. அந்நகரை அக்னி வீரன், ஆகாச வீரன் உள்ளிட்ட ஏழு சகோதரர்கள் ஆண்டு வந்தனர். கொடுங்கோலர்களான அவர்கள், திரிலோக சுந்தரியான உமாதேவியைக் கண்டார்கள். தீய எண்ணத்தோடு அவளை அணுகினார்கள். தவக்கோலம் பூண இருந்ததால் சினத்தை வெளிப்படுத்தாமல், சிவனைத் துதித்தாள் அம்பிகை. சிவனாரது கூற்றின்படி திருமால், பிரும்மா மற்றும் அஸ்வினி தேவர்கள் முதலானோர் தேவிக்குப் பக்க துணையாக வந்தனர். தன் சகோதரியிடம் தகாத வார்த்தை பேசிய அக்னிவீரனை, திருமால் வான் அளவு உயர்ந்து அழித்தார். வானளவு உயர்ந்து நின்றதால் வான்முனி எனப்பட்டு வாழ்முனி என பின்னர் அழைக்கப்பட்டார். உடன் வந்த ரிஷிகளும் திருமாலைப் போல் பேருரு கொண்டனர். அடுத்து வந்த ஆகாய வீரனை செம்முனி என்னும் அகத்தியர் வென்றார். தொடர்ந்து வந்த ஜலவீரன், சண்ட வீரன், ரணவீரன், கோட்டைவீரன், அந்தவீரன் ஆகியோரை செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, பூமுனி என்ற பெயர்களோடு நாரதர், பராசரர், வியாசர் போன்ற முனிவர்கள் வதைத்தனர்.
முடிவில் அக்னிவீரனின் மகனான வீரமுத்து வெகுண்டெழுந்து போருக்கு வந்தான். வாழ்முனியான திருமால் அவனை சம்ஹாரம் செய்யப்போகும் போது அவன் மனைவி வீராட்சி, விஷ்ணுவின் காலில் விழுந்து தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை தரக்கேட்டாள். வாழ்முனி இரக்கப்பட்டு அவனை விடுவித்து அம்பிகையின் கோயில் காவலராக இருக்க உத்தரவிட்டார். அக்னிவீரன், ஆகாசவீரன், ரணவீரன், ரத்தவீரன் ஆகியோரின் உடல்களை பூமிக்குள் புதைந்து தலை மட்டும் தெரியும்வண்ணம் அழுத்தியபடி முனிவர்கள் அமர்ந்தனர். உடல் பாதாளத்திலும் தலை மட்டும் பூலோகத்திலும் இருந்த காரணத்தால் அவர்கள் பாதாள அசுரர்கள் எனப்பட்டனர். பின்னர், தவம் மேற்கொள்ள இருந்த தங்கை பார்வதியிடம், தேவைப்படும் சமயத்தில் எங்களை அழைப்பாயாக தவம் இருக்கும் உனக்கு, வேங்கடமலை நாச்சியார் என்ற மகாலட்சுமி. பூங்குறத்தி நாச்சியாராக சரஸ்வதி, ஆனைக்குறத்தி என்ற இந்திராணி முடியால் அழகி எனப்படும் ரதி, வனக்குறத்தி என்கிற வள்ளி ஆகியோர் துணை இருப்பார்கள்! எனக் கூறிச் சென்றார், திருமால்.
தன் துணை தேவியர்களுடன் உமை காசிமாநகர் சென்று அன்னபூரணியாக இருந்து அறம் செய்து கொண்டிருந்தாள். சிவன் உமையிடம் யோகபூமியான காசியை விட்டு மோகபூமியான காஞ்சி செவ்வாய் எனக்கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு சிவதலமாக சென்று தவம் செய்து பின்னர், காஞ்சியில் காமாட்சியாக அமர்ந்தாள். சிவன் இரு நழி நெல் கொடுத்து தருமத்தைப் பேணிக்காக்கக் கூறினார். அதைக்கொண்டு 32 வகை அறங்களையும் செய்ததோடு தான் தங்கி தவம் செய்து வந்து திசைகளில் எல்லாம் அறம் பெருகும்படி செய்தாள். அவளது பணியில் மகிழ்ந்த சிவபெருமான், அருணைக்கு வந்து பவளப்பாறைக் குன்றில் தவம் செய்து என் உடலில் இடப்பாகம் பெறுக! எனக் கட்டளையிட்டார். அதன்படி திருவண்ணாமலை நோக்கி சென்றாள். வழியில் வெப்பம் தகித்தது. பூஜை செய்யும் நேரமும் நெருங்கியது. தன் குமாரன் குமரனிடம் நீர் கொண்டுவர வேண்டினாள். செவ்வேளும் வேலை செலுத்த, அது அங்கிருந்த சிறு குன்றைத் துளைத்து நின்றது. அங்கிருந்து நீர் பிறீட்டுப் பெருகி ஆறாக ஓடிவந்தது. அது சேயாறு என அழைக்கப்பட்டு செய்யாறு என மாறி வழங்கியது.
வாழைமரங்களைக் கொண்டு பந்தல் அமைத்துக் கொடுத்தான், குமரன். அந்தப்பந்தலில் இருந்து அம்பாள் தியானம் செய்ததால் அந்த இடம் வாழைப்பந்தல் என அழைக்கப்பட்டது. அங்கு சிவதீட்சை பெற்று சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்ய எண்ணினாள். கௌதம முனிவரை நினைக்க அவர் நேரில் தோன்றி சிவதீட்சையும் இரண்டு சிவலிங்களையும் வழங்கினார். ஒன்றை தன் தலையிலே தரித்துக்கொண்டு மற்றொன்றை அங்கேயே நிறுவி பூஜை செய்தாள். கௌதமரும் அம்பிகை செய்த பூஜையில் கலந்துகொண்டு பேரானந்தம் அடைந்த அந்த இடம் வாழைப்பந்தல் பச்சையம்மன் கோயில் என வழங்கப்படுகிறது. உமை, சிவனைப் பிரிந்து வந்து தவத்திலிருப்பதால் உலகில் போகமும் குழந்தை பிறப்பதும் குறைந்து விட்டன. அதை சரி செய்ய மனம் கொள்ள வேண்டுமென தேவர்களும் முனிவர்களும் பார்வதியிடம் வேண்டினர். உடனே மகேஸ்வரி, தம் அம்சமும் கங்கையின் அம்சமும் உடைய ஒரு தேவதையை தன் நிழலிலிருந்து தோற்றுவித்தாள். அவள் கந்தனை மடியில் அமர்த்திக் கொண்டவளாக கந்தனின் ஆயியாகத் தோன்றினாள். அவளுக்கு காத்தாயி என்ற பெயரையும் சூட்டி அவளையும் தன் குழுவிலேயே சேர்த்துக்கொண்டாள். வாழைப்பந்தலில் தன் தவத்தை முடித்துக் கொண்டு திருவண்ணாமலை பவழப்பாறைக் குன்றில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினாள். தோழிகள் அனைவரும் சுற்றி நிற்க, திருமால், அகத்தியர், பராசரர், வியாசர், நாரதர் முதலானோர் முனிக்கூட்டங்களாக அமர்ந்தனர். தேவேந்திரன் யானை, குதிரை முதலியவற்றினைக் கொண்டுவந்து நிறுத்தினான்.
தவத்தின் உச்சமாக கார்த்திகை மாதத் தீபத் திருநாளில் அவன் முன் தோன்றி இடப்பாகத்தில் இடம் தந்து அருளினார், ஈசன். இருவரும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்தனர். மாலையில் சந்தியாநடனம் என்னும் ஆனந்த நடனம் ஆடினர். அனைத்து தேவர்களும் அந்த சந்தியா தாண்டவத்தைக் கண்ணாரக் கண்டு குளிர்ந்தனர். பின்னர் சிவனும் உமையும் பழைய வடிவு கொண்டனர். திருவண்ணாமலையில் ஒளிப்பிழம்பாக பரணி தீபத்தில் இணைந்து இறைவிக்கு இடப்பாகம் அருளுவதும் அந்தி சாயும் நேரத்தில் சந்தியா நடனமாடுவதும், எங்கும் ஒளிவெள்ளமாக உருவெடுப்பதும் கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலையில் கொண்டாடப்படுகிறது. தேவர்கள் சிவசக்தியாரிடம் உங்கள் திருமணக் கோலத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமெனக் கேட்டனர். உமை கயிலையிலிருந்து இப்புவி மேல் வந்து தவம் செய்த யோக கன்னியாகவே கோயில் கொள்ள விரும்புகிறேன். எனவே வள்ளி -குமரனின் திருமணம் எம் வரலாற்றோடு சேர்ந்தே நிகழ்வுறும் எனச் சொன்னாள். அதன்படி அவர்கள் திருமணம் நடைபெற்றது. சிவன், உமையிடம் நீ எம்மைக் குறித்து தவம் இருந்த இடங்கள் எல்லாம் உன் பெயரால் பச்சையம்மன் தலங்கள் என சிறக்கட்டும் என அருளினார். இந்த தலங்களே பின்னாளில் பச்சையம்மன் கோயில்களாக உள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்...

சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்
1 திருகுடந்தை ஊழ்வினை பாவம் விலக
2 திருச்சிராப்பள்ளி வினை அகல
3 திருநள்ளாறு கஷ்டங்கள் விலக
4 திருவிடைமருதூர் மனநோய் விலக
5 திருவாவடுதுறை ஞானம் பெற
6 திருவாஞ்சியம் தீரா துயர் நீங்க
7 திருமறைக்காடு கல்வி மேன்மை உண்டாக
8 திருத்தில்லை முக்தி வேண்ட
9 திருநாவலூர் மரண பயம் விலக
10 திருவாரூர் குல சாபம் விலக
11 திருநாகை (நாகப்பட்டினம் ) சர்ப்ப தோஷம் விலக
12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) முக்தி வேண்ட
13 திருவண்ணாமலை நினைத்த காரியம் நடக்க
14 திருநெல்லிக்கா முன்வினை விலக
15 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய
16 திருகருக்காவூர் கர்ப்ப சிதைவு தோஷம் விலக
17 திரு வைத்தீஸ்வரன் கோவில் நோய் விலக
18 திருகோடிக்கரை பிரம்ம தோஷம் விலக
19 திருக்களம்பூர் சுபிட்சம் ஏற்பட
20 திருக்குடவாயில் ( குடவாசல் ) இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய
21 திருசிக்கல் ( சிக்கல் ) துணிவு கிடைக்க
22 திருச்செங்காட்டங்குடி கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக
23 திருக்கண்டீச்சுரம் நோய் விலக , தீராத புண் ஆற
24 திருக்கருக்குடி ( மருதாநல்லூர் ) குடும்ப கவலை விலக
25 திருக்கருவேலி ( கருவேலி ) குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க
26 திருவழுந்தூர் ( தேரெழுத்தூர் ) முன் ஜென்ம பாவம் விலக
27 திருச்சத்திமுற்றம் மண வாழ்க்கை கிடைக்க
28 திருப்பராய்துறை ( திருச்சி ) கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற
29 திருநெடுங்களம் ( திருச்சி ) தீரா துயரம் தீர ( இடர் களைய )
30 திருவெறும்பூர் ( திருச்சி ) அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற
31 திருப்பைஞ்ஞீலி ( திருச்சி ) யம பயம் விலக
32 திருவையாறு அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
33 திருவைகாவூர் வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க
34 திருக்கஞ்சனூர் திருமண தோஷம் விலக
35 திருமங்கலக்குடி (சூரியனார் கோவில்) குழந்தை பாக்கியம் பெற
36 திருமணஞ்சேரி திருமண தோஷம் விலக
37 திருமுல்லைவாயில் சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக
38 திருவெண்காடு ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை
39 திருநெல்வேலி பிராமண குற்றம் விலக
40 திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில் முக்தி வேண்ட
41 திருவாலவாய் ( மதுரை ) தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட
42 திருப்பரங்குன்றம் ( மதுரை ) வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட
43 திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில் தீரா பாவம் விலக
44 திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
45 திருப்பாதிரிப்புலியூர் ( புட்லூர் ) தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக
46 திருவக்கரை செய்வினை தோஷம் விலக
47 திருவேற்காடு வாணிப பாவம் விலக
48 திருமயிலாப்பூர் மூன்று தலைமுறை தோஷம் விலக
49 திருஅரசிலி ( ஒழுந்தியாம்பட்டு ) காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
50 திருவாலங்காடு வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக
51 திருவேட்டிபுரம் ( செய்யாறு ) ஞானம் கிடைக்க
52 திருப்பனங்காடு பந்த பாசத்தில் இருந்து விலக
53 திருவூறால் ( தக்கோலம் ) உயிர்வதை செய்த பாவம் விலக
54 திருப்பாச்சூர் குடும்ப கவலைகள் நீங்க
55 திருவெண்ணைநல்லூர் பித்ரு தோஷம் விலக
56 திருவதிகை நல் மனைவி அமைய
57 திருவாண்டார் கோவில் முக்தி வேண்ட
58 திருமுது குன்றம் ( விருத்தாசலம் ) தீரா பாவம் விலக
59 திருக்கருவூர் ( கரூர் ) பசுவதை செய்வதன் வழிபட
60 திருப்பாண்டிக் ( கொடுமுடி ) பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக
61 திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை) மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட
62 திருகோகர்ணம் ( கர்நாடகம் ) தேவ தோஷம் விலக
63 திருப்புகழூர் பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க
64 திருத்தோணிபுரம் ( சீர்காழி ) குல சாபம் நீங்க
65 திருவைத்தீஸ்வரன் கோவில் பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக
66 திருக்கருப்பறியலூர் ( தலைஞாயிறு ) கர்வத்தால் குரு துரோகம்
67 திருப்பனந்தாள் பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக
68 திருப்புறம்பயம் மரண பயம் விலக
69 திருநெய்த்தானம் மோட்ஷம் வேண்ட
70 திருவானைக்காவல் கோவில் கர்மவினை அகல
71 திருவேதிக்குடி தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக
72 திருவலஞ்சுழி வறுமை அகல
73 திருநாகேஸ்வரம் ஸர்ப்ப ஸாபம் விலக
74 திருநாகேஸ்வர சுவாமி ( கும்பகோணம் ) நவகிரஹ தோஷம் விலக
75 திருநல்லம் (கோனேரிராஜபுரம்) வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக
76 திருத்தெளிச்சேரி ( காரைக்கால் ) சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர
77 திருசெம்பெரின்பள்ளி வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க
78 திருத்தலச்சங்காடு ( தலைச்செங்காடு ) அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக

79 திருவன்னியூர் ( அன்னூர் ) சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட
80 திருநன்னலம் ( நன்னிலம் ) ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட
81 திருராமனாதீச்சுரம் ( திருக்கண்ணாபுரம் ) கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக
82 திருமருகல் கணவன் மனைவி அன்புடன் வாழ
83 திருச்சிக்கல் பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட
84 திருச்சேறை இல்லறம் மேலும் சிறக்க
85 திருக்கோளிலி ( திருக்குவளை ) நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட
86 திருவாய்மூர் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
87 திருநெல்லிக்கா கல்வி மேன்மை அடைய
88 திருவெண்டுறை ( வண்டுறை ) வறுமையிலிருந்து விலக
89 திருக்கடிக்குளம் ( கற்பகநாதர்குலம் ) வினைகள் விலக
90 திருஆலங்குடி புத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற
91 கொட்டாரம் அமைதி பெற
92 திட்டை சந்திர தோஷம் விலக
93 பசுபதி கோவில் இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட
94 கொட்டையூர் செய்த பாவங்கள் வேயொரு வீழ
95 ஓமாம்புலியூர் சனி தோஷம் விலக
96 தருமபுரம் சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக
97 மயிலாடுதுறை அனைத்து பாவங்களும் விட்டோட
98 உத்தரகோச மங்கை கர்மவினைகள் அல்ல
99 இராமேஸ்வரம் பித்ரு தோஷம் விலக
100 காளையர்கோவில் பிறவி பயன் கிடைக்க
101 பெண்ணாடம் ஊழ்வினை தோஷம் அகல
102 இராஜேந்திரப்பட்டினம் கர்மவினை அகல
103 அவினாசியப்பர் ஏழு தலைமுறை பாவங்கள் விலக
104 குரங்கினில் முட்டம் நினைத்த காரியம் நடக்க
105 பவானி பித்ரு தோஷம் போக்க
106 ஆச்சான்புரம் மண வாழ்க்கை சிறக்க
107 ஆடுதுறை திருஷ்டி தோஷம் விலக
108 சங்கரன்கோவில் சர்ப்ப தோஷம் விலக.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

நம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்...

நம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள் பற்றிய பதிவுகள் 
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே..
எனத் திருமூலர் தன் பாடலில் தெரிவிக்கிறார்.

1) தலை நடுவில் (உச்சி)
2) நெற்றி
3) மார்பு
4) தொப்புளுக்கு சற்று மேல்.

5) இடது தோள்
6) வலது தோள்
7) இடது கையின் நடுவில்
8) வலது கையின் நடுவில்

9) இடது மணிக்கட்டு
10) வலது மணிக்கட்டு
11) இடது இடுப்பு
12) வலது இடுப்பு

13) இடது கால் நடுவில்
14) வலது கால் நடுவில்
15) முதுகுக்குக் கீழ்
16) கழுத்து

17) வலது காதில் ஒரு பொட்டு
18) இடது காதில் ஒரு பொட்டு



இவ்விதமாக திருநீறை அணிவதால் தடையில்லாத ஆன்மிக சிந்தனை நமது மனதை பண்படுத்தும். அளவில்லாத பொருட்செல்வத்துடன் , இறைவனின் அருட்செல்வத்தையும் அள்ளி வழங்கும்..... 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்

Wednesday, August 28, 2024

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை.....



அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், 
திருமயம், 
புதுக்கோட்டை 
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்  –    சத்தியகிரீஸ்வரர்

அம்மன்  –    வேணுவனேஸ்வரி

தல விருட்சம்  –    மூங்கில்மரம்

தீர்த்தம்  –    சந்திரபுஷ்கரணி

பழமை  –    1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்  –    திருமய்யம்

ஊர்  –    திருமயம்

மாவட்டம்  –    புதுக்கோட்டை

மாநிலம்  –    தமிழ்நாடு

அருகில் உள்ள பெருமாள் கோயிலுடன் இணைந்து கட்டப்பட்டிருக்கும் இந்த சத்தியகிரீஸ்வரர் உடனுறை வேணுவனேஸ்வரி அம்பாள் திருக்கோயில் அருள் வாய்ந்தது. தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில், சத்திய தேவதை மான் உருக்கொண்டு இங்கு ஓடி ஒளிந்து கொண்டு பெருமாளை வணங்கிவந்தாளாம்.

அப்பொழுது இந்த இடம் வேணுவனமாக, அதாவது மூங்கில் காடாக இருந்திருக்கிறது. அதனால் இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் வேணுவனேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள். சத்தியகிரீஸ்வரர் அழகிய இலிங்க ரூபமாகக் காட்சி அளிக்கிறார். சத்திய மகரிஷி பூஜை செய்த தலம்.

மதுரைக் கோயிலைப் போலவே சுவாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் கிழக்கு திசை நோக்கியே இருக்கிறது. இந்த சிவாலயத்தை, தனியே சுற்றி வர முடியாது. சிவன், பெருமாள் ஒருசேர மலையைச் சுற்றி வந்தால் மட்டுமே கிரிவலம் செய்தல் முடியும்.

1300 வருடங்களுக்கு முன்பு மகேந்திர பல்லவன் கட்டிய குடவரைக்கோயில். இத்தலத்திற்கு அருகில் விருத்தபுரீஸ்வரர்(பழம்பதிநாதர்) திருக்கோயில், சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சத்தியமூர்த்தி பெருமாள் திருக்கோயில், ஆத்மநாத சுவாமி திருக்கோயில், அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளது.

பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும் இதற்கு பக்கத்தில் உள்ள பெருமாள் கோயிலும் திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயில்களாக விளங்குகிறது. மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது மிகவும் சிறப்பு.

திருவிழா:

சித்திரை திருவிழா – 10 நாட்கள்

ஆடிபூரம் – 10 நாள்.

தைப் பூசம் – 1 நாள் திருவிழா.

பௌர்ணமி, அமாவாசை, பிரதோசம், தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேச நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.

இத்தலத்தில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

கோரிக்கைகள்:

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் செய்து வேணுவனேஸ்வரி அம்பாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. தவிர திருமண பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தில் வணங்கினால் நிச்சயம் வேண்டுதல் நிறைவேறும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

விநாயகர் சதுர்த்தி விழா விநாயகரை பற்றிய 100.....

 விநாயகர் சதுர்த்தி விழா

*விநாயகரை பற்றிய 100 விஷயங்கள் இதோ.....*

1. விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.

2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குச மும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.

5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.

6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

7. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.

8. முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டி யவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ் வடிவில் எழுந் தருளி அருள்புரிவார்.

9. சந்தனம், களி மண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாய கரை செய்து வழிபடுவார்கள்.

10. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

12. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

13. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

14. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனா லேயே மீண்டும் விண் ணில் பறக்க ஆரம்பித்தது.

18. கிருத வீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனை வரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.

20. திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

22. தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.

24. வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

25. ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ‘’சோமாஸ்கந்த வடிவம்‘’ என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

26. வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

27. திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

28. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்ப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

29. விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.

30. பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.

31. ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.

32. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.

33. சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவி லில் தீப்பெட்டி செய்வோர் ஒவ் வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய் வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை. நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ் செயலில் உங்களுக்குத் துணையாக இந்தக் கணபதி விளங்குவார்.

34. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக் கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

35. சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.

36. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.

37. நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.

38. அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

39. கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

40. குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.

42. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.

43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.

45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.

46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

47. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.

48. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.

49. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.

50. ‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

51. கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தை குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம் தலைவன் எனப்பொருள்படுகிறது.

52. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாகn வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.

53. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.

54. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

55. மும்பையில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 2Ð லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட்டுள்ளது.

56. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

57. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

58. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.

59. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.

60. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.

61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.

62. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.

63. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.

64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.

65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.

66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 
190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்குz அபிஷேகம் செய்யப்படுகிறது.

67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.

68. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.

69. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.

70. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.

71. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.

72. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.

73. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.

74. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.

75. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

76. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.

77. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

78. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள ‘நேத்ர கணபதி’ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.

79. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்’ எனப்படுகிறார்.

80. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

81. திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட் ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.

82. ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது.

83. திருவாரூரில் ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த சர்க்கரை பிள்ளையார் உள்ளார். திருமண தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபம் ஏற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது.

84. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தூரில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் பந்தநல்லூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மரத்துறை கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த இரட்டை விநாயகரை வணங்கினால் விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.

