Saturday, November 9, 2024

பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் ஆழ்வார்களுள் ஒருவர்...



பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது.

#பிறப்பு
மாமல்லபுரம், தமிழ்நாடு

#தத்துவம்
விசிஷ்டாத்வைதம்

#குரு
சேனை முதலியார்

#இலக்கிய_பணிகள்
இரண்டாம் திருவந்தாதி

#அவதாரத்தலம்

மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இக் கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது. இக் கோயிலின் வெளிச் சுவரிலே அதனைப் பூதத்தாழ்வாரின் அவதாரத்தலம் எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

#கௌமோதகி_அம்சம்

திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவம் நம்புகின்றது. திருமாலின் மீது இவர் கொண்ட பக்தியைக் காட்டும் இவரது பாடல்களிலே இவருடைய தமிழ்ப் பற்றும் புலப்படுகின்றது.

#முதலாழ்வார்கள்

இவர் பொய்கையாழ்வார், பேயாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார்.இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்க துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர்

#இறைவனின்_நாடகம்

இந்து சமயத்தாரால், குறிப்பாக வைணவப்பிரிவினரால், நம்பிக்கையுடன் போற்றப்படும் இவ்வரலாறு சுவை மிகுந்தது. இறைவன், இவர்களால் உலகை உய்விக்க கருதித் திருக்கோவலூரில், ஒரு வீட்டின் இடைகழியில் மழை பெய்யும் ஒரு நாள் இரவில் ஒருங்கிணைத்தான். எவ்வாறெனில், தனித்தனியாக தலயாத்திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக்கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை நெருங்க அவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனும் அளவில் இருக்க இம்மூவரும் அங்குச் சிறிது நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டுபண்ணினான் இறைவன்.

நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கையார் பூமியாகிற தகழியில் (அகல் விளக்கு) கடல்நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தார் அன்பாகிய தகழியில் (அகல் விளக்கு) ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டின் ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரணமான இறைப்பொருளைக் கண்டார். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர். இவ்வரலாற்றின் உட்பொருள் யாதெனில் பொய்கையாரின் செயல் புற இருள் நீக்கியது, பூதத்தார் செயல் அக இருளை நீக்கியது. அக இருள், புற இருள் இவ்விரண்டும் நீங்கினால் பரமனைக் காணலாம். ஆக முதல் இரண்டு ஆழ்வார்கள் செயல்கள் அக, புற இருள் நீக்க பேயாழ்வார் இறைவனின் வடிவழகை அன்பெனும் வெளிச்சத்தில் கண்டார் என்பதாம்.

#மூன்று_திருவந்தாதிகள்

அவ்வானந்தம் உள்ளடங்காமல் மேலே வழிந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதியே முறையே முதல் திருவந்தாதி (பொய்கையாருடையது), இரண்டாம் திருவந்தாதி (பூதத்தாருடையது), மூன்றாம் திருவந்தாதி (பேயாருடையது) எனப்பெயர் பெற்றன. இறைவனின் நாடகம் உண்மையில் நடந்தது என்று இந்து சமயத்தார் நம்புவதற்கு இம்மூன்று திருவந்தாதிகளிலுள்ள பாடல்களே முக்கிய சான்றுகளாகின்றன.

#ஆழ்வார்_மங்களாசாசனம்_செய்த_திருக்கோவில்கள்

13 திருக்கோவில்களே நாலாயிர திவ்வியப் பிரபந்தில் 30 பாசுரங்களில் பாடிய உள்ளர்⋅

1. திருப்பதி : திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை தாயார்

2. திருவரங்கம் : அரங்கநாதர் - பெரியபிராட்டியார்

3. திருமாலிருஞ்சோலை :  சுந்தரத்தோளுடையான்  - சுந்தரவல்லி நாச்சியார்

4. திருப்பாற்கடல் : திருமால்-திருமகள்

5. திருக்குடந்தை  : ஆராவமுதன் - கோமலவல்லி

6. திருக்கோட்டியூர் : சௌமியநாராயணன் - மகாலெட்சுமி

7. திருக்கச்சி : பேரருளாளன் - பெருந்தேவி தாயார்

8. திருப்பாடகம் : பாண்டவ தூதர் - சத்யபாமா, ருக்மணி

9. திருக்கோவலூர் : திருவிக்கிரமன் - பூங்கோவல் நாச்சியார்

10. திருத்தஞ்சை மாமணிக் கோயில் **நீலமேகப் பெருமாள் (விஷ்ணு)
**மணிகுன்றப் பெருமாள் (விஷ்ணு)
**நரசிம்மர் (விஷ்ணு)

11. திருநீர்மலை  : நீர்வண்ண பெருமான் - அணிமாமலர்மங்கை தாயார்
12. திருக்கடல்மல்லை : உலகுய்ய நின்ற பெருமாள் - நிலமங்கை நாச்சியார்

13. திருத்தங்கல் :  நின்ற நாராயணன் - செங்கமலத்தாயார்

 12 ஆழ்வார்களில் முதலாழ்வாரான #பூதத்தாழ்வாரின் அவதார தலமான , புண்டரீக  மகரிஷி தவம் செய்து பெருமாள் காட்சி அளித்த தலமான 
*செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள , பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டப்பட்ட சென்னைக்கு அருகில் உள்ள திருமாலின் 108 வைணவத் திவ்ய தேசங்களில் தொண்டை நாட்டு திருப்தியான 
 #திருக்கடல்மல்லை (மஹாபலிபுர க்ஷேத்ரம்) என்ற #மாமல்லபுரம்
#தலசயனப்_பெருமாள் (#தரை_கிடந்தபெருமாள்)
#நிலமங்கை_தாயார்

திருக்கோயில் வரலாறு:

சென்னையிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவில், சிற்பங்களுக்குப் புகழ் பெற்ற மஹாபலிபுரத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயில், 108 வைணவ திவ்யதேசங்களுள் 93ஆவது திவ்யதேசமாக விளங்கும் சிறப்புடையது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரால் மங்களாசாசனம் செய்விக்கப் பெற்றது. பூதத்தாழ்வார் பிறந்தது இவ்விடத்தில்தான்.

மாமல்லபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோவில். இது 108 வைணவ திருத்தலங்களில் 63வது தலமாகும். திருப்பாற்கடலில் வைகுண்டநாதனாக, பாம்பணையின் மீது சயனித்து பக்தர்களின் பாவங்களைக் களைந்து வருகிறார் பள்ளிகொண்ட பெருமாள். ஆனால் கடல் மல்லையில், வெறும் தரையில் சயனித்தபடி பக்தர்களுக்கு திருமால் அருள்புரிந்து வருகிறார்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் சிறந்த கடற்கரை நகரமாக இருந்தது. இங்கு ஒரு காலத்திலே 7 கோவில்கள் இருந்ததாக ஐதீகம். ஏழு கோவில் நகரம் என்றே வரலாற்றில் அழைக்கப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக அந்தக் கோவில்கள் அழிந்தன. பிறகு, பல்லவ மன்னன் இராஜசிம்மன் 3 கோவில்கள்  கட்டினான். அதிலும் 2 கடல்சீற்றத்தினால் அழிந்துவிட்டது. எஞ்சிய ஒன்றுதான் இப்போது இருக்கின்ற கோவில். இந்த மூலவர் சன்னதியின் கீழே உள்ள விமானம் கனகாக்ருதி விமானம் எனப்படுகிறது. இந்த ஸ்தலத்திலே புண்டரீக மகரிஷி இறைவனுடைய தரிசனத்தைப் பெற்றார்.

14–ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலைக் கட்டி முடித்துள்ளான். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் கடந்து போய்விட்டது. 

வைகானச ஆகம முறைப்படி பிள்ளைலோகம் ஜீயர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு இன்றளவும் நான்கு காலபூஜைகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயத்தில் தலசயன பெருமாள் படுத்த நிலையில் தனது காலடியில் ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் கருவறையில் காட்சி தருகிறார். 12 ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் இங்கு தோன்றியதால், பூதத்தாழ்வார் அவதரித்த ஸ்தலம் என்ற புகழும் இந்த ஆலயத்திற்கு உண்டு. இங்குள்ள பெருமாளை பூதத்தாழ்வார் போற்றி,

அன்பே தகழியா, ஆர்வமே நெய்யாக

இன்பு உருகு சிந்தை இடுதிரியா - நன்பு உருகி

ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ் புரிந்த நான்

என்று போற்றி புகழ்ந்து பாடியுள்ளார்.

*மூலவர்:ஸ்தலசயனப்பெருமாள்( தரை கிடந்த பெருமாள்)
*உற்சவர்:உலகுய்ய நின்றான்
*தாயார்:நிலமங்கைத் தாயார்
*தல விருட்சம்:புன்னை மரம்
*தீர்த்தம்:புண்டரீக புஷ்கரணி
*புராண பெயர்:திருக்கடல் மல்லை
*ஊர்:மகாபலிபுரம்
*மாவட்டம்: செங்கல்பட்டு 
*மாநிலம்:தமிழ்நாடு

பாடியவர்கள்:
மங்களாசாசனம்

திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்

#திருக்கடல்மல்லை பாசுரம்:

"பாராய துண்டு மிழ்ந்த பவளத் தூனை படுகடலில் அமுதத்தைப் பர்வாய்க்கீண்ட சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புனர் மருதமிற நடந்த பொற்குன்றினை காரானை யிடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.

-திருமங்கையாழ்வார்

இக்கோயிலில் மூலவராகத் ஸ்தல சயன பெருமாள் வெறும் தரையில் புஜங்க சயனத்தில் கிடந்த கோலத்தில் அருள்புரிந்து வருகிறார். இக்கோயில் தாயாருக்கு “நிலமங்கை தாயார்” என்று பெயர். மற்ற கோயில்களில் இருப்பது போல் தாமரை மீது அமர்ந்திருப்பதற்குப் பதிலாக தனி சந்நிதியில் தரையில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
இந்த பெருமாள் தன் வலது கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இதனால் இந்த கோயிலிலுள்ள பெருமாளைத் தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்ட நாதனைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். உற்சவர் பெருமாளுக்கு உலகிய நின்றான் என்று பெயர். கோயிலில் பெருமாளின் காலடியில் புண்டரீக ரிஷி அமர்ந்திருப்பதைக் காணலாம். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரின் அவதார ஸ்தலம். பூதத்தாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். கலை வேலைப்பாடுகள் நிறைந்த இந்த ஸ்தலம் "அர்த்த சேது" என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஸ்தலமான திருக்கடல்மலை "மகாபலிபுரம்" என்றும் "மாமல்லபுரம்" என்றும் அழைக்கின்றனர்.

#தல சிறப்பு:

பூதத்தாழ்வார் அவதார தலம், உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார்.இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 64 வது திவ்ய தேசம். 

#பொது தகவல்:

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாமல்லபுரம் சிறந்த கடற்கரை நகரமாக விளங்கியது. இங்கு பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது. இங்கு மூலவர் சன்னதியின் கீழ் உள்ள விமானம் கனகாகிருதி விமானம் எனப்படுகிறது. புண்டரீக மகரிஷி இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.

#தலபெருமை:

பூதத்தாழ்வார் அவதார தலம், பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. உற்சவப்பெருமாள் கையில் தாமரை மொட்டுடன் நிற்கிறார். 108 திருப்பதியில் கையில் தாமரை மொட்டுடன் நிற்கும் உற்சவர் இவர் மட்டும் தான். தன் கையில் உள்ள தாமரையை மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாக ஐதீகம்.

#கோயில் தோன்றிய விதம்: 

ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்தன. அப்போது இத்தலத்திற்கு “ஏழு கோயில் நகரம்’ என்ற பெயர் இருந்தது. இவை கடல் சீற்றத்தினால் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டன. அதன் பின் பல்லவ மன்னன் ராஜசிம்மன் 3 கோயில் கட்டினான். அதில் இரண்டு கடல் சீற்றத்தால் அழிக்கப்பட்டு விட்டன. மிஞ்சிய ஒன்று தான் தற்போதுள்ள கோயில். இதுவும் கடல் அலைகளால் தாக்கப்பட்டு வருகிறது.இதை மனதில் கொண்டோ என்னவோ, 14ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குசன் மாமல்லபுரம் நகருக்குள் ஆகமவிதிப்படி கோயில் கட்டி, இங்கிருந்த பெருமாளை பிரதிஷ்டை செய்தார். இவருக்கே தற்போது வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள பெருமாள் தன் வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இத்தல பெருமாளை தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்டநாதனை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

#தல வரலாறு:

இன்றைய மாமல்லபுரம் கடற்கரைப்பகுதியில் ஒரு காலத்தில் அடர்ந்த காடுகள் இருந்தன. இதில் புண்டரீக மகரிஷி என்பவர் தவம் செய்து வந்தார். இவர் அருகிலுள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை பறித்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பிக்க நினைத்தார். பறித்த பூக்களை கூடையில் கொண்டு செல்லும் போது, குறுக்கே கடல் இருந்தது. பக்திபெருக்கால் கடலில் வழி ஏற்படுத்த தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைக்க ஆரம்பித்தார். பல ஆண்டுகளாக இதை செய்தார். “”பரந்தாமா! நான் கொண்ட பக்தி உண்மையானால், இந்த கடல் நீர் வற்றட்டும். எனக்கு பாதை கிடைக்கட்டும். இந்தப்பூக்கள் அதுவரை வாடாமல் இருக்கட்டும்,”என்றார். கடல் நீரை இறைப்பதென்ன சாத்தியமா? ஒரே இரவில் கைசோர்ந்தார். ஒரே மனதோடு இறைவனை நினைத்தபடியே நீரை இறைத்த முனிவர் முன்பு ஒரு முதியவர் வடிவில் பெருமாள் வந்தார்.முனிவரை மேலும் சோதிக்கும் வகையில், “”கடல்நீரை இறைக்கிறீரே! இது சாத்தியமா? உருப்படியாக ஏதாவது செய்யலாம் இல்லையா? எனக்கு பசிக்கிறது. சோறு கொடும்,”என்றார். “”முதியவரே! உமக்கு சோறு அளிக்கிறேன். அப்பணி முடிந்ததும், இப்பணியை தொடர்வேன். பெருமாளை நான் பார்த்தே தீர வேண்டும். என் பெருமாள், இந்தக்கடல் வற்றியே தீரும்,”என்றார். மலர்க்கூடையை முதியவரிடம் கொடுத்து,”” இதை வைத்திருங்கள். நான் சென்று உணவு கொண்டு வருகிறேன்”என்று கூறி சென்றார். மகரிஷி வருவதற்குள் அவர் கொடுத்து சென்ற பூக்களையெல்லாம் சூடி இந்த கடலிலேயே “ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் கோலத்தில்’ காட்சியளித்தார். இதைக்கண்டு ஆனந்தமடைந்த மகரிஷி, “”பெருமாளே! இந்த சிறியேனின் பக்திக்காக தாங்களே நேரில் வந்தீர்களா! உங்களையா பூக்கூடையை சுமக்கச்செய்தேன். என்னை மன்னித்து, நான் என்றென்றும் தங்கள் பாதத்தருகில் அமரும் பாக்கியம் தந்தருள வேண்டும்”என வேண்டினார். பெருமாளும் அவ்வாறே வரம் தந்தார். சயன திருக்கோலத்தில் காட்சி தந்ததால் “தலசயனப்பெருமாள்’ என அழைக்கப்படுகிறார்.

இத்தலத்தில் திருமால் ஆதிசேசனில் பள்ளிகொள்ளாமல் பள்ளிகொண்டுள்ளார். திருப்பாதத்தின் அருகில் புண்டரீக மகரிஷி அமர்ந்துள்ளார். தாமரை மலரும் அமைந்துள்ளது.

#புண்டரீக புஷ்கரணி குளம்:

மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் 7–வது அரசனான மல்லேஸ்வரன் என்ற அரசனின் ஆட்சிக் காலத்தில், தினமும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. ஒரு நாள் திடீரென மல்லேஸ்வரன் அன்னதானம் வழங்குவதை நிறுத்திவிட்டான். இதனால் பொதுமக்கள் பசி, பட்டினியால் வாடினர். இதனால் கோபமடைந்த வைணவ அடியார்கள், ‘மக்களின் பசியை தீர்க்க முடியாத நீ மன்னனாக இருக்க தகுதியற்றவன்’ என்று கூறி, ‘தண்ணீரில் மிதக்கும் முதலையாக இருப்பாய்’ என்று சாபம் கொடுத்து விடுகின்றனர்.

பின்னர் அங்குள்ள புண்டரீக புஷ்கரணி குளத்தில் முதலை உருவில் மல்லேஸ்வரன் தண்ணீரில் வாழ்ந்து வந்தான். அப்போது அந்தக் குளத்தில் 1,000 தாமரை இதழ்களை பறித்து பெருமாளுக்கு படைக்க புண்டரீக மகரிஷி அங்கு சென்றார். இந்த நிலையில் குளத்து நீரில் முதலை உருவில் வசித்து வந்த மல்லேஸ்வரன் புண்டரீக முனிவரிடம், தன் தவறுக்கு வருந்தி, ‘என்னுடைய சாபம் நீங்கப்பெற நீங்கள்தான் அருள் புரிய வேண்டும்’ என்று மன்றாடி சாப விமோசனம் கேட்டான். அதற்கு முனிவர், ‘நீ! மக்களை பசி, பட்டினியால் வதைத்தாய். உன் சாபம் நீங்கப்பெற வேண்டும் என்றால், 1000 தாமரை இதழ்களை பறித்துக்கொடு’ என்று கேட்க, அவனும் பறித்துக் கொடுத்தான். பின்னர் கடலில் அருள்பாலித்துக் கொண்டிருந்த தலசயன பெருமாளின் பாதங்களில் 1000 தாமரை இதழ்களை முனிவர் சாத்தினார்.

அப்போது அசரீரியாக ஒலித்த பெருமாள், ‘உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’ என்று கூறினார். அதற்கு புண்டரீக மகரிஷி, ‘பெருமாளே! நான் முற்றும் துறந்த முனிவன். எனக்கென்று எந்த ஆசையும் கிடையாது. இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவரும் பசி, பட்டினி இன்றி நல்ல சுகபோகத்துடன் வாழ வேண்டும். மல்லேஸ்வரனின் சாபம் நீங்க வேண்டும்’ என்று வரம் கேட்டார். இறைவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்புரிந்தார்.

பின்னர் அரசன் மல்லேஸ்வரனும் தனது சாபம் நீங்கப்பெற்று மீண்டும் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் பணியைத் தொடங்கினான். இதன் வரலாறு பிரம்மாண்ட புராண வாக்கியத்தில் சேத்ரகாண்டம் என்ற பகுதியில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு வரலாற்று புகழ் பெற்ற, புண்டரீக மகரிஷி பாதம் பட்ட இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில், மாசிமகத்தன்று தலசயன பெருமாளுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது. மேலும் நம் முன்னோர்களுக்கு இந்த புஷ்கரணி தெப்பக் குளத்தில் நீராடி மகாளய அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுத்தால் காசி, கயா, ராமேஸ்வரத்தில் கிடைக்கும் புண்ணியத்தைவிட பல மடங்கு புண்ணியமும், மனநிறைவும், மகிழ்ச்சியும் கொடுக்கும் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களாலும் நம்பப்பட்டு வருகிறது.

#கோவில் சிறப்பு:

இந்தக் கோவிலில் மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் பூதேவி, ஸ்ரீதேவி இல்லாமல், படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயனப் பெருமாள் காட்சியளிக்கிறார். ஆனால் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள அரிய காட்சி வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சியாகும். மானிடராகப் பிறந்தவர்கள் இந்தப் பெருமாளை ஒரு முறையாவது தரிசித்தால் முக்திப்பேறு கிட்டும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் இக்கோவில் சைவ, வைணவ ஒற்றுமைக்கு வழிவகுக்கின்ற தலம் ஆகும்.

#கோவில் அமைப்பு:

படுத்த நிலையில் பெருமாள் (விஷ்ணு) காட்சி அளிக்கும் தலங்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. 14–ம் நூற்றாண்டில் பராங்குச மன்னன் கட்டிய காலத்தில் தென்னிந்திய கட்டிடக் கலைக்கு பெயர் சேர்க்கும் விதத்தில், இந்தக் கோவிலில் கருங்கல் தூண்கள் (ஸ்தூபிகள்) அமைத்து கட்டப்பட்டது. 12 ஆழ்வார்களுக்கும் இக்கோவிலில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. குறிப்பாக பூதத்தாழ்வார் இந்தக் கோவிலில் அவதரித்தது விசேஷம் ஆகும். கடந்த காலத்தில் 1957–ம் ஆண்டில் இந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு 1997–ல் தமிழக அரசின் கட்டுமான கழகம் மூலம் ஒரு சிற்பியைக் கொண்டு, வைணவ ஆகம முறைப்படி பழைய கோபுரத்தை இடித்து, தமிழக கட்டிடக்கலைக்கு பெயரும், புகழும் சேர்க்கும் விதத்தில், தரைமட்டத்தில் இருந்து புதிதாக கோபுரம் கட்டி வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காஞ்சீபுரம் தலைநகராகவும், மாமல்லபுரம் துறைமுகப்பட்டினமாகவும் விளங்கிய காலத்தில் மல்லாபுரி என்ற பெயரோடு விளங்கிய இந்த ஊர் பிற்காலத்தில் மாமல்லபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கடற்கரை கோவிலை மையமாக வைத்தே ஊரின் மத்திய பகுதியில் இக்கோவில் (தலசயன பெருமாள் கோலில்) எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கடந்த காலத்தில் சைவமும், வைணவமும் இணைந்து இருந்த கடற்கரை கோவில் பொதுமக்கள் வழிபாட்டில் இருந்தது. பின்னர் தொல்லியல் துறை அக்கோவிலை எடுத்துக்கொண்ட பிறகு பூஜைகள், வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. பின்னர் ஊரின் மத்திய பகுதியில் கட்டப்பட்ட தலசயன பெருமாளை பொதுமக்கள், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வழிபட்டு வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இக்கோவில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் அரசு விரைவு, குளிர் சாதன பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் (திருக்கடல்மல்லை) இத்திருக்கோயில் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் 64 வது திவ்ய தேசமான இந்து வைணவ திருக் கோயிலாகும்.

 #பாசுரங்களும் கல்வெட்டுக்களும் :

இக் கோயிலிலுள்ள இறைவர் உலகுய்ய நின்ற பெருமாள் எனவும் இறைவி நிலமங்கை நாச்சியார் எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள விஷ்ணு பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் திருமாலாகவே காணப்படுகின்றார் என்பதுடன் இதற்கொப்ப அவர் பெயரும் தல சயனப் பெருமாள் (தமிழில்: தரைகிடந்த பெருமாள்) என வழங்கி வருகின்றது. இதனால் இங்கு ஆரம்பத்தில் இருந்த மூலவருக்குப் பதிலாகப் பிற்காலத்தில் பள்ளிகொண்ட பெருமாள் சிலை வைக்கப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்.

திருமங்கையாழ்வார் எழுதிய பாசுரம் ஒன்றில் மாமல்லபுரத்துக் கோயிலொன்று குறித்து வரும் திருக்கடல்மல்லை தலசயனம் என்பது இக்கோயிலையே குறிக்கின்றது என்பது பலரது கருத்து. அவ்வாறன்றி இது கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரையிலுள்ள பல்லவர் காலக் கோயிலையே குறித்தது என்பது வேறு சில அறிஞர்கள் கருத்து.

 #தலத்தின் சிறப்புகள் :

இத்தலமே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பிறந்த அவதார திருத்தலம்.
உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம்திருத்தலம். 
இத்திருக்கோயிலின் சித்திரை பிரம்மோற்சவ உற்சவத்திருவிழா சிறப்பானது.
மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராட இராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் என்று குறிப்பிடப்படுகின்றது. 

திருவிழாக்கள்:

சித்திரை பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும். புண்டரீக புஷ்கரிணி தீர்த்தத்தில் மாசி மகத்தன்று தெப்ப உற்சவம் நடைபெறும். பிரதோஷம், பெருமாள் நட்சத்திர தினம், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை வேளைகளில் லட்சுமி நரசிம்மருக்குப் பானகம் படைத்து, நெய் தீபமேற்றி ‘ருணவிமோசன ஸ்தோத்திரம்’கூறினால் வாழ்வு சிறக்கும். கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம். பூதத்தாழ்வாரின் அவதார உற்சவமும் முக்கியமான திருவிழாவாகும்.

பரிகார ஸ்தலம் :
பெருமாள் நிலத்தில் சயனகோலத்தில் வீற்றிருக்கும் ஒரே திவ்யதேசம். இத்தலத்தில் வந்து நிலத்தில் சயனித்திற்கும் பெருமாளையும், தாயாரையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் நிலம் ,வீடு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது . மற்றும் பித்ரு சாபம் போக்கும் தலமாகவும் விளங்குகிறது. திருமணத்தடை நீங்கவும் இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். குழந்தை இல்லாதவர்கள் பிரார்த்தனை செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புஷ்கரணி தெப்பக் குளத்தில் நீராடி மஹாளய அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுத்தால் காசி, கயா, இராமேஸ்வரத்தில் கிடைக்கும் புண்ணியத்தை விடப் பல மடங்கு புண்ணியமும், மனநிறைவும், மகிழ்ச்சியும் கொடுக்கும் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை: காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை: மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை

கோயிலுக்குச் செல்லும் வழி:

சென்னையின் புறநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மகாபலிபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
சாலை வழியாக - ஸ்ரீ ஸ்தல சயனப் பெருமாள் கோயில் சென்னையில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR) சென்னையில் இருந்து மகாபலிபுரத்திற்கு அடிக்கடி பேருந்து சேவை உள்ளது. சென்னையில் இருந்து ECR வழியாகப் பாண்டி செல்லும் அனைத்து பேருந்துகளும் செல்லும்.

பித்ரு சாபம், நிலம் ,வீடு சம்பந்தமான பிரச்சனைகள் தீர்க்கும் திருக்கடல்மல்லை ஸ்ரீ ஸ்தல சயன பெருமாளைத் தரிசித்துப் பலனடைவோம்!!

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் மந்திரத்தை இசைத்த ஆனாய நாயனார்...

தனது புல்லாங்குழல் இசையால் "நமசிவாய" என்னும் திருவைந்தெழுத்து (பஞ்சாட்சர மந்திரம்) மந்திரத்தை இசைத்து, சிவபெருமானால் ...