வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே
னுளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே 1
எண்பொடு கொம்பொடாமை யிவை
மார்பி லங்க எருதேறி யேழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தே
னுளமே புகுந்த வதனால்
ஒன்பதொ டொன்றோ டேழுபதி னெட்டோடாறு
முடனா யநாள்க ளவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே. 2
உருவளர் பவளதெடின யளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே. 3
மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து
மறையோ துமெங்கள் பரமன்
நதியோடு கொன்றை மாலைமுடி மேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய் களான பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே 4
நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்
வெஞ்சின வவுணரோடு முருமிடியுமின்னு
மிகையான பூத மவையும்
அஞ்சிடு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே. 5
வாள்வரி யதள தாடைவரி கோவணத்தர்
மடவா டனோடு முடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்தெ
னுளமே புகுந்த வதனால்
கோளரியுழு வையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே 6
செப்பிள முலைநன் மங்கை யருபாகமாக
விடையேறு செல்வனடைவார்
ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தே
னுளமே புகுந்த வதனால்
வெப்போடு குளிரும் வாதம் மிகையானபித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே. 7
வேள்படி விழிசெய் தன்று விடைமெலிருந்து
மடவாள் தனோடு முடனாய்
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடிவந்தெ
னுளமே புகுந்த வதனால்
ஏழ்கடல் சூழிலங்கை யரையன் றனோடு
மிடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே. 8
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறு மெங்கள் பரமன்
சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
மலர் மிசையோனுமாலு மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்
அடியாரவர்க்கு மிகவே. 9
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியுநாக முடிமேலணிந்தெ
னுளமே புகுந்த வதனால்
புத்தரோ டமணைவா திலழிவிக்கு மண்ணல்
திருநீரு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே. 10
தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் - துன்னி
வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ
நான்முக னாதியாய பிரமாபுரத்து
மறை ஞான ஞான முனிவன்
தானறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள் வராணை நமதே. 11
கோளறு பதிகம் முற்றிற்று
கோளறு பதிகம் பொருள் விளக்கத்துடன் ஓர் அன்பர் கேட்டதன் காரணமாக இங்கே பதிவு செய்துள்ளோம்
நவகிரக தோஷங்கள் தீர்க்கும் கோளறுப் பதிகப் பாடல்கள் - விளக்கங்களுடன் இங்கே படிக்கலாம்!
பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள் கொண்ட இந்த கோள்களின் தீவினையை நீக்கும் இந்த கோளறுப் பதிகப் பாடல்கள் சிறந்த பரிகாரப் பாடல்களாக விளங்குகின்றன.
மதுரை பாண்டிய மன்னன் நின்ற சீர்நெடுமாறன் சமண மதத்தில் பற்று கொண்டு, மற்ற சமயங்களைப் புறக்கணித்து வந்தார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் சைவ சமயத்தில் பற்று கொண்டிருந்தார். சமணர்களின் அடாத செயல்களால் நாட்டில் குழப்பங்கள் நிலவ, அதைத் தடுக்கும் பொருட்டு திருஞான சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளி சைவம் தழைக்கவும் நாட்டில் நல்லாட்சி நிலவவும் அழைப்பு விடுத்தார். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரச பெருமானும் அப்போது திருமறைக்காட்டில் இருந்தனர்.
மதுரையம்பதி அரசியாரின் வேண்டுகோளை ஏற்று திருஞான சம்பந்தர் மதுரை செல்ல விரும்பி திருநாவுக்கரசரிடம் விடைபெறச் சென்றார். திருநாவுக்கரசரோ, அச்சமயம் நிலவிய கோள்களின் அமைப்பும் போக்கும் தீமை பயக்கும் என்று கூறி சம்பந்தரின் பயணத்தை ஒத்திப்போடச் சொன்னார்.
‘சகலத்துக்கும் தலைவனான நம் ஈசன் துணை இருக்கையில், நாளும் கோளும் என்ன செய்துவிட முடியும். ஈசனின் அடியாருக்கு அவை நன்மையே செய்யும். கவலை வேண்டாம்’ என்று கூறி கோளறு பதிகம் பாடினார். பதிகப்பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள் கொண்ட இந்த கோள்களின் தீவினையை நீக்கும் இந்தப் பாடல்கள் சிறந்த பரிகாரப் பாடல்களாக விளங்குகின்றன.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
பொருள்: புலித்தோலை தோளில் அணிந்த விஷமுண்ட கழுத்தைக் கொண்ட, திங்களையும் கங்கையையும் தலைமேல் அணிந்த ஈசனின் அடியவருக்கு ஞாயிறு, திங்கள் உள்ளிட்ட நவகோள்களும் எந்நாளும் நன்மையே செய்யும்.
என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
பொருள்: எலும்பும் கொம்பும் மார்பில் அணிந்து, விடையேறி, மத்தமாலை, கங்கை சூடிய ஈசனை வணங்கும் அடியார்களுக்கு, 27 நட்சத்திரங்களும், எல்லா நாள்களும் மிகச் சிறந்த நன்மையே புரியும்.
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
பொருள்: பவள மேனியனும் ஒளிமிக்க நீறு அணிந்தவரும், சக்தியோடு விடைமீது ஏறிவரும் கொன்றை திங்கள் அணிந்த நம் ஈசனை வணங்குபவருக்கு, திருமகள், துர்கை, அஷ்ட திக்கு பாலகர்கள், பூமியின் அதிதேவதை ஆகியோர் நன்மையே புரிவர். குறைவற்ற செல்வமும் வந்து சேரும்.
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்: பெண்ணை தென்பால் வைத்த பரமன், கங்கையும் கொன்றை மாலையும் அணிந்தவன். அவனைத் தொழுது ஏத்தும் அடியவருக்கு கூற்றுவன், அக்னி, காலனின் தூதுவர்கள், கொடும் நோய்கள் என எதுவும் தீமை விளைவிக்காது. மாறாக நன்மையே புரியும்.
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்: நஞ்சுண்ட நீலகண்டன், அன்னையோடு விடையேறி வரும் ஈசன், தலையில் வன்னி, கொன்றை அணிந்த பரமனை வேண்டுவோருக்கு, அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் எந்த இடம் நேராது. நன்மையே விளையும்.
வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்: எளிய ஆடை அணிந்தவரும் கங்கை, கொன்றை, வன்னி அணிந்தவருமான ஈசனைப் பணிவாருக்கு சிங்கம், புலி, கொல்லும் யானை, பன்றி, கொடும் நாகம், கரடி போன்ற எதனாலும் இடர் நேராது. நன்மையே விளையும்.
செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்: மங்கையை ஒரு பாகமாக ஏற்ற விடையேறும் எங்கள் செல்வனை, மதியும் நீரும் தலையில் சுமக்கும் ஈசனை சரண் அடைந்த அடியவருக்கு, வெப்பம், குளிர், வாதம், பித்தம் போன்ற எந்த தன்மையும் இடர் செய்யா து. நன்மையே விளைவிக்கும்.
வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்: விடைமேல் எழுந்தருளி வன்னி, கொன்றை மலர் சூடி நிற்கும் ஈசனை வணங்கும் அடியவருக்கு, ஆணவத்தால் கயிலை தூக்க முயன்ற ராவணனுக்கு வந்த துன்பம் போன்ற எதுவும் வந்துவிடாது. மூழ்கினாலும் ஆழ்கடலும் நன்மை செய்யும்.
பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்: எல்லாமுமாக நின்று பல வடிவங்களில் விடைமீது தோன்றும் ஈசன், நீர்மகளோடு எருக்கும் தலையில் சூடியவன். அவனைப் பணிவாருக்கு நான்முகன், திருமால், மறைகள், தேவர் என அனைவரும் நலன் புரிவர். கடலும், மேரு மலையும் கூட நன்மையே செய்யும்.
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே
பொருள்: சக்தியோடு நாளும் நன்மை செய்யும் ஈசன், நிலவையும் நாகத்தையும் சூடிக் கொண்டவன். அவனை வணங்குவோருக்கு புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான விபூதி எனும் செல்வம் கிட்டும். அதனால் சொல்லொணாத நன்மைகள் கிட்டும்.
தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!
பொருள்: சிவனையே பணிந்து அவனையே நெஞ்சில் நிலைக்கச் செய்த அடியார்கள் இப்பதிகத்தை ஓதிவர நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும், சகல தேவர்களும் அவர்களுக்கு நன்மையே புரிவர். சிவத்தைத் தொழும் அடியார்கள் மண்ணகம் மட்டுமின்றி விண்ணிலும் அரசாள்வர், இது நம் ஆணை.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிந்தென்
உளமேபு குந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார வர்க்கு மிகவே.
பாடல் பொருள்
வேய் உறு = மூங்கில் போன்ற
தோளி = தோளையுடைய உமையம்மையை
பங்கன் = ஒரு பாகமாகக் கொண்டவனும்
விடம் உண்ட = ஆலகால விடத்தை உண்ட
கண்டன் = கழுத்தை உடையவனும் ஆகிய சிவபெருமான்
மிக நல்ல வீணை தடவி = மகிழ்ச்சியுற்ற நிலையில் மங்கல வீணையை மீட்டிக்கொண்டு
மாசறு = குற்றமற்ற
திங்கள் கங்கை முடிமேல் அணிந்து = குளிர் நிலவையும் கங்கையையும் முடிமேல் சூடிக்கொண்டு
என் உளமே புகுந்த அதனால் = என் உள்ளத்தில் புகுந்து குடிகொண்டிருந்த காரணத்தால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புகன் வியாழம் வெள்ளி சனி = ஞாயிறு முதலான ஏழு நாட்களும்
பாம்பு இரண்டும் உடனே = இராகு கேது என்று சொல்லப்படும் இரண்டு பாம்புகளும், இவை உள்ளடங்கிய ஒன்பது கோள்களும்
அடியார் அவர்க்கு மிகவே = சிவனடியார்களுக்கு மிகவும்
ஆசறு = குற்றமற்ற
நல்ல நல்ல = நலத்தைக் கொடுக்கும்! நன்மையே செய்யும்!
வேயுறு தோளிபங்கன் பாடல் விளக்கம்
வேயுறு தோளி பங்கன்
உமையம்மையாரிடம் ஞானப்பாலுண்டு மெய்யறிவு வாய்க்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவனை உமையொருபாகராகவே பார்த்தார். சிவமும் சக்தியும் சேர்ந்த நிர்மல சொரூபமாகவே ஈசனை வணங்கிய சம்பந்தர், கோளறு பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் ஆரம்பத்திலும் உமையுடன் இறைவன் திகழும் திருக்கோலத்தைப் போற்றித் துதிக்கிறார்.
‘வேய்’ என்றால் மூங்கில் என்று பொருள். மங்கையர் தோளுக்கு உவமையாக மூங்கிலைச் சொல்வது சங்க இலக்கிய மரபு. ‘வேல் உண் கண் வேய்த்தோள் அவட்கு’ என்ற திருக்குறளும் இங்கு நோக்கற்குரியது.. மேலும் மூங்கில் என்பது மங்கலப் பொருளாகவும் போற்றப்படுவதால், ‘கோளறு பதிகம்’ என்னும் இந்த நலம் தரும் பதிகத்தை ‘வேய்’ என்னும் மங்கலச் சொல்லோடு தொடங்குகிறார் சம்பந்தர்.
சம்பந்தர் இரண்டாம் திருமுறையில் மற்றுமோர் இடத்திலும் வேயுறு தோளி பங்கனைப் போற்றிப் பாடியுள்ளார். பதிகம் பாடி அருளிய தலம் : திருவெண்காடு. அந்தப் பாடல் (நன்மக்கட்பேறு அருளும் பதிகம்) பின்வருமாறு :
பேயடையா பிரிவெய்தும்
பிள்ளையினோடு உள்ளநினைவு
ஆயினவே வரம்பெறுவர்
ஐயுறவேண் டா,ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன்
வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத்
தோயாவாம் தீவினையே.
இப்பாட்டின் பொருள் : மூங்கிலைப் போன்ற மென்மையும் பசுமை நிறமும் உள்ள தோளைப்பெற்ற உமாதேவியைத் தன் பங்கிலே வைத்தருளும் இறைவனுக்குரிய திருத்தலமாகிய திருவெண்காட்டில் உள்ள முக்குள நீரில் தோய்ந்து நீராடும் பக்தர்களைத் தீவினைகள் அணுக மாட்டா; பேய்களும் அடைய மாட்டா; முன்பே அடைந்திருந்தாலும் அப்பேய்களின் பிடியிலிருந்து மீள்வர். நன்மக்கள்பேறு வேண்டுமென்றால் அதனையும் பெற்று, அதனோடு மனத்தில் வேறு எவற்றையெல்லாம் நினைத்தார்களோ அவற்றையும் பெறுவார்கள். இவற்றை அடைவதுபற்றிச் சிறிதளவும் சந்தேகிக்க வேண்டாம்.
விடம் உண்ட கண்டன்
சிவபெருமான் பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தைத் தன் கண்டத்தில் அடக்கி, தேவர்களைக் காத்து அமுதமும் அளித்தான். அவ்வாறு தன்னிடம் அபயம் புகுந்த தேவர்களைக் காத்தவன், திருவடிகளைச் சிக்கெனப் பிடித்துப் பக்தியில் திளைக்கும் அடியவர்களுக்குக் கோள்களால் வரும் தீமையையெல்லாம் தடுத்துத் தனக்குள் அடக்கி, அவர்களுக்குச் சிவபதம் என்னும் அமுதத்தையும் அளிப்பான். இவ்வுண்மையைப் பறைசாற்றுவதுபோல், ‘விடம் உண்ட கண்டன்’ என்று மூன்றே சொற்களில் குறிப்பிட்டு அடியவர் மனதினில் அமுதினைப் பொழிகிறார் சம்பந்தர்.
மிக நல்ல வீணை தடவி
உள்ளத்தில் இறைவன் வீற்றிருப்பதால் விளையும் தெய்வ அனுபவ நிலையை வீணையின் மங்கல ஓசையினால் உண்டாகும் பேரின்ப நிலையோடு இங்கு ஒப்பிடுகிறார் சம்பந்தப் பெருமான். மிக நல்ல வீணையைத் தடவிய ஓசை எவ்வாறு உள்ளத்தில் களிப்பேற்றி எல்லாக் கவலைகளையும் மறக்கும்படியாகச் செய்கிறதோ, அவ்வாறு இறைவன் உள்ளத்தில் புகுந்த அந்தக் கணமே எல்லா வினைகளையும் அறுத்து நாள்களாலும் கோள்களாலும் உண்டாகும் தீமைகளைத் தடுத்து நம்மைப் பேரின்ப நிலையில் ஆழ்த்துகிறான் என்பதை மிக அழகாக இங்கு மொழிகிறார் சம்பந்தர்.
ஈசனின் திருவடி நிழலானது மாசற்ற வீணையின் ஒலியைப் போன்றது என்று மனமுருகப் பாடிய அப்பர் சுவாமிகளின் பாடல் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
– அப்பர்
உளமே புகுந்த அதனால்
‘தேவர்பிரான் மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான்’ என்பார் திருமூலர். மறிப்பு என்றால் தடை என்று பொருள். அதாவது, இறைவன் எந்த விதத் தடையும் இன்றி மனத்திற்குள் புகுந்தான் என்கிறார். இறைவன் நம் மனத்தை ஆட்கொண்டு எழுந்தருளுவதற்கு எவையெல்லாம் தடைகளாக இருக்கும் என்று பார்த்தால் முதலில் ‘நான்’ என்னும் அகங்காரம் பெருந்தடை எனலாம். மேலும், திருவருளில் நாட்டமின்மை, திரு ஐந்தெழுத்தை ஓதாமை, அன்பற்ற தன்மை இவையாவும் இறைவன் அருள் நம்மேல் படுவதற்குத் தடைகளாக இருக்கின்றன. ஆனால், நாதன் நாமம் நமச்சிவாயத்தை நாளும் நவிலும் நற்சிந்தையரான ஞானசம்பந்தரின் பால்மனம் மாறாத நெஞ்சில் தடைகள் ஒன்றும் இல்லை. இறைவனை வரவேற்பதற்காக அவரது மனக்கதவு எப்போதும் திறந்தே இருக்கும். கடவுளை வழிபடும் நேரம் என்று தனியாக ஒதுக்காமல், எப்போதும் சிவத்தியானத்தில் மூழ்கி இருப்பார் சம்பந்தர். அதனால், இறைவனால் வெகு சுலபமாக அவரது உள்ளத்தில் நுழைந்து அருள்பாலிக்க முடிந்தது. தம் மனத்தை இவ்வாறு கவர்ந்து ஆட்கொண்ட இறைவனைப் பார்த்து ‘என் உள்ளம் கவர் கள்வர்’ என்று தாம் முதல்முதலில் பாடிய பாட்டிலேயே அவர் உள்ளம் உருகி உரைத்ததையும் இங்கு நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
மாசறு பதிகம்
மேலும், வேயுறு தோளிபங்கன் என்னும் இந்தப் பாடலில், ‘குற்றமற்ற’ என்னும் பொருள்படும் சொற்கள் இரண்டு பயின்று வந்துள்ளன. கங்கை நீரின் குற்றமற்ற தெளிந்த நீரின் பெருமையைச் சொல்லும்போது ‘மாசறு’ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார் சம்பந்தர். மற்றொரு இடத்தில் நவக்கிரகங்களால் குற்றம் குறைகள் ஏற்படாது என்பதைச் சொல்லுவதற்கு ‘ஆசறு’ என்னும் வார்த்தையைக் கையாண்டுள்ளார். அருமையான தமிழ்ச்சொற்களான ‘மாசு’ மற்றும் ‘ஆசு’ இரண்டும் ‘குற்றம்’ என்னும் பொருளைத் தருவன.
‘மாசறு’ மற்றும் ‘ஆசறு’ என்னும் இவ்விரண்டு சொற்களையும் கொண்டு, ‘குற்றமற்ற தெளிந்த நீரை உடைய கங்கையைத் தலைமேல் அணிந்த இறைவன், நம் வாழ்வில் கிரகங்களினால் குறைகள் ஏற்படாமல் குற்றங்களைத் தடுத்துக் காப்பான்’ என்று உள்ளத்தில் பெருநம்பிக்கை ஊட்டுகிறார் சம்பந்தப் பெருமான்.
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
என்பது வள்ளுவரின் வாய்மொழி. இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக, ஞானசம்பந்தரும் தெளிந்த – மருள் நீங்கிய – புலன் மயக்கம் அற்ற சிந்தையராய் வாழ்ந்தார்; குற்றமற்ற (மாசறு) மெய்யறிவு வாய்க்கப்பெற்றார்; அதனால், மெய்யுணர்வைத் தடுக்கும் திரையாகிய இருள் விலக ஒளிவடிவமாய்த் திகழும் தோடுடைய செவியனின் தரிசனம் கிடைக்கப்பெற்றார்; என்றும் குறையாத மனமகிழ்வுடன் வாழ்ந்தார். தாம் பெற்ற சிவம் என்னும் இன்பத்தை உலகத்தோரும் பெற்று உய்யுமாறு கோளறு பதிகத்தை அருளியது சம்பந்தரின் மாசற்ற அன்பு உள்ளத்தைக் காட்டுகிறது.
நல்ல நல்ல
‘வேயுறு தோளிபங்கன்’ என்னும் இந்தப் பாடலில் ‘நல்ல’ என்னும் மங்கலச் சொல் ஐந்து முறை வந்துள்ளது. இந்தப் பாடலைத் தினமும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கப் பாடுபவர்களுக்கு, தீமைகள் விலகி என்றும் நன்மையே விளையும் என்பதை உணர்த்தும் வகையில் ‘நல்ல’ என்னும் இந்த மங்கலச் சொல் அமைந்துள்ளமை காண்க.
‘இந்த உலகத்தில் நலமுடன் வாழலாம். குறைவற்ற நற்கதி பெறலாம். இத்தகைய பேற்றினை அருளுவதற்காகவே பெண்களில் நல்லாளாகிய உமையம்மையுடன் திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்து அருள்கின்றான்.’. இந்தப் பொருள்பட அமைந்த ‘மண்ணில் நல்லவண்ணம்’ என்னும் பாட்டிலும் ‘நல்ல’ என்னும் மங்கலச் சொல்லை ஒவ்வொரு அடியிலும் கையாண்டிருக்கிறார் நம் ஆளுடையபிள்ளையார்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
– சம்பந்தர்
பலன்கள்
கோளறு பதிகத்தில் எல்லாப் பாடல்களிலும் முதல் இரண்டு அடிகளில் இறைவனின் திருவுருவத்தை வர்ணிக்கிறார் சம்பந்தர். அப்படிப்பட்ட திருவுருவை என் உள்ளத்திலே நான் வாங்கிக் கொண்டதால் என்னைக் கோள்கள் அணுகினாலும் நல்லதையே செய்யும் என்கிறார். அதனால் கோளறு பதிகத்தை வெறுமனே படிப்பதைக் காட்டிலும் இறைவனின் திருவுருவை மனதில் வாங்கிக்கொண்டு பாராயணம் செய்தால் பலன் நிச்சயம்.
பொதுவாக சம்பந்தர் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் ‘திருக்கடைக்காப்பு’ என்று கூறப்படும் கடைசி பாட்டில் தான் அந்தந்த பதிகத்தின் பலனைக் கூறுவது வழக்கம். ஆனால், கோளறு பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் பலன் கூறப்பட்டிருப்பது இந்தப் பதிகத்துக்கே உரிய தனிச்சிறப்பு.
திருஞானசம்பந்தரின் அமுத வாக்குப்படி, கோளறு பதிகம் என்னும் இந்த அருள்தரும் உயர்பதிகத்தை அனுதினமும் ஓதும் பக்தர்களுக்கு நாள்கள், கோள்கள், தீயவர், இடி, மின்னல், பூதம், கடல், எமன், எமதூதர்கள், சிங்கம், புலி, யானை, பன்றி, பாம்பு, கரடி, அக்கினி, வினை, திருமால், பிரமன், தேவர்கள், சிறு தெய்வங்கள், மறை, காலம், மலை, வெப்பு, குளிர், வாதம், பித்தம் இவையெல்லாம் நல்லதையே செய்யும்.
மேலும், இப்பதிகத்தை ஓதும் அன்பர்கள் விண்ணுலகில் வாழும் தேவர்களின் மேம்பட்ட நிலையை அடைவார்கள். சிவகதி, சிவசாரூபம், முக்தி இவை யாவும் கிடைக்கப் பெறுவர்.
கோளறு பதிகத்தைப் பாடி அன்போடு வழிபடும் அடியார்களுக்கு இறைவன் நிழல் போல் துணை இருப்பான், அருநெறி காட்டுவான், பக்தியைத் தருவான், அவர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவான், மங்கை ஒருபாகமாகத் தோன்றி வந்து அருள்புரிவான். எங்கேனும் யாதாகிப் பிறந்தாலும் தன் அடியவர்களுக்கு முக்கண் பெருமான் அருள்புரிவான்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment