கருடதரிசனம் பலன்கள்
கருடதரிசனம் கோடி புண்ணியம்...
பகவான் நாராயணனின் வாகனமாக கருடன் இருக்கிறார். பக்தர்களின் துன்பத்தை போக்க பெருமாள் விரைந்து வருவதற்கு கருடன் பேருதவி செய்வதால்தான் அவரை ‘கருடாழ்வார்’ என்று பக்தர்கள் அன்போடு அழைக்கிறார்கள்.
கருடனுடைய மகிமையை ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்கள் கடும் நோயில் இருந்து விடுதலைப் பெறுவார்கள். கருடனுக்கு ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், சக்தி, தேஜஸ் என்ற ஆறு குணங்கள் உண்டு. ‘ஆயிரம் சுபசகுணங்கள் கிடைத்தாலும், அது ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது’ என்று சொல்லப் படுகிறது.
அத்தகைய சிறப்பு வாய்ந்த கருட தரிசனத்தின் பலன்களைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
சூரிய உதயத்தின் போது கருட தரிசனம் செய்தால், நினைத்த காரியம் கைக்கூடும். கருடன் வானத்தில் பறக்கும் போது தரிசனம் செய்வதும், கருடனின் குரலைக் கேட்பதும் நற்பலன்களை தரும்.
ஒவ்வொரு நாள் கருட தரிசனத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
ஞாயிற்றுக்கிழமை கருட தரிசனம் கிடைத்தால், நமக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் அகலும் என்று சொல்லப் படுகிறது.
திங்கட்கிழமை கருடரை தரிசித்தால், குடும்பத்தில் ஏற்படும் கஷ்டம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.
செவ்வாய்க்கிழமை தரிசனம் கிடைத்தால், மனதில் இருக்கும் பயம் நீங்கி தைரியமான மனநிலை உண்டாகும்.
புதன் கிழமை கருட தரிசனம் கிடைத்தால், கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் அழிவார்கள்.
வியாழக்கிழமை கருட தரிசனம் கிடைத்தால், நமக்கு ஏற்பட்டிருக்கும் கண்டங்கள் நீங்கி ஆயுட்காலம் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை கருட தரிசனம் கிடைத்தால், லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும். மேலும் தங்க ஆபரணங்கள் சேரும்.
சனிக்கிழமையில் கருடனை தரிசித்தால், நம்முடைய கர்மவினைகள் அனைத்தும் நீங்கி மோட்சம் கிட்டும் என்று சொல்லப் படுகிறது.
கோவில் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வந்து வட்டமிட்டால் கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவடைந்தாக கருதுவார்கள். சபரிமலையில் இன்றைக்கும் ஆபரண பெட்டியை எடுத்து வரும் போது கருடன் வலம் வருவதைக் காணலாம்.
‘கருட தரிசனம் கோடி புண்ணியம்’ என்று சொல்லப் படுகிறது. எனவே, நல்ல காரியங்களுக்கு செல்லும் போது, வீட்டின் வாசல் படியில் மாட்டி வைத்த கருடனுடைய படத்தை தரிசித்துவிட்டு சென்றால் காரிய சித்தி ஏற்படும்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment