அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம், திருசாய்க்காடு 609105
*இறைவர் திருப்பெயர்: சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்.
*இறைவியார் திருப்பெயர்: குயிலினும் நன்மொழியம்மை.
*தீர்த்தம் : காவிரி, ஐராவத தீர்த்தம்.
*தல விருட்சம்:
கோரை
*தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடியோர் அப்பர், சம்பந்தர்
*இங்கு வழிபட்டோர்: உபமன்யு முனிவர், ஆதி சேஷன், இந்திரன், அவரது தாயார் அதிதி, ஐராவதம், ஐஅடிகள் காடவர்கோன், இயற்பகை நாயனார், சேக்கிழார் முதலானோர்.
*பைஞ்சாய் எனும் கோரைப்புற் காடாக இருந்ததால், இத்தலம் சாயாவனம் எனும் பெயர் பெற்றது.
*ஆதிசேடனது நாகமணி ஒளி வீசியதாலும் ( சாய் - ஒளி ) இப்பெயர் வந்தது என்பர்.
*இது ஓர் யானை புகாத கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.
*சாயாவனம் காசிக்கு சமமான சிறப்புள்ள ஆறு தலங்களுள் ஒன்று. மற்றவை:
1. திருவெண்காடு,
2. மயிலாடுதுறை,
3. திருவிடைமருதூர்,
4. திருவையாறு,
5. திருவாஞ்சியம்.
*தல வரலாறு:
இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். (எனவே தான் அம்மனுக்கு "குயிலினும் இனிமொழியம்மை' என்ற திருநாமம் ஏற்பட்டது). உடனே சிவபெருமான் தோன்றி, "இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக", என அருள்புரிந்தார்.
*இக்கோயிலின் தீர்த்தம்: ஐராவதம் (இந்திரனின் யானை) கோயிலை நகர்த்தும் முயற்சியில் ஈடுபட்டபோது அதன் தந்தங்கள் தரையில் அழுந்தியதால் உருவானது ஐராவத தீர்த்தம்.
*இத்தல முருகப்பெருமான் வில் ஏந்தி, போருக்குப் புறப்படும் நிலையில் “சத்ரு சம்ஹார மூர்த்தியாக” காட்சி தருகிறார். ஒரு கையில் கோதண்டம், ஒரு கரத்தில் அம்பு, ஒரு கரத்தில் வில், மற்றோரு கரத்தில் கொடியுடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். "செந்தில் ஆண்டவர்" என குறிப்பும் உள்ளது. இச்சிலை கடலில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் உண்டு.
முருகப் பெருமானின் வலது காலில், சிவனார், அன்புடன் அளித்திட்ட, "வீர கண்ட மணி" அணிந்திருக்கிறார். சக்தி, உமையவள் முருகப் பெருமானுக்கு " வேல்" தந்தது போல்,
சிவபெருமான் இவருக்கு, இந்த வீரகண்டமணியை கொடுத்ததாக வரலாறு. நான்கு கரங்களுடன், மிக கம்பீரமாக வில்லை ஏந்தி நிற்கும் வேலவரும், உயர்ந்த மயிலும் காண்போரைக் கவர்ந்து இழுக்கும் அற்புத அழகுடன் நம்மை பிரமிப்புடன் பார்க்க வைக்கும் திரு உருவம் இது.
எதிரி பயம் இருப்பவர்கள், பயந்த சுபாவம் உடையவர்கள், இங்கு முருகனை வழிபட, தைரியம் வளர்ந்து
பயம் நீங்கி, திடமனதுடன் வாழலாம்.
*இது "இல்லையே என்னாத இயற்பகை நாயனார்" முக்தித்தலம். நாயனாரின் பக்தியை சோதிப்பதற்காக சிவபெருமான் சிவபக்தர் வேடமணிந்து இத்தலத்திற்கு வந்தார். நாயனார் பக்தரிடம் என்ன வேண்டும் என்று கேட்டபோது, நாயனாரின் மனைவி தன்னுடன் வர வேண்டும் என்று பதிலளித்தார். சிறிதும் தயங்காமல், இயற்பகை மற்றும் அவர் மனைவி இருவரும் இதற்கு சம்மதித்தனர். ஆனால் நகரவாசிகள் கோபமடைந்து, பக்தனைத் தண்டிக்க அவரைப் பிடிக்க முயன்றனர். இயற்பகை தன் வாளை எடுத்து, எதிர்த்த சிலரைக் கொன்று, மனைவியையும், சிவபக்தனையும் ஊர் எல்லை வரை அழைத்துச் சென்றார். அவர்கள் அங்கு சென்றதும், பக்தர் நாயனாரைத் திரும்பிப் போகச் சொன்னார். கடைசியாக ஒரு முறை தன் மனைவியை பார்க்கக்கூடத் திரும்பாமல் அவர் சென்றார். அப்போது ரிஷப வாகனத்தில் சிவனும் பார்வதியும் அவர்களுக்கு அருட்காட்சி அளித்தனர். கொல்லப்பட்டவர்கள் உயிர்பெற்றனர். பின்னர் இயற்பகைக்கும் அவர் மனைவிக்கும் முக்திப்பேறு அருளினர். இயற்பகை நாயனார் மற்றும் அவரது மனைவியின் திருவுருவச் சிலைகள் திருக்கோயிலில் உள்ளன.
*இக்கோயிலில் சோழர் கால கல்வெட்டுகள் பத்தும், பாண்டியரது மூன்றும் ஆக பதிமூன்று கல்வெட்டுகள் உள்ளன.
*இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார் அருகில் அமைந்துள்ளது. இது சீர்காழிக்கு 12கீ.மீ. தூரத்தில் உள்ளது. சீர்காழி,மயிலாடுதுறை ஆகிய இடங்களிலிருந்து பெருந்து வசதி உள்ளது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்..
No comments:
Post a Comment