Saturday, October 5, 2024

பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோவில்...


#மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான 
#சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள 
*சந்தரபாகா ஆற்றங்கரையில் அமைந்துள்ள 
#பண்டரிபுரம்
(#பந்தர்பூர்)
#பாண்டுரங்க_விட்டலர் 
#ரகுமாயி_தாயார் திருக்கோயில் வரலாற்றையும் கோயில் புகைப்படத் தொகுப்பையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 

இந்தியாவின் முக்கிய வைணவத் தலங்களில் சிறப்புடன் விளங்குகிறது மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரம் பாண்டுரங்க சுவாமி-ருக்மணி திருக்கோயில்.
 இந்து மதத்தில் சைவ, வைணவத் திருத்தலங்கள் பல உள்ளன. ஆழ்வார்களால் பாடல் பெற்றவை 108 திவ்ய தேசங்களாக கருதப்படுகின்றன. தென்னிந்தியாவிலேயே பெரும்பாலான திவ்யதேசங்கள் உள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் எனப்படும் பந்தர்பூரில் "விட்டல்-ருக்மணி கோயில்' எனப்படும் பாண்டுரங்க சுவாமி கோயில் உள்ளது.
 கிருஷ்ணா நதியின் கிளை நதியான பீமா நதியின் கரையில் அமைந்துள்ளது, 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில். 
இக்கோயிலின் மூலவர் விட்டலர் ஆவார். தாயார் ருக்மணி ஆவார். இக்கோயிலின் முக்கிய கிழக்கு நுழைவாயில் விட்டல பக்தரான சோகா மேளரின் சிறு சமாதிக் கோயில் உள்ள்து. வைணவ சமயத்தின் வர்க்காரி நெறியைப் பின்பற்றும் மகாராட்டிரா வடக்கு கர்நாடகா, தெற்கு தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டவர்களுக்கு இக்கோயில் மிகவும் புனிதத் தலம ஆகும். மகாராட்டிராவின் பல பகுதிகளிலிருந்து அடியவர்கள் விட்டலர் மீதான பக்தி பஜனைப் பாடல்களுடன் பாடிக்கொண்டே ஊர்வலமாக, ஆடி மாத ஏகாதசி மற்றும் கார்த்திகை மாத ஏகாதசி அன்று விட்டலர் கோயிலுக்குச் புனித யாத்திரையாகச் செல்வது வழக்கும்.
நாமதேவர், துக்காராம், ஞானேஷ்வர், புரந்தரதாசர், சோகாமேளர் மற்றும் ஜனாபாய் போன்ற வைணவ அடியவர்களால் பகவான் விட்டலரின் குறித்து அபங்கம் எனும் பதிகங்கள் பாடப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக, 2014-ஆம் ஆண்டிலிருந்து, இந்து சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வைணவர்கள் இக்கோயிலில் பூசாரிகளாக பணியாற்றுகிறார்கள்.

இக்கோயில் புனேவிற்கு தென்கிழக்கே 211 கிலோ மீட்டர் தொலைவிலும், சோலாப்பூருக்கும் மேற்கே 74 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள் தொடருந்து நிலையம் சோலாப்பூரில் உள்ளது.

#கோயில் அமைப்பு:

பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலர் கோயிலின் முக்கிய கிழக்கு நுழைவாயில் சந்திரபாகா ஆற்றை நோக்கி அமைந்துள்ளது. கோயில் நுழைவு வாயில் அருகே சோகாமேளர், நாமதேவர் ஆகியோரின் சமாதிகள் உள்ளது. இவர்களது சமாதிகளை தர்சனம் செய்த பிற்கு கோயில் முதல் மண்டபத்தில் உள்ள விநாயகர், கருடன் மற்றும் அனுமாரையும் தர்சனம செய்த பின்னர் இரணடாம் கட்டமாக பஜனை கூடத்திற்கு செல்ல வேன்டும். பின்னர் சில படிகள் ஏறி மூன்றாம் கட்டமாக விட்டலரை தர்சனம் செய்ய மூல மண்டபத்திற்குச் செல்ல வேண்டும். கருவறையில் விட்டலர் இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு, நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் அனைவரும் விட்டலரின் பாதங்களை தொட்டு வணங்கி வழிபடலாம்.

ஆலயத்துக்கு நான்கு வாசல்கள் உள்ளது. கோயிலின் கிழக்கு வாயிலுக்கு நாமதேவர் வாசல் என்று பெயர். கையில் தம்புராவுடன் இறைவனின் இசையில் மூழ்கியிருக்கும் நாமதேவரின் பித்தளைச் சிலை இங்கு உள்ளது. இந்தப் பிரதான வாயிலின் வழியே உள்ளே நுழைந்தால் கருவறையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு மகாமண்டபம். இங்கே எழுந்தருளியிருக்கும் தத்தாத்ரேயரையும், கணபதியையும் தரிசித்துவிட்டுச் சென்றால், அடுத்து வருவது அழகியதொரு மண்டபம்.

வழவழப்பான 16 கருந்தூண்கள் தாங்கும் இந்த மண்டபத்தில் ஆங்காங்கே மாடங்கள். ஒரு மாடத்தில், பளிங்கில் செதுக்கப்பட்ட நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். இன்னொரு மாடத்தில் சிருங்கார ராதாவும், அவளது மையலில் மயங்கியிருக்கும் கிருஷ்ணனும் காட்சி தந்து, அந்த மண்டபத்துக்கு அழகு சேர்க்கிறார்கள். மற்றும் ஒரு மாடத்தில், செந்தூரத்தில் மூழ்கிய கோலத்துடன் கணபதி தரிசனம் தருகிறார்.
இந்த மண்டபத்தில், ஒரு தூணுக்கு முழுக்க முழுக்க வெள்ளிப் பூண் போடப்பட்டிருக்கிறது. இந்தத் தூணுக்குக் கருட கம்பம் என்று பெயர். புரந்தரதாசர் கம்பம் என்ற காரணப்பெயரும். ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பாண்டுரங்கனைத் தரிசிக்கும் முன், இந்தத் தூணை ஆரத்தழுவி வணங்குகிறார்கள். அவ்வாறு செய்தால் தங்களது பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம். இந்த மண்டபத்தில் இருக்கும் கருந்தூண்களில் 64 மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மட்டுமின்றி, மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களும் சிற்பங்களாக இந்தத் தூண்களில் இடம் பெற்றுள்ளன.

கருவறைக்கு வெளியே ஜய, விஜய துவார பாலகர்கள். ஒரு கண்ணாடிப் பேழையில் திறந்த நிலையில் காட்சியளிக்கும் வேதநூல். அருகில், துக்காராமின் பாதுகைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மக்கள் துக்காராம் பாதுகைகளைக் கண்ணில் ஒற்றிக் களிப்பெய்திய பின்பு, கருவறை நாடி நடக்கிறார்கள்.
இக்கோயிலிலின் வேறு மண்டபத்தில் கிருஷ்ணரின் மனைவியான ருக்மணி தேவி, சத்தியபாமா, மகாலெட்சுமி மற்றும் ராதை மற்றும் விஷ்ணுவின் அவதாரங்களான நரசிம்மர், வெங்கடாஜலபதி ஆகியோர்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. ராதை மற்றும் கோபியர்களுடன், பால கிருஷ்ணர் ராசலீலை ஆடுவது போன்று, பக்தர்கள் ஆடிப்பாடி விளையாடுவதற்கு, கோயிலில் தனியொரு மண்டபம் உள்ளது.

ஸ்ரீபண்டரிபுரம் பாண்டுரங்கன்
பண்டர்பூர் ஒரு சின்ன கிராமம்தான். அந்தப் பழமையான கோயில்தான் பிரதானம். பண்டரி யாத்திரை ஆத்ம சுகத்தை அளிக்கும் என்று நாமதேவர் கூறுகிறார். ”பரப்ரஹ்ம ஸ்வரூபமே பாண்டுரங்கன்…அவனைப் பாடுங்கள்!” என்கிறார் ஆதிசங்கரர். சந்த் ஞானேஸ்வர் முதல் துக்காரம் வரைப் பல பக்தர்கள் பாடிய ஆயிரக்கணக்கான அபங்கங்கள் பக்தியில் நம்மைத் திளைக்க வைக்கின்றன. தினமும் 24 மணிநேரமும் பகவான் நாம சங்கீர்த்தனம் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஒரே புண்ணியக்ஷேத்திரம் பண்டரிபுரம்.
“ஜெய் ஜெய் ராமகிருஷ்ண ஹரி” என்ற ஒரே நாமம் எங்கும் ஒலித்தபடியே இருக்கும் பண்டரிபுரத்தில், பக்தர்கள் ஒவ்வொருவரும் தனது பாதக் கமலங்களைத் தொட்டு வந்தனம் செய்யும் பாக்கியத்தை அருளும் ஸ்ரீவிட்டலும் மாதா ஸ்ரீருக்மிணியும் (ஸ்ரீ ரகுமாயி) இங்கு சந்த்ரபாகா நதிக்கரையில் கோயில் கொண்டுள்ளார்கள்.
ஸ்ரீகிருஷ்ணன் தனது பட்டத்து ராணி மாதா ஸ்ரீருக்மிணிதேவியுடன் வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்ட புண்ணிய பூமியாம் இது. அதற்குச் சாட்சியாகப் பல விஷயங்கள், பல இடங்கள், பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப் பட்டு வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் என்று எங்கு சென்றாலும் ஸ்ரீ கிருஷ்ணனின் புகழ்தான் அங்கு பாடப்படுகிறது. அதைத் தெரிந்துகொண்டுப் பார்க்கப் பார்க்க நம்மையும் மீறி ஒரு பரவசம் நம்மைச் சூழ்ந்து கொள்ளும்.                                                                                                                                                                       பண்டரிபுரத்தை தமது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று சந்த்ரபாகா நதியில் நீராடி, ஸ்ரீ விட்டலைத் தரிசனம், பிரதஷிணம், நாம சங்கீர்த்தனம் செய்வதால் நமது பிறவிப் பயன் அடைகிறது என்று பக்த துக்காராம் கூறுகிறார்.  சந்த்ரபாகா நதி (கங்கைக்கும் பழையது – மிகவும் புராதனமானது என்று சொல்லப்படுகிறது).
இனி இந்தப் புண்ணிய க்ஷேத்ரத்தின் தல வரலாறு, அதன் மகிமை என்று சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும், அதையே ’வீடு தேடி வருவான் விட்டலன்’ என்னும் நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீமுரளிதரன் சுவாமிகள் வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமையில் ’விஜய் டிவி’யில் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வருவதைப் பலர் கேட்டிருக்கக் கூடும் என்பதாலும், அந்தப் புராணம் மிகவும் பெரிதாக இருக்கும் காரணத்தாலும், இதில் அத்தனை விபரங்களும் சொல்லாமல், ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் “தன்னை ஈன்ற பெற்றோர்களை யாரொருவர் மதித்து அன்புடனும் கருணையுடனும் பாதுகாக்கிறார்களோ அவர்களுக்கு பிரத்யக்ஷமாக உடனிருந்து காப்பான் விட்டலன்” என்னும் ஐதீகம் அங்கு நிலவுகிறது. அதற்குச் சாட்சியாக பல புராணக் கதைகளும் சொல்லப்படுகிறது. சில லீலைகளைப் படித்தால் கேரளத்து குருவாயூர் அற்புதங்களைப் போன்றே இருக்கிறது. பரந்தாமன் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மாநிலம் ஏது?
முடிந்த வரையில் சிறியதாக்கிச் சொல்ல முயற்சி செய்கிறேன்…
இன்று ஆடி மாதம் (ஜுலை) ஏகாதசியை மஹராஷ்டரத்தில் ’ஆஷாட ஏகாதசி’ என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். காவடிபோல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். பண்டரிபுரம் வரைப் பொடி நடைதான். நடு நடுவே சில பிரபுக்கள் பெரிய பந்தல் போட்டு அவர்களுக்கு வயிற்றுக்கு உணவும் படைப்பார்கள். சிறுவர்களும் இதில் கூட்டம் கூட்டமாகப் போவார்கள். அவர்கள் வாயில் ”பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா ” என்றும் ”விட்டல் விட்டல் ஜய ஜய விட்டல்” என்றும் விடாமல் நாமஜபம் வந்து கொண்டிருக்கும். அந்த நாமம் கேட்டாலே உடலெல்லாம் புல்லரிக்கும். இப்போது அந்த விட்டல் எப்படி வந்தார் என்ற கதையைப் பார்ப்போம்
லோக தண்டம் என்ற காட்டில் ஜன்னு என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் மனைவியின் பெயர் சாத்தகி. அவர்களுக்குப் பலவருடங்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் புண்டரீகன். அவன் பிறந்ததும் ஏன் பிறந்தான் என்று அவர்களுக்கு ஆகிவிட்டது. எதைப் பார்த்தாலும் அழிப்பான், துன்புறுத்துவான். நாய்மேல் கல் வீசுவான்; முயலின் காதைத் திருகுவான். இப்படி முரடாகவே வளர்ந்து பெற்றோர் பேச்சைக் கேட்காமல் பதிலுக்கு எதிர்த்துப் பேசவும் துணிந்தான்.

அவனுக்குத் திருமணம் செய்தால் வழிக்கு வருவான் என்று எண்ணிப் புண்டரீகனுக்கு அவன் தந்தை ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் அவன் செயலில் மாறுதல் இல்லை. வீட்டில் மனைவி இருக்கும்போதே வெளியில் இன்பம் தேடினான். அவன் தந்தை மனம் ஒடிந்து வருந்தி அவனுக்குப் புத்தி கூறினார். அதற்கு அவன், “அப்பா நான் என் இஷ்படிதான்
இருப்பேன். இந்த வீட்டில் எனக்குச் சுதந்திரமில்லை… ஆகையால் நான் வீட்டைவிட்டுப் போகிறேன்” என்று கத்தித் தன் மனைவியுடன் வீட்டைவிட்டு வெளியேறினான். அவன் பெற்றோர் மனமுடைந்துப் போனார்கள். பலநாட்களுக்குப் பிறகு அவர்கள் ஒரு குழுவுடன் காசி யாத்திரைக்குக் கிளம்பினார்கள்.
’தமக்கு ஒரே மகன் இருந்தும் விதி இப்படி ஆகி விட்டதே!’ என்று வருந்தி எல்லாவற்றையும் கடவுளுக்கே அர்ப்பணம் செய்து விட்டார்கள். அதே நேரத்தில் தன் தந்தை தாய் காசிக்குக் கிளம்பியதை அறிந்து புண்டரீகனும் ஒரு குதிரையின்மேல் தன் மனைவியுடன் காசிக்குக் கிளம்பினான்.வழியில் அவன் மனைவி தன் மாமனார் மாமியார் தள்ளாமல் காலில் செருப்புமில்லாமல் நடந்து வருவதைக் கவனித்துத் தன் கணவரிடம் அவர்களுக்கு உதவும்படிக் கூறினாள். ஆனால் அவன் “வாயை மூடிக்கொண்டு வா! அவர்கள் கிழங்கள்…வந்தால் நமக்குத்தான் கஷ்டம்” என்றான் இரக்கமில்லாமல்.
அங்கு ஒரு சத்திரம் தென்பட்டது. அங்குப் போய் சிறிது நேரம் களைப்பாறிவிட்டுச் செல்லலாம் என்று மனைவியுடன் அங்கு போனான். அதனருகில் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது. அங்கு குக்கூடக முனிவர் என்று ஒருவர் இருந்தார். பொழுது போகாமல் அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தான் புண்டரீகன். அங்கு ஒரு முனிவர் தென்பட்டார். உடனே அவரிடம் போய், ”காசி க்ஷேத்திரம் எங்கு உள்ளது?” என்று கேட்டான். “காசியா? எனக்குத் தெரியாதே“ என்றார் அவர். “இது கூடத் தெரியாமல் நீங்கள் என்ன முனிவர்?” என்று சீறிய புண்டரீகனிடம், “காசி என்ற இடத்திற்கு நல்ல பண்புள்ளவர்கள் தான் போக வேண்டும்! நீ போகவேண்டும் என்கிறாயே!!” என்றார் கேலியாக.
அதைக் கேட்டுக் கோபம் கொண்டு திரும்பவும் தன் இடத்திற்கு வந்து விட்டான் புண்டரீகன். இரவு தூக்கம் வராமல் வெளியில் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், மூன்று பெண்கள் ஆஸ்ரமத்துள் நுழைந்தனர். மூன்று பேரும் மிகவும் கருப்பாகவும், அழுக்குடன், கோரமாகவும் இருந்தனர். அந்த ஆஸ்ரமத்தில் நுழைந்த அவர்கள் பல வேலைகள் செய்தனர். ஒருத்தி வீடு கூட்டினாள்; மற்றொருத்தி வீட்டைத் துப்புரவாகத் துடைத்து அழகான கோலம் இட்டாள். அந்த முனிவரின் பாதத்தை நீரால் கழுவித் துடைத்து வணங்கினாள்; பின்பு அவர்கள் வெளியே வந்தனர். என்ன ஆச்சரியம்! மூன்று பேரும் மிகவும் அழகாகச் சுந்தரிகளாக வந்தனர்.
”இது என்ன மாயை! போகும் போது சகிக்க முடியாமல் இருந்தார்கள், இப்போது எப்படி இது?” என்று வியந்துபோன புண்டரீகன் அவர்களிடம் ஓடினான். “சுந்தரிகளே! நீங்கள் யார்? சொல்லுங்கள்!” என்று கேட்டபடி ஒருத்தியின் கையைப் பற்றினான். அவள் மிகவும் கோபம் கொண்டு கையை உதறிப் பின் சொன்னாள். “நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள். தினமும் பலர் குளிப்பதால் பாபம் சேர்ந்து, அந்தப் பாபத்தைக் கழுவ இங்கு வந்து சேவை செய்கிறோம்.
இந்தக் குக்கூட முனிவருக்குச் சேவை செய்து எங்கள் பாபத்தைப் போக்கிக் கொள்கிறோம். பாபம் எங்களிடம் சேரச் சேர அவலட்சணமாக மாறுவோம். இங்குத் தினமும் வந்து அதைப் போக்கிக் கொள்கிறோம். போன ஜன்ம புண்ணியத்தினால்தான் நீ எங்களைப் பார்த்திருக்கிறாய். இனியாவது திருந்தி உன் பெற்றோருக்குச் சேவை செய்! நீ இத்தனை நாட்கள் செய்த பாபத்தைப் போக்கிக் கொள்! உன் துர்க்குணத்தை மாற்றிக் கொள்! தாய் தந்தைதான் உனக்குத் தெய்வம் அவர்களை வணங்கு!” என்று கூறிவிட்டுச் சென்றனர்.
புண்டரீகன் ஏதோ மந்திரச் சக்திக்குக் கட்டுப்பட்டதுபோல் மனம் மாறினான். தான் செய்த தவறுகளுக்கு வருந்தினான். பின் கங்காதேவியிடம் கேட்டான், “இந்த முனிவர் யார்? இவரைத் தொழுதால் எப்படி பாவங்கள் விலகுகின்றன?” கங்கை சொன்னாள், ”அப்பா புண்டரீகா! இவர் கோவிலுக்குப் போனதில்லை; யாகம் செய்ததில்லை, தான தருமம் செய்ததில்லை. ஆனால் விடாமல் பெற்றோருக்குப் பணிவிடை செய்து வருகிறார். அவர்களே இவரின் தெய்வம். பாபம் செய்தவர்கள் இவர் பாதத்தைத் தொட்டாலே போதும்…பாபங்கள் கரைந்து போகும்!”
புண்டரீகன் மனம் நெகிழ்ந்து…”தாயே நான் என் பெற்றோருக்குப் பல அநீதிகளை இழைத்து விட்டேன். இப்போது திருந்தி விட்டேன்; இதோ இப்போதே போகிறேன்! அவர்களுக்கு மனம் உவந்து சேவை செய்வேன்” என்றான். காலையில் குக்கூட முனிவரைத் தரிசித்து அவர் பாதங்களைக் கழுவி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு பல சேவைகள் செய்தான், ஆசியும் பெற்றான். பின் தன் பெற்றோரைத் தேடிக் கண்ணீரால் அவர்தம் பாதங்களைக் கழுவினான். அதன்பின் அவன் உலகமே அவன் தாய் தந்தைதான்! அவனுக்கு வேறு ஒரு சிந்தனையும் இல்லை.
இதெல்லாம் பார்த்த ஸ்ரீகிருஷ்ணனும் ருக்மிணி தாயாரும் அவன் சேவையை மெச்சி அவனைப் பார்க்க வந்தனர். அவன் வீட்டு வாசலில் வந்து கதவைத் தட்டினர், ”புண்டரீகா புண்டரீகா!” வெளியிலிருந்து ஒலித்த குரல்கேட்ட புண்டரீகன், “யார்? யாராயிருந்தாலும் அங்கேயே நில்லுங்கள்! நான் பெற்றோரின் சேவையில் ஈடுபட்டுள்ளேன்” என்று ஒரு ஒரு செங்கல்லைக் கதவைத் திறந்து வீசி வீசிப் போட்டான். அந்த மாயக்கண்ணனும் ருக்மிணி தேவியும் பக்தனுக்காக அந்தச் செங்கல்மேல் நின்று இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தனர்.வெகு நேரம் கழித்துப் புண்டரீகன் கதவைத் திறந்தான்; பார்த்தான் கண்ணனை. தன்னை மறந்தான்; அப்படியே சாஷ்டாங்கமாக வணங்கினான். “இந்தப் பாபச் செயலுக்கு மன்னியுங்கள்! தங்களுக்குப் போய் செங்கல்லைப் போட்டு அதில் நிற்கவும் சொன்னேனே!” என்று வருந்தினான். “புண்டரீகா! உன் சேவையை மெச்சினேன்! ஏதாவது வரம் கேள்!” என்ற கண்ணபிரானிடம், “உங்கள் அருள் இருந்தாலே போதுமானது ஸ்வாமி!” என்றான் புண்டரீகன். ”புண்டரீகா! உன் சேவையினால் புகழ்பெற்ற இந்த இடம் இனிப் ’பண்டரிபுரம்’ என்று நிலைக்கட்டும்! நீ இங்கிருந்து எல்லோருக்கும் ஆசி வழங்கி வருவாய்! உன்னை எல்லோரும் ’விட்டல்’ என்று அழைத்து என்னையே உன்னிடம் காண்பார்கள்!” என்றான் கண்ணன். ஆடிமாதம் இந்த விட்டல் வந்ததால் அந்த ஏகாதசி அன்று மிகச் சிறப்பாக விரதம் இருந்து மராட்டியர்கள் கொண்டாடுகிறார்கள்.
பண்டரிபுரம் கோவிலின் உள்ளே செல்லச் செல்ல அழகான சிற்பங்கள் நிறைந்த கருங்கல் தூண்கள் காட்சியளிக்கின்றன. ஆண்டுகள் பல கடந்த கையெழுத்துப் படியில் எழுதப்பட்ட மஹாபாரதக் காவியத்தை கண்ணாடிப் பெட்டியில் பொக்கிஷமாக வைத்திருக்கிறார்கள்.
ஸ்ரீ விட்டலின் அருகில் சென்று அவரது திருப்பாதங்களில் நமது சிரசை வைத்து வணங்க அனுமதிக்கிறார்கள்.
சாளக்கிராமத்தில் அமைந்த, அழகாக இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கம்பீரமாகச் சிரிக்கும் விட்டலன் நம்மைப் பார்த்து ”வந்துவிட்டாயா?” என்று கேட்பது போலவே இருப்பது வியப்பு. துளசியும், சந்தனமும் மணக்க மணக்கத் தெய்வீகம் நிறைந்த கோவில் இது. தரிசனம் கண்டபின்பு ஏற்படும் பரவசத்திற்கு அளவேயில்லை. ஒரு நாள் வாடகையாக ரூபாய் ஆயிரத்தில் தங்கும் விடுதிகளும் நிறைய இருக்கின்றன.
எங்கும் பக்தியும், விட்டல் மீதான பிரேமையும் மட்டுமே பிரதானமாக இருக்கும் இந்தக் கோவிலைச் சென்று காணவேண்டும் என்ற ஆவல் நிச்சயம் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலரின் மனத்தில் ஏற்பட்டு விட்டல் பக்தியை வளர்க்கும் என்பது திண்ணம்.

பகவான் கிருஷ்ணர் இத்தலத்தில் பண்டரிநாதனாக எழுந்தருளியதற்கு பின்னணியில் புராண சம்பவம் உள்ளது:
 
ஜானுதேவர்-சத்யவதி தம்பதிக்குப் பிறந்தவர் புண்டரீகன். பெற்றோர் மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்த அவர், திருமணத்துக்குப் பின் மனைவின் பேச்சால், அவர்களை அவமதிக்கத் தொடங்கினார்.
 பெற்றோர் இருவரும் காசிக்கு செல்ல முடிவு செய்த போது, புண்டரீகன் மனைவி நாமும் செல்ல வேண்டும் என வற்புறுத்தினார்.
 இந்நிலையில், காசிக்குச் சென்ற போது, பெற்றோர் நடந்து சென்றனர். புண்டரீகனும், அவர் மனைவி குதிரையில் சென்றனர். குக்குட முனிவர் ஆசிரமத்தில் தங்கி ஓய்வெடுத்த போது, அங்கேயும் தனது குதிரைகளைப் பராமரிக்க வேண்டும் என பெற்றோரை துன்புறுத்தினார்
 புண்டரீகன்.
 
#புனித நதிகள்: 

குக்குட முனிவர் ஆசிரமத்துக்கு வரும் 3 பெண்கள் வரும்போது அழுக்கான உடைகளில் வருவர். அங்கு துப்புரவுப் பணிகளைச் செய்து முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, அப்பெண்கள் பளிச்சென்ற ஆடையுடன் செல்வர். இவ்வாறு தினமும் நடந்தது.
 இதைக்கண்டு ஆச்சரியமடைந்த புண்டரீகன், அந்த மூன்று பெண்களையும் அணுகி, இதுகுறித்து கேட்ட போது, ""நாங்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளாவோம். மக்கள் எங்களில் நீராடி தங்கள் பாவத்தைத் தொலைக்கின்றனர். அந்தப் பாவங்களைக் களைய நாங்கள் தினமும் ஆசிரமத்துக்கு வந்து தூய்மை அடைந்து திரும்புகிறோம்!'' என்று பதில் கூறினர்.
 "அது எப்படி?'' என்று கேட்டான் புண்டரீகன்.

 "தன் பெற்றோரை தெய்வங்களாகப் பாவித்து, அவர்களைப் பார்த்துக் கொள்ளும் குக்குட முனிவருக்கு சேவை செய்வதால், எங்கள் பாவங்கள் மறைகின்றன!'' எனக் கூறி மூன்று பெண்களும் மாயமானார்கள்.
 இதைக்கேட்ட அக்கணமே புண்டரீகன் மனம் திருந்தி பெற்றோருக்கு சேவை புரிவதைக் கடமையாகக் கொண்டார்.
 புண்டரீகனின் பெருமையை உலகிற்கு வெளிப்படுத்தத் தலைப்பட்டார் பகவான் கிருஷ்ணர். அப்போது கிருஷ்ணரிடம் கோபித்துக் கொண்டு ருக்மணி தனித்திருந்தார். அவரை துவாரகைக்கு அழைத்துச் செல்லும் வழியில், பெற்றோருக்கு சேவை புரியும் புண்டரீகனைக் காண்பிக்க எண்ணி, அவரது குடிலின் வாயில் முன் நின்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார் கிருஷ்ணர்.
 வெளியே சேறும் சகதியுமாக இருந்ததால், ஒரு செங்கல்லை வெளியே வீசி "அதன் மீது நில்லுங்கள், பெற்றோரை கவனித்து விட்டு வருகிறேன்'' எனக் கூறினார். பணிவிடைகளை முடித்தபின் புண்டரீகன் திரும்பினார். ஆனால் பொறுமை இழந்த ருக்மணி, வந்திருப்பது கிருஷ்ணர் என்பதை வெளிப்படுத்தினார்.
 இதனால் அதிர்ச்சி அடைந்த புண்டரீகன் அவரது காலில் விழுந்து வணங்கினார். "உன் பெற்றோர் சேவையில் மகிழ்ந்தேன். என்ன வரம் வேண்டும்?'' எனக் கேட்டார் கிருஷ்ணர்.
 அதற்கு ""நீங்கள் எழுந்தருளிய இத்தலம் புண்ணிய தலமாகத் திகழ வேண்டும். பக்தர்கள் தரிசிக்க விட்டலனாக அருள் புரிய வேண்டும்!'' என வேண்டினார்.
 அதனை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணர் "பீமா நதியில் புனித நீராடி என்னை வழிபடுவோரின் பாவங்கள் மறையும்'' என்றருளினார். "புண்டரீகபுரம்' என அழைக்கப்பட்ட இத்தலம் பின்னாளில் மருவி "பண்டரிபுரம்' ஆனது.
 
*#புரந்தரதாசர்: 

பாண்டுரங்கரின் பரம பக்தரான புரந்தரதாசர், ஒருமுறை அவரை தரிசிப்பதற்காக பண்டரிபுரம் சென்றிருந்தார்.
 நீண்ட தூர பயணத்துக்குப் பின் மண்டபத்தில் தங்கியிருந்த புரந்தரதாசர், கால் வலிக்காக வெந்நீரில் ஒத்தடம் தருமாறு தனது சீடர் அப்பண்ணாவிடம் கேட்டார். நீண்ட நேரம் கழித்து தாமதமாக வெந்நீருடன் அப்பண்ணா வந்தபோது, கோபம் கொண்ட புரந்தரதாசர் பாத்திரத்தை அவர் முகத்தில் வீசினார்.
 பின்னர் தனது செயலுக்காக வருந்திய புரந்தரதாசர் காலையில் அப்பண்ணாவைத் தேடிச் சென்று வருத்தம் தெரிவித்தார். ஆனால் ""நான் நேற்று இரவில் வரவில்லையே!'' என அப்பண்ணா கூறியதைக் கேட்டு அதிர்ந்தார் புரந்தரதாசர்.
 பின்னர் கோயிலுக்குச் சென்று பாண்டுரங்கனைத் தரிசித்த போது, சுவாமியின் முகத்தில் கொப்பளங்கள் இருந்ததைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தார்.
 "எனது கால் வலியை போக்க வந்த உங்கள் மீதே வெந்நீரை ஊற்றி விட்டேனே! மீண்டும் உங்கள் அழகு முகத்தைக் காண வேண்டுமே!'' என மன்றாடினார்.
 பின்னர், புரந்தரதாசர் ஒரு தூண் அருகே அமர்ந்து கண்ணீர் மல்க பல்வேறு பாடல்களை இயற்றினார்.
 
*#மூலவர் பாதங்களில் தொட்டு வழிபாடு: 

கருவறையில் இடுப்பில் கைகளை ஊன்றியவாறு ஒரு செங்கல்லின் மீது நின்று அருள் புரிகிறார் பாண்டுரங்கன். மூலவரின் முகத்தில் கொப்பளங்களின் தழும்புகள் இருப்பதை இப்போதும் காணலாம். ருக்மணி, ராதை, சத்தியபாமாவுக்கும் தனி சந்நிதிகள் உள்ளன.
 பக்தர்கள் நேராகவே பாண்டுரங்கனின் பாதங்களைத் தொட்டு வழிபடலாம். பண்டரிபுரத்தில் ரயில் நிலையம் உள்ளது. சோலாப்பூர், புணே, லத்தூர் உள்ளிட்டவை அருகே உள்ள பெரிய நகரங்களாகும். ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து மூலம் எளிதாக பண்டரிபுரம் செல்லலாம்.

#துக்காராம்:

பண்டரிபுரம் சென்றவர்கள் திரும்பியதே இல்லை. அந்த பூதம் அவர்களை அப்படியே சாப்பிட்டு விடுகிறதாம்!

துக்காராம், இதையெல்லாம் கேட்பவரா என்ன, அவரது கிருஷ்ண ப்ரேமைதான் அளவிடற்கரியதே!

விடோபா நகரமான பண்டரீபுரத்தில் சாதுக்களின் கூட்டங்கள் அன்றாடம் விட்டல, விட்டல என வாய் மணக்க பக்தி பரவசத்துடன் பாடியவாறு இருப்பர். மோக்ஷம் இங்கு விலையின்றிப் பெறலாம். (இலவசமாக) காரணம்? அதை வாங்குவோர் எவரும் இங்கில்லை. 
எங்களுக்கு வைகுந்தம் வேண்டாம், பண்டரி நாதனைப் பார்த்து விட்டோமென்பார்கள் இங்குள்ளவர்கள்.இதனை ஓர் அபங்கத்தின் (பாடலின்) வாயிலாக பெருமைபடக் கூறுகின்றார் மராட்டிய மஹான் துக்காராம் ஸ்வாமிகள்.

துக்காராம், துணிந்து பண்டரிபுரம் சென்றார்.

எல்லோரும் பயந்தது போலவே, துக்காராமும் திரும்பவில்லை.

ஆனால், என்ன, துக்காராம் இந்த நிலையில்லா உலகுக்கு திரும்பிடவில்லை.

பாண்டுரங்கன் பதமெனும் உயர்நிலையை அடைந்தபின், இந்த உலகும் ஒரு பொருட்டோ?

திருவண்ணமலைக்குக் காந்தமலை என்ற பெயருமுண்டே. திருப்பதி, சபரிமலை போன்ற இட்ங்களும் காந்த சக்தி மிக்கவை. மீண்டும் மீண்டும் செல்லும் ஆசையைத்தூண்டக் கூடியவை.

ஆடி மாதம் வரும் ஏகாதசி மஹராஷ்டரத்தில் ஆஷாட ஏகாதசி என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள், காவடி போல் தோளில் இருபக்கமும் பால் அல்லது தயிர் எடுத்துக்கொண்டு பண்டரிபுரம் சென்று பகவான் விட்டலைத் தரிசனம் செய்து விட்டு வருவார்கள். 

வீர சிவாஜி பவானி அம்மனின் மிகசிறந்த பக்தர். அவர் செய்யும் முக்கிய காரியங்களுக்கு முன் "ஜய் பவானி" என்ற முழக்கம் வரும் அன்னை பவானியைத்தவிர அவருக்கு ஸ்ரீபண்டரிநாதர் மீதும் அபரிமிதமான பக்தி இருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பண்டரிபுரம் சென்று சேவைச் செய்வார். அந்தக்கோயிலுக்கும் நிறைய உதவிகள் செய்துள்ளார்.

சிவாஜியின் குரு ஸ்ரீ ஸமர்த்த ராம்தாஸ். குருவுக்கு எப்போதுமே ராமநாமம் தான். ராமரைவிட்டு அவர் வேறு எவரையுமே நினைக்கமாட்டார். ஆனால் சிவாஜிக்கோ தன் குருவைப் பண்டரிபுரம் அழைத்துப்போக வேண்டும் என ஆசை. ஸமர்த்த ராமதாஸ் சீடனின் அன்புக்குக் கட்டுப்பட்டு ஒப்புக்கொண்டார். பண்டரிபுரம் கோயிலும் வந்தது. எங்கும் "விட்டல விட்டல பாண்டுரங்க விட்டல. பண்டரிநாத விட்டல" என்ற கோஷம் கேட்டபடியே இருந்தது. சத்ரபதி சிவாஜியும் பண்டரிநாதனை வணங்கியபடி உள்ளே நுழைந்தார். கூடவே மிகவும் மெதுவாக தயங்கியபடியே குருஜியும் உள்ளே நுழைந்தார். பின் தன் தலையைத் தூக்கியபடியே கர்ப்பகிரஹ மூர்த்தியைப்பர்த்தார்.

அங்கு அவர் கண்ட காட்சி........ நீல வர்ணம் கையில் வில் அத்துடன் சங்கு சக்கரம் கழுத்தில் துளசிமாலை. அங்கு ஸ்ரீராமபிரானே அவர் முன் தெரிந்தார். அப்படியே சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்தார். அங்கு அவர் கண்ட காட்சி........ நீல வர்ணம் கையில் வில் அத்துடன் சங்கு சக்கரம் கழுத்தில் துளசிமாலை. அங்கு ஸ்ரீராமபிரானே அவர் முன் தெரிந்தார்.  அப்படியே சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்தார்அப்பா விட்டலா, என்ன கருணை உனக்கு! எனக்காக நீ ராமனாகவே மாறி எனக்குத்தரிசனம் தந்துவிட்டாயே" என்றபடி கண்களில் நீர் வழிய இரு கரங்களையும் கூப்பி வணங்கினார். அன்றைய தினத்திலிருந்து அவரும் விட்டலனை வழிபட ஆரம்பித்தார். 

கீதையில் கண்ணன் "நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே நான் ஆகிவிடுவேன்" என்று சொன்னது எவ்வளவு உண்மை..

பண்டர்பூரில் அவதரித்த மஹான் நரஹரி என்பவர் விட்டல பாண்டுரங்கன் இருக்கும் பண்டர்பூரில் தங்க நகைகள் செய்யும் குலத்தில் பிறந்தவர். நகைகள் செய்யும் தொழிலில் அவரை யாரும் மிஞ்சமுடியாத அளவு கீர்த்தி பெற்றிருந்தார். நரஹரியோ தீவீர சிவ பக்தர். சிவனைத்தவிர வேறு தெய்வத்தை வழிபடமாட்டார். வெளியூரிலிருந்து ஒரு பணக்கார பாண்டுரங்க பக்தர் வந்தார். அவர் வந்த விஷயம் நெடுநாட்களாக அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து விட்டலனின் அருளால் ஒரு மகன் பிறந்தான். அவருக்கு வேண்டுதல் மகன் பிறந்தால் பாண்டுரங்கனுக்கு கேசாதி பாதம் தங்க நகைகள் செய்து போடுவதாய். ஊரில் விசாரித்ததில் எல்லோரும் நரஹரியின் பேரைத்தான் சொன்னார்கள். அவர் காலைப் பிடித்துகொண்டு கதறி எப்படியாவது நகைகள் செய்து தரவேண்டும் இல்லையென்றால் வேண்டுதலை நிறைவேற்ற முடியாத பாவியாகிவிடுவேன் என்று கெஞ்சினார்.

மிக நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அளவுடனும் நகைகளைச் செய்து கொடுத்தார். எல்லா நகைகளும் சரியாக நேராக வந்து அளவெடுத்துச் செய்தமாதிரியே இருந்தது ஒரு நகையைத்தவிர. அதுதான் விட்டலனின் அரைஞாண்கயிறு. அதைச் சாத்தியபோது இரண்டு விரக்கடை அளவு கம்மியாக இருந்தது. பக்தரும் மறுபடியும் நரஹரிவீட்டுக்கு ஓடிச் சென்று அரைஞாண் கயிறு அளவு போதவில்லை என்று கூறினார். நரஹரிக்கு நம்பிக்கையில்லை இருந்தாலும் உடனே இரண்டு விரக்கடை அளவு கூட வைத்து செய்து போட்டுப் பார்க்கச் சொன்னார். நரஹரிக்கு நம்ப முடியவில்லை. அவரது தொழில் திறமை மீது அவருக்கு அசாத்திய நம்பிக்கை.
நரஹரி தனது கண்களை ஒரு கறுப்பு வஸ்த்திரத்தால் இறுகக் கட்டிகொண்டார். அவரை விட்டல பக்தர் அழைத்துக்கொண்டு பாண்டுரங்கனின் விக்கிரகத்துக்கு அருகில் நிற்க வைத்து நரஹரி விட்டலனனின் இடுப்பு அளவை எடுத்துக்கொள்ளூங்கள் என்றார். நரஹரியும் வேண்டா வெறுப்புடன் பண்டரிநாதன் மீது கைகளால் தடவி இடுப்பின் அளவை ஒரு கயிற்றின் மூலமாக எடுக்க முற்பட்டார்.

முதலில் இடுப்பை தடவும் போதுநரஹரியின் கைகளுக்குபுலித்தோல் தென்பட்டது. நரஹரி ஆச்சர்யத்துடன் தன்னை மறந்து மேலே கைகளை கொண்டு சென்று மேலும் தடவினார். இப்போது விக்கிரஹத்தின் கழுத்தில் ருத்ராக்ஷமாலை பட்டது. பின்னர் தேடும்போது வழ வழவென்று பாம்பு போன்ற வஸ்து பட்டது, மேலும் கைகளின் ஒரு புறம் டமருகம்மும், திரிசூலமும் பட்டது, மறுபுறம் மானும், மழுவும் பட்டது. மேலும் ஆச்சர்யத்துடன் உணர்ச்சியின் மிகுதியாலும் தலையின்மீது தடவும்போது கங்கையும், பாலசந்திரனும், ஜடாமுடியும் பட்டதுகையில் தென்பட்டதெல்லாம் சாக்ஷாத் சிவனின் அம்சங்கள் ஆனால் இவர்களோ இவனை ராமச்சந்திரனாக அவதாரம் எடுத்த விஷ்ணு என்று சொன்னார்கள். ஒருவேளை இப்போது பிரதோஷ சமயம் அதனால் தனக்கு சிவனின் மீது உள்ள அபார பிரேமையால் மனப்பிரமையோ என்று நினைத்து மீண்டும் ஒருமுறை தடவிப்பார்க்கலாம் என்று பாண்டுரங்கனை தடவினார். ஆனல் இந்த முறையும் ருத்திரனனின் அம்சங்களே கைகளில் பட்டது.

மற்றொரு மஹான் கூறுவதாவது: “பலதேச, தேசாந்திரங்கள் பலவற்றைக் கண்டு வந்தேன். பல புண்ணிய நதிகளில் நீராடியும் வந்திருக்கிறேன். யாது பயன்? என் மனத்திற்கு நிம்மதியைத் தரவில்லையே! பின் பண்டரீபுரம் வந்தடைந்தேன். பண்டரிநாதனைத் தரிசித்தேன். அதன் பிறகே என் இதயத்திற்கு மனச் சாந்தி கிடைத்தது எனத் தன் பாடலொன்றின் வாயிலாக எடுத்துரைத்தவர், தமிழ் நாட்டு நந்தனாரைப் போன்று தாழ்ந்த குலத்தில் தோன்றிய, சிறந்த பக்தரான சோகாமேளா என்பவர்.

மேலும், பாண்டுரங்கனின் பக்தரான நாமதேவர், தன் ஞானப்பார்வையால் எதையும் அறியக்கூடிய சக்தி படைத்ததொரு பெரும் ஞானி. அவர் பாண்டுரங்கனோடு பேசியதாக வரலாறும் உண்டு. 
இவர் கூறினார்: “பாண்டுரங்கன் சந்திரபாகா நதிக் கரையில் நிற்கின்றான். அவன் தரிசனம் இன்பம் தரவல்லது. அவன் பெயரைக் கேட்டால் உள்ளம் மகிழும். அவன் தோற்றம், வசீகரிக்கும் தன்மை கொண்டது. 28 யுகங்களாகச் செங்கல் மீது நின்றவாறு, இருகைகளையும் இடுப்பின் மீது வைத்துக்கொண்டு ராதா, ருக்மணி சமேதராக பக்தர்களுக்கு நீண்ட காலமாகத் தரிசனம் தந்து கொண்டிருக்கின்றார்” என தன் பாடலின் வாயிலாக அழகுபட விளக்குகிறார். இவ்வாறாக அருட்கவிகளும், பக்தர்களும், மஹான்களும் பாண்டுரங்கன் தங்கள் இதயத்தில் வாசம் செய்ய வேண்டுமென்ற விரதத்தையும், பாத சேவை சுகத்தையும் தந்தருள வேண்டுமென பெருமைபடப் பாடியுள்ளார்கள்.

கானோபாத்திரை என்னும் பக்தை பாண்டுரங்கனை வேண்ட அவளிடம் இருந்து ஒரு ஜோதி புறப்பட்டு பாண்டுரங்கனின் விக்ரகத்திற்குள் செல்வதை எல்லோரும் கண்டனர்.  கோயிலின் தெற்கு பிரகாரத்தில் ஒரு குழி தோண்டி அதில் கானோபாத்திரையின் உடலைப் புதைத்தனர். இறைவனை எண்ணி கண்மூடி இருகரம் கூப்பி வணங்கினர். கண்ணைத் திறந்து பார்த்தபோது, புதைத்த இடத்தில் ஒரு விருட்சம் (மரம்) இலைகளும், பூக்களுமாய் நிறைந்து நின்றது. அர்ச்சகர்கள் வியந்து வணங்கினர். பண்டரிபுரம் செல்பவர்கள் அந்த விருட்சத்தை வணங்கி அதன் இலைகளை பிரசாதமாக ஏற்று கானோபாத்திரையை வணங்கி சென்றனர். ஆலயத்தின் தெற்கு கோபுர வாயிலை கானோபாத்திரை வாயில் என்று இன்றும் அழைக்கின்றனர்.

தாமாஜி பண்டிதர் என்னும் பெரும் தர்மசிந்தனை கொண்ட தாளாளருக்காக சாட்சாத் பாண்டுரங்கன் தரிசனம் கொடுக்க தாமாஜி அரசுப்பணியை உதறிவிட்டு பண்டரிபுரத்திலேயே தங்கியிருந்து, பூஜை செய்து தனது காலத்தைக் கழித்தார்.

பீமா நதி பண்டர்பூர் அருகே பிறைச் சந்திரன் வடிவில் செல்லுகின்றது. ஆகவே அந்த நதி இங்கே சந்திரபாஹா என்ற பெயரில் அழைக்கப் படுகின்றது. முன்னொரு காலத்தில் இது தண்டிரவனம் என்ற பெயரில் அழைக்கப் பட்டு வந்தது. இங்கே முக்தாபாய், சானதேவன் என்ற இரு வயது முதிர்ந்த தம்பதிகள் வசித்தனர். அவர்களின் ஒரே மகன் புண்டரீகன் என்ற பெயரில் வளர்ந்து வந்தான். அப்போது விருத்தாசுரனை வதம் செய்த இந்திரன், அதன் காரணமாய் சாபம் பெற்று ஒரு செங்கல்லாய் மாறி, அங்கே இருந்து வந்தான். அவன் ஸ்ரீகிருஷ்ணன் பண்டரிநாதனாய் வரும் நாளில் தனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தான். 

புண்டரீகன் இயல்பாகவே அவன் தாய், தந்தையரிடம் அதிக அபிமானமும் பற்றும் கொண்டவனாய் இருந்தான். தாய், தந்தையருக்குச் சேவை செய்வதே தன் கடமை எனக் கருதி வந்தான். ஒரு நாள் அவ்வாறு தாய், தந்தையரின் சேவையின் அவன் மிகவும் மும்முரமாய் இருந்த சமயம், வாசலில் ஒரு குரல் கேட்டது. "புண்டரீகா, புண்டரீகா, உடனே வா!" என்றது அந்தக் குரல்.

புண்டரீகன், "என் தாயும், தந்தையும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் இப்போது சப்தம் போட்டுப் பேசினால் அவர்களின் ஓய்வு நேரத்திற்கு ஊறு நேரிடும்" என்று சொல்கின்றான். "புண்டரீகா, நான் யார் தெரியுமா? நான் சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவே வந்திருக்கிறேன் அப்பா. உன்னைக் கடைத்தேற்றி உனக்கு முக்தி கொடுக்கவே வந்துள்ளேன். சற்றே வந்து நான் சொல்வதைக் கேட்பாய்". இது வந்தவரின் குரல்.

நீர் யாராக வேண்டுமானாலும் இரும். எனக்குக் கவலையில்லை ஐயா. காத்திருக்க முடியுமானால் காத்திரும். நான் சற்றுப் பொறுத்து வந்து உம்மைக் காண்கின்றேன். புண்டரீகன் பதில் கொடுத்தான் "ஆஹா, இந்தக் குடிசைக்கு முன்னால் ஒரே சேறாய் இருக்கிறதே. நான் எங்கே காத்திருப்பது? உட்காரக் கூட இடம் இல்லையே?" வந்தவரின் அங்கலாய்ப்பு. புண்டரீகன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் கண்ணில் பட்டது ஒரு செங்கல். அந்தச் செங்கல்லைக் கையில் எடுத்துத் தூக்கி எறிந்தான். "இதோ, இந்தக் கல் மீது நீர் நின்று கொள்ளும். நான் இதோ வருகிறேன்" 

கல்லைத் தூக்கி எறிந்தான் புண்டரீகன். பகவானின் பாதம் பட்டதோ இல்லையோ, இந்திரனுக்குச் சுய உருவம் வந்துவிட்டது. புண்டரீகனுக்கும், பகவானுக்கும் தன் நன்றிகளைச் சொன்னான் இந்திரன். சற்றுப் பொறுத்து வெளியே வந்து பார்த்த புண்டரீகன், கல்லில் நிற்கும் சாட்சாத் மஹாவிஷ்ணுவையும், அவரை வணங்கிய வண்ணம் நிற்கும் இந்திரனையும் கண்டு அதிசயித்தான். புண்டரீகன் மனம் வருந்தினான் பகவானையே தான் காக்க வைத்ததை எண்ணி, எண்ணி பகவானோ அவனைத் தேற்றுகின்றார். "புண்டரீகா, நீ பெற்றோரிடம் கொண்டிருக்கும் பக்தியை வெளி உலகுக்குக் காட்டவேண்டியே நாம் இவ்வாறு ஒரு சோதனை செய்தோம். உனக்காக நாமே இங்கே காத்திருந்தோம். இதேபோல் எம்மைத் தேடி வரும் அடியாருக்காக நாம் இங்கேயே இருந்து காத்திருக்கவும் முடிவு செய்துள்ளோம்.என்றார். அது முதல் புண்டரீகன் தூக்கி எறிந்த அந்தச் செங்கல் மீது நின்ற வண்ணமே பண்டரிநாதன் பக்தர்களுக்காகக் காத்திருக்கின்றான். அன்று முதல் இறைவன் அங்கேயே கோயிலிலும் குடி கொண்டான் விட்டலன் என்ற பெயரிலேயே. 

அனைத்துக் கோயில்களிலும் குடி கொண்டிருக்கும் பகவானுக்காகப் பக்தர்கள் காத்திருப்பார்கள். ஆனால் இங்கோ பகவானே பக்தர்களுக்காகக் காத்திருக்கின்றான், நின்ற வண்ணமே அதி அற்புத தரிசனம். நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றான் விட்டோபா. அவன் சந்நிதியைக் கண்டதும், நம்மையும் அறியாமல் கண்கள் மழையை வர்ஷிக்கின்றன. நெருங்க, நெருங்க மனம் சொல்லவொண்ணா ஆனந்தத்தில் ஆழ்கின்றது. இன்று காலையில் விட்டோபாவுக்கு அலங்காரம் செய்வதைக் காட்டினார்கள். அந்த அலங்காரத்திலேயே தலையில் தலைப்பாகையுடன், இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நிற்கின்றான். உச்சியில் இருந்து, பாதம் வரைக்கும் அவனைத் தொட்டு அனுபவிக்கலாம்.

அங்கிருந்து ருக்மாயி, இங்கே தமிழ்நாட்டில் ரெகுமாயி என்றாகி விட்டது. ருக்மாயியைக் காணச் சென்றோம். ரெகுமாயியிடம் நம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துவிட்டுச் சற்று நேரம் நின்றோம். கொஞ்சம் நிதானமாய்த் தரிசிக்கலாம் ரெகுமாயியை.

ஆடி மாத ஏகாதசி மற்றும் கார்த்திகை மாத ஏகாதசி அன்றும் தென்னிந்தியா முழுவதும் வர்க்காரி
நெறி முறைப்படி பக்தர்கள் விட்டலர் மீது அபங்கம் எனும் பதிகங்களைப் பாடிக் கொண்ட கால்நடையாக யாத்திரை செய்து பண்டரிபுரத்தில் உள்ள விட்டலரை தரிசனம் செய்வது சிறப்பாகும்.

திருப்பதி சென்றால் என்னதான் கோவிந்தா! கோவிந்தா!! என்று கோஷம் போட்டாலும் உண்டியலில் பணம் போட்டே ஆகவேண்டுமாம். அங்கே உண்டியலே பிரதானம். இங்கே பண்டரிபுரத்திலோ எத்தனை பணம் உண்டியலில் கொட்டினாலும் விட்டலா, விட்டலா, பாண்டுரங்கா, பண்டரிநாதா என்று நாம ஜெபமே பிரதானம்.

*பாண்டுரக விட்டலரின் அடியவர்கள்:

*புரந்தரதாசர்
*நாமதேவர்
*துக்காராம்
*ஞானேஷ்வர்
*சோகாமேளர்
*ஜனாபாய்
*சக்குபாய்

 *தரிசன நேரம்: அதிகாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது.
 ஆனி மாத ஏகாதசி, கார்த்திகை ஏகாதசி உள்ளிட்டவை இத்தலத்தின் முக்கிய திருவிழாக்களாகும். 

ஓம் நமோ நாராயணாய.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...