_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறையில் திருப்பணி செய்த சித்தர்களை நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.
இக்கோயிலில் இன்றளவும் பேசப்படும் ஐந்து சித்தர்களின் ஜீவ சமாதியை பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர். அவர்கள் இறைவனின் கட்டளைக்கு இணங்கவே கோயில் திருப்பணி முடித்து ஜீவசமாதியாகி தங்கள் பிறவியின் பயனை அடைந்ததாக கூறப்படுகிறது.
கடற்கரை மட்டமும் இக்கோயில் மூலவர் வீற்றிருக்கும் கருவறை மட்டமும் ஒரே அளவாக இருந்தாலும், கடல் நீர் இக்கோயிலின் உள்ளே புகாதவாறு ஞான நுட்பத்துடன் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் திருப்பணியை செய்தவர்களில் மவுனசுவாமி, காசி சுவாமி, தேசிக மூர்த்தி சுவாமி, ஆறுமுகசாமி, வள்ளிநாயகம் சாமி ஆகிய ஐந்து சித்தர்களின் பக்தி நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இதில் மவுனசுவாமி, காசி சுவாமி, தேசிக மூர்த்தி சுவாமி ஆகிய மூன்று சுவாமிகளும் திருக்கோயிலின் உள் பிராகாரத்தில் குரு பகவான் சன்னிதிக்கு எதிரே மூன்று தூண்களில் நின்ற கோலத்தில் சிலை வடிவில் காட்சி அளிக்கின்றனர்.
ஜீவசமாதி அடைந்த இம்மூவர் சமாதி திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக் கிணறு அருகிலும் கோயில் ராஜகோபுரம் வடக்கு டோல்கேட் அருகே வள்ளி நாயகம் சுவாமிக்கும் ஜீவசமாதி உள்ளது.
ராஜகோபுரம் திருப்பணி செய்த ஸ்ரீ தேசிக மூர்த்தி சுவாமி ஜீவசமாதி ஸ்ரீ வைகுண்டத்திற்கு அருகே உள்ள ஆழ்வார்தோப்பில் அமைந்துள்ளது.
இந்த ஜீவசமாதியை திருவாவடுதுறை ஆதீனம் பராமரித்து வருகிறது.
இந்த ஐந்து ஜீவ சமாதிகளிலும் நாள்தோறும் பூஜைகள் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு சுவாமிகளுக்கும் ஜீவசமாதியான நட்சத்திரத்தன்று குரு பூஜையும் நடத்தப்படுகிறது.
குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் இங்கு நம் கோரிக்கைகளை வைத்து இந்த ஜீவசமாதிகளில் உட்கார்ந்து மனதார தியானித்து வந்தால் நம் மனக்குறைகள் தீர்ந்து சிறப்பாக வாழலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment