முருகப்பெருமான் ஆலயங்கள் : முத்துமலை, கிணத்துகடவு மற்றும் குருந்த மலை ஆலயங்கள்.
முத்துமலை ஆலயம் கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு அருகே முத்துகவுண்டனூரில் அமைந்துள்ளது. சிறிய மலையில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் முருகப்பெருமான் காலத்தில் இருந்தே துவங்குகின்றது.
முருகப்பெருமான் மயில் மேல் அப்பக்கமாக வந்தபோது அவரின் கிரீடத்தில் இருந்து முத்து உதிர்ந்து விழுந்ததால் இந்த மலை முத்துமலை என்றாயிற்று என்பதில் இருந்து இதன் வரலாறு தொடங்குகின்றது.
அந்த ஆலய தோற்றம் முருக பக்தை ஒருத்தியினால் உருவானது. முருகப்பெருமானே தேடி வந்து அங்கே குடிகொண்ட நிகழ்வு அது.
நெடுங்காலத்துக்கு முன்பு அந்த ஊரைச் சேர்ந்த பெண்மணி கனவில் வந்த முருகப்பெருமான் இந்த மலையில் மூன்று காரை செடிகள் (காட்டு மல்லி) நடுவில் தான் புதைந்து இருப்பதாகச் சொன்னார். அப்பெண் முதலில் நம்பவில்லை.
அதன்பின் அவள் மக்களிடம் சொன்னாள். அவர்களும் நம்பவில்லை.
மறுபடி மறுபடி அவள் கனவில் சஷ்டி அன்றும், கிருத்திகை அன்றுமாக வர அவளே தன் கனவில் முருகன் சொன்ன இடம் நோக்கிச் சென்றாள், அவளோடு மக்களும் சென்றார்கள்.
சென்றவர்கள் ஒரு இடத்தில் மூன்று காரை செடிகள் வரிசையாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். முருகப்பெருமானுக்கு அங்கே ஒரு வேல் ஊன்றி வழிபாடுகளைச் செய்தனர்.
அதன் பின் பெரும் அதிசயங்கள் நடக்க நடக்க மக்கள் கூட்டம் அலைமோதிற்று, வேல் மட்டும் ஸ்தாபிக்கப்பட்ட இடம் பெரும் ஆலயமாயிற்று.
இன்று அது முருகப்பெருமானின் அருள் தலமாயிற்று.
இங்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் அருள்புரிகின்றார். வெள்ளையங்கிரி ஆண்டவர், மாணிக்க விநாயகர், நாகர் சன்னதிகள் உண்டு.
இந்த மலையில் இருக்கும் நாகப்புற்று மிகச் சூட்சுமமானது. விசேஷ நாட்களின் இரவு நேரங்களில் அந்தப் புற்றிலிருந்து ஒரு ஒளி தென்படும். எப்படி எதனால் அந்த ஒளிவருகின்றது என்பது தெரியாது.
ஆனால், அந்த ஒளி தென்படும் போது ஒருவித சக்தி அங்கே கூடுவதும், தெய்வீக அருள்நிலை அங்கே சூழ்வதும் சாட்சிகள்.
சக்தி மிக்க நாகர்கள் முருகப்பெருமானை வணங்கும் நேரம் அந்த ஒளி தெரியும் என்பது சில அனுமானங்கள்.
இந்த ஆலயம் புத்திர பாக்கியம் தரும். நாக சம்பந்தமான விக்கினங்களை விலக்கித் தரும், இன்னும் வாழ்வின் பல சோதனைகளைத் தீர்த்துத் தரும்.
முத்துமலை முருகன் என்பது வெறும் பெயர் அல்ல, அது ஆழ்ந்த தத்துவத்தை போதிப்பது.
சிப்பிக்குள் புகுந்துவிடும் மணல் துகள் உறுத்த அதை சுற்றி சிப்பி கட்டும் திரவமே முத்தாக மாறும். அப்படி சிறு துன்பம் ஒன்று வாழ்வில் வரும் போது முருகனை அண்டினால் அந்தப் துன்பத்தை முன்னிட்டே நம்மை முத்துபோல் ஒளிரவைப்பார், ஜொலிக்க வைப்பார்.
சிப்பி முத்தினைத் தன்னுள் காப்பது போல் காப்பார். ஆத்மா முத்துபோல் துலங்கும் பின் உரியநேரம் முருகப்பெருமானை அடையும் என்பது இந்த ஆலயத்தின் தாத்பரியம்.
இந்த முருகன் நம் துன்பத்தை இன்பமாக மாற்றித் தருவார். எது நம் பலவீனமோ எது நம் வேதனையோ அதையே முழு பலமாக முழு சக்தியாக மாற்றித் தருவார்.
கோயம்புத்தூர் பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தினை வணங்கி வாருங்கள். எது உங்கள் பலவீனமோ கஷ்டமோ அது உங்கள் பலமாகவே மாறும்.
அந்தக் கோவிலில் இருக்கும் நாகப்புற்று சக்தி வாய்ந்தது. அந்த மண் எடுத்து உடலில் பூசினால் தீராத வினை எல்லாம் தீரும். நாக தோஷம் முதல் எல்லா நோயும் தீரும். அதை தவறவிடாமல் வழிபடுங்கள்.
அடுத்த ஆலயம் கிணற்றுக்கடவு பக்கம் அமைதிருக்கும் பொன்மலை வேலாயுதசாமி ஆலயம்.
ஞானபழத்திற்காக சண்டையிட்ட முருகப்பெருமான் பழனி வரும் போது இம்மலையில் இளைப்பாறி தன் பாதங்களைப் பதித்த இடம் இது. அதை முருகப்பெருமானே தன் அடியார்க்கு சொல்லி ஆலயம் அமைத்த இடம் இது.
பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையத்தில் ஒரு ஜமீன் இருந்தார் அவர் முருகபக்தர். அடிக்கடி விரதமிருந்து பழநி செல்வது அவர் வழக்கம்.
ஒருமுறை பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். அங்கே சென்றவருக்கு உறவுகளிடம் சில சர்ச்சைகள் வந்தன. அந்தக் கோபத்தில் பழனி முருகனை தரிசிக்காமலே திரும்பிவிட்டார்.
அப்படி திரும்பியவருக்கு நிதானம் வந்தபின் பழனி முருகனை தரிசிக்காமல் வந்ததை நினைத்து வருந்தினார். மிக வருந்தினார். உண்ண மனமில்லாம்ல வாடி கிடந்தார்
அன்றிரவே முருகப்பெருமான் ஜமீன்தாரின் கனிவில் தோன்றி, கிணத்துக்கடவு என்ற ஊரில் உள்ள பொன்மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்குப் பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார்.
அதன் பின் அவரே அந்தக் கோவிலைக் கட்டி முருகப்பெருமானை கனவில் எப்படிக் கண்டாரோ அப்படியே சிலையாக ஸ்தாபித்தார்.
இன்றும் முருகப்பெருமான் பாதமும், ஜமீன் கட்டிவைத்த கோவிலும் அங்கு உண்டு.
அப்படியே மைசூர் திவான் ஒருவர்க்கும் பெரும் அற்புதம் செய்தது இந்த ஆலயம்.
700 ஆண்டுகள் முன் மைசூர் அரண்மனை திவானுக்கு காலில் கொடிய புண் ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் அது அடங்கவில்லை. அவர் ஆங்காங்கே உள்ள ஆலயங்களில் சென்று அழுது மன்றாடினார். அதில் முருகப்பெருமான் கோவில்களும் உண்டு.
ஒருநாள் அந்த திவானின் கனவில் முருகன் தோன்றி, "கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோயிலுக்கு வா, உனக்கோர் வழிபிறக்கும்" எனச் சொன்னார்.
அப்படியே இக்கோவில் அர்ச்சகர் கனவிலும் முருகன் தோன்றி, "இங்கே வரும் திவானின் கால் புண்ணில் இந்த மூலிகையினைக் கட்டு" என்று கூறி மறைந்தார்.
மிகுந்த வலியுடன் இங்கு வந்த திவான் அர்ச்சகர் முருகப்பெருமான் உத்தரவுபேரில் இங்கு மூலிகையுடன் காத்திருப்பதை கண்டு ஆனந்த உவகைக் கொண்டார். பின் அந்த மூலிகை வைத்து கட்டப்பட அவரின் புண் ஒரே நாளில் மறைந்தது.
மிகவும் உற்சாகம் கொண்ட திவான் இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்தார். அந்த செப்பேடு சாட்சி இன்றும் உண்டு.
இந்த முருகன்கோவில் அழகையும் முருகப்பெருமான் தீப ஒளியில் ஜொலிப்பதையும் கண்ட அருணகிரிநாதர்
"நாலாயிரம் கண் அந்த நான் முகன் படைத்திலேனே' என்று மனமுருகிப் பாடினார். ஆம். அவர் பாடிய தலம் இது.
அப்பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தை மறவாதீர்கள். முருகப்பெருமான் பாதம் பதிந்த அம்மலையினைத் தொட்டு வணங்குங்கள். அந்தப் பாதம் நீங்கள் சரணடையும் நேரம் அந்த ஜமீனுக்கும் அந்த திவானுக்கும் நடந்த பெரும் அதிசயம் உங்களுக்கும் நடக்கும்.
எல்லா மனகுறையும் உடல்பிணியும் அகலும். வாழ்வே பொன்னாகும். பொன்மலை முருகன் உங்கள் வாழ்வினைப் பொன்னாக்கி தருவார்.
அடுத்த ஆலயம் குருந்தமலை முருகன் ஆலயம். இது கோவை அருகே மருதூர் பக்கம் அமைந்திருக்கின்றது.
கொங்கு நாட்டில் 24 உட்பிரிவுகள் உண்டு. அதில் ஒன்று ஒடுவங்க நாடு. இது தற்போது கோயம்புத்தூர், அவிநாசி, மேட்டுப்பாளையம் முதலான பகுதிகளை உள்ளடக்கிய பிரிவாகும். இதன் வட பகுதியில் அகத்தியமலை (நீலகிரி), கிழக்கில் மாதேஸ்வரன் மலை, தெற்கில் சஞ்சீவி மலை (சதுர்க்காட்டாஞ்சை), மேற்கில் தோகை மலை உள்ளன.
இவற்றின் நடுநாயகமாக குருந்தமலை அமைந்துள்ளது.
குருந்த மரங்கள் நிறைந்துள்ள இடம் என்பதால் இம்மலைக்கு இந்த பெயர் வந்தது. குருந்தமரம் என்பது இந்துப் புராணத்தில் மகத்துவமானது. இந்த மரத்தின் அடியில் வரம்பெற்றவர்கள் பலர் உண்டு, பல ஆலயங்களில் இந்த மரமே தலவிருட்சமாக உண்டு.
மாணிக்கவாசகரைச் சிவன் ஆட்கொண்டதும் குருந்த மரத்தடி என்பதில் இருந்து நிறைய சாட்சிகள் உண்டு.
அகத்தியபெருமானுக்கு இங்கு குருந்தமர அடியில் முருகப்பெருமானே குருவாக நின்றுபல உபதேசங்களைச் செய்ததால் இது குருவிருந்த மலையாகி குருந்தமலை என்றுமானது.
இந்த ஆலயம் பல சிறப்புக்களைக் கொண்டது.
மலையடிவாரத்தில் கோயிலுக்கு எதிரில் மலைச்சரிவில் கஜபுஷ்கரணி, அனுமந்தசுனை என்ற இரண்டு நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று, குடிப்பதற்கும், மற்றொன்று குளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
அனுமந்த சுனையின் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமனின் பாதம் பதிந்துள்ளது. மூன்றடி உயரம் கொண்ட ஆஞ்சநேய மூர்த்தி ஓங்கிய வலது கை, இடது கயில் தாமரை மொட்டு, கையில் கட்கம், விரலில் மோதிரம் கொண்டு அருள்பாலிக்கிறார்.
இடையில் சதங்கை, வாலில் மணியுடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு ஹனுமத் ஜெயந்தி நாளில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். பக்தர்கள் வெண்ணெய் சாற்றி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம்.
குருந்தமலை அடிவாரத்தில் இராஜகோபுரத்துடன் கூடிய நுழைவாயிலைத் தொடர்ந்து மலையேறிச் செல்ல வேண்டும். படிக்கட்டுகளில் இரண்டு புறமும் இராஜகம்பீர விநாயகர், சப்த மாதாக்கள், நாகர், பதினெட்டாம்படி கருப்பர், இடும்பன், கடம்பன், வீரபாகு சந்நிதிகள் அமைந்துள்ளன.
ஐந்தடி உயரம் கொண்ட கம்பீர விநாயகர், வலதுகரம் ஒன்றில் தந்தம், பின்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தி அருள்பாலிக்கிறார். மலைப்படி ஏறும் வழியில் இருபுறமும் வேல்கள் நடப்பட்டுள்ளன.
காசி விஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சி அம்மனுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி நான்கரை அடி உயரத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
குருந்தமலை குழந்தை வேலவனுக்கு இருவகை அலங்காரம் செய்யப்படுகிறது. ஒன்று, இராஜ அலங்காரம், மற்றொன்று, வேட அலங்காரம்.
மூலவர் சந்நிதியில் அகத்தீஸ்வரர், ஆனந்த வல்லி அம்பாள் அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஆலயம் பெரும் வல்லமையானது, பெரும் சக்தி கொண்ட இந்தத் தலம் அகத்தியர் காலத்தில் இருந்தே சாட்சிகளை உருவாக்கி வந்தது.
800 வருடங்களுக்கு முன் மன்னர்கள் கட்டி வைத்த பல சாட்சிகள் உண்டு.
பீளமேடு பி.எஸ்.ஜி மங்கு தாயம்மாள் எனும் பக்தை நன்றிக்கடனாக கட்டிவைத்த இராஜகோபுரம் இப்போது பக்தர்களை வரவேற்கின்றது.
நஞ்சப்பா என்பவருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்த வரலாறு உண்டு.
இப்ராஹிம் காசிப் எனும் இஸ்லாமிய தனவானுக்குப் புத்திரபாக்கியத்தை கொடுத்த தலம் இது, அந்த நன்றியின் சாட்சியாக அந்த இப்ராஹிம் கட்டிய மதில்சுவர் இன்றும் உண்டு.
இன்னும் செட்டியார்கள், கோயமுத்தூரின் பெரும் தொழிலதிபர்கள் செய்த திருப்பணிகள் ஏராளம் உண்டு.
பாலசுப்பிரமணியன் எனும் பக்தர்க்கு இந்த குருந்தமலை முருகன் தன்னை வெளிப்படுத்தியவிதம் சிலிர்ப்பினைக் கொடுப்பது.
அவர் மகராஷ்ட்ராவில் வசித்தவர், பின் நெய்வேலிக்கு வந்தார். ஆனால், தீவிர முருகபக்தர். அடிக்கடி குடும்பத்தோடு பழனி சென்று பாலமுருகனை தரிசிப்பது அவரின் வழமை.
அப்படி அவர் முருகப்பெருமானை தீவிரமாக வழிபட்டார். முருகன் அருளாலே அவருக்கு ஆண்மகனும் பிறந்தான். அதன் பின் முருகன் சேவா சங்கமெல்லாம் நெய்வேலி பக்கம் நடத்தினார், அவரின் மனைவிக்கு முருகப்பெருமான் நேரடியாகக் காட்சி தந்து பல ஆபத்துக்களைத் தடுத்து காத்த சம்பவமெல்லாம் உண்டு.
ஆனால், அவர்களுக்கு குருந்தமலை தெரியாது. அறிந்திருக்கவில்லை.
ஒருநாள் அவர் மனைவி தன்னை அறியாமலே குருந்தமலை கோவிலின் அடையாளமெல்லாம் சொல்லி, அங்கிருக்கும் அனுமன் ஆலயம் இன்னும் பலவற்றை சொல்லி அருள் நிலையில் பேசி அந்த ஆலயத்துக்குச் செல்ல பணித்திருக்கின்றார்.
அதன் பின்பே தேடிப்பார்த்து தன் மனைவி மூலம் முருகன் சொன்ன அத்தனை அடையாளமும் கண்டு பணிந்து குருந்தமலை முருகன் கோவிலுக்கு அக்குடும்பமே சாட்சியானது.
குருந்தமலை முருகனுக்கு சூட்டியிருக்கும் வெள்ளி கவசமும் வெள்ளி வேலும் அக்குடும்பம் கொடுத்தது. முருகப்பெருமான் அருளால் பிறந்த அவர்கள் மகன் முத்துகுமரன் இன்றும் அந்த ஆலயத்தின் சாட்சி.
போகரின் சப்த காண்டத்தில் குருந்தமலை பற்றிய குறிப்பு உள்ளது. இதுதவிர குருந்தமலை மாலை, குருந்தமலை பதிற்றுப்பத்து அந்தாதி, குருந்தமலை பிள்ளைத் தமிழ், கம்பீர விநாயகர் பதிகம், குருந்தமலை திருப்புகழ் உள்பட பல நூல்களும் குருந்தமலையின் புகழைப் பறைசாற்றுகின்றன.
குருந்தமலை ஸ்ரீ கம்பீர விநாயகப் பதிகம், குருந்தமலை ஸ்ரீ குழந்தை வேலாயுத மாலை, குழந்தை வேலாயுத சுவாமி பிள்ளைத் தமிழ், குருந்தமலை திருப்புகழ், குருந்தமலை பதிற்றுப் பத்தந்தாதி, குருந்தமலை ஸ்ரீ ஆஞ்சநேயர் பதிகம் ஆகியன குருந்தமலை என இம்மலை முருகனை பற்றிய பாடல்கள் நிரம்ப உண்டு
இன்னும் உடுமலை சரபகவி, அரன்கசாமி தாஸ், சொர்ணமணி நாராயண சாமி என எத்தனையோ கவிஞர்கள் இந்த குருந்தமலை முருகனைப் பற்றி பாடியுள்ளார்கள்.
முன்பு சேர நாட்டில் மிளகு, இலவங்கம், கிராம்பு ஆகியவற்றை வாங்கி மூட்டைகளாகக் கட்டி பொதி மாடுகளில் ஏற்றிக்கொண்டு வந்த வணிகர் சிலர் இந்த குருந்தமலை அடிவாரத்தில் ஒரு நாள் இரவு தங்கினர். அப்போது அவர்களிடம் வந்த சிறுவன் ஒருவன், இவை என்ன மூட்டைகள்? என்று கேட்க, சிறுவன்தானே என்ற அலட்சியத்தில் “தவிட்டு மூட்டைகள்’ என்றனர் வியாபாரிகள்.
மறுநாள் அவர்கள் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க, அனைத்தும் தவிட்டு மூட்டைகளாகவே மாறியிருந்தன.
அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் முருகனே சிறுவன் வடிவில் வந்தான் என்பதை உணர்ந்து குருந்தமலை மீது வீற்றிருந்த குமரனை வேண்டினர். உடனே அந்த மூட்டைகள் அனைத்தும் பழையபடி மாறின.
இப்படியான அதிசயங்களைச் செய்த ஆலயம் அது.
துரை மத்துவராயர் பாலயத்தார் என்பவர் கோயில் மானியமாக 100 ஏக்கர் நிலத்தை அளித்துள்ளனர். அதன் ஆவணங்கள் இன்றும் உண்டு.
இந்த ஆலயத்தின் சிறப்பாக மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் சூரியனுடைய பொற்கிரணங்கள் முருகனுடைய திருமேனி மீது விழும் அதிசயம் உண்டு.
கோவை பக்கம் செல்லும் போது இந்த ஆலயங்களைத் தரிசித்து வாருங்கள். முத்துமலை முருகன் உங்களை எல்லா ஆபத்திலும் காத்து வேதனையினை மகிழ்ச்சியாக்குவார். கிணத்துக்கடவு முருகன் உங்கள் நோயெல்லாம் தீர்ப்பார். இந்த குருந்தமலை முருகன் குருவாக நின்று உங்களுக்கு பெரும் ஞானம் தந்து ஆட்கொண்டு உங்களை தன் சாட்சியாக காலத்துக்கும் நிறுத்துவார்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment