ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஆலயங்கள்
காஞ்சீபுரத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் இன்றும் முதலில் ஸ்ரீசக்ரத்திற்க்கு தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. பின்னரே காமாட்சி அம்மனுக்கு பூஜை நடைபெறுகின்றது.
காஞ்சீபுரத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவில் பாஸ்கர ராஜபுரம்
தஞ்சை மாவட்டத்தில் பாஸ்கரராஜ கவிராயரால் ஸ்தாபிக்கப்பட்ட மகாமேரு உள்ளது. ஸ்ரீவித்யா உபாஸகர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய மிக அற்புதமான தலம்.
கன்னிவாடி ராஜ காளியம்மன்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. போகர் தவம் செய்த ஆலயம். இந்த அற்புத தலத்தில் உள்ளது. இங்கு ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீகனக துர்க்கா ஆலயம்
ஆந்திர பிரதேசத்தில் கிருஷ்ணா நதி கரையில் தேவி சுயம்பு வடிவில் அருளும் திருத்தலமாகும். இங்கு ஆதி சங்கரரால் ஸ்ரீ சக்கரம் பிதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நவராத்திரி, பவுர்ணமி, ஆடி வெள்ளி, தை வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோதும்.
நிமிஷாம்பா கோவில்
காவேரிக்கரையில் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. மற்றும் மைசூரில் இருந்து சுமார் 17 கி.மீ-. தொலைவில் உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம். மைசூர் மும்மடி கிருஷ்ணராஜ உடையார் மகாராஜாவால் நிறுவப்பட்டுள்ளது. பக்தர்களின் பிரார்த்தனைகள் சொன்ன அடுத்த நிமிடமே நிறைவேறுவதால் இங்குள்ள அம்பிகைக்கு ‘நிமிஷாம்பாள்’ என்ற சிறப்பு பெயர் நிலவி வருகிறது. இங்கு கல்லால் அமைக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தைக் காணலாம்.
தவிர, ஸ்ரீசக்கரம், மகாமேரு வழிபாடுகள் உள்ள ஆலயம் தமிழகத்தில் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஸ்கந்தாச்ரமம், புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி பீடம், பண்ருட்டியை அடுத்த கண்டிகை கிராமத்தில் ஸ்ரீநகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாமேரு தியான நிலையம், நெடூர் சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம், திருஈங்கோய் மலை அடிவாரத்தில் ஸ்ரீலலிதா மகிளா சமாஜ் தியான நிலையம் ஆகியவை ஸ்ரீசக்கரம் மகாமேருவின் வழிபாடுகள் நடைபெறும் முக்கிய இடமாகும்.
திருமியச்சூர்
திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள பசுமையான கிராமம். இங்குதான் அருள்மிகு அன்னை லலிதா பரமேஸ்வரியைப் போற்றும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பிறந்த திருத்தலமாகும். ஐந்து நிலை ராஜகோபுரம், பறவைகளுக்கு பஞ்சமே இல்லை. மேலும் வாலி, சுக்ரீவன், அருணன், கருடன் என அடுத்தடுத்து இத்தலத்தில் பிறந்தவர்கள். இங்கு நவக்கிரகங்களுக்கு தனியாக சன்னதி கிடையாது. சூரியனின் புதல்வர்களான சனி பகவான் எமதர்ம ராஜா பிறந்த தலம். பன்னிரண்டு ராசிகளுக்கு உரியனவாக 12 நாகர்கள் உட்பிரகாரத்தில் (மண்டப சுற்றில்) உள்ளது.
நாகர் வழிபாடு விசேஷம். அம்பாள் சன்னிதிக்கு எதிரே துர்க்கை சன்னதி, துர்க்கையின் கரத்திலுள்ள கிளியே நம் கவலைகள், கோரிக்கைகள் எல்லாம் அம்பாள், ஸ்ரீலலிதாம்பிகையிடம் சேர்க்கின்றது. தெற்கு நோக்கிய அகன்ற மகா மண்டப சன்னதி, வெளிமண்டபம், அர்த்த மண்டபம் அடுத்து கருவறை அமைந்துள்ளது. அங்கே சதாசிவ லிங்க பீடம், ஸ்ரீசக்கர பீடம் என இரு பீடங்கள் உள்ளது.
இந்த பீடத்தில்தான் எவருமே வெல்லமுடியாத பண்டாசுரனை வென்று விஜயாம்பிகையாக அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள். சிறப்பாக அம்பாளின் திருமுகத்திலிருந்து வாக்தேவிகள், வசினி தேவிகள் என்று பேசப்பட்ட எட்டு தேவிகள் தோன்றி அம்பாளின் ஆயிரம் திருநாமங்களை தேவியின் முன் பாடுகின்றனர். அகஸ்திய மகரிஷியும், அவரது தர்மபத்தினி லோபா முத்திரையும் இங்கு வந்து ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்கின்றனர். இதை செவியுற்ற தேவி மகிழ்ச்சியுற் று நவரத்தின ஸ்வரூபமாக காட்சியளிக்கிறார். ‘மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே’ எனத் தொடங்கும் ஸ்ரீலலிதா நவரத்தின மாலையைப் பாடி நமக்கெல்லாம் அருளியது இந்த சன்னதியில்தான்.
ஸ்ரீசக்கர கோபுரம்
ஏற்காடு, நாகலூரில் அமைந்துள்ளது ஸ்ரீவித்யா மகாமேரு ஆலயம். கருவறையில் ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி அம்மன் வீற்றிருக்கிறாள். ஸ்ரீசக்கர வடிவில் கோபுரம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பு.
காஞ்சீபுரத்தின் பெருமை
காஞ்சீபுரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்பாள் காமகோஷ்டத்தில் அமர்ந்து கடைக்கண் பார்வைகளால் அருள்பாலிக்கிறாள். ஆதி சங்கரர் காமகோஷ்டத்தையும், சக்கர மகா யந்திரத்தையும் பிரதிஷ்டை செய்து காமகோடி பீடத்தில் தானே அமர்ந்து யோக லிங்கத்தை த்ரிகாலமும் பூஜித்து காஞ்சியின் சிறப்பைக்கூட்டினார். ஆதியிலே பண்டகாசுரனை அழித்து தேவர்களை பிலத்தே அம்மை காத்த போது, தேவி தானே இங்கு கோவில் கொண்டாள். தேவர்கள் அக்கோவிலை செம்பொற் கோவிலாக எடுத்தனர். பின் யுகங்களில் அது கருங்கல் கோவிலாயிற்று.
பந்தகனை புதைத்த இடத்தில் ஜயஸ்தம்பம் உருவாக்கினர். ஜயச்தம் பத்திலிருந்து பிலாகாசத்துக்கு வாயில் எடுத்தனர். காயத்ரீ கதிர்கள் பரவிய எல்லைக்குள் அதன் 24 அக்ஷ்ரங்களுக்கும் ஸ்தூலமாக 24 தூண்கள் எடுத்து காயத்ரி மண்டபமாக்கினர். வேதங்களையே இம்மண்டபத்தின் சுவர்களாக எழுப்பினர். அம்பிகை ஸ்ரீ சக்ரத்தில் மூலத்ரி கோணத்தில் உறைபவள் ஆதலால் கருவறையை முக்கோணமாக அமைத் தனர். மூன்றரை வட்ட குண்டலி¬னி சர்ப்பமாக அவள் விளங்குவதால் வெளிப் பிரகாரங்களெடுத்து விஸ்தரிக்கும் போது இக்கோவிலின் மூன்றரை சுற்றுக்கள் இருக்குமாறு அமைத்தனர்.அம்மையின் விருப்பபடி அம்மைக்கு ஸ்ரீ சக்ர பதக்கம் தந்த பரமேச்வரனே பரம புண்ய பீடமான ஸ்ரீ சக்ர ஸ்தாபனம் செய்தார்.
கோடி காமங்களை (விருப்பங்களை) நிறை வேற்றுவதாலும், தர்ம-அர்த்த-காம-மோட்சம் என்பதில் காமத்தின் கோடியிலுள்ள மோட்சத்துக்கு இட்டுச்செல்வதாலும் இச்சக்கரம் “காம கோடி பீடம்“ என பெயர் பெற்றது. இன்றும் முதலில் ஸ்ரீசக்ரத்திற்க்கு தான் முதல் பூஜை. பின்னரே காமாட்சி அம்மனுக்கு பூஜை நடைபெறுகின்றது.
காஞ்சி காமாட்சியின் சன்னதியில் காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சக்கரம் உள்ளது. இந்த சக்கரத்தைச் சுற்றி வசினி, கமேசி, மோதினி, அருணா, விமலா, ஜயினி, சர்வேஸ்வரி, கவுலினி என்ற எட்டு தேவியர்கள் உள்ளனர். இவர்களின் சக்தி அளவிட முடியாது.
காஞ்சி காமாட்சியின் ஆலயக் கருவறையில் அம்பாளுக்கு வலது பக்கம் தவக்கோலத்தில் காமாட்சி காட்சி தருகிறாள். ஈஸ்வரனை மணம்புரியும் நோக்குடன் பஞ்சாக்னியின் நடுவில் ஊசி முனையில் ஒற்றை காலில் நின்று கொண்டு கரங்களைச் சிரம் மேல் குவித்து வைத்து தவக்கோல காட்சியில் காணலாம். இந்த அம்பிகை கருவறையில் சற்று மறைவான இடத்தில் இருப்பதால் பக்தர்கள் சவுகர்யமாக தரிசிக்க வாய்ப்பில்லை. ஸ்ரீகாமாட்சி (அம்பாள்) ஞானசக்தியாகவும், ஸ்ரீதபஸ் காமாட்சியை யோக சக்தியாகவும் போற்றி வழிபடுவர்.
ஸ்ரீகாமாட்சியின் ஆலயத்தில் நவராத்திரி ஒன்பது தினங்களும் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரத்துக்கு நவாவரண பூஜை நடைபெறும். இதையட்டி கன்யா பூஜைகள் நடைபெறும். முதல் நாள் தொடங்கி ஒன்பது நாள் வரை நடைபெறும் கோயிலின் சார்பாக எண்ணெய், சீயக்காய் நீராடி புத்தாடை அணிந்து அம்பாளின் கருவறையில் ஸ்ரீ சக்கரத்தின் அருகில் அமரும் பாக்கியம் பெற்ற இந்த குழந்தைகளின் சிறப்பை அளவிட முடியாது.
இங்கு நடைபெறும் சுமங்கலிகள் பூஜை வெகு பிரசித்தம். எந்த ஊரிலும் ஸ்ரீசக்கரத்துடன் தனியே கோவிலில் அம்பிகை இருக்க மாட்டார். ஆனால் காஞ்சி மாநகரில் மட்டும்தான் நான்கு கோபுரங்கள் அமைந்த ஆலயத்தில் நேமப்படி ஆறுகாலை பூஜையை ஏற்றுக் கொண்டு ராஜ ராஜேஸ்வரியாக அனுக்கிரகம் புரிகிறாள்.
இவளது கடாட்சம் பெற்று பிறவி ஊமையான மூக்கன் அம்மன் தாம்பூலம் எச்சில் பயனாக கவிபாடும் திறமை பெற்றான். ஆன்மிக அன்பர்களுக்கு மூகபஞ்சதசி கிடைத்தது.
மாங்காடு காமாட்சியம்மன் அர்த்த மேரு ஸ்ரீ சக்கரம்
மாங்காட்டிலே அம்மை காமாட்சி பஞ்சாக்னியிலே தவம் செய்து கொண்டிருந்த போது ஈஸ்வரன் சொல் கேட்டு அவரை மணக்க காஞ்சி செல்லும் போது அந்த அக்னியை அணைக்காமலே சென்று விடுகிறார். இதன் காரணமாக இதணை சுற்றி உள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் துயர் தாங்கமாட்டாமல் தவித்தார்கள். நிலங்கள் வற்றிப்போயின,கால் நடைகள் துன்புற்றன.
அப்போது அந்தப்பக்கம் தேசாந்திரமாக வந்த ஆதி சங்கரர் லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளால் ஆன “அஷ்ட கந்தம்“ அர்த்த மேரு” என்னும் ஸ்ரீ சக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். இந்த ஸ்ரீசக்ர யந்திரம் ராஜ யந்திரம் ஆகும். ஆமை வடிவத்தை அடித்தளமாக அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற் புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீசக்ர யந்திரமும் உண்டாக்கப்பட்டுள்ளது.
மூலிகைகளால் உருவானதால் ஸ்ரீசக்ரதிற்க்கு அபிஷேகம் கிடையாது, ஜவ்வாது, சந்தனம்,புனுகு சாத்தப்படுகின்றது. குங்கும அர்ச்சனை ந்டைபெறுகின்றது. மாங்காட்டிலே இந்த ஸ்ரீசக்ரம்தான் பிரதானம். பஞ்சலோகத்தாலான ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஆனால் குங்கும அர்ச்சனை இந்த ஸ்ரீசக்ரத்துக்குத்தான்.
பல்லவர் காலத்தில் மிகப் பெரிய சக்கரக் கோவில். கர்ப்பக்கிருகத்தில் 6″ஜ்6″ஜ்3″ அளவிலான ஸ்ரீசக்கரம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது. அதி அற்புதங்கள் தன்னகத்தே கொண்ட ஒரே ஸ்ரீசக்கரக் கோவில். அர்த்தமேரு ஸ்ரீசக்கர தரிசனம் விசேஷம்.
நாற்பத்து ஐந்து கோணங்களுடன் திகழும் இந்த ஸ்ரீசக்கரம் அஷ்டகந்தம் என்ற எட்டுவகை மூலிகைகளால் செய்யப்பட்டதால் அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு சாத்தி வழிபடுகின்றனர். விஜயதசமி அன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. இங்கு திருமணமாகாதவர்கள் காமாட்சி எலுமிச்சம்பழம் கனி 3, 4, 8 என்று நிர்ணயித்து கனியை அம்மனுக்கு சமர்ப்பித்து திருமண வாய்ப்பை அடைகிறார்கள. இது திருமண பேற்றை அளிக்கும் பிரார்த்தனை தலமாக பேசப் படுகிறது. திருமணம் முடிந்த கையோடு கணவர்-மனைவி தம்பதி சமேதராய் வந்து பிரார்த்தனை நிறைவு செய்வர்.
சங்கரன் கோவில்
இங்கு அருளும், பொருளும் குறையாது அளித்திடும் ஸ்ரீகோமதி அம்மனும், ஸ்ரீசங்கர நாராயணரும் அருளாட்சி செய்கின்றனர். ஸ்ரீகோமதி அம்மன் சன்னதியில் இருந்து (மூலஸ்தானம்) 10 அடி தொலைவில் அமைந்திருக்கும் ஸ்ரீசக்கரக் குழி கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. இதில் பதிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீசக்கரம் வேலப்ப தேசிக சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அம்பாளின் திருப்பார்வையில் உள்ள இந்த சக்கரக் குழியில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தியானித்து பிரார்த்தனை செய்தால் எண்ணிய காரியம் அனைத்தும் நிறைவேறும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வீட்டில் மழலைச் சத்தம் கேட்கும். குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறப்புடன் பிரகாசிப்பர். அனைத்து தீராப்பிணிகளும் தீரும். இங்குள்ள புற்று மண் விசேஷ பிரசாதம். கோமதி அம்மன் ஆடித் தபசு வாழ்க்கையில் ஒருமுறையாவது அவசியம் தரிசிக்க வேண்டும். சைவ, வைணவ ஒற்றுமை நிலைநாட்டும் கோவிலாகும்.
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி
பஞ்சபூத தலங்களில் திருவானைக் காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயமும் ஒன்றாகும். ஆதிசங்கரர் அம்பாளின் உக்ரத்தைச் சாந்தப்படுத்த இங்கு ஸ்ரீசக்கர தாடங்கத்தைச் சாற்றினார். 1923 வருடம் காஞ்சி மகா பெரியவர் சித்திரை மாதத்தில் தாடங்கத்தை விதிப்படி ஜீர்ணோத்தாரணம் செய்து அம்பாளுக்கு (தோடு) அணிவித்தார்.
ஸ்ரீலலிதாம்பிகை பீடம்
கோவையில் ஆணைகட்டி மலை அடி வாரத்தில் லலிதாம்பிகை பீடம் அமைந்துள்ளது. இங்கு விக்கிரகம் மற்றும் மகாமேரு வடிவில் ஸ்ரீலலிதாம்பிகை அருளாட்சி புரிகிறார். இங்கு சமயாச்சாரம் என்னும் மார்க்கத்தின்படி தியான வழிபாடு செய்ய முக்கியத் துவம் அளிப்பது குறிப்பிடத்தக்கது.
புன்னைநல்லூர் மாரியம்மன்
தஞ்சையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் ஆனது. எனவே அபிஷேகம் கிடையாது. தைலக் காப்புதான். சதாசிவ பிரம்மேந்திரர் புற்றுமண் கொண்டு ஓர் எந்திரத்தை வடிவமைத்து பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த ஆலயத்தின் தேவியின் அபரிதமான சக்தி கண்ணொளி வழங்குதல் என்று பேசப்படுகிறது.
சிருங்கேரி சாரதா
துங்கபத்திரா நதிக்கரையில் நித்யஸ்வரூபியாக ஸ்ரீசாரதை உலகம் முழுவதையும் அருளாட்சி செய்து வருகிறாள். ஆதிசங்கரர் திருவடியைப் பின்பற்றி வந்த தேவி சரஸ்வதியே சாரதாம்பாளாக கோவில் கொண்டு திருவருள் புரியும் குருஸ்வரூபிணி. இவரை சக்தி, வாக்தேவி, வாணி, சரஸ்வதி, வீணாதாரிணி என்ற பல சிறப்பு பெயர்களால் அழைக்கிறார்கள். ஒரு மாணவியைப் போல் படிக்கின்ற கோலத்தில் கையில் ஜெபமாலை, சுவடி, ஞானமுத்திரையுடன் அலங்கார பூஷிதையாய் சர்வ ஆபரணங்களுடன் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் (சாரதா) கோலம் நவராத்திரியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கொல்லூர் மூகாம்பிகை
பாரத தேசம் முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட ஆதிசங்கரர் கொல்லூரில் கோல முனிவர் வழிபட்ட சுயம்புமூர்த்தம் லிங்கத் திருமேனியைத் தரிசித்தார். திருமேனியில் அம்பிகை அரூபமாக அருளாட்சி செய்வதைக் கண்டு மெய்சிலிர்த்து அருகில் உள்ள மேடை ஒன்றில் தவத்தில் ஈடுபட்டார். தேவியின் திவ்யதரிசனம் கண்டு மெய்சிலிர்த்து அங்கு விக்கிரகம் ஒன்றை நிறுவி அங்கு ஸ்ரீசக்கரத்தையும் நிறுவினார். கொல்லூர் மூகாம்பிகைக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் புஷ்பாஞ்சலி உண்டு. கிரகண காலத்தில் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். மூகாம்பிகையை சரஸ்வதி தேவியாக பாவித்து ஆதிசங்கரர் கலாரோகணம் பாடி அருள் பெற்றார்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment