Sunday, November 24, 2024

சாலவாக்கம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் மற்றும் திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள்..



திருமுக்கூடல் – இது மூன்று ஆறுகள் சங்கமிக்கும் புனிதத் தலம் மட்டுமல்ல, ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் புரியும் மும்மூர்த்திகளும் ஒருமித்து, ஒரே தோற்றமாய் தரிசனம் தரும் தலமும்கூட. காஞ்சி மாநகருக்கு கீழ்த்திசையில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் இந்த திருமுக்கூடல் தலத்தில்தான் தாமரை ஏந்தி, படைக்கும் பிரம்மாவாகவும், ஜடாமுடி தரித்து நெற்றிக்கண் கொண்ட சிவபிரானாகவும், கைகளில் சங்கு சக்கரம் ஏந்தி விஷ்ணுவாகவும் மும்மூர்த்தி தோற்றத்துடன் காட்சி தருகிறார் அப்பன் வேங்கடேசப் பெருமாள்.

மன்னன் தொண்டைமான் தன் பக்தியின் வெளிப்பாடாக திருப்பதி வெங்கடேசப் பெருமாள் ஆலயத்திற்கு திருப்பணி செய்ய சென்றிருந்தார். அவர் இல்லாத தருணமாகப் பார்த்து பகையரசன் தன் நாட்டின் மீது படையெடுத்த செய்தி கேட்டு மனம் உருகி பெருமாளிடம் முறையிட்டார். திருப்பதி பெருமாளும் தனது சங்கு, சக்கரத்தை அனுப்பி பகைவர்களிடமிருந்து அவனுடைய நாட்டையும் மக்களையும் காப்பாற்றினார். அன்று முதல் திருப்பதி பெருமாளின் சங்கு சக்கரங்கள் திருமுக்கூடல் ஆலயத்தில் தங்கிவிட்டன.

அவற்றை இன்றும் நாம் தரிசிக்கலாம். திருப்பதியில் திருப்பணியை முடித்துக் கொண்டு திருமுக்கூடல் வந்த மன்னன், தன் நாடு இறையருளால் காக்கப்பட்டு, எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருந்ததைக் கண்டு பரவசத்துடன் ‘என் அப்பனே’ என்று பெருமாளை மனம் கனிந்து வணங்கினான். அதனால் இப்பெருமாளுக்கு ‘அப்பன் வேங்கடாசலபதி’ என்ற பெயர் நிலைத்துவிட்டது என்பார்கள்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான ‘அப்பர்’ ஸ்வாமிகளும், இப்பெருமாளைப் பாடியுள்ளார் என்பதாலும் ‘அப்ப(ர்)ன் வேங்கடேசப் பெருமாள்’ என்றழைக்கப்படுகிறார்; இத்திருக்கோயிலுக்கு, ‘அப்பர் கோயில்’ என்ற பெயரும் உண்டு. கர்ப்பகிரகத்தின் வெளிப்புறச் சுவரில் வீரராஜேந்திர சோழன் (கி.பி. 1663-1070) புகழ் கூறும் மெய்கீர்த்தி அமைந்த கல்வெட்டு உள்ளது. வீர ராஜேந்திர சோழனால் இக்கோயிலில் பல்கலைக் கழகம் ஒன்று நிறுவப்பட்டிருந்ததாகவும், அதில் பயிலும் மாணவர்களுக்கு உணவும் உறைவிடமும் அளித்ததாகவும், கோயில் விளக்குக்கு எண்ணெய் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. கோயிலிலேயே சில நூல்கள் தகைசான்ற ஆசான்களால் படிக்கப்பட்டு பிறருக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், அதற்கென தனியே வியாக்யான மண்டபம் இருந்ததாகவும் தெரிகிறது.

அதுபோன்று கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மக்களுக்கும் நோய் வந்தபோது, மருத்துவம் செய்ய மருத்துவமனையும் இத்திருக்கோயிலுக்குள் இருந்ததாகவும், அதற்கென ஒரு மருத்துவரும், உதவியாளரும் பரம்பரை உரிமையுடையோராய் மருத்துவம் செய்ததாகவும், மகளிருக்கும் மருத்துவ வசதி அளிக்கப்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இத்திருக்கோயிலில் நடன சாலை ஒன்றும் இருந்திருக்கிறது.

மூலவர் பெருமாள், மும்மூர்த்தி ஸ்வரூபனாய் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். தாயார், கரிய மாணிக்கப் பெருமாள், ஆண்டாள், வீர ஆஞ்சநேயருக்குத் தனித்தனியே சந்நதிகள் அமைந்துள்ளன. ஆஞ்சநேயர் இங்கு பிரார்த்தனா மூர்த்தியாய் விளங்குகிறார்.

பொங்கல் திருநாளுக்கு மறுநாள் சீவரம் பார்வேட்டை உற்சவத்திற்காக காஞ்சி வரதர் பழைய சீவரம் வரும்போது ஆற்றங்கரையில் காஞ்சிப் பெருமானுடன் பழைய சீவரம் லட்சுமி நரசிம்மர், காவாந்தண்டலம் கரிய மாணிக்கப் பெருமாள், சாலவாக்கம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் மற்றும் திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் ஆகியோர் ஒருசேர வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.செங்கல்பட்டு – காஞ்சிபுரம் மார்க்கத்தில் பழைய சீவரத்தை ஒட்டி செல்லும் பாலாற்றைக் கடந்து இக்கோயிலை அடையலாம். ‘என் அப்பனே’ என்று அவனை சரணடைந்து நலம் பெறலாம்; பகை வெல்லலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...