*சவுந்திர நாயகி புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பூவணம் சிவகங்கை மாவட்டம்*
அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்
தேவாரப்பதிகம் பெற்றது.
*ராமேஸ்வரத்திற்கு இணையாக கோயில்*
*தன் பக்தைக்காக சித்தராக வந்த சிவன்*
*திருஞானசம்பந்தருக்காக நந்தி விலகிய தலம்*
*காசிக்கும் வீசம் அதிகம்*
காசியை விட 16 மடங்கு புண்ணியம் தரும் தலம் போற்றப்படுகிறது.
தன்னடியார்க்கு அருள்புரிந்த தகவுதோன்றும் சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும் மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்
-திருநாவுக்கரசர்
*தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 11வது தலம்*
*திருவிளையாடல் புராணத்தில் 36 வது திருவிளையாடல் ரசவாதம் செய்த படலம்.*
*சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 201 வது தேவாரத்தலம்*
இங்கு எழுந்தருளியுள்ள சவுந்திரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் பல அற்புதங்களை நிகழ்த்தியவர்.
பூவனம் என்பதால் இவ்வூர் திருப்புவனம் ஆயிற்று. வழிபடுவோர் வினைகளை தீர்ப்பவராக புஷ்பவனேஸ்வரர் விளங்குகிறார்.
மூர்த்தி, தலம் தீர்த்தம் மூன்றிலும் பெருமையுடையதாக இத்திருத்தலம் விளங்குகிறது.
4 யுகங்களைக் கடந்த கோயில்,
புஷ்பவனக் காசி என்று போற்றப்படும் இந்தத் தலத்தில் பித்ருக்களுக்கான கடமையைச் செய்வது கூடுதல் பலனைத் தரும்.
சூரியனின் சாபம் நீங்கப் பெற்ற தலம்.
புஷ்பமாக மாறிய அஸ்தி : புராண காலத்தில் தர்மயக்ஞன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று ஓய்வு எடுக்கும் போது அவனுடன் வந்தவர் கலசத்தை திறந்து பார்க்க புஷ்பமாக இருந்ததாம். தான் பார்த்த இந்த காட்சியை தர்மயக்ஞனிடம் அப்போது அவன் கூறவில்லை.
ஓய்வு முடிந்து ராமேஸ்வரம் சென்று கடலில் அஸ்தியை கரைக்க கலசத்தை திறந்த போது அஸ்தியாகவே இருந்தது. இதனால் அதிர்ச்சியுற்ற உடன் வந்தவன், திருப்பூவனத்தில் தான் பார்த்த காட்சியை தர்மயக்ஞனிடம் சொல்ல, மறுபடியும் அஸ்தி கலசத்துடன் அங்கிருந்து திருப்பூவனத்திற்கு வந்தனர். அங்கு வந்து பார்த்த போது கலசத்தில் அஸ்தி புஷ்பமாக மாறி இருந்ததாம்.
காசியிலும், ராமேஸ்வரத்திலும் அஸ்தியாக இருந்தது இங்கு புஷ்பமாக இருந்ததால் காசி நகரத்தை விட 16 மடங்கு புண்ணியம் தரும் இடமாக இத்தலம் போற்றப்படுகிறது. இதை "காசிக்கும் வீசம் அதிகம்' எனும் சமயபெரியோர்கள் கூற்றிலிருந்து அறியலாம். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள வைகையில் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போடும் வழக்கம் இன்றளவும் நடந்து வருகிறது.
வழி விட்ட நந்தி: திருஞான சம்பந்தர் திருப்புவனத்திற்கு வந்த போது ஆற்றுமணல் எல்லாம் சிவலிங்கங்களாக காட்சியளித்தனவாம். அதன் மீது கால் வைக்க அஞ்சிய சம்பந்தர் வைகையாற்றின் மறுகரை மீதிருந்தபடியே சிவனை பாடினார். அப்போது நந்தி லிங்கத்தை மறைத்திருந்தது. உடனே சம்பந்தர் சிவனை வேண்ட, சம்பந்தருக்காக நந்தியை சற்று விலகி தன்னை மறைக்காமல் இருக்கும்படி சிவன் உத்தரவிட்டார். அதன்படி நந்தி சற்று விலகி இருப்பது தனிச்சிறப்பாகும்.
ஐந்து நிலை கோபுரத்துடன் சுவாமி சன்னதி நுழைவு வாயில் அமைந்துள்ளது.
சுவாமிக்கு வலப்பக்கத்தில் அம்மன் காட்சியளிக்கிறார்.
இந்த கோயிலில் 5 வகையான தீர்த்தங்கள் உள்ளன. இதில் மணி கர்ணிகை தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அகஸ்திய முனிவர் ,நளன், பிரம்மா, விஷ்ணு, கவுதம் மகமுனி, சூரியன், மகாலட்சுமி, அகத்தியர், கோரக்கசித்தர் வந்து இறைவனை பூஜித்து நற்பலன் பெற்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
சித்தராக வந்த சிவன் : திருப்புவனத்தில் பொன்னனையாள் என்ற நடனமாது வாழ்ந்து வந்தார். தனது கலை ஞானத்தால் ஈட்டிய செல்வத்தை எல்லாம் சிவனடியார்களுக்கு அமுது படைத்தே காலம் கழித்தாள். சிவ பக்தையான அவளுக்கு அவ்வூரில் உள்ள பூவணநாதரை சொக்க தங்கத்தில் வடிக்க ஆசை இருந்தது.
இவளது ஆசையை நிறைவேற்ற சிவனே சித்தராக மாறி இவள் வீட்டிற்கு சென்று வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை இரவில் நெருப்பிலிட்டால் பொன்னாக மாறும் என கூறினார். பொன்னனையளும் அன்று இரவு செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை நெருப்பிலிட அவை பொன்னாக மாறின. அந்த பொன்னை கொண்டு பூவனநாதரை உருவாக்கினாள்.
அப்போது பூவணநாதர் திருமேனி அழகில் சொக்கி, அவர் கன்னத்தை கிள்ளி பொன்னனையாள் முத்தமிட்டாள். அவள் பதித்த நகக்குறி இன்றும் இங்குள்ள உற்சவரிடம் காணப்படுகிறது.
தல மரமாக பலா மரம் உள்ளது.
இங்கு இறந்த உறவினர்களுக்கு முக்தி பெற மோட்ச தீபம் ஏற்றுகின்றனர். காசிக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள வைகையாற்றில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போடும் வழக்கம் இன்றளவும் நடந்து வருகிறது.
இங்குள்ள மூலவரை வணங்கி வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment