#இரண்டாம்_நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனால் கட்டப்பட்ட பழமையான குடைவரைக் குகைக்கோயிலான
#திருக்குன்றக்குடி என்ற
#குன்றாண்டார்கோயில்
(#குன்று_ஆண்டார்_கோயில்)
#பர்வதகிரீஸ்வரர்
#உமையாம்பிகை
#பர்வத_விநாயகர்
திருக்கோயில் அழகிய சிற்பங்களையும் வரலாற்றையும் காணலாம் வாருங்கள் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
திருச்சியிலிருந்து 27கி.மீ தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது குன்றாண்டார் கோயில். (குன்று ஆண்டார் கோயில்) காலப்போக்கில் மறுவி குன்னாண்டார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
குன்றாண்டார் குடைவரைக் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்திலுள்ள குன்னாண்டார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இது புதுக்கோட்டை நகரத்திற்கு வடகிழக்கில் 36.2 கிலோ மீட்டர் தொலவில் உள்ளது. இது எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் ஆகும். இதன் நீட்டிக்கப்பட்ட கட்டிடப்பகுதியானது சாளுக்கிய சோழ மன்னர்கள் மற்றும் விஜயநகர பேரரசினால் கட்டமைக்கப்பட்டுள்ளன. இக்குடைவரை பிற்கால பல்லவர் மற்றும் சோழர் கலைப்பாணியில் உள்ளது. இங்கு பிற்கால சோழர்கள், பாண்டியர்கள், மற்றும் விஜயாலய பேரரசின் கல்வெட்டுகளை கொண்டிருக்கும் ஒரு கற்கோயிலாக உள்ளது.
இங்குள்ள கல்வெட்டுகளின் படி இந்த ஊர் திருக்குன்றக்குடி என்றும் குறிக்கப்படுகிறது. இந்தக் கோயில் 7 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த, இரண்டாம் நந்தி வர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்த குகைக்கோயில். பல்லவரின் கீழ் சிற்றரசர்களாக ஆண்டு வந்த முத்தரையர்களால் கட்டப்பட்டிருக்கிறது.
தற்போது இக்கோயில் இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
#வரலாறு:
குன்றாண்டார்கோயில் என்பது குன்று -ஆண்டான்-கோயில் என்கிற பொருள்படும் வகையில் குன்றை ஆட்சி செய்யும் இறைவனை முன்னிறுத்தி பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்பகுதியை ஏழாம் நூற்றாண்டு தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டு தொடக்கம் வரை பல்லவர்களின் கீழ் முத்தரையர்கள் ஆட்சி செய்துள்ளனர். இதன் பிறகு பிற்கால சோழர்களால் கைப்பற்றபட்டுள்ளது.
குடைவறை கோவிலானது இரண்டாம் நந்தி வர்மன் பல்லவனின் (கி.பி.710 - 775) துணை ஆட்சியாளராக விளங்கிய முத்தரையர் மன்னரால் கட்டப்பட்டுள்ளது.
நந்திவர்மன் மற்றும் அவரது மகன் தந்திவர்மன் காலத்தைய முற்கால கல்வெட்டுகள் திருவாதிரை வழிபாட்டு நிகழ்வுக்கு கொடை வழங்கிய செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளது. சௌந்தர ராஜன் என்பவர் எட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று உரைக்கிறார். இது தவிர்த்த ஏனைய கல்வெட்டு பொறிப்புகள் சோழர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசை சார்ந்தவையாக உள்ளன. பதினான்காம் நூற்றாண்டில் கிராமமானது கள்ளர் சமூகத்தினரால் இரு பகுதியாக பிரிக்கப்பட்டது இங்குள்ள கல்வெட்டுகளில் தவறு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள், வரி வசூல் செய்யும் நடைமுறைகள் குறித்த கல்வெட்டுகள் உள்ளன.
குன்றாண்டார்கோயில்:
இங்குள்ள சிவபெருமான் பர்வதகிரீஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். அம்பாள் உமையாம்பிகையாகப் போற்றப்படுகிறார். குன்றின் உச்சியில் முருகப்பெருமான் கோயில் அமைந்திருக்கிறது. இது காலத்தால் பிற்பட்டதாகும்.
குகைக்கோயில் கருவறையின் வெளிப்பக்கம் உள்ள சிறிய மண்டபத்தின் தெற்கு சுவரில் வலம்புரி விநாயகரின் சிற்பம் குடையப்பட்டுள்ளது. வடக்குப் பகுதியில் சிவன், பார்வதி இணையரின் அமர்ந்த நிலைக் கோலம் புடைப்புச் சிற்பமாகக் குடையப்பட்டிருக்கிறது.
கருவறையின் உள்ளே தாய்ப்பாறையில் குடையப்பட்ட லிங்கம், 'பர்வதகிரீஸ்வர்' என்ற பெயரில் போற்றப்படுகிறார். குடவரையின் வெளிப்புறத்தில் சிறிய அளவிலான குடவரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பிற்காலச் சிற்பங்கள் உள்ளன.
இங்குள்ள அம்மன் சந்நிதி காலத்தால் பிற்பட்டதாகும். அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறக் காணிக்கையாக மஞ்சளை அளிக்கின்றனர். இங்குள்ள கல் தொட்டி ஒன்றில் பக்தர்கள் மஞ்சளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
குன்றாண்டார்கோயில்
காணிக்கையாகச் செலுத்தப்படும் மஞ்சளை இவ்வூர் மக்கள் யாரும் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை என்பது தான் ஆச்சர்யம்.
குகைக்கோயிலுக்கு முன்னால் உள்ள மண்டபங்கள் முத்தரையர்களால் கட்டப்பட்டதற்கான விபரங்கள் இங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து நமக்குத் தெரியவருகிறது. போத்தரையன் மண்டபம், ஆடல் மண்டபம் என இங்குள்ள மண்டபங்கள் கலை நயத்துடன் காட்சியளிக்கிறது. இங்கு அழகிய மண்டபமாகக் காட்சியளிக்கும் நூற்றுக்கால் மண்டபம் மிகவும் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
நூற்றுக்கால் மண்டபத்தில் தேர் போன்ற அமைப்பில், சக்கரங்களுடன் கூடிய ஒரு ரதத்தை இரண்டு குதிரைகள் இழுத்துச் செல்வது போன்று அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. சக்கரத்தில் உள்ள சிலைகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இங்குள்ள பூதகணங்கள் இந்தத் தேரினை, மண்டபத்தைத் தாங்கிப் பிடிப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு உள்ள தூண்கள் முழுவதும் சுவாமிகளின் குறுஞ்சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும், சிறப்புமிக்க மண்டபம் பராமரிப்பின்றி காணப்படுவது தான் வேதனை அளிக்கிறது.
இங்குள்ள மண்டபத்தில் கோயிலுக்கு தானம் வழங்கியவர்களின் சில கல்வெட்டுகளும் தென்படுகின்றன. அதோடு, குடைவரைக் கோயில் முழுவதும் சாளுக்கியச் சோழர், பிற்கால பாண்டியர், விஜய நகர மன்னர் ஆகியோரின் கல்வெட்டுகள் என ஏராளமான கல்வெட்டுகள் இங்குக் காணக்கிடைக்கின்றன.
இங்கு 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களைக் காண முடியும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இப்பகுதியை ஆண்டு வந்த பல்லவராயர்கள் இக்கோயிலுக்குக் கொடைகள் பல அளித்துள்ளனர். காலத்தால் பிற்பட்ட கல்வெட்டொன்று திருச்சிக்கும், தஞ்சாவூருக்கு இவ்வழியாகச் சென்ற வணிகப் பொருள்கள் மீது 16 ல் 1 பங்கு பணம் வரியாகக் கோயில் பராமரிப்பிற்காக வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது.
அழகிய குன்றின் உச்சியில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கிறார். வள்ளி தெய்வானை சமேதராக சண்முகக் கடவுளாக இங்கு முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். குன்றின் உச்சியில் முருகப்பெருமானுக்கு எதிரே பிரமாண்ட கல் விளக்கு ஒன்று இருக்கிறது. இங்கு கார்த்திகைத் தீபத் திருநாளின் போது பிரமாண்ட கல் விளக்கில் பக்தர்கள் கொண்டுவரும் எண்ணெய்யை ஊற்றி விளக்கேற்றுகிறார்கள். இந்த தீபத்தைத் தரிசிப்பது சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள். ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் போதும் இங்கு மக்கள் குவிகின்றனர்.
இந்த அழகிய குகைக்கோயிலில் எங்குப் பார்த்தாலும் கல்வெட்டுக்களாகக் காணப்படுகின்றன.
முருகப்பெருமான் கோயில்:
குகைக்கோயில், அழகிய மண்டபங்கள், எங்குப் பார்த்தாலும் கல்வெட்டுகள் என அற்புதங்கள் பல கொட்டிக்கிடக்கும் குன்றாண்டார் கோயிலுக்குச் சுற்றுலாப் பயணிகளும், ஆன்மிக அன்பர்களும் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய மிக முக்கியமான இடம்.
#கல்வெட்டுகள்:
இந்தப் பாறை குகைக் கோயில் 8ஆம் நூற்றாண்டில் நந்திவர்மனால் தோண்டப்பட்டது. முன் மண்டபம் பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டது. 100 தூண் மண்டபங்களும் சில கட்டமைப்புகளும் விஜயநகர காலத்தில் கட்டப்பட்டவை.
கல்வெட்டுகளின்படி, சிவபெருமான் திருக்குன்றக்குடி மகாதேவர், குன்றக்குடி நாயனார் மற்றும் குன்றப்பெருமாள் என்று அழைக்கப்பட்டார். குன்றக்குடியின் அசல் பெயர் குன்றக்குடியின் தற்போதைய பெயராக மாற்றப்பட்டது. இந்த கோவிலில் 60 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன, அவை நில அளவீடு, விற்பனை, வரிகள், நன்கொடைகள் மற்றும் தவறு செய்பவர்களுக்கான தண்டனை பற்றி பேசுகின்றன.
பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் 3 வது ஆட்சி ஆண்டு கல்வெட்டு, மீப்புழை நாட்டின் வடுவூரைச் சேர்ந்த விசயராயன் திருவாதிரை நாளில் 100 பேருக்கு 200 நாழி அரிசியை பரிசாக அளித்ததாக பதிவு செய்கிறது.
திருவாதிரை நாளில் கோதைமைந்தன் தன் மகன் மயிந்தன் வீரகடையன் பெயரில் 110 அந்தணர்களுக்கு 220 நாழி அரிசியை தானமாக வழங்கியதை ஒரு கல்வெட்டு பதிவு செய்கிறது.
பாண்டிய மன்னர் கோனேரிமேல்கொண்டான் சுந்தர பாண்டியனின் காலக் கல்வெட்டு, மன்னரின் பெயரிலேயே உருவாக்கப்பட்ட சந்தி பூஜைக்கு நைவேத்தியம் மற்றும் சாதுபதி (அலங்காரம்) நன்கொடையாக வழங்கியதாகப் பதிவு செய்கிறது. அதே 100 தங்கம் (காசுகள்..?) மன்னரால் வரி விலக்கு அளிக்கப்பட்ட பின்னர் வைப்புத் தொகையாக வழங்கப்பட்டது.
இந்தக் கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது.
*கட்டுமான நுட்பம்:
தமிழ்நாட்டிலுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தின் குன்றாண்டார்கோயில் ஒரு பாறையில் அமைந்த குடைவறை கோவிலாகும் அது மட்டுமின்றி குடைவறையில் மாறுபட்ட நிலைகளில் சிவன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.லிங்க வடிவிலான மூலவர் கிழக்கு நோக்கிய திருகுன்றக்குடி ஈசனை பர்வதகிரீசுவரராக வழிபடுகின்றனர். கருவறையும் அர்த்த மண்டபமும் எவ்வித வேலைப்பாடுகளுமின்றி உள்ளன. அறையை கல்தூண்கள் தாங்கி நிற்கின்றன. மூலவரின் இருபுறங்களிலும் துவாரபாலகர் சிலைகள் அமைந்துள்ளன. இதில் ஒரு சிலை முத்தரையர் என்றும் ஏனையது அவரது உதவியாளர் எனவும் கருதப்படுகிறது.
குடைவறை கட்டிடக்கலைக்கான சோழர் கலைப்பாணி மற்றும் பல்லவ கட்டிடக்கலைக்கான உதாரணமாகும். இங்கு உள்ள சிவன், பார்வதி மற்றும் சேயோன் முருகனோடு காட்சிதரும் மிக முக்கியமான இளமுருகன் வெண்கலச்சிலை மண்டபத்தின் மத்தியில் நிலையாக வைக்கப்பட்டுள்ளது.
எப்படிச் செல்வது?
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் திருச்சியிலிருந்து 27 கி.மீ தொலைவில் கீரனுக்கு அருகே அமைந்திருக்கிறது குன்றாண்டார் கோயில். புதுக்கோட்டையிலிருந்து 25கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. புதுக்கோட்டையிலிருந்தும் பேருந்து வசதி இருக்கிறது. பெரும்பாலும், சுற்றுலா வருபவர்கள் தங்களது சொந்த வாகனத்தில் வந்து செல்வது நலம்.
பதிவுகள்: பயணங்களின் காதலன் சந்தோஷ் பாஸ்கரன்
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment