தில்லைஸ்தானத்திற்கு அருகிலேயே பெரும்புலியூர் திருத்தலம் அமைந்திருக்கிறது. நாங்கள் தில்லைஸ்தானம் (நெய்த்தானம்) கோவிலுக்குச் சென்ற சமயம், அங்கு கதவு மூடியிருப்பதைக் கண்டு மறுபடியும் திருவையாறு செல்லும் வழியில் திரும்பிச் செல்லும் வழியில் உடனேயே பெரும்புலியூர் செல்லும் சாலை இடதுபக்கமாகப் பிரிகிறது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. திருவையாறிலிருந்து 4 கிமீ தொலைவு. சப்தஸ்தான கோவிலான திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் தலத்திற்கும் பின்னர் பெரும்புலியூர் தலத்திற்குமென்றும் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
சௌந்திர நாயகி சமேத வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம்
(வியாக்ரபாத முனிவர் – புலிக்கால் முனிவர் வணங்கித் துதித்த ஐந்து புலியூர் தலங்களில் இதுவும் ஒன்று. மற்ற நான்கு : சிதம்பரம் (பெரும்பெற்றப்புலியூர்), திருப்பாதிரிப்புலியூர், எருக்காதம்புலியூர், ஓமாம்புலியூர்)
இத்தலத்தில் திருமழிசை ஆழ்வாரின் பெருமையை உலகிற்கு அறியச் செய்த சுந்தரராஜப் பெருமாள் கோவில் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம்: காலை 7-10 மாலை : 5-8 மணி
நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி சுதையாலும் ஆனது.
புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். இந்த வியாக்ரபாதர் வழிபட்ட தலங்களில் பெரும்புலியூர் தலமும் ஒன்றாகும்.
இவ்வாலயத்தின் இராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் மிகப் பழைமையானவை. கோபுர வாயில் வழியே உள்ளே சென்றால் நேரே கொடிமரம் இல்லை. பலிபீடம் மட்டுமே உள்ளது. வெளிப் பிராகார வலம் வரும்போது சூரியன், விநாயகர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து சுப்பிரமணியர் சந்நிதியும் உள்ளது. அடுத்து உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. நின்றநிலையில் அம்பாள் அருட்காடசி தருகிறாள். நவக்கிரக சந்நிதியில் எல்லா உருவங்களும் நடுவிலுள்ள சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பம்சம். கோஷ்ட மூர்த்தங்களாக தென் சுற்றில் தட்சிணாமூர்த்தியும், மேற்குச் சுற்றில் வழாக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சி தருகிறார். வடக்குச் சுற்றில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. நடராஜர் சந்நிதியில் ஒருபுறம் வியாக்ரபாதரும், மற்றொரு புறம் பதஞ்சலி முனிவரும் உள்ளனர்.
திருஞானசம்பந்தர் வருகை புரிந்து பாடி அருளிச் செய்துள்ளார்.
இத்தலத்திற்குரிய திருப்புகழ் : ஒன்று
தனந்தனன தானத் தனந்தனன தானத்
தனந்தனன தானத் …… தனதான
சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
சரங்களொளி வீசப் …… புயமீதே
தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற்
சரங்கண்மறி காதிற் …… குழையாட
இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற்
றிரம்பையழ கார்மைக் …… குழலாரோ
டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்
றிரங்கியிரு தாளைத் …… தருவாயே
சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்
சிறந்தமயில் மேலுற் …… றிடுவோனே
சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்
சினந்தசுரர் வேரைக் …… களைவோனே
பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்
ப்ரசண்டஅபி ராமிக் …… கொருபாலா
பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்
பெரும்புலியுர் வாழ்பொற் …… பெருமாளே.
கிண்கிணி, ரத்தினம் அமைக்கப் பெற்ற வீரச் சிலம்பு இனிய இசை பாட, மணி வடங்கள் ஒளியைப் பரப்ப, தோள் மேல் மார்பகங்களாகிய மலைகள் அசைந்தாட, தேமல் படர்ந்த மார்பகங்கள் ஆசையை விளைவிக்க, அழகிய அம்பு போன்ற கண்கள் தடுத்துத் தாக்குகின்ற காதுகளில் குண்டலங்கள் ஆட, இனிமை வாய்ந்த மயிலின் அழகைக் கொண்டு மகிழ்ச்சியைக் காட்டும் சிரிப்புடன் பேசி, ரம்பை போன்ற அழகை உடையவர்களும் கரிய கூந்தலை உடையவர்களும் ஆகிய விலைமாதர்களுடன் நெருங்கிப் பழகி படுக்கையே இடமாகப் பொருந்தி அதில் அழுந்திக் கிடக்கும் என் மீது, நீ கொஞ்சம் இரக்கம் கொண்டு உனது இரண்டு திருவடிகளைத் தந்து அருள்வாயாக. சிதம்பரத்தில் உறையும் சிவ பெருமானுடைய குமாரனே, கடப்ப மாலை ஆட சிறப்புற்ற மயிலின் மேல் வீற்றிருப்பவனே, சிவந்த கழுகு களிப்புடன் ஆட, பிணங்கள் மலை மலையாகச் சாய்ந்து (போர்க்களத்தில்) குவியும்படி கோபித்து, அசுரர்களை வேரோடு களைந்து எறிந்தவனே, பெதும்பைப் பருவத்தின் இளமை அழகு தன்னிடத்தே வெற்றியுடன் விளங்கும் சிவகாமி (என்னும்) வீரம் மிக்க அபிராமிக்கு ஒப்பற்ற பாலனே. பெரிய வள்ளி மலைத் தினைப் புனத்துக்குச் சென்று, குறப்பெண்ணாகிய வள்ளியுடன் சேர்ந்து, பெரும் புலியூரில்* வீற்றிருக்கும் அழகிய காட்சி.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment