Friday, December 6, 2024

சரும பிரச்சனைகள், பித்ருதோஷம் நீக்கும் வலம்புரநாதர் மேலப்பெரும்பள்ளம்..

அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில்,
மேலப்பெரும்பள்ளம்,
மேலையூர் அஞ்சல்,
தரங்கம்பாடி வட்டம்
மயிலாடுதுறை மாவட்டம்
PIN - 609107    
*மூலவர்:
வலம்புரநாதர்
*தாயார்:
வடுவகிர்க்கண்ணி
*தல விருட்சம்:
பனை
*தீர்த்தம்:
பிரம்மதீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுவர்ண பங்கஜ தீர்த்தம்
*பாடல் பெற்ற தலம்:
தேவாரம் பாடியொர்:
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர். 

*காவிரியாற்றின் வலப்பக்கம் அமைந்துள்ளதால் திருவலம்புரம் என இத்தலம் பெயர் பெற்றது.    
*இது ஒரு மாடக் கோவிலாகும். 

*இங்கு மூலவர் வலம்புரநாதர்  பிருதிவி (மணல்) லிங்கமாக, சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.  பாம்பின் புற்றுபோல் தோன்றும் இந்த லிங்கத்தின் உச்சியில்  இரண்டு பள்ளங்கள் உள்ளன. இதன் காரணமாக இவ்வூர் `மேலப்பெரும்பள்ளம்' என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும்போது ஒரு தாமிரக்கவசத்தால் இந்தப் பள்ளங்களை மூடிவிடுகின்றனர்.                        

*இங்கு வணங்குவோர் தங்களின் தீய வினைகள் அனைத்தும் நீங்கப் பெற்று நிறைவான கல்வியும், குறைவற்ற செல்வ வளமும் பெறுகின்றனர். சரும பிரச்சனைகள், பித்ருதோஷம், ஸ்த்ரீ தோஷம்,  சர்ப்ப தோஷம் மற்றும் கிரகங்களின் பாதகமான அம்சங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலில் பிரார்த்தனை செய்து நிவாரணம் அடைகின்றனர்.

இங்குள்ள இறைவனை வழிபட்டால் பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருந்து பக்தர்கள் விடுபடுவார்கள். 
*இங்குள்ள இறைவியின் பெயர் `வடுவகிர்க்கண்ணி'. இந்த அம்மையைச் சம்பந்தர், `தடங்கண்ணி' என்றும், அப்பர் `வடுத்தடங்கண்ணி' என்றும் பாடியுள்ளனர் 

*மகாவிஷ்ணு சிவனைக் குறித்து தவம் செய்யப் போன போது, திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டு சென்றார். தவத்தின் பலனாக மகாவிஷ்ணு சிவபெருமானிடமிருந்து சக்ராயுதமும், கதையும் பெற்றார். அதன் பின் இங்கு வந்து அம்மனை வணங்கி சங்கும், பத்மமும் பெற்றார் என தல வரலாறு கூறுகிறது. இங்கு சிவனுக்குப் பின்புறம் லிங்கோத்பவருக்குப் பதிலாகத் திருமால் உள்ளார்.    

*காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) திருவலஞ்சுழி தலத்தில் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு அந்த பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. ஹேரண்ட மகரிஷி திருவலஞ்சுழியில்  தன்னையே பலி கொடுக்க எண்ணி அந்த பிலத்துவாரத்தில் இறங்கி  காவிரியை மீண்டும் வெளிக் கொண்டுவந்து  இத்தலத்தில் கரையேறினார்.  ஹேரண்ட மகரிஷிக்கு இத்தலத்தில் தனி கோயில் உள்ளது.  

*மகத நாட்டு மன்னன் தனஞ்செயன் என்பவன் தனது மகனிடம், "நான் இறந்த பிறகு எனது அஸ்தி எங்கு மலராக மாறுகிறதோ, அங்கு எனது அஸ்தியை கரைத்து விடு," என்ற கூறிவிட்டு மறைந்தான். அதன்படி மைந்தன் பல தலங்களுக்கும் சென்றான். இறுதியில் இத்தலம் வந்ததும் அஸ்தி மலராக மாறியதைக் கண்டு அஸ்தியை இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் கரைத்தான்.  எனவே இத்தலம் காசியை விட புனிதமானது என்று புராணங்கள் கூறுகிறது. 

*மன்னன்
தட்சிண மகாராஜா, தான் இறந்து விட்டதாக தன் மனைவிக்கு பொய்யான தகவலை அனுப்ப, அவள் துக்கம் தாளாமல் இறந்துபோனாள். இதனால் மன்னன் `ஸ்திரீ ஹத்தி' எனும் தோஷத்தால் பீடிக்கப்பட்டுத் துன்புற்று வந்தான். தோஷம் நீங்க பல ஆலயங்களுக்கு சென்றான். ஆனால் குணமடையவில்லை.  மன்னன் இத்தலத்துக்கு வந்து இறைவனை தரிசனம் செய்கையில் `தினமும் பல ஆயிரம் பேருக்கு இங்கு அன்னதானம் செய்ய வேண்டும். அதில்  ஒருவர் உத்தமராக இருந்தால் இவ்வாலயத்தில் உள்ள நாவில்லா மணி ஒலிக்கும். அப்போது, உன் சாபம் நீங்கப் பெறும்' என்ற அசரீரி ஒலித்தது.
அதன்படி மன்னனும் அன்றாடம் பலருக்கும் அன்னதானம் செய்துவந்தான்.   
சொத்து, சுகம் அனைத்தையும் துறந்து ஆண்டிக்கோலத்தில்,  பட்டினத்தடிகள் ஒரு நாள் பசியுடன் இங்கு வந்தார்.  காவலன் அவரை அன்னதானத்துக்கு அனுமதிக்கவில்லை.

கோயில் பிராகாரத்தில், அன்னதானத்துக்கு சமைத்த உணவின் வடிகஞ்சியை ஊற்றியிருந்தனர்.   பசியைப் போக்கிக்கொள்ள பட்டினத்தார் அதை அள்ளிப் பருகினார். அப்போது ஆலயத்தின் நாவில்லா மணி ஒலிக்கத் தொடங்கியது. மன்னன், பட்டினத்தாரின் கால்களில் விழுந்து வணங்க அவனை வாட்டிய தோஷம் நீங்கியது.  

இன்றும், பூம்புகாரில் நடக்கும் `பட்டினத்தடிகள் திருவிழா'வில் 7-ம் நாள் நிகழ்வாக இந்த நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. அன்று பட்டினத்தாரே சூட்சும ரூபம் கொண்டு இந்தக் கோயிலில் எழுந்தருளுகிறார் என்பது  மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 
மன்னன் தட்சிண மகாராஜா மற்றும் அவரது மனைவி ஆகியோரின் சிலைகள் 
பிரகாரத்தில் உள்ளன.   

*இக்கோயிலில் வீணைமீட்டும் பிக்ஷாடன மூர்த்தியின்  உற்சவ விக்கிரகம் மிகவும் அழகாக உள்ளது. இங்கு இவர் “வட்டானை நாதர்” என்று போற்றப்படுகிறார்.             

*சூரியன் சிவபெருமானால் இங்கிருந்தே கைலாச மலையை தரிசனம் செய்தார்.     

*பனை மரம் தல விருக்ஷமாக உள்ள  ஆலயங்களில் இது ஒன்று. பனையூர், பனங்காட்டூர், புறவார் பனங்காட்டூர், செய்யாறு, திருமழபாடி, திருப்பனந்தாள் போன்றவை மற்றவை.              

*சீர்காழியில் இருந்து சுமார் 18 கி.மீ. தூரத்திலும்  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகாருக்குச் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவிலும் இவ்வாலயம் அமைந்துள்ளது.                      

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.. 

No comments:

Post a Comment

Followers

சிவனே வந்து சாட்சி சொன்னதால் அவர் சாட்சிநாதர்.

 அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம் தேவாரம் பாடபட்ட 163ம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருகாவூரை அ...