Tuesday, March 11, 2025

கல்விக்கடவுள் ஹயக்ரீவர்க்கு உரிய கோயில் திருவஹிந்திபுரம்

உலகிலேயே கல்விக்கடவுளான
ஹயக்ரீவர்க்கு 
முதன்முதலில் அமைந்த திருத்தலமான,
நிகமாந்த 
வேதாந்த தேசிகரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமான,
108 திவ்ய தேசங்களில் நடு நாட்டுத் திருப்பதிகளில் ஒன்றாக விளங்கும் 
கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 
#திருவந்திபுரம் என்ற 
#திருவஹீந்திரபுரம் (திருஅயிந்தை)
(திருஅயிந்திரபுரம்)
#தேவநாதசுவாமி 
(#தெய்வநாயகன்)
#செங்கமலத்தாயார் 
(பார்கவி)
திருக்கோயில் அமைந்துள்ள இடத்தில் 
#ஒளஷதகிரி மலைமேல் உள்ள 
#லட்சுமி_ஹயக்ரீவர் திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 
திருவந்திபுரம் ஹயக்ரீவர்

‘கல்விக் கடவுள்’ சரஸ்வதி. அந்த சரஸ்வதிக்கே கல்வியறிவைக் கொடுத்தவர், ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர். அவரைத் தரிசித்தால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி அறிவு பெருகும், குடும்பக் கஷ்டம் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த வேண்டுதல்களோடு தங்கள் குழந்தைகளுடன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார், திருவந்திபுரம் ஹயக்ரீவர்!

ஹயக்ரீவரை 
சுவாமி வேதாந்த தேசிகன் நேரில் தரிசித்த தலம் கடலூருக்கு அருகிலுள்ள திருவஹீந்திரபுரத்தில் உள்ளது.  இது ஹயக்ரீவரின் முதல் கோவில்

108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.  மருந்து மலை (ஔஷதகிரி) என்று இந்த மலைக்குப் பெயர்.  மலையில் உச்சியில் அருள்மிக ஹயக்ரீவர் சந்நிதி உள்ளது.  கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் அருளுகிறார்.  அதனால் மாணவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டு கல்வி கற்கின்றனர். அருள்மிகு செங்கமலத்தாயார் உடனாய தேவநாதசுவாமி திருக்கோயில்.  பல்லவர் மற்றும் சோழ காலத்திற்கு முற்பட்டது.  மண்மலையின் மேற்குப் பகுதியில், ஆற்றின் கரையில் பெருமாள் நின்று அருளுகிறார். தலவிருட்சம் வில்வமரம் ஆகும்.  சேஷ (பாம்பு) தீர்த்தம், கருடதீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பூதீர்த்தம், லட்சுமி தீர்த்தம் முதலான தீர்த்தங்கள் உள்ளன.  திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது.

நடுநாட்டுத் திருப்பதிகள் இரண்டில் ஒன்றாகப் போற்றப்படுகிறது, கடலூர் மாவட்டம், திருவந்திபுரம். கடலூரிலிருந்து மேற்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், பண்ருட்டியிலிருந்து கிழக்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள இத்தலத்தில், ஔஷதகிரி மூலிகை மலையின் உச்சியில் அமைந்துள்ளது ‘ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர்’ திருக்கோயில். ‘கல்விக் கடவுள்’ என்று சொல்லப்படும் ஹயக்ரீவருக்கு தமிழகத்திலேயே முதன் முதலில் கோயில் அமையப்பெற்ற தலம் இது என்பது இதன் தனிச்சிறப்பு.

*திருவயிந்திரபுரம்:

"அன்பணிந்த சிந்தையரா யாய்ந்த மலர்தூவி
முன்பணிந்து நீரெமக்கு மூர்த்தியரே - என்பா
எமையிந் திரபுரத்தார்க் கின்றொண்ட ரானார்
தமையிந் திரபுரத்தார் தாம். (72)
  -   - பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி 

வஹீந்திரன் என்பது ஆதிசேஷனைக் குறிக்கும்  சொல். ஆதிசேஷனால் அமைக்கப்பட்ட கோவில் இது. அதனால் இது திருவஹீந்திரபுரம் என்றும், தமிழில் திருவந்திரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ஊர் திருவந்திபுரம் என்றே அறியப்படுகிறது.

கீழே தேவநாதப் பெருமாளும், மலைக்கு மேலே லக்ஷ்மி ஹயக்ரீவரும் அருள் பாலிக்கிறார்கள்.

கீழே உள்ள தேவநாதப்  பெருமாள் கோவிலிலிருந்து 74 படிகள் மேலே ஏறினால், ஒளஷதகிரி என்ற மலை மீது லக்ஷ்மி ஹயக்ரீவர் சந்நிதி இருக்கிறது.

மது, கைடபர்கள் என்ற இரண்டு அரக்கர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிக்கொண்டு போய் விட்டதால், படைப்புத் தொழில் தடைபட்டபோது, மகாவிஷ்ணு குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக வடிவம் எடுத்து பிரம்மாவுக்கு வேதங்களை உபதேசித்தார்.

ஹயக்ரீவர் சன்னிதியில் கருடனும் இருக்கிறார்.

ராமானுஜருக்குப் பின் வந்த மிக முக்கியமான ஆச்சாரியர்களில் ஒருவரான வேதாந்த தேசிகர்  பிறந்தது காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் (இங்கு திருத்தண்கா என்ற திவ்யதேசம் உள்ளது) என்றாலும், அவர் 40 ஆண்டுகள் வாழ்ந்தது இந்த ஊரில்தான். அவர் வாழ்ந்த வீடு தேசிகர் திருமாளிகை என்ற பெயரில் இப்போதும் இருக்கிறது.

ஔஷதகிரியில் உள்ள அஸ்வத்த மரத்தின் அடியில் அமர்ந்து வேதாந்த தேசிகர் கருடனை தியானம் செய்தார். கருடன் இவருக்கு ஹயக்ரீவ மந்திரத்தை அருளிச் செய்தார். தேசிகர் ஹயக்ரீவ மந்திரத்தை ஜபித்து ஹயக்ரீவர் அருளைப் பெற்றார்.

"ஞானானந்த மயம் தேவம்  நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே"

என்ற புகழ் பெற்ற ஹயக்ரீவ சுலோகத்தை தேசிகர் எழுதியது இங்குதான்.

கருட பஞ்சஸதி, ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம், தேவநாத பஞ்சஸதி  உட்படப் பல ஸ்தோத்திரங்களையம், நூல்களையும் தேசிகர் இங்கிருந்துதான் எழுதினார்.

இங்கிருக்கும் தேசிகருடைய விக்கிரகம்  அவர் சொன்னபடி ஒரு சிற்பியால் செய்யப்பட்டது.

*மூலவர்: தெய்வநாயகன்  கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலம்
உற்சவர்: மூவராகிய ஒருவன், தேவநாதன், அச்சுதன் ,
தாயார்: வைகுண்டநாயகி, ஹேமாம்புஜவல்லி
தீர்த்தம்: சேஷ தீர்த்தம், கருட தீர்த்தம்
விமானம்: சுத்தஸ்தவ விமானம்
ஸ்தல விருட்சம்: வில்வம்

*ஒளஷதகிரி சந்நிதியில்: 

கிருஷ்ணன், லக்ஷ்மி  ஹயக்ரீவர்,.கருடன்

பெருமாள், தாயார் சந்நிதி தவிர  அஹீந்திர புரநாதன், லக்ஷ்மி நரசிம்மர், ராமர், ஆஞ்சநேயர், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருக்கச்சி நம்பிகள், பாஷ்யக்காரர், வேதாந்த தேசிகர் ஆகியோர் சந்நிதிகள் இங்கு உள்ளன.

#தல வரலாறு:

அசுரர்களின் கொடுமை தாங்காத தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர். பூலோகத்திலுள்ள ஔஷதாசலத்தில் தங்கியிருந்து தன்னை வழிபட்டு வரும்படியும் தக்க சமயத்தில் உதவுவதாகவும் அவர் வாக்களித்தார். அதன்படி சக்கராயுதத்தை ஏவினார் அது அசுரர்களை  அழித்தது.  தேவர்களுக்கு மும்மூர்த்தி வடிவில் இத்தலத்தில் விஷ்ணு காட்சியளித்தார். அவருக்கு தேவர்களின் தலைவன் என்ற பொருளில் தேவ நாத சுவாமி என பெயர் ஏற்பட்ட்து. அதன் பின் ஆதிசேஷன் இங்கு ஒரு நகரத்தை உருவாக்கினார். அதற்கு திரு அஹீந்திரபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.

பிரளய காலத்தில் – உலகம் அழியும் சமயம், பிரம்மாவின் தூக்கத்தில் உதித்த அசுரர்கள், வேதங்களைப் பெண் குதிரை வடிவமாக்கி பிரளய வெள்ளத்தில் அதலபாதாளத்தில் ஒளித்து வைக்க, அதனை மீட்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் குதிரைமுக (பரிமுகம்) பெருமாள் (ஹயக்ரீவர்). வேதங்களை மீட்டு வந்ததால் ஞானத்துக்கு அதிபதியாக விளங்குகிறார் ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவர்.

இமயமலையிலிருந்து சஞ்சீவ பர்வத மலையை பெயர்த்துக்கொண்டு இலங்கைக்குப் போனார் ஆஞ்சநேயர். அப்போது, அந்த மலையிலிருந்து கீழே விழுந்த ஒரு பகுதிதான் இந்த ஔஷதகிரி மலை. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன், காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள தூப்பில் கிராமத்தைச் சேர்ந்த வேதாந்த தேசிகன் என்பவர், தனக்கு ஞானம் வேண்டி இந்த ஔஷதகிரி மலையின் மேல் அமர்ந்து கருட பகவானை நோக்கி தவமிருந்தார். அப்போது அவருக்கு அருள்பாலித்த கருட பகவான், ஞானத்துக்கு அதிபதியான ஹயக்ரீவர் மந்திரத்தை உபதேசித்து, ஹயக்ரீவரை வேண்டி பூஜிக்கச் சொன்னார். அதன்படியே பூஜித்த வேதாந்த தேசிகனுக்கு ஹயக்ரீவரும் அருள்பாலித்தார். அதன் பிறகு ‘நவரத்ன மாலை’, ‘மும்மணிக் கோவை’ போன்ற பல தமிழ் நூல்களை எழுதினார் வேதாந்த தேசிகன். அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்தான் இந்த ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் என்கிறது புராணம்.

#பிரார்த்தனை கிணறு:

ஒரு முறை விஷ்ணுக்கு தாகம் ஏற்பட்ட போது கருடனிடம் தண்ணீர் கொண்டு வரப் பணித்தார்.  அவர் எடுத்துவர தாமதம் ஆனதால் ஆதி சேஷனிடம் கேட்டார். அவர் தன் வாலால் தரையில் அடிக்க தீர்த்தம் பீறிட்டது. தெற்குப் பிரகாரத்தில் கிணறாக உள்ள இந்த தீர்த்தம் சேஷ தீர்த்தம் எனப்படுகிறது.  தற்போது பிரார்த்தனையைக் கிணறாக இருக்கும். இதில் உப்பு மிளகு வெல்லமிட்டு பிரார்த்தனை செய்கின்றனர்.   இங்கு வழிபட சர்ப்ப தோஷம் விலகும். திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இங்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

#முதல் கோவில்:

தேவ நாத சுவாமி கோயில் அருகில் பிரம்மாச்சலம் மலை உள்ளது.  இது 73 படிகள் கொண்டது. இங்கு லட்சுமி ஹயக்கிரீவருக்கு தனி சன்னதி உள்ளது.  வேதாந்த தேசிகன் இம்மலை மீது தவம் புரிந்து ஹயக்ரீவர் கருடாழ்வார் ஆகியோரின் தரிசனத்தை பெற்றார். ஹயக்ரீவருக்கு கட்டப்பட்ட முதல் கோயில் இது.   வியாழக்கிழமை தோறும் மாணவர்கல் ஹயக்ரீவருக்கு துளசி கல்கண்டு தேன் படைக்கின்றனர்.

#விசேஷ நாட்கள்:

சித்திரை பிரம்மோற்சவம்   வைகாசியில் நம்மாழ்வார் சாற்றுமுறை நரசிம்ம ஜெயந்தி  புரட்டாசி மகாதேசிகன் பிரம்மோற்சவம்

“குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமா ஏதாவது தோஷம் இருந்தாலோ, அல்லது கல்வியறிவு பெருக வேண்டியோ, சந்நிதிக்கு வந்து பேனா, நோட்டு, தேன், ஏலக்காய் மாலை வாங்கி ஹயக்ரீவருக்கு பூஜை செய்யணும். பூஜை முடிஞ்சதும் அந்த தேனை குழந்தைகள் நாக்கில் கொஞ்சம் தடவிவிட்டு, ஏலக்காய் ஒண்ணை வாயில் போட்டுவிட்டா போதும்… உடனடியா தோஷமெல்லாம் நிவர்த்தியாகிவிடும். கல்வி அறிவு வளரும்!’’ என்ற கோயிலின் அர்ச்சகர் சேஷா பட்டாச்சார்யார், இத்தலம் பிணி தீர்க்கும் மகத்துவத்தையும் கூறினார்.

‘‘இங்க கொடுக்கிற லக்ஷ்மி தீர்த்தம், தெய்விகமானது. வேதாந்த தேசிகர் ஆராதனை செய்த தீர்த்தம் அது. அந்த தீர்த்தத்தைப் பருகினா உடலில் உள்ள சகல பிணிகளும் பறந்துடும். அதாவது, குதிரைக்கு எப்போதும் வாயிலிருந்து நீர் வடிஞ்சுட்டே இருக்கும். குதிரை ரூபத்தில் இருக்கும் ஹயக்ரீவருக்கும் அப்படித்தான். அப்போது அசுரர்கள் அந்த நீரைப் பருகித்தான் தங்களோட பாவங்களைப் போக்கிக்கிட்டாங்க. இங்க கொடுக்கப்படும் லக்ஷ்மி தீர்த்தமும் அதுபோலத்தான். மூலிகைகளால் தயாரிக்கப்பட்டு அதை ஹயக்ரீவருக்கு ஆராதனை செஞ்சு தீர்த்தமா கொடுக்கப்படுது!’’ என்றார் பட்டாச்சார்யார்.

#திருமங்கை_ஆழ்வார் 

இந்த திவ்யதேசத்தை 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். பாசுரங்கள் இதோ.

நாலாயிர திவ்ய பிரபந்தம் 
இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
மூன்றாம் பத்து
முதல் திருமொழி

1. இருந்தண் மாநில மேனமதாய் வளை மருப்பினி லகத்தொடுக்கி,
கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம் கமலநன் மலர்த்தேறல்
அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளியம் பொழிலூடே,
செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு திருவயிந் திரபுரமே. (1148)

2. மின்னு மாழியங் கையவன் செய்யவள் உறைதரு திருமார்பன்,
பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய பரனிடம் வரைச்சாரல்,
பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப் பிணியவிழ் கமலத்து,
தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு திருவயிந் திரபுரமே. (1149)

3. வைய மேழுமுண் டாலிலை வைகிய மாயவன், அடியவர்க்கு
மெய்ய னாகிய தெய்வநா யகனிடம் மெய்தகு வரைச்சாரல்,
மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லையங் கொடியாட,
செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு திருவயிந் திரபுரமே. (1150)

4.மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன் மார்பக மிருபிளவா,

கூறு கொண்டவன் குலமகற் கின்னருள் கொடுத்தவ னிடம்,மிடைந்து
சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை விசும்புற மணிநீழல்,
சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ் திருவயிந் திரபுரமே. (1151)

5. ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட மளந்து ஆயர்,
பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம் பொன்மலர் திகழ் வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு குரக்கினம் இரைத்தோடி
தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு திருவயிந் திரபுரமே. (1152)

6. கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின் திறத்திளங் கொடியோடும்,
கானு லாவிய கருமுகில் திருநிறத் தவனிடம் கவினாரும்,
வானு லாவிய மதிதவழ் மால்வரை மாமதிள் புடைசூழ,
தேனு லாவிய செழும்பொழில் தழுவிய திருவயிந் திரபுரமே. (1153)

7. மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசையிலங்கை
மன்னன், நீண்முடி பொடிசெய்த மைந்தன திடம்மணி வரைநீழல்,
அன்ன மாமல ரரவிந்தத் தமளியில் பெடையொடு மினிதமர,
செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண் திருவயிந் திரபுரமே. (1154)

8. விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில்லிறுத்து அடல்மழைக்கு,
நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன் நிலவிய இடம்தடமார்,
வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு மலைவள ரகிலுந்தி,
திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே. (1155)

9. வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில் விசயனுக் காய்,மணித்தேர்க்
கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம் குலவுதண் வரைச்சாரல்,
கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம் பாளைகள் கமழ்சாரல்,
சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே (1156)

10. மூவ ராகிய வொருவனை மூவுல குண்டுமிழ்ந் தளந்தானை,
தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண் திருவயிந் திரபுரத்து,
மேவு சோதியை வேல்வல வன்கலி கன்றி விரித்துரைத்த,
பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே. (1157)
    _திருமங்கையாழ்வார்

108 திவ்ய தேசங்களில் திருவந்திபுரமும் ஒன்று. வைகானஸ ஆகம விதிமுறைப்படி தினமும் ஆறு கால பூஜைகள் செய்யப்படுகின்றன. ஹயக்ரீவருக்கு திருவோண நட்சத்திரம் என்பதால், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஜைக்கு உகந்த நாள். இங்கு தினந்தோறும் காலை 8.30-ல் இருந்து 11.30 வரையிலும், மாலை 4.30-ல் இருந்து 7.30 வரையிலும் நடைதிறக்கப்பட்டிருக்கும்.கல்வியருள் பெற ஹயக்ரீவர் தரிசனம் பெறுங்கள்!

தரங்கமுக நந்தினி ஹேமாய்ஜ நாயிகா ஸமேத
ஸ்ரீ தேவநாத பரம்பரம்ஹணே நம :
ஸ்ரீ மதே நிகமாந்த மஹாதேசிகாய நம :
ஸ்ரீ மதே ஸ்ரீனிவாஸ மஹா தேசிகாய நம :
ஸ்ரீமேதே ரங்கராமானுஜ மஹா தேசிகாய நம :

ஹரி ஓம் ஶ்ரீ நமோ நமோ நாராயணாய நமஹா 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

கடலூர் தேவனாம்பட்டினம் தீர்த்தவாரி மாசி மகம்,....

கடலூர் தேவனாம்பட்டினம் தீர்த்தவாரி மாசி மகம்,.... மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்...