Wednesday, December 11, 2024

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க..

கொங்குநாட்டுப் பாடல் பெற்ற ஏழு தலங்களில் ஒன்றான,
முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்து பிரம்மஹத்தி தோஷம் நீங்க 
சிவ வழிபாடு செய்த தலமான, 
ஈசன் வேடுவர் வேடத்தில் வந்து பூதகணங்களை ஏவி சுந்தரமூர்த்தி நாயனாரின் செல்வங்களை பறித்த இடமான, நடராஜப் பெருமானின் பஞ்ச தாண்டவ தலங்களில் ஒன்றான,
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றான 
#திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 
#திருமுருகன்பூண்டி
#திருமுருகநாதசுவாமி (முருகநாதேஸ்வரர்)
#முயங்கு_பூண்முலையம்மை (மங்களாம்பிகை)
#ஷண்முகநாதசுவாமி
திருக்கோயில் வரலாறு:

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. 
முருகப்பெருமான் வழிபட்ட தலம். அகத்தியர் மார்க்கண்டேயர் துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம். இதற்கு மாதவிவனம் என்றும் பெயர். துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவிமர (குருக்கத்தியை) த்தை இங்குக் கொண்டு வந்தார் என்பர்.
இத்தலத்திற்கு துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டுவந்தார் என்பது தொன்நம்பிக்கை. இறைவன் தன் பூத கணங்களை ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்த தலமென்ற நம்பிக்கையும் உள்ளது.

புராணங்களின் படி முருகப்பெருமான் அரக்கன் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 206 வது தேவாரத்தலம் ஆகும்.

மூலவர்:திருமுருகநாதர், முருக நாதேஸ்வரர்
அம்மன்:முயங்கு பூண்முலை வல்லியம்மை,ஆவுடை நாயகி, மங்களாம்பிகை, ஆலிங்க பூஷண ஸ்தனாம்பிகை
தீர்த்தம்:சண்முகதீர்த்தம்,ஞானதீர்த்தம்,பிரம்ம தீர்த்தம்
புராண பெயர்:திருமுருகன்பூண்டி
ஊர்:திருமுருகன்பூண்டி
மாவட்டம்:திருப்பூர்
மாநிலம்:தமிழ்நாடு

வழிபட்டோர்:

சுந்தரர், அருணகிரிநாதர் சேக்கிழார், முருகப்பெருமான், அகத்தியர், மார்க்கண்டேயர்,  துர்வாசர் ஆகியோர்.

பாடியவர்கள்:

சுந்தரமூர்த்தி நாயனார், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகள் என்ற வள்ளலார் 

இத்தலம் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள முருகநாதேசுவரரைச் சுந்தரர் பாடியுள்ளார்:

*சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரப் பதிகம்:

"வேதம் ஓதி வெண்ணீறு பூசிவெண் கோவணந் தற்றயலே ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்திர நீர்மகிழ்வீர் மோதி வேடுவர் கூறை கொள்ளும்முரு கன்பூண்டி மாநகர்வாய் ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கிருந்தீர் எம்பெருமானீரே"
                                                  -சுந்தரர்

*அருணகிரிநாதர் அருளிய திருமுருகன் பூண்டி திருப்புகழ்:

"அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும்

அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில்

தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச்

சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே

சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய்

சடுசமயங் காண்டற் ...... கரியானே

சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே

திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.
      __அருணகிரிநாதர்

*இராமலிங்க அடிகள் என்ற வள்ளலார் பாடிய திருஅருட்பா:

"தம்முருகன் பூணுட் டலம்போல வாழ்கின்ற

வெம்முருகன் பூண்டி இருநிதியே." (அருட்பா)

#சுந்தரமூர்த்தி நாயனாரிடம் செல்வம் பறித்தல்:

சேரமான் பெருமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருள்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்த சுந்தரர் திருமுருகபூண்டி அருகே வரும் போது சிவபெருமான் தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார். கவலை அடைந்த சுந்தரர் திருமுருகபூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று தனது தேவாரப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் முடிவிலும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே என்று நிந்திப்பதைப் போலப் பாடியவுடன் சுவாமி அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார்.

இதற்குச் சான்று கூறும் வகையில் இக்கோவிலில் உள்ள மண்டபத்தில் வில் கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. பரிசுப் பொருள்களை பறி கொடுத்த நிலை ஒன்று, பறி கொடுத்த பொருள்களை மீண்டும் பெற்ற நிலை மற்றொன்று ஆக இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் இருப்பதே சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள். “இழந்த பொருளை மீண்டும் பெற்றிட, பரிகாரத் தலமாக திருமுருகன்பூண்டி விளங்குகிறது”.

இத்தலத்து விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறார். சுந்தரரின் பரிசுப் பொருள்கள் சிவபெருமானால் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு, விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு பொருள் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியதால் அவர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார்.

கோயில் அமைப்பு:

நொய்யல் ஆற்றின் வடபகுதியில் அமைந்த மேற்கு நோக்கிய தலம் திருமுருகன் பூண்டி. மேற்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த கோவிலில் மற்ற கோவில்களைப் போல நுழைவு கோபுரம் இல்லை. கோயிலுக்கு வெளியே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் உயர்ந்த மதில் சுவர்களை உடையதாய் 2 பிராகாரங்களுடன் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலின் மூலவரான திருமுருகநாதர் சிவலிங்க ரூபத்தில் சுமார் 2 1/2 அடி உயரம் உள்ளதாக தரிசனம் தருகிறார். மேற்குப் பார்த்து மூலவர் சந்நிதி உள்ளது. கருவறையின் பின்புறச் சுவரில் யானை ஒன்று தும்பிக்கையால் சிவலிங்கத்தைத் தூக்கிப் பிடித்திருப்பதை அழகிய புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளனர்.

முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சன்னிதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம்; இடப்புறத்தில் ஞானதீர்த்தம்; வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.

முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சன்னிதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை. அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாகத் தொன்நம்பிக்கை உள்ளது. சுந்தரர் பொருட்களைப் பறிகொடுத்த இடமான கூப்பிடு விநாயகர் கோவில் அவினாசிக்கு அருகில் அமைந்துள்ளது.

கருவறை விமானத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. உட்பிராகாரத்தில் நிருதி விநாயகர், 63 நாயன்மார்கள், சண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவகிரகங்கள் சந்நதிகள் உள்ளன. மூலவர் சந்நிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் காணப்படும் சண்முகர் சந்நிதி உள்ளது. 5 அடி உயரம் உள்ள இந்த சிற்பம் முன்பக்கம் 5 முகங்களும், பின்பக்கம் ஒரு முகமும் உடையதாக அமைந்துள்ளது. மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் முயங்கு பூண்முலை வல்லியம்மையின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவியின் இப்பெயரை சுந்தரர் தனது பதிகத்தின் 5 பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

கோவிலுக்கு உள்ளே பிரகாரத்தில் சுப்பிரமணிய தீர்த்தமும், கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், ஞான தீர்த்தமும் இருக்கிறது. சித்த பிரமை பிடித்தவர்களை இந்த்ச் சிவஸ்தலத்திற்கு அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்து அன்றாடம் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை வழிபட்டுவர அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயில் நுழைவு வாயிலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சந்நிதி உள்ளது. இதைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்பால் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டு (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும் மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன. கோயில் பிராகாரத்தில் பைரவர் சந்நிதியும் நவக்கிரகங்களும் உள்ளன.

கல்வெட்டுகள்:

இக்கோயிலில் வீரராஜேந்திரன், கோனேரின்மை கொண்டான், குலோத்துங்க சோழ தேவன், விக்கிரம சோழதேவன், வீர நஞ்சையராய உடையார் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன.

தலபெருமை:

சிவனின் சிறந்த பக்தரான சுந்தரர் தான் பெற்ற கவிப்புலமையின் பலனாக தனது நண்பனான மன்னன் சேரமானிடம் பொன்னும், பொருளுமாக பரிசுகள் பல பெற்று இவ்வழியே திரும்பிக்கொண்டிருந்தார்.தற்போது கோயில் அமைந்துள்ள பகுதிக்கு அருகே வந்தபோது இருட்டியதால் அருகில் உள்ள கூப்பிடுவிநாயகர் கோயில் வாயிலில் ஓய்வெடுத்தார். அப்போது, தன்னை துதிக்காமல் சென்ற சுந்தரரை சோதிக்க எண்ணிய சிவன், தனது பூதகணங்களை வேடுவர் வடிவில் அனுப்பி அவரிடம் இருந்த பரிசுப் பொருட்களைக் கவரச்செய்தார்.இதனால் மனக்கலக்கமுற்ற சுந்தரர் அங்கே இருந்த கூப்பிடுவிநாயகரிடம் தனது பொருட்களை மீட்க வழி கூறும் படி முறையிட்டார். தனது தகப்பனின் திருவிளையாடலை அறிந்த அவர் தும்பிக்கையால் கிழக்கு திசை நோக்கி காட்டினார். அவர் காட்டிய திசைக்கு வந்த சுந்தரர் அங்கு பதுங்கியிருந்த சிவனிடம் முறையிட்டு அவரை உரிமையுடன் திட்டிப்பாடி இழந்த பொருள் மீட்டுத் தரும்படி வேண்டினார்.அவரது பாடலில் மயங்கிய சிவபெருமான் தான் பறித்த பொன்னையும், பொருளையும் அவருக்கே திருப்பி வழங்கி ஆசிபுரிந்தார். இவ்வாறு சுந்தரரின் பாடலைக் கேட்பதற்காகவே சிவன் தனியே திருவிளையாடல் நடத்திய தலம் எனும் பெருமையை உடையது.

தலசிறப்பு :

இத்தலத்தின் முதன்மையானவரான சிவன்,முருகனால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்டதால், திருமுருகநாதர் என்ற திருப்பெயரில் அழைக்கப் படுகிறார். அவர் வணங்கியதை விளக்கும் முகமாக இத்தலத்தில் தெற்கு நோக்கியபடி உள்ள முருகன் சன்னதியின் கருவறைக்கு உள்பகுதியில் தென்புறம் மேற்கு நோக்கியபடி லிங்கம் ஒன்று உள்ளது.முருகன் இங்கு வந்து சிவனை வழிபடும் முன்பு தனது வேலை கோயிலுக்கு வெளியே சற்று தள்ளி தரையில் ஊன்றினார். மயில் வாகனத்தை அதன் அருகில் நிறுத்தி வைத்தார். இதனால் கோயிலுக்குள் இருக்கும் முருகனின் கையில் வேல் இருக்காது. மயில் வாகனமும் இல்லாமல், தனித்து நிற்கிறார். சுந்தரர் தன் பொருள் காணாமல் போனது பற்றி முறையிட்டு பாடியபோதும், பின்னர் பொருளைத் திரும்பப்பெற்ற போதும் உள்ள முகபாவனைகளுடன் மூன்று சிலைகள் சிவனின் சன்னதியின் முன்புறம் உள்ளது. கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஆடல்வல்லான் சபை, சிவன் பிரம்மதாண்டவம் ஆடிய சிறப்பு பெற்றது. கோயிலின் மையத்தில் சண்முகதீர்த்தம், இடப்புறம் ஞானதீர்த்தம், வலப்புறம் பிரம்ம தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் மட்டுமே உள்ளது. முற்காலத்தில் புத்திரப்பேறின்றி தவித்த மகாரதன் எனும் பாண்டிய மன்னன் ஒருவன் சண்முக தீர்த்தத்தில் நீராடி அதன் நீரைக் கொண்டு பாயசம் செய்து பசும்பால், கற்கண்டு சேர்த்து சுவாமிக்கு நைவேத்யம் படைத்து, அந்தணர்களுக்கு தானமும் செய்தான். அதன் பயனாக அவன் இரட்டைக் குழந்தைகளை பெற்ற சிறப்புடைய தலம். இத்தலத்தின் தென்கிழக்கில் வடக்கு நோக்கியபடி எட்டு கைகளுடன் இறைவனின் துணைவியார், நீலகண்டி என்ற திருநாமத்துடன், காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறாள்.

தல வரலாறு :

ஆயிரத்தெட்டுஅண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி துன்புறுத்தி வந்தான்.அவனது அட்டூழியம் நாளுக்கு நாள் பெருகவே அவனை அழித்து தேவகுலத்தை காத்திட முருகன் சம்ஹாரத்திற்கு தயாரானார். ஆறுமுகங்கள் கொண்டு அல்லல் தந்த சூரனுடன் போர் கொண்டு அவனை தனது வேற்படையால் இரண்டாக வெட்டி பின்னர் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார்.எப்படியிருப்பினும், சூரனை துன்புறுத்தியதன் விளைவாக ஆறுமுகனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. தோஷம் நீங்க, கயிலை மலையில் இறைவன் சிவபெருமான் கூறியபடி மாதவிநாதரை வணங்க வந்தார்.அப்போது பூஜைக்கு தீர்த்தம் தேவைப்பட அவர் தனது வேலினால் அவ்விடத்தில் ஊன்ற தீர்த்தம் தோன்றியது. அந்நீர் எடுத்து சிவனை மேற்கு நோக்கியபடி அமைத்து பிரதிஷ்டை செய்து வணங்கினார். பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். அவ்வாறு நீங்கிய பிரம்மஹத்தி, தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படிமுருகன் சன்னதியின் அருகில் உள்ள சதுரக்கல்லாக இருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.

#பஞ்ச தாண்டவ ஸ்தலங்கள்:

சிவபெருமான் ஐந்து வெவ்வேறு இடங்களில் ஐந்து தாண்டவங்கள் செய்ததாக கூறப்படுகிறது. இந்த இடங்கள் பஞ்ச தாண்டவ ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன . இந்த கோவில் பஞ்ச தாண்டவ ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது .

பஞ்ச தாண்டவ ஸ்தலங்கள்;

1.     நடராஜர் கோவில், சிதம்பரம், கடலூர்

2.     தியாகராஜர் கோவில், திருவாரூர்

3.     மீனாட்சி அம்மன் கோவில், மதுரை

4.     அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்,அவிநாசி

5. திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் 

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களை திருப்பித் தரும்படி இறைவனிடம் பாடி முறையிட்ட பதிகம் இதுவாகும்: 👇🏻👇🏻👇🏻👇🏻

"கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு ஆறலைக்கும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம்
முல்லைத் தாது மணம் கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
எல்லைக் காப்பது ஒன்று இல்லை யாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்று அறியார்
உசிர்க்கொலை பல நேர்ந்து நாடொறும் கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போல் பலவேடர் வாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
இசுக்க அழியப் பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

பீறர் கூறை உடுத்து ஓர் பத்திரம் கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கியராகி நாள் தொறும் கூறை கொள்ளும் இடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏறு காலல் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

தயங்கு தோலை உடுத்த சங்கரா சாம வேதம் ஓதி
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன் பூண்டி மாநகர் வாய்
இயங்கவும் மிடுக்குடையராய் விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

விட்டு இசைப்பன கொக்கரை கொடு கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சை கொண்டு உண்பமு ஆகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

வேதம் ஓதி வெண்நீறு பூசிவெண் கோவணம் தற்று அயலே
ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்திரம் நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் எது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

படஅரவு நுண் ஏர் இடைப்பணைத் தோள் வரி நெடுங்கண்
மடவரல் உமை நங்கை தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்
முடவர் அல்லீர் இடர் இலீர் முருகன் பூண்டி மாநகர் வாய்
இடவம் எறியும் போவது ஆகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

சாந்தமாக வெண்நீறு பூசிவெண் பல் தலை கலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்
மோந்தை யோடு முழக்கு அறா முருகன் பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே.

முந்தி வானவர் தாம் தொழும் முருகன் பூண்டி மாநகர் வாய்ப்
பந்து அணைவிரர் பாவை தன்னை ஓர் பாகம் வைத்தவனைச்
சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு
எம்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே.

__சுந்தரமூர்த்தி நாயனார் 

சித்தபிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்கு வந்து தங்கியிருந்து நீராடி வழிபடுவதை இன்றும் காணலாம்.

பிரமதாண்டவ நடராசர் சந்நிதிக்கு சற்று தொலைவில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட மாதவனேஸ்வரர் கோயில் உள்ளது; நல்ல கல் கட்டிடம்.

எங்கும் இல்லாத புதுமையாக கோயிலின் முன் மண்டபத்தின் மேல், பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தலத்திற்கு செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடிய தலபுராணம் உள்ளது.

#கட்டிடக்கலை:

தேவாரம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த கோவில் கிபி 6 ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்திருக்கலாம் . அசல் கோயில் சங்க காலத்தில் சேரர்களால் கட்டப்பட்டிருக்கலாம். இக்கோயில் கொங்கு சோழ மன்னன் கலிமுர்க்க விக்ரம சோழனால் (1004 - 1047 CE) முழுமையாக புனரமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. கொங்கு சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர சாம்ராஜ்யம் மற்றும் நாயக்கர்கள் ஆட்சியின் போது இந்த கோவில் விரிவாக புதுப்பிக்கப்பட்டது.

கொங்கு சோழ மன்னர்கள் கலிமுர்க்க விக்ரம சோழன் (1004 – 1047 CE), முதலாம் குலோத்துங்க சோழன் (1149 – 1183), வீர சோழன் (1183 – 1196 CE ), வீர ராஜேந்திரன் ( 1207 – III விக்ரம சோழன்), (1274 – 1304 CE), மாறவர்மன் சுந்தர பாண்டியன் II (1238-1251 CE), ஜடவர்மன் சுந்தர பாண்டியன் I (1251-1268 CE) மற்றும் ஜடவர்மன் வீர பாண்டியன் I கருவறை சுவர்களில் காணப்படுகின்றனர்.

இந்த கிராமத்தில் மதுரை நாயக்கர் வம்சத்தின் மன்னர் திருமலை நாயக்கர் காலத்திய இரண்டு செப்பு தகடு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இத்தலம் வட பரிசார நாடு என்றும் , சிவபெருமான் திருமுருகன்பூண்டி நாயனார் என்றும் அழைக்கப்பட்டதாக கோயிலில் உள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன . இந்தக் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை கோயிலுக்கு நித்திய விளக்குகளை எரிப்பதற்கும், பூஜை சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் நடத்துவதற்கும் செய்யப்பட்ட கொடைகளைப் பதிவு செய்கின்றன . இக்கோயில் இப்போது இந்திய தொல்லியல் துறையால் (ASI) பராமரிக்கப்படுகிறது.

*வேடுபரி உற்சவம்:

புராணத்தின் படி, மிகவும் பிரபலமான 63 நாயன்மார்களில் ஒருவரான புனித சுந்தரர், சேர மன்னர் சேரமான் பெருமாளிடமிருந்து தனது கவிதைத் திறமைக்காக மதிப்புமிக்க பரிசுகளைப் பெற்றார். 63 நாயன்மார்களில் சேர மன்னர் சேரமான் பெருமாளும் ஒருவர். சுந்தரர் தனது கொடைகளுடன் இப்பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தார். இரவு நெருங்கியதும், சுந்தரர் ஒரு விநாயகர் கோவில் முன் ஓய்வெடுக்க முடிவு செய்தார். சிவபெருமான் அவரது பாடல்களைக் கேட்க விரும்பினார். எனவே, சிவபெருமான் சுந்தரருடன் விளையாட முடிவு செய்தார். சிவபெருமான் தனது பூதகணங்களை வேட்டையாடும் வேடத்தில் அனுப்பி, சுந்தரரிடம் இருந்த மதிப்புமிக்க பரிசுகள் அனைத்தையும் கொள்ளையடித்தார்.

தன் காணிக்கைகள் அனைத்தும் திருடப்பட்டதைக் கண்ட சுந்தரர் விநாயகப் பெருமானிடம் தன் வரங்களை மீட்டெடுக்க உதவுமாறு வேண்டினார். விநாயகப் பெருமான் அவரை இக்கோயிலுக்கு வழியனுப்பி வைத்தார் . சுந்தரர் விநாயகரை உதவிக்கு அழைத்ததால், இக்கோயிலின் விநாயகப் பெருமான் கூப்பிடு விநாயகர் (கூப்பிடு என்றால் தமிழில் அழைப்பது) என்று அழைக்கப்பட்டார். உத்தரவின்படி, சுந்தரர் கோயிலுக்குச் சென்று , வேட்டையாடுபவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றாததற்காக சிவபெருமானைக் குற்றம் சாட்டி, கொள்ளையடிக்கப்பட்ட பரிசுகளைத் திரும்பப் பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். அவனது பதிகத்தில் மகிழ்ந்த சிவபெருமான், திருடப்பட்ட பரிசுகளை அவனிடமே திருப்பிக் கொடுத்தார். இந்நிகழ்ச்சி வேடுபறி உற்சவம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலின் வெளிப் பிரகாரத்தில் சிவபெருமான் சுந்தரரின் அருட்கொடைகளை வைத்திருந்த பொன் மறைத்து வைத்த இடம் என்ற தனி இடம் உள்ளது. இவ்வாறு, சிவபெருமான் தனது நாடகத்தை (திருவிளையாடல்) அரங்கேற்றிய தலங்களில் ஒன்றாக திருமுருகன்பூண்டி கருதப்படுகிறது. கருவறையின் நுழைவாயிலில் வலதுபுறம் மூன்று சிற்பங்கள் உள்ளன. ஒரு சிற்பம் சிவபெருமானை வேடுவானாகவும் (வேட்டைக்காரனாகவும்) மற்ற இரண்டு சிற்பங்கள் சுந்தரர் சோகமாகவும் (சேரமான் பெருமான் கொடுத்த பரிசை சுந்தரர் முகத்தில் துக்கத்துடன் இழந்த பிறகு) மகிழ்ச்சியான மனநிலையிலும் (சுந்தரர் புன்னகையுடன் பரிசை திரும்பப் பெற்ற பிறகு) )

முருகநாதேஸ்வரர் / திருமுருகநாதசுவாமி:

புராணத்தின் படி, சூரபத்மா சிவபெருமானை நோக்கி கடுமையான தவம் செய்து 108 யுகங்கள் வாழும் வரம் பெற்றார், மேலும் 1008 உலகங்களை ஆண்டான் .
அவர் கிழக்குக் கடலில் அமைந்துள்ள வீரமஹேந்திரம் என்ற நகரத்தில் தனது தலைநகரை நிறுவி உலகை ஆண்டார். அவர் சொர்க்கத்தைத் தாக்கி, அனைத்து தேவர்களையும் சிறையில் அடைத்து, அவர்களைத் துன்புறுத்தினார். கலங்கிய தேவர்கள் உதவிக்காக சிவபெருமானை அணுகினர். இவர்களின் அவல நிலையை அறிந்த சிவபெருமான், சூரபத்மனை அழிக்குமாறு முருகப் பெருமானுக்கு அறிவுறுத்தினார். போர் தொடங்குவதற்கு முன், முருகப் பெருமான் தனது தூதரான வீரபாகுவை அனுப்பி, சூரபத்மாவை தனது நடவடிக்கைகளை நிறுத்துமாறு வற்புறுத்தினார் ஆனால் பலனில்லை.

இறுதியாக, முருகப்பெருமான் சூரபத்மாவின் மீது போரை அறிவித்தார், அதைத் தொடர்ந்து நடந்த போரில், சூரபத்மாவின் படை மற்றும் மகன்கள் கொல்லப்பட்டனர். தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாத சூரபத்மா, மாமரத்தின் வடிவத்தை எடுத்துக்கொண்டு கடலுக்குப் பின்வாங்கினார். முருகன் மரத்தை இரண்டாக வெட்டுகிறார், அதில் இருந்து ஒரு சேவல் மற்றும் மயில் வெளிப்படுகிறது. அன்றிலிருந்து முருகப்பெருமான் சேவலைத் தனது போர்க்கொடியாகவும், மயிலை தனது ஏற்றமாகவும் பயன்படுத்தத் தொடங்கினார். ஆனால், அரக்கனைக் கொன்றதற்காக முருகப்பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபடுவதற்காக முருகன் கைலாசத்தில் உள்ள சிவபெருமானை அணுகினார். சிவபெருமான் கொங்கு நாட்டில் உள்ள கந்தமாபுரியில் மணலால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடச் சொன்னார். அறிவுறுத்தியபடி, முருகன் இத்தலத்திற்கு வந்து , தனது வேலால் பூமியைத் தாக்கி, சிவபெருமானை வணங்குவதற்கு ஒரு ஊற்றை உருவாக்கினார். பின்னர், சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபட்டு, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டார்.

முருகப்பெருமானை விட்டுப் பிரிந்த பிரம்மஹத்தி இப்போது ஒரு வேப்ப மரத்தடியில் சதுரக் கல் வடிவில் உள்ளது. முருகப்பெருமான் இங்கு சிவனை வழிபட்டதால், சிவபெருமான் முருகநாதேஸ்வரர் / திருமுருகநாதசுவாமி என்றும், திருமுருகன்பூண்டி என்றும் அழைக்கப்பட்டார் . முருகப்பெருமான் தன் தந்தையான சிவபெருமானை வழிபட வந்தபோது, தனது ஆயுதமான வேல் மற்றும் மலை மயிலை கோயிலுக்கு வெளியே விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது . எனவே, முருகன் சன்னதியில் வேள் என்ற ஆயுதமும், மலை மயிலும் இல்லாமல் காட்சியளிக்கிறார்.

*மகரதன் என்ற பாண்டிய மன்னன் இங்கு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றான்:

புராணத்தின் படி, மகரதன் என்ற பாண்டிய மன்னன் 
குழந்தை இல்லாமல் இருந்தான். அவர் இக்கோயிலுக்கு வந்து , சண்முக தீர்த்தத்தில் புனித நீராடி, பசும்பால் மற்றும் சர்க்கரை மிட்டாய் ஆகியவற்றுடன் கஞ்சி (தமிழில் பாயசம்) தயாரித்து சிவபெருமானுக்கு நிவேதனம் செய்தார்.  அவர் இரட்டைக் குழந்தைப்பேறு பெற்றான்.

பஞ்ச தாண்டவ ஸ்தலங்கள்:

சிவபெருமான் ஐந்து வெவ்வேறு இடங்களில் ஐந்து தாண்டவங்கள் செய்ததாக கூறப்படுகிறது. இந்த இடங்கள் பஞ்ச தாண்டவ ஸ்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன . இக்கோயிலில் நடராஜப் பெருமான் துர்வாச முனிவருக்கு பிரம்ம தாண்டவத்தை நிகழ்த்தியதாக நம்பப்படுகிறது . இந்த கோவில் பஞ்ச தாண்டவ ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது .

*மாதவி வனம்:

புராணத்தின் படி, துர்வாச முனிவர் வானத்திலிருந்து மாதவி மரத்தை (குருக்கத்தி) கொண்டு வந்து இந்த இடத்தில் நட்டார் . அதனால் இத்தலம் மாதவி வனம் என அழைக்கப்பட்டது.

*திருமுருகன்பூண்டியின் பிற பெயர்கள்:

திருமுருகன்பூண்டி பழங்காலத்தில் மாதவி வனம், முல்லை வனம், கந்தமாபுரி என்று அழைக்கப்பட்டது.

திருவிழா: 

மாசியில் 13 நாட்கள் பிரதான திருவிழாவாகும். மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஆருத்ராதரிசனம், அன்னாபிஷேகம், கந்தசஷ்டி, தைப்பூசம், நவராத்திரி, வைகாசி விசாகம் ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

இவ்வாலயம் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

செல்லும் வழி:

கொங்கு நாட்டில் உள்ள மற்றொரு சிவஸ்தலமான அவிநாசியில் இருந்து 5km தொலைவில், அவிநாசி – திருப்பூர் சாலை வழியில் திருமுருகபூண்டி உள்ளது.

 திருமுருகநாதசுவாமி ஆலயத்தின் பின்புறம் இவ்வாலயத்தின் மிக அருகே மாதவனேஸ்வரர் கோவில் என்ற ஒரு கோவிலும் உள்ளது. இவ்வாலயத்தின் முகப்பு மண்டபத்தின் மேற்கூரையில் பெரிய நந்தியெம்பெருமான் சிற்பம் உள்ளது. இக்கோவிலின் வடமேற்கு மூலையில் கேது பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இத்தலத்தில் கேது பகவான் இறைவனை பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. எனவே இவ்வாலயம் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர் அரிய பரிகாரத்தலமாக உள்ளது. 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்

 ஏற்றம் தரும் ஏகாதசி விரதம் பற்றிய பதிவுகள் :* அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம், சஷ்டி விரதம், சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை வி...