அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில்,
தேரழுந்தூர் - 609808, மயிலாடுதுறை மாவட்டம்.
*மூலவர்:
வேதபுரீசுவரர்,
அத்யாபகேசர்
*தாயார்:
சௌந்தராம்பிகை
*தல விருட்சம்:
சந்தன மரம்
*தீர்த்தம்:
வேதாமிர்த தீர்த்தம்
*பாடல்பெற்ற தலம்.
தேவாரம் பாடியவர்:
திருஞானசம்பந்தர்.
*வழிபட்டோர்: வேதங்கள், தேவர்கள், அட்டதிக் பாலகர்கள்.
*சிவன் இத்தலத்தில் வேதியர்களுக்கு வேதம் சொல்லித்தந்தார். எனவே இங்குள்ள இறைவனின் திருநாமம் வேதபுரீஸ்வரர் என்பதாகும்.
*தனது தேரை வானில் செலுத்தும் போது எந்த தடையும் ஏற்படக்கூடாது எனும் வரம் பெற்ற ஊர்த்துவரதன் என்னும் மன்னன், அகத்தியர் இத்தல இறைவனை வழிபடும் போது அதையறியாது வான் வெளியில் தேரை செலுத்தினான். அந்த தேர் செல்லாது அழுந்திய காரணத்தால் இத்தலம் தேரழுந்தூர் ஆனது.
*சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சினங்கொண்ட சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் உருவெடுத்து, பூமியில் உழன்று, பின்னர் தன்னை அடையும்படி சாபம் இடுகிறார். சிவபெருமான் உமையவளைப் பசு ஆகும்படி சபித்தது தேரழுந்தூரில் தான் என்று அவ்வூர் புராண வரலாறு கூறுகிறது.
*சிவனும், பெருமாளும் சொக்கட்டான் விளையாடிய மண்டபம் இத்தலத்தில் உள்ளது.
*சிவனும் சக்தியும் பிரிந்த காலத்தில் அவர்களை சந்திக்க இந்திரன் முதலான தேவர்கள் இங்கு வந்தனர். ஆனால் அவர்கள் சிவனை சந்திக்க நந்தி விடவில்லை. அதனால் அட்டதிக்பாலகர்களும் இவ்வூரைச்சுற்றி லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
*இத்தலம் திருமணத்தடை நீக்கும் தலமாகும்.
*இது காவிரிக்கும், அகத்தியருக்கும் சாபவிமோசனம் கிடைத்த தலம்.
*கற்கசன் என்ற திருடனை சேவகர்கள் அரசவைக்கு இழுத்துச் சென்றார்கள். அன்று சோம வாரம். வேதபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில்
தீப ஆரத்தி நடந்து கொண்டு இருந்தபடியால் எங்கும் ஹர ஹர என்று ஒலித்துக் கொண்டிருந்தது. ஹர ஹர ஒலி கற்கசன் காதில் விழுந்த காரணத்தால் அந்த ஒலியிலேயே லயித்து திருடன் சமாதி நிலையை அடைந்து வேதபுரீசுவரர் அருளால் சிவலோகம் சேர்ந்தான்.
எனவே இக்கோயிலில் சோமவார தினத்தில் வேதபுரீஸ்வரரைத் தொழுவது சாலச் சிறந்தது என கருதப்படுறது.
*இது மேற்கு பார்த்த சிவன் கோயில். மாசி 23,24,25 தேதிகளில் மாலை 5.55 மாலை 6.05 வரை இங்கு சூரியபூஜை நடைபெறுகிறது.
*மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்து ஆறு கல்வெட்டுகள் இங்கு உள்ளன.
*தேரழுந்தூர் கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர். தமிழ்ச் சான்றோர் இரும்பிடர்த்தலையார் வாழ்ந்த தலம்.
*இத்தலம் சைவம் வைணவம் இரண்டிற்கும் சிறப்புடையது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஆமருவியப்பன் ஆலயம் இத்தலத்தில் உள்ளது.
சிவபெருமான் அளித்த சாபத்தால் பசுவாக மாறிய பார்வதிக்கு துணையாக கலைமகளும், மலைமகளும் பசுவாக மாறி பூலோகத்துக்கு வந்தனர். பசு ரூபத்தில் இருக்கும் இவர்களுக்குத் துணையாக வந்த பெருமாள் ‘ஆ’மருவியப்பன் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் வீற்றிருக்கிறார். ஆமருவியப்பன் (ஆ என்றால் பசு, மருவி என்றால் விட்டு விலகாமல் இருப்பவன்) என்ற அழகான தமிழ் பெயர்.
*ஸ்ரீகிருஷ்ண பகவான் பசுக்களைக் காக்க மன்னன் ஊர்த்துவரதனுடைய தேரின் நிழலைக் காலால் அழுத்த தேர் அழுந்தி நின்றது என்ற புராணமும் உள்ளது.
*மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் சென்று கோமல் செல்லும் சாலையில் திரும்பி மூவலூர் தாண்டிச் சென்றால் தேரழுந்தூர் அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து 11 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment