மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள்
மார்கழி திருவாதிரை என்பது நடராஜர் வழிபாட்டிற்குரிய நாளாகும். இந்த நாளில் சிவனை மனதார நினைத்து வழிபடுவதால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிவ பெருமானுக்குரிய மிக முக்கிய விரத நாட்களில் ஒன்று மார்கழி மாதத்தில் வரக் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும். இந்த நாளில் ஆடல் அரசனான நடராஜ பெருமானின் தரிசனத்தையும், அருளையும் பெற வேண்டிய அற்புதமான நாள் என்பதால் இதற்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர்.
சிவ பெருமானின் நடராஜ ரூபத்திற்கு வருடத்திற்கு 6 முறை மட்டுமே அபிஷேக, ஆராாதனைகள் நடைபெறும். அவற்றில் மஹா அபிஷேகம் என சொல்லக் கூடியது மார்கழி மாத திருவாதிரையில் நடைபெறும் அபிஷேகம் தான். சேந்தனார் என்ற பக்தனுக்கு சிவ பெருமான் அருள் புரிந்ததன் அடையாளமாக கொண்டாடப்படும் திருநாளே இந்த ஆருத்ரா தரிசன திருநாள்.
ஆருத்ரா தரிசனம் எனப்படும் மார்கழி திருவாதிரை நாளில் நாமும் ஈசனின் அருளை பெற வேண்டும் என்றபதற்காக இந்த நாளில் விரதம் இருக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அதே போல் பெண்கள், தங்களின் கணவர் நலமுடன் இருக்க வேண்டும், குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த நாளில் விரதம் இருப்பதும் வழக்கமாக உள்ளது.
இந்த நாளில் பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொண்டு, மாங்கல்ய நோம்பு நோற்பதும் வழக்கமாக உள்ளது. இப்படி சிறப்பு வாய்ந்த ஆருத்ரா தரிசன திருநாள் இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. ஜனவரி 12ம் தேதி காலை 11.27 மணிக்கு துவங்கி, ஜனவரி 13ம் தேதி காலை 10.38 மணி வரை திருவாதிரை நட்சத்திரம் உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், காலை நேரத்தில் என்று திருவாதிரை நட்சத்திரம் உள்ளதோ அந்த நாளில் தான் அபிஷேகம் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி திங்கட்கிழமை காலையில் தான் மஹா அபிஷேகம் நடத்தப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.
திருவாதிரை விரதத்தை இரண்டு விதமாக கடைபிடிப்பது வழக்கம். ஒன்று, திருவாதிரை நட்சத்திரம் துவங்கியதில் இருந்து விரதம் இருந்து, நடராஜருக்கு நடக்கும் அபிஷேகத்தை தரிசித்த பிறகு விரதத்தை நிறைவு செய்வது.
மற்றொன்று, நடராஜருக்கு அபிஷேகம் ஆன பிறகு அன்று முழுவதும் விரதம் இருந்து, மாலையில் பெளர்ணமி திதியில் விரதத்தை நிறைவு செய்வது. இதில் யாருக்கு எந்த முறை வழக்கமோ அல்லது வசதியோ அந்த முறைப்படி விரதம் இருக்கலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment