ஓம்
சிவசிவ :
*சண்டீசப் பெருமான் நாயனார், வரலாறு.*
*(தை - உத்திரம் )*
======
*" மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச் சண்டிப் பெருமானுக்கு அடியேன் " / திருத் தொண்டத் தொகை / நம்பி ஆரூரர் .*
விளக்கம் : ~ *மணலால் உருவாக்கிய ,*
*ஈசனார் திருமேனியை , தூய சிந்தையுடன் , பயன் நோக்காது ,*
*இயல்பாக எழுந்த அன்பினால் , பூசித்து , ஞானத்தில் யோக நிலையில் ,* *நிலைத்து நிற்கும் போது , அவர் நிலை கண்டு உணராது ,* *பாலை இடறி வீசிய , தந்தையின் கால்களை வெட்டி வீழ்த்திய , திருவடிப் பற்று விடா ,* *அன்னை போல்வாராகிய ,*
*சண்டீசப் பெருமானுக்கு நான் அடியவன்.*
°°°°°°°°°°°°
*குலம் ஏறிய சேய்ஞலூரில் குரிசில் குரை கடல் சூழ் /தலம் ஏறிய விறல் தண்டி கண்டீர் தந்தை தாள் இரண்டும் /வலம் ஏறிய மழுவால் எறிந்து ஈசன் மணி முடி மேல் / நலம் ஏறிய பால் சொரிந்து அலர் சூட்டிய நன் நிதியே ./ திருத் தொண்டர் திருவந்தாதி/ நம்பியாண்டார் நம்பிகள்.*
*விளக்கம் : ~ *நன்மை மிகு , மறையவர் குலம் வாழ் சேய்ஞலூரில் ,*
*உதயம் செய்த, பெருமையில் சிறந்தவர் ;* *ஒலிக்கின்ற , கடல் சூழ் உலகத்தில் , மனத் திண்மை உடைய சண்டீசர் ; தந்தை தாள் இரண்டையும் , தன் வலக் கையில் எடுத்த கோலே ,* *நலம் விளைவிக்கும் மழுவாகிட , அதனால் வீசி , வெட்டி எறிந்தவர் காண்க ; ஈசனார் முடிமேல் , நல மிகு பால் சொரிந்து , மலர் சூட்டிய , நன் நிதியே போன்றவர்.*
******
*நம் அன்னையே போல்வாராகிய ,*
*சண்டீசப் பெருமானார் , வரலாற்றினை , நம் சேக்கிழார் பெருமான் , விரித்து உரைத்தவாறு காண்போம்.*
*குளிர்ச்சி பொருந்திய , அழகிய , எந் நாளும் பொய்யாது அளிக்கும் , பொன்னி நதி ,வளப்படுத்தும் நீர் நாடு , சோழ நாடு ;* *அக் காவிரியின், கிளை நதியான ,* *மண்ணியாற்றின் தென் கரையிலே நிலை பெறுமாறு ,*
*முற் காலத்தில் , கிரௌவுஞ்ச மலையைப் பிளந்த , கூரிய வேலின் வல்லமையைக் காட்டி ,* *இமையோர்களது , பகை அசுரர்களை வீழ்த்திய , முருகப் பெருமான் , தாம் வழிபடப் பெருமானை எழுந்தருளுவித்த ஊர் ; திரு மறையோர் வாழ் , தொன்மையான ஊர் ; செல்வ மலி திருச் சேய்ஞலூர்.*
*செம்மையான , திரு நீற்றுச் சார்பிலே நிற்கும் , ஒரே கொள்கையர் ; தாய் வழி ஒரு பிறப்பும் , மற்றும் உப நயனச் சடங்கு நிறைவில் , ஒரு பிறப்புமாகிய, இரு பிறப்பாளர் என்ற சிறப்புடையோர் ;* *இல்லங்கள் தோறும் ,*
*ஆகவனீயம் , காருகபத்தியம் ,*
*தக்கிணாக்கினியம் என்பதான , முத்தீ வளர்க்கும் நன் நெறியில் நிற்போர் ;* *இருக்கு , யஜுர் , சாம , அதர்வணம் எனும் , நான்கு வேதங்களையும் முறையாகப் பயின்றோர் ;* *புலன்கள் வழி , தாம் செல்லாது , புலன்களைத் தம் வழி நிற்கச் செய்யும் , வல்லமை உடையோர் ;* *மெய்ம்மை ஒழுக்கத்துடன் ,*
*ஓதல் , ஓதுவித்தல் , வேட்டல் ,* *வேட்பித்தல் , ஈதல் , ஏற்றல் என்ற ஆறு தொழில்களிலும் ,* *ஏழுலகோரும் போற்றும்படி விளங்கும் மறையோர் வாழ் ஊர்.*
*குற்றமிலா, மான் தோல் கோத்த, முப்புரி நூல் அணிந்த மார்பினராய் ,* *உச்சியில் குழைக் குடுமி உடைய , வேதம் ஓதும் , கூட்டமாக நிறைந்து பயில்கின்ற ,சிறு மாணாக்கர்களும் ,* *அந் நான் மறைகளையும் , கற்பிக்கின்ற பெருமை உடைய ஆச்சாரியாரும் ,* *இருள் வானில்,* *விளக்கமாகத் தோன்றும்*
*நட்சத்திரங்களும், ஒளி வீசும் நிலாவினையும் போலப்,* *பொருந்துகின்ற திரு மடங்களில் ,* *அவற்றின் மீது முழங்கும் ,*
*முகில்களின் இடியோசை தாழுமாறு , வேத ஓலிகள் முழங்குவனவாக இருக்கும்.*
*வேள்விகள் இயற்றப்படும் , சாலைகள் தோறும் , வேதியர் அளிக்கின்ற ,அவிர் பாகத்தை உண்டிட வரும் , திருமாலும்,* *நான்முகனும் , அவர்கள் ஏறி வருகின்ற , கருடனும் ,அன்னப் பறவையும் , அவை தங்குதற்குரிய இருப்பிடங்கள் போலவும் ,* *தேவேந்திரன் ஏறி வருகின்ற ஆனையைக் கட்டுவதற்குரிய ,*
*தறிகள் போல , யூப தம்பங்களும் நாட்டப் பட்டும் இருக்கும்.*
*பஞ்ச கவ்வியத்தின் பொருட்டு , பேணி வளர்க்கப்படும், பசுக்களின் இனிய கூட்டம் , பால் ஒழுகும் படி , பொழுது தோறும் செல்லும் ; தாங்கள் பயிலும் , வேத சாகைகளைக் கணித்துக் கொள்வோராகிய மாணவர்கள் , வேள்விக்குரிய , மரச் சுள்ளிகளைத் திரட்டிக் கொண்டு வந்து அணைவர் ; பூக்கள் நிறைந்த நீர்த் தடங்களில் மறை மகளிர் நீராடிப் புகுவர் ; இத் தன்மைத்தாயதாக விளங்கும் , நீண்ட வீதிகளும் , அங்கு நிறைய உள்ளன.*
*இறைவனைப் போற்றி செய்யும் , பெரு வாழ்வினை உடைய , அழகிய பதியாகிய அவ்வூரின் பக்கத்தில் ,ஓடும் மண்ணியாற்றின் ,* *நீரலைகள் பரவியுள்ள , வயல் வரம்புகளின் அடியில் , முத்துகள் சொரியப் படும் ;* *அந்தக் கரையின் பக்கத்தில் , வேள்விச் சாலைகளைச் சூழ , வெளியிடங்கள் இருக்கும் . அந்த இடங்களில் , வேள்விகளின் நிறைவில் செல்லும் , வேள்வித் தலைவர்களின் நெடுந் தேர்களும் , அவிர் பாகம் உண்டு செல்லும் தேவர்களின் , விமானங்களும் இருக்கும்.*
*நீர் கொணரும் , வாய்க்கால் வரப்புகளில் , செங்கழுநீர் மலர்கள் மலர்ந்திருக்கும் ; சூழ்ந்த வயல்களில் , விளைந்த செஞ்சாலி நெற் கதிர்கள் , நிறைந்திருக்கும் ;* *அவற்றின் அயலே , வண்டுகள் நெருங்கி மொய்த்திடும், நீர் வளத்தால் விளைந்த பெரும் பாக்கு மரப் பாளைகள் இருக்கும் ;* *செழிப்பான இலைகளிடையே , மலர்ந்த நீண்ட தாமரை மலர்களில் ,கயல் மீன்கள் துயிலும் ;* *வழி நடைகளில் , படர்கின்ற முல்லைக் கொடிகளும் , அரும்புகள் நிறைந்து விளங்கும் ;*
*கிளைகளை உடைய , காஞ்சி மரங்களும் ,*
*சிறந்து காட்சிப் படுத்தும்.*
*சோழர் மரபில் அபயன் என்றும் , அநபாயன் என்றும் , போற்றப்படுபவர் இரண்டாம் குலோத்துங்க சோழர் ; தில்லை எல்லையைப் பொன்மயமாக்கிய , உலகத்தைக் காக்கும் , போர் ஏறுகளாகிய ,சோழ வளவ மரபில் வந்தவர் ; சோழர்கள் , தொன்மைக் காலம் தொடங்கி , முடி சூட்டிக் கொள்ளும் , தன்மையதான, நீடிய ஐந்து பதிகளில் ஒன்று , இத் திருச் சேய்ஞலூர். (ஐந்து பதிகளாவன : ~ திருவாரூர் , காவிரிப் பூம் பட்டினம் , உறையூர் , கருவூர் , திருச் சேய்ஞலூர் ஆகியன ; திருத் தில்லையில் , சோழர்கள் , முடி சூட்டிக் கொள்ளும் மரபும் இருந்துள்ளது.)*
*பண்ணின் பயனாம் நல் இசையும் , பாலின் பயனாம் இன் சுவையும்/கண்ணின் பயனாம் பெருகு ஒளியும் , கருத்தின் பயனாம் எழுத்து அஞ்சும் /விண்ணின் பயனாம் பொழி மழையும் , வேதப் பயனாம் சைவமும் போல் / மண்ணின் பயனாம் அப் பதியின் வளத்தின் பெருமை வரம்புடைத்தோ ?(09)*
*அப் பதியின் பெருமைக்கு , எல்லையே இல்லை !*
*இத் தன்மைத்தான, எல்லையிலா பெருமைகளை உடைய , அப் பதியில் ,* *இல்லறத்துக் குரிய அற நெறிகளைப் பற்றி வாழ் ,* *மறையோர்கள் தம்முள் , தருமம் நிலவும் காசிப கோத்திரத்தில் ,*
*தலைமை சார்ந்த மரபில் , அருமை மணியும் அளித்து , அதுவே நஞ்சும் உமிழும் நாகத்துக்கு ஒப்ப , இரு எதிரிடைத் தன்மைகளும் , ஒருங்கே அமைந்த வடிவாய், எச்ச தத்தன் என்பவன் ஒருவர் உளனானார்.* *அந்த மறையவனின் , திருவுடை மனைவி , பொருந்திய பெருமையுடைய மனையில் வந்து உதித்தவள் ;* *சுற்றத்தார் விரும்பும் படியாக , இல்லற நெறியில் நின்றவள் ;* *உலகியல் வாழ்க்கையில் தனக்குத் துணையாக , ஒரு புதல்வனைப் பெற வேண்டும் என்ற விழைவுடன் , சிவ தவம் செய்தாள் ; புதல்வனைப் பெறுவோர் உலகினில் பெறக் கூடிய ஒப்பற்ற நற் பயனை எய்தியவள் ;* *அத்தகையப் பெரும் பேற்றினைப் பயனாக எய்த , உலகியல் சார் பற்றுகளை எல்லாம் அறவே புறந் தள்ளிட , சிவப் பற்று ஒன்றையே சார்பாகக் கொண்டவள் ;* *பவித்திரை என்பது அவரது திரு நாமம்.*
*(பவித்திரை = தூய்மை உடையவள். )*
*சிவ தவம் புரியும் , அவர் தம்பால் , இக , பர நன்மைகளை விளைவிக்கும் ,*
*நான் மறைகளின் ,பல துறைகளும் விளக்கமுறவும் ,*
*வேத நெறிகளைச் , செயலாக்கம் செய்யும் மறையோர் குலம் நலம் பெருகி வாழவும் , ஏழு புவனங்களில் வாழ்வோரும் ,* *உய்வடையவும் , உலக உயிர்களை வாழ்வித்து , உயர் கதி அடையச் செய்ய வேண்டும் என்ற, ஒரே பெருங் கருணையினால் , ஐந் தொழில் இயற்றி ,*
*மன்றில் , மாநடஞ் செய் பெருமான் வகுத்த சைவ வாய்மை நெறி வளரவும் ,* *மாதவமுடையோர் , இறை கருவிகளாக இயற்றும் , அரிய செயல்கள் வெற்றி பெறவும் , அந்த பவித்திரையின் தவப் பயனாக, பூமியில் வந்து உதயம் செய்தார் விசார சருமனார்.*
*அந்த விசார சருமர் , ஐந்து வயதினை எய்தினார் ; முற் பிறவிகளில் , அவர் கற்று அறிந்த ஆறங்கம் , நால் வேதங்களுடன் , மேலும் இறைவனார் சிறப்பாக மொழிந்த சிவாகமங்கள் ஆகியன , இந்தப் பிறவியிலும் , தொடர்ந்து வந்து , முழுமையடைந்த மலரின் மணம் போல , சிந்தை விளக்கமுற , செவ்வியதான அந்த சிவ ஞானமும் , உணர்வில் சிறந்து ஊறி , விளைவதாயிற்று .*
*இவ்வாறு , சிந்தையில் சிவமே விளங்கி , நிகழும் முறைமையால் ,*
*ஏழு வயதினை எய்தினார் ; புகழும் பெருமைகளை உடைய , உப நயனச் சடங்கு செய்விக்கப் பட்டார் ; அவர் அறிவில் , நிலவும் வேத நெறிகளும் , இதுவரை , பிறர் அறியா புனித வேத நெறிகளெல்லாம் கூட , விஞ்சி விளைந்தவாராய் இருந்தார் ; எனினும் , தமது குல மரபுக்கு ஒப்ப , வேதமோதுவிக்கும் , பாட சாலையில் , அவரைப் பயிலச் செய்வித்தனர் பெற்றோர்கள்.*
*அறிவு விளக்கம் உற , ஏதுவாகிய மறைகளும் , பல கலைகளும் ,*
*அவற்றைக் கற்பிக்கும் முன்னதாகவே கொண்டு , அணைத்தும் நிலவும் உணர்வின் தன்மையராக , விசார சருமர் இருப்பதைக் கண்டு மறையோர்கள் அதிசயித்தனர் ;* *"அலகில் கலையின் பொருட்கு எல்லை ஆடும் கழலே " என , சிந்தையில் உறுதியாகக் கொண்ட கொள்கையில் தெளிந்தவவராய் விளங்கினார் , அச் சிறிய பெருந்தகையார்.*
*" நலமே புரியும் சேவடியார் நம்மை உடையார் " " (உயிர்களாகிய நம்மை , அவரது உடைமைகளாக உடையார் )எனும் மெய்ம்மையுடன் தோன்றும் உணர்வின் கண் , ஒழியாது நீடி இருந்தார் ; அதனால் ஊறும் வழி அன்பின் கடமையாக , *இயல்பாக சிவத்தைச் சார ,*
*முயன்று இயற்றும் , காதல் மேன் மேலும் எழுங் கருத்தின் , திடமான உறுதியில் நேர் நிற்கும் ,* *செம்மை மனத்தினராய் திகழ்ந்தார்.*
*அவ்வாறு வாழ் நாளில் ,ஒரு நாள் வேதமோதும் மாணவர்களுடன் , ஊரவர்களின், பசுக் கூட்டத்தினூடே சென்றார்.* *அப்போது , அண்மையில் கன்றை ஈன்ற புனிற்றுப் பசு ஒன்று , பசுக் கூட்டங்களை மேய்ப்பான் மீது கொம்பால் முட்ட முயன்றது ; உடனே அவன் சினந்து , கூச்சம் ஏதுவும் இல்லாது , கோலை எடுத்து வலிமையாக , அப் பசுவை அடித்தான் ;* *அதைக் கண்ட , சிறிய பெருந் தகையார் , மனம் பொறாது ,*
*மனத்தில் எழுந்த பரிவால் வெகுண்டு , அவனை அச் செயலில் இருந்து , விலக்கினார்.*
*மெய்ம்மையை உணர்ந்த அவர் , அந்த ஆ நிரைகள் , பரந்த , கலை நூல்களாலும் , ஆகம நூல்களின் பரந்த பல விரிவுகளால் , பெருமை பொருந்திய அரிய வேதங்களும் , உலகியல் மூலமாக விளங்கும் இவ்வுலகில் , இவை யாவற்றிலும் விளங்கும் பொருளின் நிலையைத் தெளிந்த உள்ளத்தினராய் , பசுவின் பெருமைகளை உள்ளபடி அறிந்த அவர் , (உலகோரும் அறியும் வண்ணம் ) அந்த ஆயனுக்கு , விரிவாக விளக்கி உரை செய்தார்.*
*பசுக்கள் , உலகில் விளங்கும் பிறப்புகளில் , எல்லா வகையான பிறப்புகளுக்கும் , மேலான பெருமைகளை உடையன; உலகில் உள்ள , பொங்கு தீர்த்த நீரெல்லாம் பொருந்தி இருப்பன ; பெருமைகளை உடைய,தேவர்கள் , முனிவர்கள் , கணங்கள் எல்லாம் , சூழ்ந்து பிரியாத , உடல் உறுப்புகளை , தம் அங்கங்களாக உடையனவாகவும் இருப்பது அல்லவோ ?*
*இத் தகையச் சிறப்புகளால் , தாம் ,*
*இந்த உடலைப் பெற்ற அன்று தொட்டே , வளர்மதியும் , கங்கை நதியும் ,* *சிரித்த வெண் தலை மாலையும் அணிந்த ,*
*சடாமுடி யுடைய திருமுடி மேல் ,தில்லை மன்றுள் நடம் புரியும் பெருமான் விரும்பி ஆடி அருளுதற்கு , தூய திரு மஞ்சனத்துக்கான , பால் , தயிர் , நெய் , கோமயம் , கோசலம் ஆகியனவற்றை , தமக்கு மட்டுமே அளிக்கும் உரிமையை அருளப் பட்டன அல்லவோ அச் சுரபிகள் தாம் ?*
*சீலமுடைய இக் கோக் குலங்களே , சிறப்புடைய தேவர்களையும் , உலக உயிர்கள் அனைத்தையும் , காக்கும் முதல் காரணராகிய , நீல கண்டரும் , சிவந்த சடையுடையாரும் , மன்றுள் நடமாடும் பெருமான் சாத்தும் , திரு நீறு தரும் , மூலப் பொருள் அவதரிக்கும் மூர்த்தம் எனில் , அவற்றின் பெருமைக்கு எல்லை உளதோ ?*
*மேலும் ,இனி கருதத் தக்கப் பெருமைகள் தான் வேறு உளவோ ? *துள்ளும் மான் கன்றைத் தாங்கிய கரத்தினரும் , ஆடும் பாம்பின் சுடர்விடு மணிகளை ,கங்கை நதி அலைத்திட விளங்கும் சடா முடியினரும் , தேவர்கள் தம் பிராட்டியாகிய ,* *அம்பிகையுடன் ,*
*எழுந்தருளும் , சின இடப வாகனரின் குலமன்றோ இப் பசுவின்* *குலம் ! ,என்று இது போன்ற பலவற்றையும் நினைவாராயினார்.* *இந்தக் கன்று பயில் , பசுக் கூட்டத்தை ,*
*இதமாகப் போற்றிக் காத்து மேய்ப்பதன்றி , இதன் மேல் திருத் தொண்டு எதுவுமில்லை ;* *இதுவே , மன்றுள் ஆடும் பெருமானின் சேவடிகளைப் போற்றி செய்யும் நெறியுமாகும் , என்று உறுதி கொண்டார். எதிர் நின்ற ஆநிரை மேய்பானை நோக்கி , இனி பசுக் கூட்டங்களை மேய்க்கும் பணியிலிருந்து , விலகிச் செல்லுமாறு பகர்ந்தார்.*
*"யானே இந் நிரை மேய்ப்பன் " என்றார் ; அதுவரை ஊர் வழக்கப் படி மேய்த்து வந்த , இடை மகனும், நேராக இறைஞ்சி , அந்த இடத்தை விட்டு அகன்றான்.* *இப்பால் , அப் பசுக் கூட்டங்களை மேய்த்துக் காக்கும் பணியினை , தானே செய்வதாகக் கூறி , அவ்வூர் மறையவர்களின் இசைவைப் பெற்றார். பசிய பயிர்களுக்கு , வானே மழையை வழங்கி , இன்பம் பயத்தல் போல , பசுக்கள் நிறைந்திருக்கும் அந்தக் கூட்டத்தைக் காத்து வந்தார் , அத் தெய்வ மறைச் சிறுவர்.*
*ஆ நிரைகளை மேய்க்கும் , கோலும் கயிறும் , கைக் கொண்டார் ; சிறிய மிருதுவான உச்சிக் குடுமி அலைவதாயிற்று ;* *மான் தோலும் , நூலும் , சிறிய மார்பில் துவண்டு , அழகு செய்தன ; திரு இடையில் , கோவண ஆடை , ஒளி விளங்குமாறு தோன்றிற்று ;* *பாலும் , கன்றுகளும் பெருகுமாறு ,*
*பசுக்களை மேய்க்கும் பான்மையினால் ,* *அவை வேண்டுமளவும் , மேலும் நகரச் செய்து , சென்று மேய்த்தார்.*
*புல் , மிக உள்ள காலங்களில் மேய்ப்பார் ; பறித்தும் அளிப்பார் ; இதமாக அப் பசுக்கள் நீர் அருந்துமாறு , நல் துறைகளில் நீரூட்டுவார் ; பிற உயிரினங்களால் , எதிர் வரக் கூடிய அச்சங்களை நீக்குவார் ; நல்ல வழிகளில் , அவை முன் செல்லுமாறு செலுத்தி , நன் நிழல்களில் அவைகளை இளைப்பாற்றுவார் ;* *அமுதமாகிய , இனிய பால் வழங்கும் பொழுது சாயும் போது , தவறாது அவற்றை உடையோர்களது இல்லங்களுக்குச் ,செல்லுமாறு செய்வார்.*
*மண்ணியாற்றுக் கரையின் புறங்களில் , புல் வளர் நிலங்களிலும் , படர் படுகை நிலங்களிலும் , குளிர் முத்துகளை உடைய , தண்ணீர் நிறை ,மருத நிலஞ் சூழ் சோலைகளின் மருங்கே , புல் வளர் இடங்களிலும் ,*
*எண்ணிக்கையில் பெருகி வரும் பசுக் கூட்டங்களை , மேயச் செய்தார்.அக் கால இடைவெளியில் , வேள்விக்கான , சமிதைகளையும் , எரி கடையும் மரக் கோல்களையும் , கொண்டு ,இரவுப் பொழுது வருமுன் , ஆ நிரைகளை மீளக் கொணர்ந்து வந்து விடும் , அத் திருத் தொண்டு , நற் பல நாட்களாகத் தொடர்ந்து நடந்து வந்தது.*
*இவ்வாறு , அன்பையே கோலாகக் கொண்டு ,விசார சருமர் , ஆ நிரைகளைக் காத்து வந்ததால், அவை அழகின் மிக விளங்கின ; மிகவும் பல்கிப் பெருகின ; மேய்வதற்காக , இனிய புல்லுணவும் , பருக விரும்பத் தக்க நீரும் கொண்டு திளைத்தமையால் , பசுக்கள் மன மகிழ்ச்சி அடைந்தன ; இரவும் , பகலும் ,மடி பெருகிட , தூய தீம் பாலைச் சுரந்து பொழிந்தன.*
*மறையவர்கள் , தாம் பூணும் வேள்விச் சடங்குகளை , இயல்பாக இயற்ற , பால் அளிக்கும் அப் பசுக்கள் , முன்னையிலும் அநேக மடங்கு , கறப்பனவாகின ; அதனை உணர்ந்த மறையவர்கள் , இப் பிரமச்சாரி , அன்பால் பேணி , மேய்த்து வருதலின் பின் , அவை மிகவும் அதிக அளவு பால் கொடுக்கும் திறத்தனவாயின என, மனம் மகிழ்ந்தனர்.*
*அனைத்து வகையிலும் , ஆவினங்கள் அடைந்த மகிழ்ச்சி , அளவிலாதனவாயின ; மனைக் கண் கொட்டிலிலே , தமது கன்றுகளைப் பிரிந்து வந்தாலும் , மேய்ச்சலிடத்தில் தம்மை மருவும் , மறைக் கன்றாகிய விசார சருமரைக் கண்டு , அருகு சார்ந்து , மனம் உருகித், தம் தாயாம் தன்மை நிலையினை அடைந்து , கனைத்திடவே , காம்புகளில் பால் சுரந்து , கறவாமலேயே பால் பொழிவனவாயின.*
*தம்மை அணைந்த ஆவினங்கள் , தாமே முலைப்பாலைச் சொரிவதைக் கண்டு, மனமுவந்தார் ;* *செம்மை நெறியாகிய சிவநெறியையே , சிந்தையில் நிறைத்தவரான அவருக்கு , சிவ பெருமானுக்கு , திருமஞ்சனம் செய்யும் குறிப்பு மனத்தில் எழுந்தது .* *எம்மை ( சேக்கிழார் பெருமானை )*
*ஆளுடைய வள்ளலாகிய , விசார சருமனார் , அதனை எய்த நினைந்து , தெளிந்தார் ; தெளிவுறவே ,* *மெய்ம்மை சிவனார் பூசையை இயற்ற விரும்பும் வேட்கை , பெருகலாயிற்று.*
*அந்த இடச் சூழலில் , முன்னைப் பிறவியில் , அவர் இயற்றி வந்த சிவபூசையின் தொடர்ச்சியாக , விளையாட்டு போல் முகிழ்த்து , பூசை இயற்றும் விருப்பு , அன்பாகப் பொங்கி விளைந்தது ; மண்ணியாற்றின் தூய மணல் திடலில் , ஒரு ஆத்தி மரத்தின் அடியில் , செங்கண் விடையாராகிய பெருமானின் இலிங்கத் திருமேனியை மணலால் , இறுக அமைத்தார். பெரிய நீண்ட கோபுரமும் , சிவாலயமும் , சுற்றாலயங்களும் , விதிப்படி வகுத்து அமைத்துக் கொண்டார்.*
*ஆத்தி மலர்களும் , செழுந் தளிர்களும் ,அருகே இயற்கையாக வளர்ந்திருக்கின்ற , மரம் , செடி கொடிகளில் உள்ள தேர்ந்த மணமுடைய மலர்களும் ,ஆக புனிதராகிய பெருமானின் திருமுடிமேல் சாத்தும் , சிவ பூசைக்கு உரிய மலர்கள் பலவற்றையும் கொய்து , இலைகளால் தான் கோத்து வைத்தக் கூடையில் கொணர்ந்து , மணம் தங்குமாறு மூடிக் காப்பு செய்து கொண்டார்.*
*நல்ல நவ கும்பங்கள் (பூசையில் ஒன்பது கும்பங்கள் தாபித்து வழிபடல் ; ஆத்மார்த்த பூசையிலும் இந்த வழக்கம் உண்டு ) பெறுதற்கு நாட்டங் கொண்டு , அதற்கென , ஒன்பது குடங்களை எடுத்துக் கொண்டார்.*
*நாணல்கள் நிறை , கொல்லைகளிலும், மறைவிடங்களிலும் மேவி மேயும் ,பால் தரு பசுக்களிடையே சென்று , ஒவ்வோன்றாக எதிர் சென்று , பால் மடியைத் தடவ ,அவை செழும் பால் பொழியலாயின.*
*பொழிந்து நிறைந்த , அந்த பாற் குடங்களை கொணர்ந்து , பூசை செய்யும் கருத்தினராய் , அண்டர் பெருமானது வெண் மணல் ஆலயத்தில் நிலைப் படுத்திக் கொண்டார் . வண்டுகள் சூழ் திருபள்ளித் தாம பூக் கூடையைக் கொணர்ந்து , விதிகளின்படி , முன்னைத் தொடர்சியாக விளைந்த அன்பினாலே அருச்சித்து , பாலால் திரு மஞ்சனமாட்டினார்.*
*மீள மீள , இவ்வாறு , வெண்பால் கொண்டு திருமஞ்சனம் ஆட்டி மகிழ்ந்தார்.*
*அவரை ,ஆள உடையாராகிய பெருமானும் ,தமது அன்பரது அன்பின் வலையில் பட்டு , தாம் அங்கு உளதாயினார். தனது அன்பரது , அன்பு , மேன்மேலும் முதிர்ந்து பற்றாக விளைந்திட , அங்கு சூழ எழுந்தருளுவிக்கப் பட்ட , மணலாலாகிய இலிங்கத் திருமேனியில் , உள் நிறைந்து அவரது பூசையை ஏற்றருளினார், நம் பெருமானார்.*
*பெருமை விளங்கும் , சேய்ஞலூர் பிள்ளையாராகிய, விசார சருமரது , யோக நிலையில் ஒன்று பட்ட உள்ளத்தில் , திருமஞ்சனம் உள்ளிட்ட , பூசைக்கு உரிய இனங்களில் ,*
*அங்கு தேடிக் கொள்ள இயலாவற்றை , அன்பினால் , மனத்தால் தேடி நிறைத்துக் கொண்டு , அகப் பூசை இலக்கணப் படி , அந் நெறியிலே நின்று , பாவனையால் ,*
*அருச்சனை செய்து வணங்கி மகிழ்ந்திருந்தார்.*
*இறைவனாரது அடிக் கீழ் நின்ற மறையவனார் , எடுத்து திருமஞ்சனம் ஆட்டும் நிறை பூசனைக் குடங்களில் , பால் நிரம்புமாறு சொரிந்த , அந்தப் பசுக்களின் மடியில் , பாலின் அளவு குறைபாடின்றி , மடி பெருகக் குவிந்தது ; அதனால் , பால் பொருட்களின் வளங்கள் மறையோர்களின் இல்லங்களில் பெருகி நிறைந்தன .*
*பல நாட்களும் , இப்படிப் பட்ட , சிறந்த பூசை செய்வதற்கு முயன்று இயற்றும் செயல் , திரு விளையாட்டாக , ஆகிட , முந் நூலணி மார்பராகிய விசார சருமர் , இயல்பாகவே அதனைத் தொடர்ந்து , புரிந்து வந்தார். இதனைக் கண்டு , இதன் மேன்மையை அறியாத , அயலானாகிய ஒருவன் , அந்த ஊர் வாழ் அந்தணர்களுக்கு , நிகழ்வை அறிவித்தான்.*
*அச் சொல்லினைக் கேட்ட , அரு மறையோர்கள் வியந்து வெகுண்டனர் .* *""ஆயன் ( இடையன் )*
*அறியான் என்று , அவற்றின் இச்சை வழியே , யான் மேய்ப்பேன் என்று ,* *எம் பசுக்கள் தமைக்* *கறந்து பொச்சம்*
*(வஞ்சனை ) ஒழுகும் மாணவகன்*
*(விசார சருமர்)* *பொல்லாங்கினை*
*(தீய செயல் ) உரைக்க , அவன் தாதை , எச்ச தத்தனை அழைமின் "" என்றார்கள் ,* *அவையில் இருந்த மறையவர்கள் .*
*ஆங்கு , அம் மருங்கே நின்றவர்கள் ,அந்த எச்ச தத்தன் இல்லத்துக்குச் சென்று , அவரை அழைத்துக் கொண்டு வந்தனர்.*
*நிறைந்தோங்கு சபை மறையோர் ,*
*அவரை நோக்கி , "ஊர் ஆனிரை மேய்த்து உன் மகன் செய்த தீங்கு கேள் " என்று , தாம் கேள்விப் பட்டவற்றை அவரிடம் செப்பினர். மேலும் , " அந்தணாளர் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்களான* *எல்லாம் , சிந்தை மகிழ்ந்த பரிவினால் ,*
*திரளக் கொடு போய் மேய்ப்பான் போல் ,கந்த மலி( மணம் மலிந்த ) பூம் புனல் மண்ணி மணலில் கறந்து , பால் உகுத்து( பாலை கீழே கொட்டி )வந்த பரிசே(மனத்துக்கு வந்தவாறு ) செய்கின்றான் " ,*
*என்று வாய் மொழிந்தனர்.*
*மறையோர்கள் , அவ்வாறு மொழியக் கேட்ட , எச்ச தத்தன் ," சிறு மாணவகன்(மகன் விசாரசருமர் ) செய்த ஈது இறையும்(சிறிதும்) நான் முன்பு அறிந்திலேன் ; பொறுக்க வேண்டும் நீங்கள் " என ,தன் குறையைச் சொல்லி வேண்டிக் கொண்டு , " இனிப் புகுதில் (இவ்வாறு நிகழின் ) குற்றம் எனதேயாம் " என்றார்.*
*அந்தணாளர் தம்மிடமிருந்து , அவர் விடை கொண்டார் ; அந்திப் பொழுதில் தொழுது , இல்லம் புகுந்தார் ; " வந்தது பழி " என்று , எண்ணங் கொண்டார் ; மகன் விசார சருமரிடம் , அது பற்றி , வாய் திறந்து பேசவில்லை ;* *"இதன், உண்மை நிலையை அறிவேன் " என்று, மனத்துட் கொண்டார். அன்றைய இரவு கழிந்தது ;* *நன்னாள் , புலர்ந்தது ; பசுக் கூட்டங்களை மேய்க்க , மகனார் சென்ற பிறகு , அவர் அறியாது மறைந்து , மேய்ச்சல் நிலம் நோக்கிச் சென்றார் , அம் மறை முதியவர்.*
*தன் திருமகனார் , சிறந்த ஊர் ஆன் நிரைகளைக் கொண்டு போய் ,மணங் கமழும் சோலைப் பகுதியில் , மேய்ப்பாராக , அன்று , மண்ணியாற்றின் , மணற் பாங்கானப் பகுதியில் , கொண்டு சென்றதை அறிந்தார் ;* *அதனூடே , அப்பால் நின்ற குரா மரத்தில் ஏறி , நிகழப் போவதை அறிய , தன்னை மறைத்துக் கொண்டு ,*
*காத்திருந்தார் , அந்த மறையவர்.*
*இறைவனார் பால் , அன்பாக பூசை புரியும் பிரமசாரி , விசாரசருமனார் நீரில் மூழ்கி எழுந்தார் ; அரனார்க்கு , முன்பு போல மணற் கோயில் ஆக்கினார் ;* *முகை மென் மலர்களைக் கொய்து வந்து , வைத்தார் ;*
*பாற் குடங்களை எடுத்துக் கொண்டார் ; பிறகு, தன்பால் வரும் , பசுக்கள் பொழி பாலை நிரப்பிக் கொணர்ந்து ,*
*ஆலயத்தருகே தாபித்துக் கொண்டு , பூசைக்கான , பிற தேவைகளையும் , நிறைவு செய்து கொண்டார்.*
*இறைவனார் தன்னை ஆட்கொள்ளுமாறு , விதிக்கப் பட்ட விளையாட்டால் , நிறைந்த அரும் பூசனையை தொடங்கினார் ; பிற, புறச் சிந்தனைகள் இன்றி, தன் பணியில் ஒன்றும் உண்மை உள்ளத்தராய் , தன்னை உடைமையாக உடைய நாதன் திரு முடிமேல் , திருப்பள்ளித் தாமம் சாத்தினார் ;* *மலர்களைச் சாத்திய பிறகு , திரு மஞ்சனமாக , நன்று நிறைந்திருந்த , தீம் பாற் குடங்களை எடுத்து ,அன்பு மேலிட திருமஞ்சனம் ஆட்டிப் , போற்றிப் பரவிடவே , மேன்மேலும் ,தன் உள்ளத்தில் எழும் பரிவும் , பழைய பான்மை மிக பண்பும் , உணர்வில் விரவலாயிற்று .*
*மேன்மை உடைய , விசார சருமரிடம் மேவும் பெருமையை வெளிப் படுத்துவதற்காக , அரவம் மேவும் சடை முடியாரது ,*
*அருளாம் அது , என்று அறியாது அறிவழிந்து , குரவ மரத்தின் மீதிருந்த முது மறையவர் கண்டு , சினங் கொண்டார்.* *கண்டபோதே , மரத்திலிருந்து விரைந்து இறங்கினார் ; விரைந்து மகனை நோக்கிச் சென்றார் ; மகனார் திரு முதுகில் ஓங்கி அடித்துப் புடைத்தார் ; கொடிய மொழிகளை இயம்பினார் ;* *ஆனால் , பூசை திருத் தொண்டினில் ,*
*புலன்கள் வழிச் செல்லும் , புறச் சிந்தனைகளை விடுத்து , யோக நிலையில் ,* *இலிங்கத் திருமேனி மேல் , பெருகிய* *காதல் அருச்சனையில் , மனம் முழுவதையும் , ஒருங்கே நிலைப் படுத்திய சிறிய பெருந் தோன்றலார் , நிகழ்ந்ததை ஏதும் அறியாராக தன் பணியைத் தொடர்ந்தார்.*
*பல முறையும் , வெகுண்டு அவர் அடிக்க , பாலால் திரு மஞ்சனம்* *ஆட்டுதலைத் தவிர வேறறியாதாரானமேலாம் பெரியோர் , தன் பணியில் சலியாது தொடர்வதைக் கண்டு , நல்லறிவு முற்றும் அழிந்த ,உலகியல் மயக்க உணர்வு கொண்டார் அந்த மறையவர் ; சினத்தின் உச்ச நிலையை எய்தி ,அங்கு வைத்திருந்த திருமஞ்சனப் பாலைக் காலால் இடறினார் , தனது இழி தொழிலின் எல்லையில் நின்ற எச்ச தத்தர் ; பால் சிந்தி ஓடியது ; சிந்தும் போதில் அதை நோக்கினார் மறைச் சிறுவர் ; நொடிப் பொழுதில் அது செய்த தீயோன், தன் தந்தை என உணர்ந்தார் ; தண்டித்தற்கு உரிய தகுதியினால் , திருமஞ்சனப் பாற் குடத்தை உதைத்து உருட்டிய , அவர் கால்களை வெட்டி வீழ்த்தும் எண்ணம் மேவிற்று ; அருகே கிடந்த , கோலை எடுத்திட , அதுவே மழுவாக ஆயிட , வீசினார் ;இரு கால்களும் துண்டிக்கப் பட்டன ; அந்த மறையவர் கீழே வீழ்ந்தார் .*
*ஆம் ! எறிந்த அந்த மழுவே* *அருச்சனையில் இடையூறு அகற்றும் படையாக ஆகிட , பூசையைத் தடுத்த ,இரு கால்களையும் வெட்டி வீழ்த்தினார் மைந்தர் ; பூசனைக்கு வந்த இடையூறை அகற்றியமையால் , முன்போல் தொடர்ந்து அருச்சித்திட முனைந்தார் ; அவ்வாறு , பூசிக்கப் புகலும் , செறிந்த சடை நீள் முடியார் தேவியோடும் விடை ஏறினார் ; பூத கணங்கள் புடை சூழ , புராண முனிவர்களும் , தேவர்களும் , வேத மொழிகளை எடுத்து ஏத்தினர் ; விமல மூர்த்தி காதல் கூர வெளிப்படலும் , கண்டு தொழுது ,மனங் களித்துப் பாத மலர்கள் மேல் விழுந்தார் , பத்தி முதிர்ந்த பாலகனார்.*
*தொடுத்த இதழ் கொன்றை சூழ் சடையார் , தன் துணைத்தாள் நிழற் கீழ் வீழ்ந்தவரை , தம் திருக் கரங்களினால் , எடுத்து , அவரை நோக்கி , " நம் பொருட்டால் ஈன்ற தாதை விழ எறிந்தாய் , அடுத்த தாதை இனி உனக்கு நாம் " என்று அருள் செய்து , அணைத்து அருளி , மடுத்த கருணையினால் தடவி , உச்சி மோந்து மகிழ்ந்தருளினார்.* *அருளவும் , செங்கண் விடையார் , திரு மலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனார் ,* *அதுவரை தாங்கியிருந்த மாயையினாலான உடலை விட, மேலாக அளவினின்று உயர்ந்த , சிவமயமாய்ப் பொங்கி எழுந்த திருவருளின் மூழ்கிப் பூமேல் அயன் முதலாம் துங்க அமரர் துதி செய்யச் , சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.*
*தேவ தேவராகிய, சிவ பெருமானும் , விசார சருமரை ,தம் தொண்டர்களுக் கெல்லாம் அதிபனாக்கினார் ;* *மேலும் அவரிடம் ,*
*" நாம் உண்ட கலமும் ( நிவேதனமான உணவு ; பரிகலம் ;* *பரிகல சேடம் ) உடுப்பனவும் ,*
*சூடுவனவும் உனக்கு ஆக ,* *சண்டீசனுமாம் பதந் தந்தோம் " என்று மொழிந்து , அவரது பொற் தட* *முடிக்கு ,துண்ட நிலா சேர் ,* *சடையில் , தாம் அணிந்திருந்த ,கொன்றை மாலையை எடுத்துச் சூட்டினார் .*
*எல்லா உலகங்களிலும் உள்ளோரும் , அரவொலி எழுப்பி ஆர்த்தெழுந்தனர் ;*
*எங்கும் மலர் மழை பொழிந்தன ;* *பல்லாயிரவர்களும் , கண நாதர்களும் , பாடியாடிக் களிப்பெய்தினர் .வேதங்கள் , நிறை மொழிகளினால் துதி செய்தன ; சூழ இசைக் கருவிகள் முழங்கின ; சைவ நன்னெறிகள் ஓங்க , நமது நாயனாராகிய சண்டீச நாயனார் இறைவனாரைத் தொழுது , தமது பதவியில் அணைந்தார்.*
*அனைத்து உலகோரும் , அறியப் பிழை செய்த , முது மறையோன் ,எச்ச தத்தன் , பெருமான் அருளால் , நான் மறையின் சீலம் திகழும் ,* *சேய்ஞலூர்ப் பிள்ளையார் தம் திருக் கரத்தால் , அழகிய மழுவால் ஏறுண்டு , குற்றம் நீங்கி , சண்டீசரின் தாயார் , பவித்திரை உட்பட , சுற்றமுடன் , மூல முதல்வரின் சிவலோகம் எய்திடப் பெற்றான்.*
*வந்து மிகை செய் தாதை தாள் மழுவால் துணித்த (வெட்டிய ) மறைச் சிறுவர் ,அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனாராயினார். ;* *இந்த நிலைமை அறிந்தார் ஆர் ?ஈறிலாதார் ( பரசிவம் )தமக்கு அன்பு தந்த அடியார் செய்தனவே தவமாம் அன்றோ சாற்றுங்கால் ?*
*பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன்* *றாதை / வேரடைந்து*
*பாய்ந்த தாளை வேர்த் தடிந் தான்றனக்குத் /* *தாரடைந்த மாலைசூட்டித் தலைமைவ குத்ததென்னே /சீரடைந்த*
*கோயின்மல்கு சேய்ஞலூர்* *மேயவனே* / திரு ஞானசம்பந்தப் பெருமான்
திருச்சிற்றம்பலம்.
சண்டீசப் பெருமான் நாயனார் , திருவடிகள் போற்றி ! போற்றி !!
நம்பி ஆரூரர் திருவடிகள் போற்றி ! போற்றி !!
நம்பியாண்டார் நம்பிகள் திருவடிகள் போற்றி ! போற்றி !!
சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி ! போற்றி !!
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment