Saturday, October 26, 2024

1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் ஸ்ரீ ராமானுஜர் பூத உடல்.

ஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்...!
ஆதிசேஷனின் அவதாரம் 
என்றென்றும் நிலைத்திருக்கும்
இராமானுஜர்..

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.

இராமானுஜரின் பூதவுடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு, இன்றளவும் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் பச்சைக் கற்பூரமும், குங்குமப்பூவும் கொண்டு அபிஷேகம் செய்து வருகிறார்கள். அமர்ந்த நிலையில் சற்றே பெரிய திருமேனியாக இராமானுஜரை இன்றும் நாம் ஶ்ரீரங்கத்தில் உடையவர் சந்நிதியில் தரிசிக்கலாம் (உடையவர் என்பது இராமானுஜரின் சிறப்புப் பெயர்).

இந்த அதிசய செய்தியை இந்துக்களிலேயே பலரும் அறிந்திருக்கவில்லை.

ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியே ஸ்ரீராமனுஜர் சந்நதியை பார்ப்பவர்கள் ஸ்ரீராமானுஜரின் பூத உடல் என்று அறிவது இல்லை, சந்நதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்து கடந்துப் போகிறார்கள்.

தானான திருமேனி (இராமனுசர் பூதஉடல்) இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.
இராமானுஜர் தமது 120-ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார்.

அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர்.

அவரது உயிர் பிரிந்த உடனே:
தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது! என்பர்.

நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த ஆடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம்.

உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி, அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த ஆடையையும் சூடிக்களைந்தத் தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம்.

பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் “பிரம்மமேத ஸம்ஸ்காரம்” என்கிறார்கள்.

இதன் பின்பு இராமானுஜரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு, இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும், ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம்.

பல்லாயிரக்கணக்கான சீடர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுஜர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர்.

தொடர்ந்து ‘இராமானுஜர் நூற்றந்தாதி” ஓதியபடி ஶ்ரீரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.

ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர்.

மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுஜர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது

தரிஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார்! என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.

தொடர்ந்து அரங்கன்

“இராமானுஜன் என்தன் மாநிதி

என்றும்

இராமனுஜன் என்தன் சேமவைப்பு”

என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம்! அரங்கன்.

அதாவது இராமானுஜர், எனது மிகப் பெரும் செல்வம்; எனது சேமநிதி! என அரங்கன் திருவாய் மலர்ந்தருளினார்.

நமது பணத்தை. நாம் வங்கியில் நிரந்தர சேமிப்பு வைப்பு நிதியாகப் பாதுகாப்பதைப் போல; அரங்கன், இராமரின் தம்பி இலட்சுமணரின் அவதாரமான இராமனுஜரை என்றென்றும் பாதுகாத்து வைத்திட அருள் செய்தார்.

அப்படியானால் பிற சிரஞ்ஜீவிகளைப் போல இவரையும் ஏன் என்றென்றும் உயிரோடிருக்கச் செய்யவில்லை?

என்றால், கலியுகம் அந்தப் பாக்கியத்தைப் பெறவில்லை! எனலாம். உயிர் பிரிந்து பூதவுடலானாலும் திருமேனி எப்போழுதும் அடையாதிருப்பதே இறைபக்தி மற்றும் இறை நம்பிக்கையற்றவர்கள் இதைக் கண்ணாரக் கண்டு, அறிவு பெற்றிட வேண்டும்! என்பது திருமாலின் திருவுள்ளமாக இருக்கலாம்.

எனவே இராமனுஜரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சந்நதிக்குள்ளேயே, (யதிஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்! பெரியோர்கள்.

பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. 

இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் சந்நதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு

தானான திருமேனி என்று பெயர்.

ஆதிசேஷனின் அவதாரமல்லவோ இராமானுஜர்! இலட்சுமணரின் மறுபிறவி அல்லவோ இராமனுஜர்,

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்... 

No comments:

Post a Comment

Followers

சக்திவேல் வாங்கும் நிகழ்வு மற்றும் சிங்காரவேலருக்கு வியர்க்கும் அதிசயம்..

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்...