அவிநாச தல மகிமைகள்
இழந்த பதவி கிடைக்கும்
ஐராவதம் பூசித்துத் தன் பதவி அடைதல்!
ஒரு பிரமகற்பதில் சிவபெருமான் திருவருள் பெற்ற தேவேந்திரன் சுவர்க்க லோகத்தில் தனது இந்திராணியோடு தேவபோகங்களை இரவும் பகலுமாக அனுபவிப்பதிலேயே இருந்து விட்டான். அவனது ஐராவதம் என்ற வெள்ளை யானை மத மயக்கத்தால் மயங்கிப் பூலோகத்திற்கு வந்து மலைச்சாரல்களில் திரியலாயிற்று.
அங்கே ஐராவதம் ஒரு பெண் யானையிடம் தொடர்பு கொண்டு, தனது நிலையையும் கற்பகத்தரு நிழலையும் மறந்து இருந்தது.
இத்தருணத்தில் தேவலோகத்தின் ஒரு பகுதியில் அசுரர் படையெடுத்து போருக்கு வந்து போர்ப்பறை முழங்கினர்.
அதனை அறிந்த ஒரு வித்யாதரன் இந்திரனிடம் ஓடிவந்து அசுரர் செயலை முறையிட்டான். உடனே இந்திரன் போருக்குச் செல்லும் பொருட்டு, ‘ஐராவதம் எங்கே’ என்று வினவினான்.
அருகே நின்ற தேவர்கள், “நெடுநாளாக இங்கே ஐராவதம் இல்லை என்றனர். இந்திரன் கோபங்கொண்டு நமக்கு மேகவாகனம் உள்ளது என்று கருதி வெறுத்துத் தனது ஞான திருஷ்டியால் யானையின் நிலையினை உணர்ந்தான்.
அந்த ஐராவதம் பூமியிலுள்ள காட்டு யானைகளோடு சஞ்சரித்துக் கொண்டு தன் பெருமை கெடக்கடவது என்று சாபமிட்டான்
இந்திரன் சாபம் பற்றியதிலிருந்து ஐராவதம், தேவலோகத்தைத் துறந்து கவலைகொண்டு திரியும் போது ஒரு கந்தர்வன் கானகத்தில் ஐராவத்தைக் கண்டு, தேவலோகத்தின் நிலையையும், இந்திரன் சாபமிட்ட செய்தியையும் கூறிவிட்டுச் சென்றான்.
அப்போது, ஐராவதம் சோர்வுடன் இருந்த சமயம், நாரத முனிவர் வருகையைக் கண்டது. உடனே அவர் திருவடிகளில் வணங்கி நிற்க நாரதர், ‘அயிராவதமே! கவலை கொள்ளாதே’ என்று கூறி, இந்திரன் இட்ட சாபம் தணியச் சில வார்த்தைகள் கூறலானார்.
‘ஏ, ஐராவதமே! மேரு மலையின் தெற்கே எண்ணிறந்த சிவத்தலங்கள் உள்ளன; அவற்றுள் முக்தியை அளிக்கும் தலங்கள் ஐந்து ஆகும். அவை, பிறக்க முக்தியைத் தரும் திருவாரூரும், தரிசிக்க முக்தியைத் தரும் சிதம்பரமும், நினைக்க முக்தியை தரும் அருணாசலமும், இறக்க முக்தியைத் தரும் காசிப்பதியும் அடைந்து வசிப்போர்க்கும் தலப் பெருமைகளைப் பேசுவோர்க்கும் முக்தியைத் தரும் அவிநாசியும் ஆகும்.
வெள்ளை யானையே! நீ அவிநாசித் தலத்தை அடைந்து இறைவனைப் பூசித்தால் நீ பெற்ற சாபம் நீங்கப் பெறுவாய்’ என்று கூறினார்.
உடனே வெள்ளை யானையான ஐராவதம் நாரதர் திருவடிகளில் வணங்கி விடை பெற்றுத் தென்திசை நோக்கி புறப்பட்டு, மேல் கொங்கு நாட்டை அடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசித் தலத்திற்கு வந்து சேர்ந்தது.
அங்கு இறைவனைப் பூசித்து வழிபடச் சந்நிதிக்கும் கீழ்ப்பால் ஓடும் நள்ளாற்றில் தனது நான்கு கொம்புகளால் பூமியைக்குத்தித் தோண்டி ஆற்று நீர் பெருகும்படி செய்து (அயிராவத்துறை என்ற பெயருடையாதாகச் செய்து) அதில் ஸ்நானம் செய்து, காசிக் கங்கைக் கிணற்று நீரைத் துதிக்கையில் முகந்து கொண்டுபோய் அவிநாசி நாதருக்கு அபிஷேகம் செய்து மலர் கொண்டு பூசித்தது.
இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் பூசித்து வரும்போது ஒரு நாள் மூல லிங்கத்திற்கு அருகே ஈசான பாகத்தில் ஒரு சிவலிங்கம் (அயிராவதலிங்கம் என்ற பெயருடன்) ஸ்தாபித்து பூசித்து வந்தது.
அவிநாசியப்பர் யானையின் பூஜைக்கு மகிழ்ந்து, இந்திரன் உள்ளத்தில் ஒரு அதிசயம் தோன்றும்படி செய்ய, உடனே இந்திரன் பொன் விமானத்தில் ஏறி அவிநாசித் தலத்திற்கு வந்தான். அப்போது அவிநாசி நாதரையும், அவரை வெள்ளை யானை தொழுது நின்ற நிலையையும் கண்டு, மகிழ்ச்சியோடு ‘ஐராவதமே! வா’ என்று அழைத்து மத்தகத்தை தன் கையால் தடவ, அதன் சாபம் நீங்கி நின்ற அதிசயத்தையும் கண்டான்.
அப்போது ஐராவதம் இந்திரனை வணங்கி நின்றபோது இந்திரன், ‘ஐராவதமே! உன்னால் தான் இத்தலத்தை வந்தடைந்தேன்; என்னை இறைவன் திருவடிகளை வணங்கும்படி செய்வாய்’ என்றான்.
உடனே ஐராவதம் இந்திரனை அழைத்துக் கொண்டு போய் அவிநாசி நாதர் முன்னே விட, அவன் கருணாலயச் செல்வியை வலத்தே கொண்ட சிவபெருமானைத் தரிசித்துத் துதித்து நிற்க, அப்போது “இந்திரனே! நீயும் உன் வெள்ளை யானையும் பொன்னுலகத்தை அடைக” என்ற ஒரு அசரீரி வாக்கு எழுந்தது.
அதனைக் கேட்ட இந்திரன் மகிழ்ந்து இறைவனை வணங்கி வெள்ளை யானையின் மீது ஏறித் தனது பொன்னுலகத்தை அடைந்தான்.
இவ்விதம் ஐராவதம் அவிநாசியப்பரை பூசித்து இழந்த பதவியை பெற்றது.
இழந்த பதவிமைப் பெற்று தரும் அவிநாசியப்பரின் மகிமைகளில் ஒன்று .
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment