இத்திருக்கோயில் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் கடந்தவுடன் வெண்ணாற்றங்கரை பாலத்தை கடந்தவுடன் பள்ளிஅக்ரஹாரம் கிராமம் காணப்படும். வலதுபுறம் 2 கிலோமீட்டர் தூரத்தில் வடகரையை ஒட்டி இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற 275 ஸ்தலங்களில் ஒன்றாகவும் வடகரை ஸ்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும் மற்றும் மராட்டிய, நாயக்கர் மன்னர்களின் கலை நுட்பத்தினை பறைசாற்றும் தொன்மை பொலிவுடன் இன்றும் இத்திருக்கோயில் கம்பீரமாய் நிலைத்து நிற்கின்றது.
இத்திருக்கோயிலை சுற்றி அமைந்த குறிப்பிடத்தகுந்த பிற கோயில்கள்:
1. வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோயில்,
2. திவ்யதேசங்களில் ஒன்றான நீலமேக பெருமாள் கோயில்,
3. வெண்ணாற்றங்கரை தென்கரை தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்
4. மாரியம்மன் கோயில்தனி பொக்கிஷமாக இன்றும் சிறந்து விளங்குகின்றது.
அதிகார நந்தியை கடந்து த்யான மண்டபத்தினுள் நுழைந்தால் கிழக்கு நோக்கியவாறு ஸ்ரீ தளிகேஸ்வர ஸ்வாமி பலிபீடம் மற்றும் நந்தியுடன் காட்சிஅளிக்கின்றார். எப்போதும் நாக படத்துடன் இருப்பதால் இக்கோயில் நாக தோஷ நிவர்த்தி ஸ்தலமாக போற்றப்படுகின்றது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு வாயிலில் புற்று இருந்ததாகவும் அதில் இரு நாகங்கள் வசித்ததாகவும் மக்களால் பூஜை செய்யப்பட்டுவந்ததாகவும் புற்று தற்போது நசிந்துள்ளதாகவும் ஒரு நாகம் மட்டும் கோயிலின் உள்ளே சில முறை காணப்படுவதாகவும் ஊர் மக்களால் செவிவழி செய்தியாக கூறப்படுகின்றது.
ஸ்வாமி கருவறையின் வாசலில் 10 அடி உயரம் கொண்ட த்வார பாலர்களின் வண்ணமிகு சுதை சிற்பங்களும் மேல் நிலையில் ரிஷப வாகனத்தில் எம்பெருமானும் பிராட்டியாரும் அமர்ந்தகோலத்தில் ரிஷிகளுக்கு காட்சியளிக்கும் வண்ண சிற்பங்களும் உள்ளன. இந்த வண்ண சிற்பங்கள் தஞ்சை அரண்மனை சிற்பங்களை ஒத்து உள்ளதென்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அம்பாள் ஸ்ரீ சுகந்த குந்தளாம்பாள் அபய ஹஸ்தத்துடன் விஸ்வரூபியாக காட்சிஅளிக்கின்றாள். கர்பகிரஹத்தின் வெளியில் த்வாரபாலகிகளும் மேல் நிலையில் தாமரையில் அழகுற வீற்றிருக்கும் கஜலக்ஷ்மியின் வண்ணமிகு சுதை சிற்பமும் காணலாம். ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசித்து தெற்கு கோபுரம் ஒட்டி மண்டபத்தின் வழியே வெளி பிரகாரத்தில் நுழைந்தால் மேற்கு சுற்றில் ஆலய மதிலை ஒட்டிய மண்டபம் அந்நாளில் திருக்கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்த நெல் சேமிப்பு கிடங்காகவும் கோயில் கணக்காயர் அலுவலகமாகவும் மற்றும் கோயில் கோசாலைக்கான தீவன கிடங்காகவும் இருந்ததாக அறியப்படுகிறது. ஸ்வாமி கர்பக்கரஹ மண்டபம் அழகிய கஜபிருஷ்ட வடிவில் சுதை சிற்பங்களுடனும் ஸ்தலவ்ரிக்ஷமான வில்வமரமும் காட்சிஅளிக்கின்றது.
தெற்கு நோக்கிய மாடத்தில் யோக தக்ஷிணாமூர்த்தியின் சன்னதி தனி விமானமுடன் அழகுற காட்சி அளிக்கின்றது. வடக்கு பிரகார மதில் மண்டபத்தில் முறையே ஸ்தல விநாயகர் சன்னிதி, பிரகார லிங்கம் சன்னிதி, வள்ளி தேவசேனாபதி சன்னிதி மஹாலக்ஷ்மி சன்னிதி மற்றும் நாகர் லிங்கம் சன்னிதியும் தனித்தனியாக அழகுற அமைந்துள்ளது. நீண்ட கீழ்மதிலின் கோடியில் நடராஜர் பளிங்கு மண்டபம் மற்றும் மதில் சுவர் முழுதும் இரட்டை நந்தி சிலைகளுடன் காணப்படுகின்றது.
ஸ்வாமி சன்னதியின் வடக்கு மாடத்தில் துர்க்கையின் சன்னிதியும் எதிரில் சண்டிகேஸ்வரர் சன்னிதியும் அழகுற உள்ளன. இத்திருக்கோயில் தனி நவகிரஹ சன்னிதியும் மற்றும் 63 நாயன்மார்களின் சிற்பங்களோ இல்லாதது தனி சிறப்பு.
இத்திருக்கோயிலை ஸ்தாபித்த லட்சுமி பாய் மற்றும் அவரின் குடும்பத்தினர் த்யான மண்டபத்தின் கிழக்கு மற்றும் தெற்கு நிலை படிகளுக்கு பித்தளை தகடு போர்த்தியது மட்டுமின்றி 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்ற சொற்களுக்குட்பட்டு தங்கள் உருவசிலை எப்போதும் ஸ்வாமியை தரிசித்த வண்ணமே நின்ற கோலமாக வடிவமைத்து உள்ளனர்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்...
No comments:
Post a Comment