85. நமது மூலா தாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.

86. பிள்ளையார் பட்டியில் உள்ள விநாயகர் தன் ஒரு கரத்தில் சிவ லிங்கத்தை ஏந்தி இருப்பதை சிறப்பானதாக சொல்கிறார்கள்.

87. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை தூரத்தில் கிழக்கு திசையில் இருந்து பார்த்தால் விநாயகர் சிலை போலவே தெரியும்.

88. விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலில் பூமிக்கு அடியில் உள்ள விநாயகர் சிலை 18 அடி ஆழத்தில் அமைந்துள்ளார்.

89. சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலையாட்டி விநாயகர் உள்ளார்.

90. ஆம்பூர் வேம்புலி அம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர்சதுர்த்தி தினத்தன்று பிரமாண்ட லட்டு தயாரித்து படைப்பதை பக்தர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.

91. நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள விநாயகரை தலையில் ஒரு குட்டு வைத்து விட்டே வழிபாடு செய்கிறார்கள்.

92. நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள இரட்டை விநாயகர்கள் இருவரும் எப்போதும் மாப்பிள்ளை கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்கள்.

93. திருவாரூர் ஆலயத்தூண் ஒன்றில் மூலதார கணபதி உள்ளார். இவரை வழிபட்டால் நமக்குள் இருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும் என்பது ஐதீகம்.

94. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி தினத்தன்று 16 கன்னிப்பெண்களுக்கு ரவிக்கை துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமண தடைகள் அகலும்.

95. நெல்லி மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபட்டால் பெண் குழந்தைகளிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

96. மற்ற கடவுள்களை விட விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர் ஆவார். எனவேதான் அவரை முந்தி முந்தி விநாயகர் என்கிறார்கள்.

97. திண்டுக்கல் கோபால சமுத்திரகுளக்கரையில் உள்ள 108 விநாயகர் கோவிலில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 32 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

98. ஓம் வக்ரதுண்டாய ஹீம் என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகைவரை எளிதாக வென்று விடலாம்.

99. ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர். இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்ன ச்சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகர்களைதான் அவர் வணங்கி வந்தார்.

100. புண்ணியத்தைத்தேடி காசி மாநகருக்கு செல்பவர்கள் அங்குள்ள அனைத்து விதமாக ஆலய வழிபாட்டுச் சம்பிரதாயங்கள் சடங்குகளை முடித்துக்கொண்டு வரும்போது முடிவில் ஒரு சிறிய ஆலயத்தில் உள்ள டுண்டி ராஜகணபதியை வணங்கினால் தான் யாத்திரை முற்றுப் பெறுவதாக நம்புகின்றனர்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் தன்வந்திரி....

 தீராத நோய்களைத் தீர்க்கும் தன்வந்திரி விரதம் பற்றிய பதிவுகள் 
தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ‘தன்வந்திரி பகவான்’ தீராத நோய்களையும் தீர்த்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

உலகில் வாழும் மக்களை காத்தருள திருமால் எடுத்த அவதாரங்கள் 24 ஆகும். இதில் மிக முக்கியமான 10 அவதாரங்கள் தசாவதாரம் என அழைக்கப்படுகிறது. அவை 
1. மச்சம், 
2. கூர்மம்,
3. வராகம்,
4. நரசிம்மம், 
5. வாமனம், 
6. பரசுராமர், 
7. ராமர், 
8. பலராமர்,
9. கிருஷ்ணர்,
10. கல்கி.

இவை தவிர தத்தாத்தரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற பல்வேறு அவதாரங்களை திருமால் எடுத்து தன் அடியார்களை காத்து வருகிறார்.

ஒருமுறை துர்வாச முனிவரால் சாபத்திற்குள்ளானார் தேவேந்திரன். இதன் காரணமாக தேவேந்திரன் அனைத்து செல்வங்களையும் இழந்தார். 

இதனையடுத்து திருமாலின் அறிவுரையை ஏற்று தேவர்கள், அசுரர்கள் கூட்டு சேர்ந்து திருப்பாற் கடலை கடைந்தனர். அப்போது மிகக்கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. இதனை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்தி கொண்டார். எனவே தான் சிவபெருமான் நீலகண்டன் ஆனார்.

தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்தபோது காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை உள்ளிட்ட பல புனிதமான பொருட்கள் வந்தன. 

இறுதியாக திருமாலே தன்வந்திரியாக அமிர்த கலசத்தினை ஏந்தியவாறு பாற்கடலில் இருந்து தோன்றினார். தேவேந்திரனும் சாகா மருந்தான அமிர்த கலசத்தினை பெற்றுக்கொண்டு தான் இழந்த அனைத்தையும் பெற்று தேவலோகம் சென்றார்.. 

சடையப்பர் திருக்கோயில், திருச்சென்னம்பூண்டி திருவாரூர் மாவட்டம்.



அருள்மிகு சடையப்பர் (திருக்கடையுடைய மகாதேவர்) திருக்கோயில், 
திருச்சென்னம்பூண்டி, (கோயிலடி அருகில்) 

திருவாரூர் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் – திருக்கடையுடைய மகாதேவர்

அம்மன் – சித்தாம்பிகா

பழமை – 500 வருடங்களுக்கு முன்

ஊர் – திருச்சென்னம்பூண்டி

மாவட்டம் – திருவாரூர்

மாநிலம் – தமிழ்நாடு

சிவலிங்க வடிவில் உள்ள இறைவனின் திருமேனி முழுவதும் சடை வடிவங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதனால் தான் இவர் சடையார் என்ற காரணப் பெயருடன் அழைக்கப்படுகிறார் என தலவரலாறு கூறுகிறது. திருக்கடைமுடி மகாதேவர் கோயில் என முன்பு அழைக்கப்பட்ட இந்த ஆலயம் தற்போது சடையார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோயிலுக்கு முன் மாதிரியான ஆலயம் இது எனச் சொல்லப்படுகிறது.
இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் திருக்கடையுடைய மகாதேவர். அம்மனின் பெயர் சித்தாம்பிகா. இவளது சன்னதி தென்திசை நோக்கி தனியாக அமைந்துள்ளது. அம்மன் தனது மேல் வலது கரத்தில் சங்கு, மேல் இடது கரத்தில் கதை தாங்கி அருள்புரிகிறாள். முன்னிரு கரங்களில் அபய, வரத, ஹஸ்த முத்திரைகளுடன் திகழ்கிறாள். இறைவனின் சன்னதி கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இறைவன் சன்னதியின் முன் நந்தி அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இங்கு 21 கல்வெட்டுகளை தொல்பொருள் துறை கண்டுபிடித்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதன் மூலம் இக்கோயிலுக்கு பொன் அளித்தோர் பற்றிய தகவல்களை அறிய முடிகிறது. இறைவன் சன்னதி முழுவதும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடக் கலையையும் சிற்பக் கலையையும் அற்புதமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் இவ்வாலயம், கி.பி.9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. முதல் பராந்தகன், பல்லவர் தொள்ளாற்றெறிந்த நந்தி நிருபதொங்க வர்மன், முத்தரையர் கோ, இளங்கோ முத்தரையர் ஆகியோர் காலத்தில் கட்டப்பட்டது. தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. பிரகாரத்தில் துர்க்கை, சண்டீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. சிவாலயமான இங்கே சீதை இலங்கையில் சிறை இருந்த காட்சி, ராமாயணப் போர் இப்படிச் சில ராமாயணக் காட்சிகளும் சிற்ப வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.

திருவிழா: சிவராத்திரி.

கோரிக்கைகள்:

பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

. ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்.. 

Tuesday, August 27, 2024

சித்தர்களா பித்தர்களா அல்லது விஞ்ஞானிகளா?

_சித்தர்களா பித்தர்களா ?_

சித்தர்கள் பொதுவாக பித்தர்கள் என்றே மக்களால் கருதப்படுகின்றனர். ஏதோ தாடி வளர்த்து கொண்டு, பரதேசிபோல் உடை அணிந்து அலைபவர்கள், நோய்களுக்கு வைத்தியம் செய்பவர்கள்
என நினைக்கப்படுகின்றனர் .

ஆனால் உண்மை அதுவல்ல . சித்தர்கள் கீழ்க்கண்ட துறைகளில் ஆழ்ந்த அறிவும், மேதைமையும் பெற்றிருந்தனர். சித்தர்களின் ஆற்றலும் அறிவும் திகைப்பூட்டுபவை. பிரமிப்பில்
ஆழ்த்துபவை. 
அவை பின்வருமாறு:

மருத்துவம் - அதாவது உடற்கூறு, நோய்கள் மற்றும் என்ன நோய்க்கு என்ன மூலிகை என்ற விவரங்கள்.

வானசாஸ்திரம் - கோள்களின் சஞ்சாரம், அமைப்பு அதனால் மனிதனுக்கு ஏற்படும் உடல், மன ரீதியான மாற்றங்கள் மற்றும் நோய்கள்.

ரசவாதம் - ஒரு உலோகத்தை இன்னொரு உலோகமாக மாற்றுதல். இதை மெட்டலர்ஜி என்று சொல்லலாம் அல்லவா?

உளவியல் - சித்தர்கள் மனித மனதை பற்றி மிகவும் ஆழ்ந்து ஆராய்ந்ததோடு மட்டும் அல்லாமல், நுட்மான உளவியல்
உண்மைகளை அறிந்திருந்தனர் என்று கூறலாம். சித்தர்களின் மனோதத்துவ அறிவு பிரமிக்கத்தக்கது. சமூக சீர்திருத்தம் - மூட நம்பிக்கைகளை சாடினார்கள். இறைவனோடு ஒன்றி இறைவழியில் நடக்க வலியுறுத்தினார்கள். மேலும் திருவள்ளுவர், போகர் போன்ற
சித்தர்கள் கூறியுள்ள - அரசியல்,
பொருளாதாரம், இல்வாழ்க்கை
அறவுரைகள் மற்றும் காதல் கலை
போன்றவற்றை பற்றி உரைத்துள்ள
கருத்துக்கள் அரியவை, தேடக்கிடைக்காதவை.

இன்றைய உலகிற்கு மிகவும் அவசியமானவை. சிவவாக்கியர், தாயுமானவர், திருமூலர்,
ராமலிங்கர், தேரையர் மற்றும் வள்ளுவர் போன்றோரின் கவிகளை படித்து பாருங்கள். நான் சொல்வது எந்த அளவு உண்மை என புரியும்.

என் சிறிய அறிவுக்கு எட்டியவரை, சித்தர்களை விஞ்ஞானிகள் என கூறலாம். அதற்கு மேலும் கூறலாம்...
 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

ஸ்ரீசைலம் ஶ்ரீமல்லிகார்ஜுனசுவாமி (ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபருப்பதநாதர்)


தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மிகப் பழமையான புண்ணிய க்ஷேத்திரமான
ஆந்திர மாநிலத்தில் உள்ள 
கர்நூல் மாவட்டத்தில் #ஸ்ரீசைலம் என்ற (#திருப்பருப்பதம்) #ஶ்ரீமல்லிகார்ஜுனசுவாமி (ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபருப்பதநாதர்)
#ஶ்ரீபிரம்மராம்பாள்
(பருப்பநாயகி) திருக்கோயில் வரலாறு:
திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் மல்லிகார்ச்சுனேசுவரர் கோயில்)  என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது. ஸ்ரீசைலம் என்றும் அழைக்கப்படும் இது ஹைதராபாத் நகரில் இருந்து 232 கிமீ தொலைவில் கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. இது மல்லிகார்ஜுன சுவாமிக்காக அமைக்கப்பட்டது. இத்தலத்தில் நந்தி தேவர் தவம் செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றல் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. பன்னிரு ஜோதிர் லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். 

மேலும் இங்குள்ள பிரம்மராம்பிகை அம்பாள் சன்னதி 51 சக்தி பீடங்களில் மற்றும் 18 மகா சக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும் போற்றப்படுகிறது.

மூலவர்:மல்லிகார்ஜுனர்,( ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)
அம்மன்:பிரமராம்பாள், பருப்பநாயகி
தல விருட்சம்:மருதமரம், திரிபலா
தீர்த்தம்:பாலாநதி
புராண பெயர்:திருப்பருப்பதம்
ஊர்:ஸ்ரீசைலம்
மாவட்டம்:கர்நூல்
மாநிலம்:ஆந்திர பிரதேசம்

வழிபட்டோர்:

சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார்,பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி,சேக்கிழார் முதலியோர்

பாடியவர்கள்:

அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவாரப்பதிகம்:

"சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறல னெருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டுத்தலங்களில் ஒன்று.

தல வரலாறு:

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,””தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்,”என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார்.

நந்தி தவம் செய்த “நந்தியால்’ என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றான்.

சந்திரவதி என்னும் பெண் அடியவர், மல்லிகை மலர்களைக் கொண்டு இப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன் மல்லிகார்ச்சுனர் என்று பெயர் பெற்றார்.

பொது தகவல்:

கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது.

ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில், நம் கண்களுக்கு விருந்தாகின்றது.

ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் முதலியன தரிசிக்கத் தக்கன. தெற்கு வாயில் கோபுரம் “ரங்க மண்டபம்’ எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது. இக்கோயிலிலிருந்து அருகிலுள்ள நாகார்ஜுனர் அணைக்கு செல்ல விசைப்படகு வசதி உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சத்திரங்கள் உள்ளன.

மலையின் கீழேயிருந்து 3 மணி நேரம் பிரயாணம் செய்தால் தான் ஸ்ரீசைலத்தை அடைய முடியும். அடர்ந்த காட்டுப்பகுதியாக இம்மலை இருப்பதால், தனியார் வாகனங்கள் இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணிவரை செல்ல அனுமதி கிடையாது. அரசு பஸ்கள் மட்டுமே செல்லும். திங்கள், வெள்ளியில் கூட்டம் அலைமோதுகிறது.

சனகல பசவண்ணா நந்தி: இத்தலத்தில் பிரதான மண்டபத்தில் உள்ள இந்த நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சாட்சி கணபதி: ஸ்ரீசைல சிகரத்திற்கு 2. கி.மீ. தூரத்தில் சாட்சி கணபதி திருக்கோயில் உள்ளது. மஹா விஷ்ணுவானவர், விநாயகரின் உருவத்தில் உட்கார்ந்திருந்திருக்கிறார். இந்த கணபதி தன்னை காணவரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள், யார் இல்லாதவர்கள் என கைலாசத்தில் (ஸ்ரீ சைலத்தில்) உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பதால் இவரை சாட்சி கணபதி என்பர். எனவே பக்தர்கள் தமக்கு மோட்சம் கிட்ட வேண்டும் என்று கருதி தத்தம் கோத்திரங்களை கூறி சாட்சி கணபதியை வணங்கிய பின் பக்தியுடன் ஸ்ரீ சைலம் வாயில் நுழைகின்றனர்.

தலபெருமை:

மல்லிகார்ஜுனர்: மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனை பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் “மல்லிகார்ஜுனர்’ எனப்படுகிறார்.
சிவபக்தையான அக்கமஹா தேவியை கௌசிகன் என்ற ஜைன அரசன் மணக்க விரும்பியபோது, அதற்கு சம்மதிக்காத அக்கமஹா தேவி, அரசனை வீர சிவன் ஆக்குவேன் எனக் கூறிவிட்டு, அவனை சந்திக்கச் சென்றாள் . அரசனின் தவறான  செய்கையால் மனம் நொந்து, தவத்தை மேற்கொண்டு இறைவனது கழலடிகளை அடைந்தாள். ஸ்ரீ சைல ஆலய வளாகத்தில் அக்க மகா தேவியின் திருவுருவச் சிலை பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ராமாபுரம் என்ற ஊரில் 14 ம் நூற்றாண்டில் வசித்து வந்த  நாகி ரெட்டி- கௌரம்மாள்  இருவரும் பிள்ளை வரம் வேண்டி ஸ்ரீ சைலம் வந்தனர். இறைவனருளால் அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.  அக்குழந்தை மல்லம்மா என்று அழைக்கப்பட்டாள். வயது வந்தவுடன் அவளை ,அருகிலுள்ள சித்தாபுரத்தைச் சேர்ந்த பரமா ரெட்டி என்பவனுக்கு மணம் செய்து வைத்தனர். புகுந்த வீட்டுக்கு மல்லம்மா வந்தவுடன் அங்கு பசுக்களும் விளைச்சலும் பல மடங்கு அதிகரித்தன. ஏழைகளுக்கு மல்லம்மா உதவி செய்து வந்தாள் . இதைக் கண்டு பொறாமை  கொண்ட உற்றார் உறவினர்கள், அவளது கணவனிடம் சென்று   வீண் பழி சுமத்தி அவனைக் கோபமுறச் செய்தார்கள். அதை உண்மை என நம்பிய கணவனும், மல்லம்மாவைக் கொன்று விட நினைத்து அவளிடம் சென்றான். ஆனால் அவளோ மெய் மறந்து சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டு தனது செயலுக்கு வருந்தினான். மல்லம்மாவும், தவறு செய்த அனைவரையும் மன்னித்து, அனைவருக்கும் சிவ மகிமையைப் போதித்து, கடைசியில் பெருமானுடன் ஐக்கியம் ஆனாள்.  ஸ்ரீ சைல ஆலயத்தில் பின் பிராகாரத்தில் மல்லமாவின் பசுத் தொழுவம் இருக்கிறது. அருகில் மல்லம்மாவின் விக்கிரகமும் இருக்கிறது. 

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சோலாப்பூரில் 12 ம் நூற்றாண்டில் முத்தன்ன கெளட் -  சுகுலா தேவி என்ற வயோதிக தம்பதியர் வசித்து வந்தனர். பிள்ளை இல்லாத அவர்களுக்குக் குலகுருவான ரேவண சித்தர்  ஒருநாரத்தம் பழத்தைக் கொடுத்து, சிவ பூஜை செய்து வருமாறு ஆசி வழங்கினார். அப்படியே  செய்த அத்தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்தான். சித்தர் அருளால் பிறந்ததால் அக்குழந்தைக்கு ஸித்தப்பா  எனப் பெயரிட்டனர். அச் சிறுவனுக்கு ஆறு வயதான போது ஒரு வயோதிகர் அவன் முன் தோன்றித்  தன் பெயர்  மல்லையா என்றும் தான்  மிகவும் பசியோடு இருப்பதாகவும் கூறவே, ஸித்தப்பா  ஓடோடிச் சென்று அவரது பசி தீர்க்க வேண்டி உணவும் பாயசமும் கொண்டு வந்தான். ஆனால் அங்கு வயோதிகர் காணப்படவில்லை. அவரது பெயரைக் கூவிக் கொண்டு ஸ்ரீ சைலம் செல்லும்  பக்தர்களோடு உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஸ்ரீ சைலத்தை அடைந்தான். மல்லையா என்பவரைப் பார்த்தீர்களா என்று பக்தர்களைக் கேட்டபோது, அதற்கு அவர்கள் மல்லிகார்ஜுன லிங்கத்தைக் காட்டி, " இவரே மல்லையா " என்றனர். சிறுவனானபடியால் அதனை நம்பாமல் தேடுவதைத் தொடர்ந்தபோது ஓரிடத்தில் கையிலிருந்த பாயசத்துடன் ஒரு பள்ளத்தில் தவறிப்போய் விழும் தருவாயில் சுவாமி அவன் முன் தோன்றி அவனைக் காப்பாற்றினார். இன்று அப்பள்ளம் , ஸித்தராமப்பா குளம் எனப்படுகிறது.  பின்னர் தனது ஊரை அடைந்த ஸித்தராமப்பா , அங்கு ஓர் சிவாலயத்தைக் கட்டினான். அதில் வேலை செய்தவர்களுக்குக் குளத்து மண்ணைக் கூலியாகக் கொடுத்தான். அது தங்கத் துகளாக மாறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் , தான் வெட்டியகுளத்திலேயே ஜீவசமாதி அடைந்தான். பிற்காலத்தில் அங்கு ஸித்தராமேஸ்வரர்  ஆலயம் எழுப்பப்பட்டது.  

ஸ்ரீ சைலத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கேசப்பா என்ற குயவன் மண்பாண்டங்கள் விற்று அந்த வருமானத்தில் சிவ பக்தர்களுக்கு அன்னம்  பாலித்து வந்தான். அதனைக் கண்டவர்கள் அவனது மண்பாண்டங்களையும் சக்கரத்தையும் உடைத்து விடவே, சிவராத்திரிக்கு வரும் பக்தர்களுக்கு எவ்விதம் உணவு அளிப்பேன் என்ற ஆழ்ந்த கவலையோடு இருந்தான். அப்போது அவனது வீட்டுப் பரணில் சுவாமி தங்கலிங்க மயமாகப் ப்ரத்யக்ஷமாகி, "அஞ்சாதே, உனது வீட்டில் குறைவில்லாமல் எப்போதும் உணவு அளித்து வருவாயாக "  என்று அருளினார்.  வீட்டிற்குள் சென்ற கேசப்பா, பாத்திரங்கள் நிறையப் பல உணவு வகைகளைக் கண்டு, திருவருளை வியந்தவனாக, அடியார்களுக்கு அன்னம் பாலித்தான். அவ்வாறு பெருமான் அவனுக்குக் காட்சி அளித்த இடம், அடிகேச்வரம்  எனப்படுகிறது. 

ஸ்ரீசைலத்தைச் சேர்ந்த உமாமகேசுவரத்தில் இருந்த சிற்பி இரு நந்தி சிலைகளைச் செய்தான். அவற்றை கிருஷ்ணா நதியைத் தாண்டி எவ்வாறு ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தான். அவனது கனவில் தோன்றிய இறைவன், ஒரு கயிற்றைக் கொடுத்து, அதைக் கொண்டு நந்திகளைத் திரும்பிப் பார்க்காமல் இழுத்துச் செல்லும்படி கட்டளை இட்டார். துயில் நீங்கிக் கயிற்றைக் கண்ட சிற்பி, அதைக் கொண்டு இரு நந்திகளையும் பிணைத்து இழுத்து வரும்போது, ஒரு நந்தி  பாறைகளிடையே சிக்கவே, திரும்பிப் பார்த்தான். அதனால் அந்த நந்தி அங்கேயே நின்று விட்டது. மற்றொரு நந்தியை மட்டுமே ஸ்ரீ சைலத்திற்குக் கொண்டு வந்தான் என்று  சொல்வார்கள். ஆற்றின் நடுவில் உப்பிலி பசவண்ணா என்று பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்த நந்தி இப்போது ஸ்ரீ சைலம்  அணைக்கட்டில் ஆழத்தில் மூழ்கி இருக்கிறது.  

சிறப்பம்சம்:

பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதார ஸ்தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் உள்ளது.

ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அத்துடன் அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார்.

நந்தியை தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்குள்ள மிகப்பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.

மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீசைலம் – பக்தி ஞானம் உலகப்பற்றின்மை ஆகியவற்றிற்கு புகழ் பெற்றது. ஸ்ரீசைலம் வேதாந்திகள், பரமயோகிகள், சித்தி பெற்ற புருஷர்கள், மகாதவசிகள், இருக்கும் தவஸ்தலமே இப்புண்ணிய ஷேத்திரம் இதற்கு தட்சிண கைலாசம் என்ற பெயரும் உண்டு.

கிருதாயுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் அவதாரபுருஷரான ஸ்ரீ ராமரும் துவாபரயுகத்தில் பாண்டவர்களும் கலியுகத்தில் சத்ரபதி சிவாஜியும், ஆதிசங்கரரும், பூஜைகள் செய்த புண்ணிய ஷேத்திரம்.

ஸ்ரீசைல சிகரத்தை தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லை. இந்த புண்ணிய தலத்திற்கு ஈடானது எங்கும் என்றும் இல்லையென இதன் புகழ் பரவிக்கிடக்கின்றது.

ஸ்ரீபர்வதம், ஸ்ரீநகரம், ஸ்ரீ கிரி, ஸ்ரீ சைலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்த ஷேத்திரம் நல்லமல என்னும் மலைக்காட்டு பகுதியில் (ஆந்திரா கர்நூல் மாவட்டத்தின்) கிருஷ்ண நதிக்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது. ஸ்ரீபிரம்மராம்பா தேவி பதினெட்டு மஹாசக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறாள். சித்தி பெறுபவருக்கும், சாமான்ய பக்தருக்கும் அபூர்வமான அனுபவத்தை இந்த ஷேத்திரம் கொடுக்கின்றது.

எல்லா கோயில்களிலும் குளித்து கைகால்கள் கழுவி ஒன்றும் சாப்பிடாமல் கடவுளை தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இங்கு எந்த வித நித்திய கர்மங்களையும் செய்யாமல் மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்யலாம். இதற்கு தூளி தரிசனம் என்பர். தூய்மையான மனதோடு, சாதி, மத பேதமின்றி மூலவரான ஜோதிர் லிங்கத்தின் தலையை தொட்டு வணங்கலாம். வெறும் தரிசனத்தினாலேயே எல்லாவிதமான சுகங்களையும் பக்தர்கள் அனுபவிப்பார்கள் என்ற பெயரும் புகழினை பெற்றிருக்கும் இறைவன் ஸ்ரீமல்லிகார்ஜுனசுவாமி ஆவார்.

மராட்டிய மன்னர் மாவீரன் சிவாஜி ஸ்ரீசைலம் மலைக்காடுகளில் இயற்கை எழிலைக்கண்டு தன்னை மறந்து இங்கேயே தங்கினார். படைவீரர்களை தெற்கு நோக்கி யாத்திரை தொடங்க உத்திரவிட்டான். ஸ்ரீ மல்லிகார்ஜுனேசுவரரை தரிசித்து 10 நாட்கள் உபவாசம் இருந்து தியானத்தில் ஈடுபட்டான். தீவிர பக்தியாலும் தனது வைராக்கிய மனோபாவத்தாலும் மனைவி மக்களை மறந்து இங்கேயே எஞ்சிய வாழ்க்கையில் கழித்துவிட எண்ணினான். அப்போது அவருடன் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அந்நிலையில் ஸ்ரீ பிரம்மராம்பாதேவி பவானி வடிவத்தில் சிவாஜிக்கு காட்சி தந்தருளி திவ்யகட்கத்தை (பெரிய வாள்) அளித்து கடமை உணர்வை போதித்து, பகைவரை அழித்து வெற்றி யாத்திரையை நடத்திட வாழ்த்தினாள். தனது பக்தியின் நினைவாக இத்தலத்தில் வடக்கு கோபுரத்தையும், தியான மந்திரையும் உருவாக்கி அன்று முதல் பல வெற்றிகள் பெற்று சத்ரபதி சிவாஜி என்ற பெயருடனும் பெருமையுடனும் அழைக்கப்படுகிறார். 

தல சிறப்பு:

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நந்திதேவர் அவதரித்த தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது. ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சைல சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 268 வது தேவாரத்தலம் ஆகும். நந்தியே மலையாக சிவனை தாங்குகிறார். விநாயகர் சித்தி புத்தியரை மணந்த தலம்.

தோற்றம்:

ஸ்ரீசைலம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்த புராணத்தில் சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக் கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது. அத்துடன் கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் நாயன்மார்கள் இக் கோயிலைப் பாடியுள்ளனர். ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஒரு அம்பாள் பக்தர் ஆவார், அம்பிகையை வணங்கி அவரிடம் பெற்ற வாளைக் கொண்டு அவர் எதிரிகளை அழித்து தன் தர்ம ராஜ்ஜியத்தை நிலைநாட்டினார் அதன் நினைவாக பிரம்மராம்பிகை அம்மன் கோவிலின் வடக்குப்புற கோபுரத்தை 1677இல் கட்டினார், எனவே இன்றளவும் அது சிவாஜி கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது. வீர சிவாஜிக்கு பிரம்மராம்பிகை அளித்த வாள் இன்றளவும் பாதுகாக்கப் படுகிறது.

கோயில் அமைப்பு:

இக்கோயிலானது 20 அடி உயரமும், 2121 அடி நீளமுடைய கோட்டைச் சுவர் போன்ற திருச்சுற்று மதில்களைக் கொண்டுள்ளது. இந்த மதிற்சுவரின் வெளிப்புறத்தில் நான்குபுறங்களிலும் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், போர்க்காட்சிகள், பார்வதி திருமணம், அர்சுணன் தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம், சிவதாண்டவம், கஜாசுர சம்காரம், சிபிசக்கரவர்த்தி கதை, தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைதல், கண்ணப்பர் கதை, மகேசுவரர் விசுவரூபம், மகிடாசுரமர்தினி போன்ற பல சிற்பங்களைக் கோண்டதாக உள்ளன.

கோயிலின் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் உள்ளன. கிழக்குப்புறமுள்ள கோபுரம் கிருஷ்ணதேவராயராயரால் கட்டப்பட்டதால் அவர் பெயராலேயே கிருஷ்ணதேவராயர் கோபுரம் என அழைக்கப்படுகிறது. வடக்குப்புற கோபுரமானது சத்ரபதி சிவாஜியால் 1677இல் கட்டப்பட்டதால் சிவாஜி கோபுரம் என அழைக்கப்படுகிறது. மேற்குப்புற கோபுரமானது கோயில் நிர்வாகத்தால் 1966 இல் கட்டப்பட்டு பிரம்மானந்தராயா கோபுரம் என பெயரிடப்பட்டது. இவற்றின் மையத்தில் மல்லிகார்சுனர் கருவறை உள்ளது. இதன்மீது உள்ள விமானமானது காக்கத்திய மன்னரான கணபதியின் சகோதரியான மைலம்மா தேவியால் கட்டப்பட்டதாக அவரது கல்வெட்டின்வாயிலாக அறியப்படுகிறது. மல்லிகார்சுனர் சந்நிதிக்கு மேற்கில் சந்திரமாம்பா சந்நிதியும், கிழக்கே இராசராசேசுவரி சந்நிதிகளும் உள்ளன.

ஸ்ரீ  சைலத்தைப் பல நூல்கள்  புகழ்ந்து பேசுகின்றன. ஸ்கந்த மகா புராணத்தில் வரும் ஸ்ரீ சைல காண்டம், இத்தலத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. மேலும் மகாபாரத வன பர்வம், பத்ம புராண உத்தர காண்டம், மார்க்கண்டேய புராணம், சிவ புராண ருத்ர ஸம்ஹிதை, பாகவத பத்தாம் ஸ்கந்தம்,ஆதித்ய புராண சூத ஸம்ஹிதை,, ரச ரத்னாகர ரசாயன காண்டம், ஆதி சங்கரரின் சிவானந்த லஹரி, சோமேஸ்வரரின் கதா சரித்ர சாகரம், மாலதி மாதவம், பாணபட்டரின் காதம்பரி, ரத்னாவளி, ஆகியவை  இத்தலத்தின் மகிமையைக்  கூறும் நூல்களாகும். 

இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் விஜயநகர மன்னர்கள், சாளுவகாகதீய மன்னர்கள் காலத்தியவை என்று சொல்லப்படுகிறது.

கி.பி. 1 ம் நூற்றாண்டில் இத்தலம் சாத வாகனர்களால் சிரிதான்  என்று வழங்கப்பட்டது. புலமாவி என்ற சாதவாகன மன்னனின் நாசிக் கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. சாதவாகனர்களின் தோழர்களான இக்ஷுவாக்கள் இதனை ஸ்ரீ பர்வதம் என்று அழைத்தார்கள்.

பின்னர் நான்காம் நூற்றாண்டில் சிம்ம வர்ம பல்லவன் இப்பகுதியைத் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டான். த்ரிலோசனபல்லவன் என்பவன் ஸ்ரீ சைலக் காட்டின் ஒரு பகுதியைப் புனரமைத்து அந்தணர்களை அங்கு இருத்தினான். இப்பணியைப் பின்னர் பல்லவர்களை வென்ற சோழர்கள் செய்து முடித்தார்கள். நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த விஷ்ணுகுண்டியர்கள் இப்பகுதியை ஆண்டனர். அப்போது ஸ்ரீ சைல ஆலயம் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது. 

பின்னர்  கடம்பர்கள் இதனைச்  சிறிது காலம் ஆண்டனர்.  ஆறாம் நூற்றாண்டில் கரிகால் சோழனின் சந்ததியினர் கடப்பா, கர்னூல் பகுதிகளை ஆண்டனர். பின்னர் கி.பி. 973 வரை ராஷ்ட்ரகூடர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். மீண்டும் சாளுக்கியர்களது ஆட்சி மலர்ந்தபோது, சோழர்கள்  அவர்களை வென்றனர். 12 ம் நூற்றாண்டில் ஸ்ரீசைலம் காகதீயர்களின் வசமாயிற்று.  பிரதாப ருத்ரன் என்பவர் தன்  மனைவியோடு இங்கு வந்து மல்லிகார்ஜுனருக்குத்  துலாபாரம் தந்ததாக வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

ஆந்திரத்தின் 72 சிற்றரசர்கள் முகமதியர்களோடு போரிட்டு  மீண்டும் இந்து ராஜ்ஜியங்களை நிறுவினார்கள். இவர்களுள் அத்தங்கி வேமா ரெட்டி என்பவர் குறிப்பிடத்தக்கவர். அவரது குல தெய்வம் திரிபுராந்தகத்தில் உள்ள மூர்த்தியே ஆவார். ப்ரோலய ரெட்டி என்பவர் தன்னை  ஸ்ரீசைல மல்லி கார்ஜுனரின்  பாத சரண தாசன் என்று சொல்லிக் கொண்டார். ஸ்ரீ சைல மலை ஏறி வரும் பக்தர்களுக்காக ரெட்டி மன்னர்கள் படிக்கட்டுக்களை அமைத்ததாக சாசனங்கள் மூலம்  அறிகிறோம். ஸ்ரீ சைலத்தில் பாதாள கங்கை எனப்படும் கிருஷ்ணா நதிக்குச் செல்வதற்குப்  படிக்கட்டுக்கள் கட்டப்பட்டன.  அன மேவா ரெட்டியின் ஆட்சிக்கு ஸ்ரீ சைலம், மகா நந்தி பகுதிகள் உட்பட்டன.

விஜயநகரப் பேரரசு இப்பகுதியை வசமாக்கிக் கொண்ட பிறகு, ஆலய முன் மண்டபம், தெற்கு கோபுரம்  ஆகியவை கட்டப்பெற்றன. நிறைய தானங்கள் அளிக்கப் பட்டன. கிருஷ்ண தேவ ராயர் காலத்தில் கிழக்கு கோபுரமும் ரத வீதியில் மண்டபங்களும் கட்டப்பட்டன. விமானத்திற்குத் தங்க முலாம் பூசப்பட்டது. பிற்காலத்தில் அனேக பக்தர்கள் மூலம்  கொடிமரம், நந்தவனம், கோயில் மணி ஆகியவை அளிக்கப்பட்டன. 

கி.பி. 1674 ல் சத்ரபதி சிவாஜி மகாராஜ்  இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தார். பிற்காலத்தில் ஸ்ரீ சைல ஆலயத்தின் மீது படையெடுப்பு நிகழ்ந்தபோது மராட்டிய வீரர்கள் கடைசி வீரன் உள்ளவரை போரிட்டதாகக் கூறுவர். அவர்களது சந்ததியினர் இன்றும் ஆண்டுக்கு ஒரு முறை  தங்களது முன்னோரது நினைவாக இங்கு வருகை தந்து வழிபடுகிறார்கள்.

ஆலயத்தின் கிழக்குக் கோபுரம் கிருஷ்ண தேவராயரால் 15  ம்  நூற்றாண்டில் கட்டப்பட்டது. வடக்குக் கோபுரத்தை  கி.பி. 1677 ல்  சத்ரபதி சிவாஜி கட்டினார். பின்னர் மேற்கு கோபுரம், 1966 ல் கட்டப்பட்டது. மல்லிகார்ஜுன சுவாமியின் விமானம் கி.பி. 1230 ம் ஆண்டு காகதீய கணபதி ராஜனின் சகோதரி மைலம்ம தேவியால் கட்டப்பட்டது.ஆலயத்தின் முன்புறம் உள்ள ரங்க மண்டபத்தை  விஜய நகர அரசர் இரண்டாம் ஹரிஹர ராயர் கட்டினார்.

ஒரு காலத்தில் ஸ்ரீ சைலம் வரை மலை ஏறி வர இயலாதவர்கள் ஸ்ரீ சைல பர்வதங்களிலேயே மிக உயரமான (  2830 அடிகள் ) சிகரேசுவரத்தைத்  தரிசித்தபடியே மல்லிகார்ஜுனசுவாமியைத் தியானிப்பார்கள்.  இங்கிருந்தபடியே, ராமபிரான் , மல்லிகார்ஜுனரைத் தரிசித்ததாகச் சொல்வர்.  8 கி.மீ  தொலைவிலுள்ள இச்சிகரத்தின் மேலுள்ள வீர சங்கர சுவாமிக்குப் பக்தர்கள் செக்கில் எள்ளை  ஆட்டி  அதனைப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து நந்தியின் கொம்புகளுக்கு     இடையிலிருந்து மல்லிகார்ஜுன ஆலய சிகரத்தைத் தரிசிக்கிறார்கள். 

திருவிழா:

தெலுங்கு வருடப்பிறப்பு, ஆவணி மாத சப்தமி பூஜை, மஹா சிவராத்திரி, யுகாதி பண்டிகை, கார்த்திகை சோமவாரம் திருவிழா, பிரதோஷம்

திறக்கும் நேரம்:

காலை 5 மதியம் 3 மணி, மாலை 5.30 – இரவு 10 மணி. காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.

முகவரி:

அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம் – 518 100. (திருப்பருப்பதம்), கர்னூல் மாவட்டம், ஆந்திரமாநிலம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

Followers

சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை மிகவும் விசேஷமானது.

_வில்வ மரத்தை வழிபட்டால் பல சிவ க்ஷேத்திரங்கள் போன பலன் கிடைக்கும்_ 'பிரும்மா விஷ்ணு சிவன்' என்ற மும்மூர்த்திகளைத் தன்னக...