அவனி விடங்க தலமாகவும்,
தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,
பிரம்மன் சிவனை பூஜித்த தலமாகவும், சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இறைவன் நெல்குவியலை வழங்கி திருவிளையாடல் புரிந்த இடமாகவும், நவகிரகங்களின் குற்றம் நீக்கிய தலமாகவும்
உள்ள
#நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள
#திருக்குவளை என்ற
#திருக்கோளிலி
#கோளிலிநாதர்
(#பிரம்மபுரீஸ்வரர்)
#வண்டமரும்_பூங்குழலாள்
திருக்கோயில் பற்றிய வரலாறு:
பிரம்மபுரீஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 123ஆவது சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர், தாயார் வண்டமர் பூங்குழலம்மை. இத்தலத்தின் தலவிருட்சமாக தேத்தா மரமும், தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் உள்ளன. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி.
*மூலவர்: பிரம்மபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர்.
*அம்மன்:வண்டமர் பூங்குழலி
*புராண பெயர்:தென்கயிலை,
பிரம தபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம்,
திருக்கோளிலி
*தல மரம்: தேற்றா மரம்
*தீர்த்தம் : பிரம தீர்த்தம். முத்தி நதியாகிய சந்திர நதி
ஊர்: திருக்குவளை
மாவட்டம்: நாகப்பட்டினம்
*வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், பரணதேவ நாயனார், சேக்கிழார், பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த மன்னன் முதலியோர்.
*பாடியவர்கள்: அப்பர், சுந்தரர்,சம்பந்தர், வள்ளலார்
*திருத்தல பாடல்கள்:
"நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டானுக்கே
ஆளாய அன்புசெய்வோம் அடல்நெஞ்சே அரநாமம்
கேளாய்நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்கும் அவன்கோளிலிஎம் பெருமானே
..... திருஞானசம்பந்தர்
மைகொள் கண்ணுமை பங்கின் மான்மழுத்
தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி
நக்க னைத் தொழ நம்வினை நாசமே
....... திருநாவுக்கரசு சுவாமிகள்
கொல்லை வளம்புறவில் திருக் கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பரவும் திருநாவல வூரன்அவன்
நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந்து ஏத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துலகில் அண்டர் வானுலகு ஆள்பவரே
..... சுந்தரர்
கோளிலியப்பர் குணமூன்று டையார் தம்
தோளிலுலாமாலை சூட்டுதற்கு – வாளவுணன்
கற்பக வேல் தொட்ட கடவுட்கு முன்வந்த
கற்பகத்தின் பொற்கழல்கள் காப்பு
.... திருக்குவளை தியாகரஜசுவாமி உலா- விநாயகவணக்கம்
-“நெற்சுமக்க
ஆளிலை என்று ஆரூரனார் துதிக்கத் தந்தருளுங்
கோளிலியின் அன்பர் குலங்கொள் உவப்பே”
..... திரு அருட்பா
*கோயில் குறிப்பு:
இத்தலம் மக்கள் வழக்கில் "திருக்குவளை" என்று வழங்கப்படுகிறது.
நவக்கிரகங்கள் முதலியோர்க்கு உண்டாய குற்றங்களை நீக்கி அருள் புரிந்தமையால் "கோளிலி" என்று பெயர் பெற்றது. "கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்" என்பது ஞானசம்பந்தர் வாக்கு.
பகாசூரனைக் கொன்றதனால் உண்டான பாவத்தை (பிரமகத்தித் தோஷம்) வீமன் இங்குப் போக்கிக் கொண்டான் என்பது வரலாறு.
இத்தலத்து தியாகராஜர் அவனி விடங்கத் தியாகர்,ஊழிப்பரன் என்றும் இவரது நடனம் வண்டு நடனம் என்றும் அறியப்படுகிறது.
*புராண வரலாறு:
ஆதியும் அந்தமும் இல்லாத அருள்பெரும் ஜோதியாகவும், திருவடியும் திருமுடியும் நின்ற சூழல் அறிய அரியவனுமான இறைவன் சிவபெருமான், பிரம்மனுக்குப் படைப்புத் தொழிலை அருளிய தலமாக, நவகோள்களின் தோஷம் போக்கிய தலமாக, சுந்தரர் பெற்ற நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு சேர்க்கப் பூதகணங்களை அனுப்பி அருளிய தலமாக, சப்த விடங்கர் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது திருக்குவளை அருள்மிகு கோளிலிநாதர் திருக்கோயில்.
படைப்புத் தொழில் வேண்டி பிரம்மன், சந்திர நதியின் வெண்மணலை எடுத்து சிவலிங்கத் திருமேனியை உருவாக்கி, பக்தி நெறியுடன் பல நாள்கள் வழிபட்டு, சிவபெருமானின் திருக்காட்சியைக் கண்டு, படைப்புத் தொழில் கைவரப் பெற்ற தலம் இந்தத் தலம். இதனால், இத்தலத்து இறைவனுக்கு அருள்மிகு பிரமபுரீசுவரர் என்ற திருநாமமும், கோள்களின் குற்றம் நீக்கியருளியதால் அருள்மிகு கோளிலிநாதர் என்ற திருநாமமும் விளங்குகின்றன.
இத்தலத்தின் மூல மூர்த்தி அருள்மிகு பிரமபுரீசுவரர், பிரம்மனால் வெண்மணலால் அமைக்கப்பட்டவர் என்பதால், மூலவருக்குக் குவளை சாற்றியே வழிபடப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று இரவு 8 மணிக்கு மட்டுமே குவளை நீக்கப்பட்டு, வெண்மணலால் ஆன சிவலிங்கத் திருமேனிக்குத் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.
மூலவருக்குக் குவளை சாற்றப்பட்டிருப்பதால், இத்தலத்துக்குத் திருக்குவளை எனப் பெயர் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பண்டைக்கால கல்வெட்டுகளில் இத்தலம் திருக்கோளிலி என்றே குறிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரமதபோவனம் என்ற பெயரும் இத்தலத்துக்குக் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் எதிரே உள்ள தீர்த்தம், பிரம்மனால் உருவாக்கப்பட்டது என்பதால் அவரது பெயராலேயே பிரம்மதீர்த்தம் எனப்படுகிறது.
தேற்றா மரம் தல விருட்சமாக உள்ளது.
தேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்றது இத்தலம். சமயாசாரியர்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தலா ஒரு திருப்பதிகமும், அப்பர் சுவாமிகள் 2 திருப்பதிகங்களும் பாடியருளியுள்ளனர்.
#பூதகணங்களை அருளிய தலம்:
திருவாரூரில் சுந்தரரும் பரவை நாச்சியாரும் அடியார்களுக்கு நாள்தோறும் அன்னம்பாலித்து வந்த காலத்தில், திருக்குவளை அருகே உள்ள குண்டையூரைச் சேர்ந்த வேளாளரான குண்டையூர் கிழார் என்பவர், சுந்தரருக்கு நியமமாக உணவுப் பண்டங்கள் அனுப்பி வந்தார். அப்போது, திடீரென பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
நால்வர்
அதனால், சுந்தரருக்கு நெல் அனுப்ப முடியாமல் குண்டையூர் கிழார் கவலையுற்று, இறைவனை வேண்டியுள்ளார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், குண்டையூர் கிழாரின் கனவில் தோன்றி, ஆருரானுக்காக உமக்கு நெல் தந்தோம் என்றருளி மறைந்துள்ளார். குண்டையூர் கிழார் கண்விழித்துப் பார்க்கையில் நெல் மலை ஒன்றை இறைவன் அருளியிருப்பதை அறிந்தார். உள்ளம் மகிழ்ந்த அவர், உடனடியாக சுந்தரரிடம் தெரிவித்தார்.
அதன்பேரில், நெல்லைப் பெற்றுச் செல்ல சுந்தரர் குண்டையூர் வந்தார். அங்கு குவிந்திருந்த நெல் மலையைக் கண்டு வியந்த சுந்தரர், அந்த நெல் அனைத்தையும் தன்னால் கொண்டு செல்ல இயலாது என்பதை உணர்ந்து, நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு செல்ல ஆள் வேண்டி, திருக்குவளைக்கு வந்து அருள்மிகு திருக்கோளிலி இறைவனை வேண்டி,
''நீள நினைந்தடி யேனுமை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மட வாளவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெரு மான்குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெரு மானவை
அட்டித் தரப்பணியே''
என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார். அன்றிரவே, கோளிலியம்பெருமானின் அருளால் பூதகணங்கள், குண்டையூர் நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டுசென்று ஊர் முழுவதும் நிரப்பின என்பது இத்தல வரலாறு.
#பீமனுக்கு தோஷ நிவர்த்தி:
பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபோது, வேத்திகிரகீயம் என்ற ஊரில் ஓர் அந்தணர் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருந்துள்ளனர். அப்போது, அந்த ஊரின் அருகே அமைந்த காட்டில் இருந்த பகாசுரன் என்ற அரக்கன், தினமும் வீட்டுக்கு ஒருவரைத் தனது உணவாகக் கொன்று, தின்று வாழ்ந்து வந்தான்.
குண்டையூர் கிழார்
ஒரு நாள், பாண்டவர்கள் தங்கியிருந்த அந்தணர் வீட்டுமுறை வந்தது. அப்போது, பீமன் ஒரு வண்டி நிறைய உணவுப் பண்டங்களுடன் பகாசுரனைச் சந்திக்கச் சென்றான். பகாசுரனுக்காகக் கொண்டு சென்ற உணவுப் பண்டங்கள் அனைத்தையும் பீமன் உண்டுவிட்டதை அறிந்து ஆத்திரமடைந்த பகாசுரன், பீமனுடன் சண்டையிட்டான். இந்தச் சண்டையில் பகாசுரனை பீமன் கொன்றான்.
பகாசுரனைக் கொன்ற கொலைப் பழி பீமனை தோஷமாக பற்றியது. இதையடுத்து, பீமன் திருக்கோளிலி வந்திருந்து, அருள்மிகு கோளிலியம்பெருமானை வழிபட்டு, தோஷ நிவர்த்தி பெற்றான் என்பது ஐதீகம். இதன்படி, பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலங்களுள் ஒன்றாக இத்தலம் குறிப்பிடப்படுகிறது. பாண்டவர்களின் சிலை புடைப்புச் சிற்பமாக இக்கோயிலில் உள்ளது.
#விடங்கர் தலம்:
வலாசுரனுக்கும், இந்திரனுக்கும் போர் ஏற்பட்டபோது, இந்திரனின் வெற்றிக்குத் துணையாக நின்றவன் திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த முசுகுந்த சக்ரவர்த்தி. இந்த வெற்றிக்காக முசுகுந்தனுக்குப் பரிசளிக்க விரும்பினான் இந்திரன். அப்போது, இந்திரன் வழிபட்டு வந்த சோமாஸ்கந்த மூர்த்தியான தியாகராஜப் பெருமானைப் பரிசாக தருமாறு முசுகுந்தன் கேட்டான்.
சுந்தரமூர்த்தி நாயனார்
தனது ஆத்மார்த்த மூர்த்தியைப் பிரிய மனம் இல்லாத இந்திரன், அதே ஒத்த உருவத்தில் மேலும் 6 திருவுருவங்களைப் படைத்து, 7 மூர்த்திகளையும் முசுகுந்த சக்ரவர்த்தியிடம் காண்பித்து, இவற்றிலிருந்து ஒன்றைப் பெற்றுக் கொள் என்றான். தியாகேசப் பெருமானின் திருவருளால், இந்திரன் ஆத்மார்த்த மூர்த்தியாக வழிபட்டு வந்த தியாகராஜ மூர்த்தியை முசுகுந்தன் எடுத்தான். இதையடுத்து, 7 தியாகராஜப் பெருமான் திருவுருவங்களையும் முசுகுந்தனிடமே அளித்து அனுப்பிவைத்தான் இந்திரன்.
திருவாரூர் திரும்பிய முசுகுந்தன், இந்திரன் வழிபட்ட தியாகேசப் பெருமானை திருவாரூரிலும், மற்ற 6 தியாகேசப் பெருமான் திருவுருவங்களை திருக்கோளிலி, திருநள்ளாறு, திருநாகை, திருக்காரவாயில், திருவாய்மூர், திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகிய இடங்களிலும் நிர்மாணித்தான் என்பது புராணம்.
நவக்கிரகங்கள்
இதன்படி, முசுகுந்த சக்ரவர்த்தியால் தியாகேசப் பெருமான் மூர்த்தம் நிர்மாணிக்கப்பட்ட சப்த விடங்கர் தலங்களில், அவனி விடங்கர் தலமாக விளங்குகிறது இத்தலம். இங்கு, மூலவருக்குத் தென்பால் தனி சன்னிதி கொண்டு காட்சியளிக்கும் அருள்மிகு தியாகராஜருக்கு அவனி விடங்க தியாகேசர் என்ற திருப்பெயர் விளங்குகிறது. இத்தலத்தில் தியாகராஜர் புறப்பாடு பிரம நடனத்துடன் நடைபெறுகிறது.
#நவக்கிரக தோஷ நிவர்த்தி:
நவக்கிரகங்களின் தோஷம் போக்கும் ஆன்மிகச் சிறப்புப் பெற்ற திருத்தலங்கள் பல தமிழகத்தில் உண்டு. ஆனால், நவ கோள்களும் (நவக்கிரகங்கள்) தங்களின் தோஷம் நீங்க வழிபாடாற்றிய தலமாக விளங்கும் சிறப்புப் பெற்றது இத்தலம். தன்னை வழிபட்ட நவ கோள்களின் தோஷத்தைப் போக்கியருளியதால் இத்தலத்து இறைவனுக்கு அருள்மிகு கோளிலிநாதர் என்ற திருப்பெயர் விளங்குகிறது.
நெல் மகோற்சவத்தில் பூதகணங்களாக வேடமணிந்து வந்தவர்கள்
இங்கு, நவக்கிரகங்கள் 9-ம் வக்கிரமின்றி, தென்திசை நோக்கி உள்ளன. இதனால், அருள்மிகு கோளிலிநாதரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களின் தோஷம் நீங்கும் என்பது இத்தலத்தின் ஆன்மிகச் சிறப்பு. இதனையே, ''கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமான்'' என்று தேவாரப்பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார் திருஞானசம்பந்தர்.
#பூரட்டாதி நட்சத்திர தலம்:
இத்தலத்தில் பிரம்மன், சிவபெருமானின் திருக்காட்சியைக் கண்ட நாள், வெண்மணலால் அமைத்து பூஜித்து வந்த சிவலிங்கத் திருமேனிக்கு (பிரமபுரீசுவரருக்கு) குவளை சாற்றி வழிபாடாற்றிய நாள் பூரட்டாதி நட்சத்திர தினம் என்பதால், இத்தலம் பூரட்டாதி நட்சத்திரத்துக்குரிய பரிகாரத் தலமாகக் குறிப்பிடுகிறது.
சுவாமிக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி, வெண்மலர் மாலைகளால் அலங்கரித்து, தயிர் சாத நிவேதனத்துடன் வழிபாடு செய்தால் தோஷம் நிவர்த்தியாகும் எனப்படுகிறது.
*ஆலய அமைப்பு:
பிரம்மன், அகத்தியர், பஞ்சபாண்டவர்கள், சுந்தரர், முசுகுந்தன் எனப் பலரும் பூஜித்து அருள்பெற்ற இக்கோயில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான திருக்குவளையின் மையப்பகுதியில், கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன், இரண்டு பிரகாரங்களைக் கொண்டதாக அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரத்துக்கு அருகிலேயே, கோயிலின் பிரம்ம தீர்த்தக் குளம் அமைந்துள்ளது.
ராஜகோபுரத்தைக் கடந்ததும் வெளிப் பிரகாரத்தில் வசந்த மண்டபமும், கொடிமரமும் உள்ளன. இரண்டாவது கோபுர வாசலைக் கடந்து உள்பிரகாரத்துக்குச் சென்றதும் நேர் எதிரே மூலவர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் தென்புறம் அருள்மிகு அவனிவிடங்க தியாகராஜர் சன்னதி அமைந்துள்ளது. மூலவர் சன்னதியின் வடபுறம், அம்பாள் அருள்மிகு வண்டமர்பூங்குழலாள் என்ற திருப்பெயருடன் தனிச் சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார்.
கோயில் உள்பிரகாரத்தின் தென்புறத்தில் விநாயகர், அருள்மிகு தியாக விநாயகர் என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறார். இதனையடுத்து, விசுவநாதர், விசாலாட்சி, இந்திரபுரீசுவரர், சந்திரலிங்கம் சன்னதிகள் உள்ளன. இதைத் தொடர்ந்து, முருகப்பெருமான் வள்ளி, தேவசேனா சமேதராக அருள்மிகு சுந்தரவடிவேலன் என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறார்.
அடுத்ததாக, சொக்கலிங்கம், அண்ணாமலையார், சமயக்குரவர்கள் நால்வர் சன்னதிகளும் உள்ளன. இதையடுத்து, சுந்தரருக்கு நெல் மலை அளித்ததாகக் குறிப்பிடப்படும் குண்டையூர் கிழாருக்குத் சன்னதி அமையப் பெற்றுள்ளது. அடுத்தாக, ஶ்ரீ மகாலட்சுமி சன்னதி அமைந்துள்ளது.
பகாசுரன்
இவை தவிர, அகத்தியர் பூஜித்த சிவலிங்கத் திருமேனி, அவரின் பெயராலேயே அகத்தியலிங்கம் என்ற திருப்பெயருடன் தனிச் சன்னதியாக உள்ளது. கிழக்குப் பிரகாரத்தின் ஈசான்ய திசையில் நவகிரகங்கள் தனிமண்டபத்தில் தெற்கு நோக்கி, வக்கிரமின்றி வரிசையாகக் காட்சியளிக்கின்றன.
அடுத்ததாக, ஶ்ரீ நடராஜர் சன்னதியும், பைரவர், சந்திரன், சூரியர் சன்னிதிகளும் உள்ளன. இவை தவிர, சுந்தரர் - பரவைநாச்சியார், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மன், உமாமகேசுவரர், பஞ்சபாண்டவர் உள்ளிட்ட மூர்த்தங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
*திருவிழாக்கள்:
இக்கோயிலில் வைகாசி பிரமோற்சவம் 21 நாள்கள் விழாவாக நடைபெறுகிறது. குண்டையூர் கிழார், சுந்தரருக்கு அளித்த நெல்லைத் திருவாரூருக்குக் கொண்டு செல்ல சிவபெருமான் பூதகணங்களை அனுப்பிய ஐதீக விழா, மாசி மாதத்தில் நெல் மகோற்சவமாக 5 நாள்கள் விழாவாக நடைபெறுகிறது.
மாசி மக நட்சத்திர நாளில், திருக்குவளையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டையூருக்கு அருள்மிகு கோளிலிநாதர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது, பூதகணங்களைப் போல வேடமணிந்தவர்கள் உடன் சென்று, குண்டையூரில் நெல் அள்ளும் நிகழ்ச்சியும், அங்கிருந்து திருவாரூருக்குக் கொண்டுசெல்லும் நிகழ்ச்சியும் ஐதீகத்தை நினைவுகூரும் வகையில் நடைபெறுகின்றன.
காலப் பழமையான இக்கோயில் குறித்த குறிப்புகள் 19 கல்வெட்டுகளில் கண்டறியப்பட்டுள்ளன. அந்தக் கல்வெட்டுகள், சடாவர்மன், சுந்தரபாண்டியன், குலசேகரபாண்டியன், ராஜராஜன், ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜேந்திரன் முதலானோர் காலத்தவை எனக் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலுக்கு மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள், நிலம் வழங்கிய குறிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த ஊரில் திருஞானசம்பந்தருக்குத் திருமடம் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
*கல்வெட்டுகள்:
இது கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் இந்தக் கோயிலின் சிவபெருமானைப் புகழ்ந்து பாடல்களைப் பாடியுள்ளதால்,
மூலக் கோயில் 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கலாம் , மேலும் சோழர்களால் கல் கோயிலாக புனரமைக்கப்பட்டு, பாண்டியர்கள் மற்றும் விஜயநகர நாயக்கர்களால் மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
இக்கோயிலில் பதியப்பட்டுள்ள கல்வெட்டுகள் சோழர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு சொந்தமானது. கல்வெட்டுகளின்படி, சிவபெருமான் "திருக்கோளிலி உதய நாயனார்" என்றும், தியாகராஜர் "ஆவணி விடங்க தியாகர்" என்றும் அழைக்கப்பட்டார். கோயிலின் வடக்குத் தெரு “திருமறைக்காடன் தெரு” என்று அழைக்கப்பட்டது. இத்தலம் இராஜேந்திர சோழ வளநாட்டில் இடையலநாட்டு வெண்டலை வேளூர் கூட்டம்.
ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் வடவல்லத்துஇருகுடியான் இந்திரபத்திநல்லூர் உய்யவந்தான் சீயாலைப்பிள்ளை என்ற ஜெயதுங்கவர்மன் என்பவரால் மகா மண்டபம் கட்டப்பட்டது.
பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தர பாண்டியனின் 8 ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு, சந்திரமௌலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, தென்கரை உடைந்து, வடக்கு திருவீதியில் உள்ள கோயிலுக்குள் தண்ணீர் புகுந்ததாக பதிவு செய்கிறது. வெள்ள நீரை வெளியேற்ற, பாலைக்குறிச்சி உடையார் திருமறைக்கடுடையான், குண்டையூர் கிராமத்தின் எல்லையில் தென்கரையாக எந்தக் கரையையும் அமைத்து ஆற்றின் நீரைத் திருப்பிவிட்டார். இதன் காரணமாக, கோயிலுக்குச் சொந்தமான திருநாமத்துக்கணி நிலம் திருப்பி விடப்பட்டது. அதற்கு ஈடுசெய்ய, அவர் பரமேஸ்வர சதுர்வேதி மங்கலத்தில் இருந்த தனக்குச் சொந்தமான 2 வேலி நிலத்தை பரிசாக வழங்கினார். திருவீதி மற்றும் வாய்க்கால் / வாய்க்கால் அவரது நினைவாக "பாலைக்குறிச்சி உடையார் திருமறைக்கடுடையான்" என்று பெயரிடப்பட்டது.
மூன்றாம் ராஜராஜ சோழனின் 4 ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு, அதிபத்தநாயனார் உருவம்/சிலையை "சிவன்படவர்" (செம்படவர் சமூகம்) சேர்ந்த ஆலன் நிறுவியதாகக் கூறுகிறது. அதே 2100 காசுகள் அவரது சமூகத்தினரிடமிருந்து (பிச்சை) வசூலிக்கப்பட்டு, அந்தப் பணம் அய்யனாயப்ப பட்டனின் மகன் தாமோதர பட்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. வட்டியில் இருந்து கிடைத்த 2 நாழி நெல், அதிபத்த நாயனாரின் உருவ வழிபாடு மற்றும் நைவேத்யத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
" ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள்
ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 4 ஆவது
மார்கழி மாதத்தொருநாள் உடையார்
திருக்கோளிலி உடையார் கோயிலில்
முன்னாளில் சிவன்படவரில் ஆலன்
எழுந்தருளிவிட்ட அதிபத்த நாயனார்க்கு "
மூன்றாம் இராஜேந்திர சோழனின் 35 வது ஆட்சியாண்டு கல்வெட்டு, பாண்டிய நாட்டு சோழ பாண்டிய மண்டலத்து மதுரோதயவளநாட்டு, பாலைக்குறுச்சி உடையான் ஆகயன் திருமறைக்காவுடையான், அவரது பிறந்த நட்சத்திரக் கேட்டை நாளில் திருவீதியுழா / ஊர்வலம் நடத்தியதை பதிவு செய்கிறது. ஊர்வலத்திற்குப் பிறகு உற்சவர் வைக்கப்பட்டு, "திருமறைக்கடுடையான் மண்டபத்தில்" பூஜை நடத்தப்படும். அன்றைய நாட்களில் நைவேத்தியம், சாத்துபடி, தீபம், திருப்பலித்தாமம்/மாலை, நன்கொடைகள் வழங்கப்பட்டு, அந்த பகுதியில் கல்வெட்டு சேதமடைந்துள்ளதால் விவரம் தெரியவில்லை.
சோழர் கால கல்வெட்டுகளில் பெரும்பாலானவை, உலகுக்கு எண்ணெய், வருடத்திற்கு 91 நாழி எண்ணெய், நைவேத்யம், புனித நீராடல் போன்றவற்றால் எரியும் தீபங்களை தானமாக வழங்கியதாக பதிவு செய்கின்றன. அதே பணத்திற்கு, 1000 காசு, 800 காசு, 140 காசு, 260 பணம், 100 பணம், நெல், தங்கம் மற்றும் நிலங்கள் இந்தக் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டன. அவற்றில் சில கோயிலின் பட்டர்களால் பெறப்படுகின்றன, மேலும் ஒரு கல்வெட்டில் "கணிஉடைய முப்பத்து வட்டத்து கணிஉடைய சிவபிராமினர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டுகள் சிவபிராமணர்களால் இறையிலி அதாவது வரி இல்லாத நிலங்கள் வைத்திருப்பதாக பதிவு செய்கின்றன. மேலும் கிராமத்தில் "திருஞானசம்பந்தர் மடம்" என்ற ஒரு மடம் இருந்தது.
மரகத லிங்கம், சப்த விடங்க லிங்கங்களில் ஒன்றாகும் (இது கிழக்கு ஆசிய நாட்டிலிருந்து ராஜேந்திர சோழனால் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. மரகத லிங்கம் திருடப்பட்டு, தமிழ்நாடு காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
*திருக்கோளிலி அருகில் அமைந்துள்ள மற்ற சிவத்தலங்கள்:
*குண்டையூர்:
குண்டையூர் திருத்தல இறைவன் சுந்தரேசுவரர், அம்பிகை மீனாட்சியம்மை. சுந்தரருக்கு நெல் அளித்த குண்டையூர் கிழார் வாழ்ந்த தலம் மற்றும் இவ்வடியாருக்காக இறைவனார் நெல் மலை அருளிய திருத்தலம்.
எட்டுக்குடி:
எட்டுக்குடி திருத்தல இறைவன் சௌந்தரேசுவரர், அம்பிகை ஆனந்தவல்லி. தலமரம் வன்னி, தீர்த்தம் சரவணப்பொய்கை;இத்திருத்தலம் முருகப்பெருமானுக்கு சிறப்பான திருத்தலம்.
*நிர்வாகம்:
இத்திருக்கோயில் தருமையாதீன அருளாட்சிக்குள்பட்டது. தருமையாதீன 25-ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுளப்பாங்கின்படி, 1964 ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதியன்றும், 26-ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுளப்பாங்கின்படி, 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியன்றும் குடமுழுக்கு நடைபெற்றது.
தருமையாதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருவுளப்பாங்கின்படி, இக்கோயிலில் நாள்தோறும் ஆறு கால வழிபாடு நடைபெறுகிறது.
காலை 7 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
நாகை மாவட்டத்துக்குள்பட்ட திருக்குவளைக்கு, நாகை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி பகுதிகளிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. ரயிலில் பயணிப்பவர்கள் திருவாரூரில் இறங்கி அங்கிருந்து 26 கி.மீ. தொலைவு சாலை வழி பயணித்து திருக்குவளையை அடையலாம்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment