தச வீரட்டானம் 10 : திற்பரப்பு மகாதேவர் ஆலயம்.
தச வீரட்டானத் தலங்களில் கடைசி தலமான பத்தாம் ஆலயம் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் அருவிக் கரையோரம் அமைந்திருக்கும் மகாதேவர் ஆலயம்.
மலையாளத் தேசத்தில் சிவனுக்கு மகாதேவர் என்பதே பெயர். எல்லாத் தேவர்களுக்கும் மேலான மகாதேவன் என்பதால் இந்த ஆலயமும் மகாதேவர் ஆலயமாயிற்று.
இந்தத் தலவரலாறு தட்சன் யாகம் முடிந்ததில் இருந்து துவங்குகின்றது.
சிவனை மதியாமல் தட்சன் யாகம் செய்து அந்த யாகத்தினால் அவமதிக்கப்பட்ட தாட்சாயினி தேவி நெருப்பில் வீழ்ந்துவிட, கடும் கோபம் கொண்ட சிவன் தன் அம்சமான வீரபத்திரரையும், சக்தி அம்சமான காளியினையும் அனுப்பி அந்த யாகத்தை அழித்துப்போட்டார்.
பெரும் ஆவேசத்தில் அந்த காளியும் வீரபத்திரரும் நின்று தட்சனின் யாக சாலையில் அகதளம் செய்து அழித்துப் போட்டடார்கள். ஆனாலும், அவர்களுக்கு அமைதி கிடைக்கவில்லை.
தங்களின் எல்லையற்ற ஆத்திரமும் கோபமும் தீர, தங்களுக்கு முழு அமைதி கிடைக்க இந்த திற்பரப்பு தலத்துக்கு வந்து தவமிருந்து மனம் குளிர்ந்து வரம்பெற்றார்கள்.
அதன்படி வீரபத்திரர் சிவனுடன் ஐக்கியமாகிவிட்டார், காளி அருகிருக்கும் குகையில் தவம் செய்ய சென்றுவிட்டார். இன்றும் அவர் அங்கே தவக்கோலத்தில் உண்டு.
அந்த காளியும், வீரபத்திரனும் வழிபட்டதில் இருந்து இந்த ஆலய வரலாறு தொன்றுதொட்டு வருகின்றது. அகத்திய முனிவர் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று.
இதன் பழைய பெயர் விசால புரம். பின்னாளில் விரிந்த இடம் என்பது பரந்த பரப்பு என்றும் திற்பரப்பு என்றும் மருவிற்று.
இந்த ஆலயம் கோதை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தாமிரபரணி உருவாகும் இடத்திலிருந்து அதன் கிளையாறாக ஓடும் கோதை ஆறே திற்பரப்பு நீர்வீழ்ச்சியாக விழுகின்றது. ஆக, இதுவும் தாமிரபரணி நதிக்கரை ஆலயத்தில் ஒன்றாகவே கருதப்படுகின்றது.
இங்கு மூலவர் வீரபத்திரர் அவர் சிவனோடு கலந்ததால் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். அவர் 'ஜடாதரர்', 'மகாதேவர்' என்றும் அழைக்கப்படுவார்.
மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் இந்த சிவலிங்கத்தின் நந்தியானது மூலவருக்கு நேர் எதிரில் இல்லாமல், சற்றே விலகி காணப்படும்.
அதாவது, வீரபத்திரரின் ஆவேசம் தாளாமல் அவர் தள்ளி நகர்ந்திருக்கின்றார் என்கின்றது தலபுராணம்.
கோயிலின் மேற்கு வாசலில் மணி மண்டபம் காணப்படுகிறது. இந்தத் தென்முனையில் சாஸ்தா வழிபாடு மிகத் தொன்மையானது என்பதால் அந்தச் சாஸ்தா மேற்கு பிரகாரத்தில் வீற்றிருக்கின்றார்.
இங்கே பூரணை- புஷ்கலை ஆகிய தேவியருடன் சாஸ்தா சுகாசனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
மகாதேவர் ஆலயம் என்றாலும் கிருஷ்ணருக்கும் சந்நிதி உண்டு. கோவிலின் உள்ளே இருக்கும் கிருஷ்ணன் கோவில் பிரகாரத்தில் நாகர் சிற்பங்கள், கிருஷ்ணன் கோவில், முருகன் கோவில், மணமேடை ஆகியவை உள்ளன.
மூலவர் கிருஷ்ணன் கையில் வெண்ணையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சந்நிதிக்கு எதிரில் முருகன் கோவில் உள்ளது.
கிழக்கு வெளி பிரகாரத்தின் வாசலில் எட்டுத் தூண்களைக் கொண்ட மண்டபம் உள்ளது. தெற்குப் பிரகாரத்தில் ஆஞ்சநேயருக்கு பரிவாரக் கோவில் உள்ளது.
இது மேற்கு நோக்கிய ஆலயம் என்பதால் கிழக்கு வாசல் மூடபட்டுள்ளது, மேற்கு வாசலை மக்கள் பயன்படுத்த இந்த ஏற்பாடு.
சிற்பக்கலை வேலைப்பாடுகள் நிறைந்த இந்த கோவில் ஒரு கலைப் பொக்கிஷமாகும். அற்புதமான சிற்பங்கள் கொண்ட இந்த ஆலயம் சேரமன்னர்களால் பலநூறு வருடத்துக்கு முன் கட்டப்பட்டது. பாண்டிய கால கல்வெட்டுக்களும் அங்கு உண்டு.
இங்கு மூவாயிரத்துக்கு மேற்பட்ட சுற்று விளக்குகள் உண்டு, இந்த சுற்று விளக்குகளை ஏற்றி என்ன வேண்டினாலும் கிடைக்கும். சாட்சிகள் ஏராளம்.
இந்தக் கோவில் மன்னர்கள் காலத்தில் பெரும் செல்வமிக்கதாய் இருந்தது. முழு தங்கத்தினாலான சிலைகள், நகைகள் என நிறைய இருந்தது, தங்கச் சிலை மட்டும் ஏழு இருந்தது.
முகமதியர் படையெடுப்பு காலங்களில் இவை எல்லாம் பாதுகாப்பு கருதி திருவனந்தபுரம் பக்கம் கொண்டு செல்லப்பட்டன என்பது வரலாறு.
இன்றும் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் ஏகப்பட்டது உண்டு, அது பற்றிய தகவல்கள் நிரம்ப உண்டு.
அந்த அளவு மன்னர்களால் கொண்டாடப்பட்ட பெரும் ஆலயம் இது.
பொதுவாக அருவிக்கரையில் குகைகளின் அருகில் அமர்ந்திருக்கும் ஆலயங்கள் தேவர்கள் வழிபட்ட பகுதிகளாக இருக்கும். தேவர்களும் பெரும் சித்தர்களும் மானிட சஞ்சாரமில்லா இடங்களிலே வழிபாடுகளைச் செய்வார்கள்.
அப்படி இந்த ஆலயமும் அருகிருக்கும் குகையும் மிகச் சூட்சுமமானவை. அந்தக் குகை மிக மிக சூட்சுமமானது. அங்கு தேவர்களின் சஞ்சாரம் உண்டு.
அக்குகையின் வாயில் மிக ஒடுக்கமாக இப்போது பாயும் அருவியின் பின்னால் உண்டு.
திற்பரப்பு அருவியின் தொடக்கம் இது அல்ல, திற்பரப்பு அருவி மேற்கு நோக்கித்தான் சென்றது. பின்னாளில்தான் இப்படி அணைகட்டி சுற்றுலாவுக்காகத் திருப்பினார்கள்.
அப்போது இந்த குகையின் வாசல் அருவியால் மூடபட்டுவிட்டது.
பிரிட்டிஷ் செய்த கொடுமை இது. இந்து ஆலயங்களை எப்படியெல்லாம் குழப்ப முடியுமோ, எப்படி எல்லாம் அதன் வரலாற்றைச் சிதைக்க முடியுமோ அத்தனையும் செய்வார்கள்.
இதனால் இக்குகை பலருக்கு தெரிவதில்லை. திற்பரப்பில் நீரோட்டம் வற்றும் காலம் இதனைக் காண முடியும். இந்தக் குகையினுள்ளே காளி தவமிருப்பதால் காளியின் புடைப்பு சிற்பம் உண்டு.
இந்தக் காளிகுகை கோவிலாக இருந்ததன் அடையாளமாக அதன் முன்பு மண்டபம் உண்டு. இப்போது மாற்றிவிடப்பட்ட அருவி இந்த குகையினை மறைத்து மண்டபத்தையும் பிரிக்கின்றது.
சுற்றுலா மேம்பாடு எனும் வகையில் மிக மிக புராதனமான குகைக்கோவில் மறைக்கப்பட்ட கொடுமை திற்பரப்பில்தான் நடந்தது.
எனினும், அன்றே கோவிலையும் காளி குகையினையும் இணைக்கும் சுரங்க பாதை இருந்திருகின்றது. இன்று அது வெளிதெரியாவிட்டாலும் தரைக்கு மேல் இந்தப் பாதையினைக் குறிக்கும் வகையில் ஒரு நாகம் தவளையினைப் பிடிப்பது போல ஒரு உருவம் உண்டு.
அந்தக் குகை சூட்சுமமானது, பெரும் சக்தி கொண்டது. காளியின் முழு அருளும் நிறைந்தது என்றாலும் இப்போது அங்கு வழிபாடு இல்லை.
அந்தக் குகைகோவில் மீண்டும் மீளவேண்டும் என்பதுதான் பக்தர்களின் எதிர்பார்ப்பு, இது ஒருநாள் நிச்சயம் நடக்கும்.
இது பத்ரகாளி ஆலயம், குகைக்குள் 350 அடி நீளத்தில் அந்த ஆலயம் அமைந்துள்ளது என்பது ஆய்வில் தெரியவந்தது. உள்ளே மூன்று கட்டமாக சந்நிதிகள் உண்டு, 600 அடி அகலம் கொண்ட குகை இது.
காளியோடு அன்னை பார்வதி அங்கு ஆலயம் கொண்டிருகின்றாள்.
சிவனுக்கு இந்த மகாதேவர் ஆலயம் அங்கே வீரபத்திரரை ஆற்றுப்படுத்தி தன்னோடு வைத்திருக்கின்றார். அந்த குகைக்கோவில் பார்வதிக்கானது. அங்குக் காளியினை அவர் ஆற்றுப்படுத்தி தன்னோடு சேர்த்திருக்கின்றார்.
இவை ஒரே ஆலயங்கள். ஆனால், பிரிட்டிஷார் காலத்து சதியால் சிவாலயம் மட்டும் இருகின்றது பார்வதி தேவி குடியிருக்கும் குகை இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை, காலம் அதைச் செய்யும்.
இது பாஞ்சாக்ர தலம். அதாவது, முழுமை அடைந்து நிறைவினைத் தரும் தலம்.
காளிக்கும் வீரபத்திரருக்கும் சிவன் அமைதி கொடுத்தார் என்பது சாதாரண விஷயம் அல்ல. வீரபத்திரரும் காளியும் எதற்கு அனுப்பட்டார்களோ அதைச் செய்தார்கள். அதன் பின் அவர்கள் ஆவேசம் தணியாமல் அலைபாய்ந்தார்கள், தன்னிலை மறந்தார்கள்.
இந்த ஆலயம் இந்த மேற்குபார்த்த ஆலயம் அவர்களுக்கு அவர்கள் கர்மவினை தீர்த்து அவர்களை யார் என அவர்களுக்கே காட்டி அமைதி கொள்ள வைத்தது.
ஆம். இந்தத் தலம் இங்கு வந்து வழிபடுவோர்க்கு அவர்கள் யார் என்பதை காட்டித்தரும். முன்வினைகளை அகற்றி அவர்களின் குழப்பத்தை அகற்றி தெளிவினைக் கொடுத்து அவர்கள் யார் என்பதையும் எதற்கு வந்தார்கள் என்பதையும் அடுத்து செய்யவேண்டியது என்ன என்பதையும் காட்டி தரும் ஆலயம்.
இந்தப் பிறப்பில் ஏதேதோ செய்து அடுத்து என்ன எனத் தெரியாமல் குழம்பித் திரியும் ஆத்மா இங்கே தன்னிலை உணரும்.
தன்னை அறிதல் எனும் பெரும் ஞானத்தைத் தரும் ஆலயம் இது.
வீரட்டானம் என்பது ஒவ்வொரு போராட்டத்திலும் வெற்றிக் கொடுத்த தலம். இங்கே வீரபத்திரரும் காளியும் தட்சனை வென்றார்கள். ஆனால், தங்களுக்குள்ளான போராட்டத்தில் தவித்தார்கள்.
தட்சனை அழித்த அவர்களால் தங்களின் கோபத்தை வெல்லமுடியவில்லை, ஆத்திர வேகத்தை வெல்லமுடியவில்லை, தங்கள் உணர்வினை வெல்லமுடியவில்லை, தங்கள் மனதிடம் தோற்று சிவனைச் சரணடைந்தார்கள்.
சிவன் அவர்களை அரவணைத்து அவர்களின் கர்மவினை நீக்கி வேண்டாதன அகற்றி அவர்கள் போராட்டத்தை வெற்றியாக்கிக்கொடுத்தார்.
ஒவ்வொருவரும் நாம் யார் என நம்முடன் நம் மன உணர்வுகளுடன் ஆசை மாயைகளுடன் போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்தத் தலம் அந்தப் போராட்டத்தை அகற்றி நம்மை நமக்கே யாரென காட்டி பெரும் அமைதியும் சாந்தமும் தரும், பெரும் வளமும் நிம்மதியும் தரும்.
இது தசவாயுக்களில் முக்கியமான தனஞ்செயன் எனும் வாயுக்கான தலம். தசவாயுக்களில் இது முக்கியமானது. ஒருவனின் உயிர்காற்றாக முக்கியமான வாயு இது, அது சீர்படின் ஆயுள் நீளும் சிந்தனைத் தெளியும்.
இந்த ஆலயம் ஒருவனை முழுமைபடுத்தும்; அவனின் குறைகளை அகற்றி அவனின் கர்மவினை அகற்றி அவனை யார் எனப் புரியவைத்து பெரும் ஞானத்தை கொடுத்துச் சாந்தப்படுத்தும்.
திற்பரப்பு என்பது சுற்றுலா தலம் அல்ல. குற்றாலீஸ்வரர் ஆலயம் குற்றாலம் எனச் சுற்றுலாதலமாக மாற்றி வஞ்சிக்கப்பட்டிருப்பது போல திற்பரப்பு மகாதேவர் ஆலயமும் வெறும் சுற்றுலாதலமாக மடைமாற்றபட்டுள்ளது.
அப்படி ஒரு காலமும் அல்ல. இது மகாதேவர் தலம், தச வீரட்டானத்தில் மேற்குப் பார்த்து சிவன் அமர்ந்திருக்கும் பத்தாம் தலம்.
சிவராத்திரி அன்று சிவாலய ஓட்டம் நடக்கும் ஆலயங்களில் இது மூன்றாம் ஆலயம்.
கன்னியாகுமரி பக்கம் செல்லும் போது இந்தச் சிவாலயத்தைத் தேடி வணங்க மறவாதீர்கள். இந்தச் சிவன் உங்களை யாரென்று, உங்கள் பலம் என்னவென்று, நீங்கள் எதற்கு வந்தீர்கள், என்ன செய்கின்றீர்கள், அடுத்து என்ன செய்யவேண்டும் என எல்லாம் உணர்த்தி பின் தன்னோடு சேர்த்தும் கொள்வார்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment